23 ஆகஸ்ட் 2022

விளக்கும் வெளிச்சமும் - விமலாதித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் நேரடியாக கிண்டிலில் வெளியிட்ட சில சிறுகதைகள், குறுநாவல்களின் தொகுப்பு. கிண்டிலை தனது தளமாக வைத்துக் கொண்டுள்ளார். பலர் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கு பெரும் உதவி செய்துள்ளார். கிண்டிலில் எப்படி புத்தகத்தை வெளியிடுவது என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி கிண்டிலில் வெளியிட்டு உள்ளார். அவரது அச்சுப் புத்தகங்களை நேரடியாக அவரது சத்ரபதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகின்றார். இதற்கு முன் அவர் வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். முழுவதும் படித்து முடிக்கும் முன், வீட்டில் தண்ணீர் புகுந்து பல புத்தகங்கள் நாசமாகி, பல புத்தகங்களை ஊரில் கொண்டு வைத்து அதன் பின் கொரானாவில் வீட்டை காலி செய்த கலவரத்தில் இந்த புத்தகம் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது. போன மாதம்தான் மீண்டும் கையில் கிடைத்தது. படிக்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கின்றது. 

மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த பதிவிற்கு பின்னால் ஒரு குட்டி கதை உள்ளது அது கடைசியில். ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் ஒழுங்காக இருந்த பதிவுகள், என்னையறியாமல் மாற தொடங்கின. எழுத்துப் பிழைகள்,  இலக்கணப் பிழைகள் எல்லாம் அதிகமானது. காரணம் ஒரு பதிவை பல நாட்கள் எழுதுவது, அதனால் கோர்வையில்லாமல் போவது, சொன்னதையே திரும்ப வேறு வரிகளில் சொல்வது போன்றவை அதிமாக வர தொடங்கின. பெரும்பாலும் சரி செய்தாலும் தொடர்ந்தன. தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது என்று தோன்றுகின்றது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மாமல்லன். அவரது பதிவுகளில் பிழை இருந்து பார்த்த நினைவில்லை. கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.

தொகுப்பில் இருக்கும் இரண்டு  கதைகளின் தலைப்பை இணைத்து தொகுப்பின் தலைப்பாக வைத்துள்ளார். ஒரு மனிதனின் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகள். அவரது சமீபத்திய கதைகள் அனைத்தும் முழுவதும் கற்பனை என்பது போல தெரியவில்லை. நிஜவாழ்வில் நடக்கும் ஏதோ ஒரு சிறிய புள்ளியை விரித்து எழுதியிருப்பது போலவே எனக்கு தோன்றுகின்றது. காரணம் அவரது ஃபேஸ்புக் பதிவுகள், அவரது டைரி குறிப்பு போல அது இருப்பதால் அப்படி தோன்றுகின்றது போல. அவரது முந்தைய கதைகளில் பல கதைகள் நேரடியானவை அல்ல. இந்த கதைகள் நேரடியான மொழியில் எழுதப்பட்டவை. மாமல்லன் கதைகள் கச்சிதமானவை. தேவையில்லாத வார்த்தை, வரி என்று எதையும் எடுக்க முடியாது. அசோக மித்திரனும் இதே போன்று எழுதினாலும் அவரது கதைகளில் கொஞ்சம் பூடகத்தன்மை ஒளிந்திருக்கும். இந்த கதைகளில் அது எல்லாம் இல்லை. ஆனாலும் கவனமாக படிக்க வேண்டியவை. சாப்பிடும் போது படிப்பது, பஸ்ஸில் படிப்பது என்று கவனச்சிதறலுடன் படித்தால் கண்டிப்பாக எழுத்தின்  அனுபவத்தை இழக்க வேண்டியிருக்கும். 

சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது அந்த இடத்தில் நாமும் இருப்பது போல இருக்க வேண்டும் இல்லை அதை ஒரு இடத்திலிருந்து முழுவதும் பார்ப்பது போல இருக்க வேண்டும். சிலர் வளவள என்று ஓவராக வர்ணித்து ஒரு வண்ணக்குழம்பாலான ஒரு குழப்பமான ஓவியத்தை பார்க்கும் உணர்வை தந்துவிடுவார்கள் குத்து மதிப்பாக புரிந்து கொண்டு போக வேண்டியதுதான். சிலருக்கு புகைப்படம் போல உள்ளது உள்ளபடி காட்டுவது இயல்பாக வரும் தி.ஜானகிராமன் மாதிரி. சிலர் வெறும் பென்சிலை வைத்து கொண்டு நம் கண் முன் உலகத்தை உண்டாக்கிவிடுவார்கள். இவர் கடைசி வகை. சின்ன சின்ன குறிப்புகளால் அந்த உலகில் கொண்டு சேர்த்துவிடுகின்றார். சிறுகதைகள் என்பது கடைசி வரி திருப்பம் என்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி சில உண்டு என்பதை காட்டுவது சில எழுத்தாளர்கள் மட்டும்தான். அதில் இவரும் ஒருவர்.  இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் வரும் முக்கிய பாத்திரம் ஒரே நபர் தான் என்று கொண்டால் இது ஒரு நாவலின் சிறு சிறு பகுதிகள் என்றும் கொள்ளலாம். கதைகளில் வரும் ஒரு அப்பா பாத்திரம் அனைத்து கதைகளையும் இணைக்கின்றது. இப்படியும் சிலர் இருக்க முடியும் என்பது எல்லாம் பலருக்கு இது போன்ற கதைகளை படிக்கும் போதுதான் தெரியும். ஒருவர் வாழ்வின் பலவித காலகட்டத்தின் சின்ன சின்ன ஸ்னாப் ஷாட்களாக காட்டுகின்றது. குழந்தைகளின் உலகை, அவர்களது மொழியை எழுத்தில் கொண்டுவருவது கொஞ்சம் கடினமாக இருக்கும். இவரது முந்தையகதைகளிலும் சரி இதிலும் சரி, குழந்தைகள் உலகம் அச்சாக விழுந்துள்ளது. 

அமன், மறைவு இரண்டும் குழந்தைகள் வளர்ப்பு அல்லது அவர்களின் சூழல் எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் கதைகள். அந்தகாலத்துல நாங்க எல்லாம் என்ற மாதிரி அல்ல நுணுக்கமாக கூறும் கதைகள். காவி போலிச்சாமியர் கதைகள் பல படித்திருக்கலாம், அதிலிருந்து வேறு பட்ட ஒரு கதை. பயம், இன்றைய இணைய காலகட்டத்தில் பலரின் எளிய மனதில் ஒரு குறிப்பிட்ட சிந்தனைகளை வெகு எளிதாக விதைத்து விடலாம். நிஜம் அப்படியே இருக்க வேண்டியதில்லையே. இந்த ஒரு கதை மட்டும் அரசாங்க அலுவலகத்தில் நடக்கும் சில விஷயங்களை லேசாக தொட்டு விட்டு போகின்றது. கடைசி இரண்டு நெடுங்கதைகள் ஒருவர் வாழ்வின் சில பகுதிகள். பல தளங்களை தொட்டு செல்கின்றன. மேலே நாமே விரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஒன்றிரண்டு வரிகளில் பெரிய சம்பவங்களை ஏதோ சர்வ சாதரணமாக சொல்லி செல்கின்றார். உணர்வு பூர்வமான, கனமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பல பக்கங்களில் சொல்லலாம், உணர்ச்சியற்ற சாதரண வரிகளிலும் அந்த கனத்தை கடத்தலாம் என்பதை கற்றுத்தருகின்றது. அசோகமித்திரனின் மானசரோவரில் தாய் மகனை கொன்றதை ஒரே வரியில் சொல்லி செல்வது போல. இந்த தொகுப்பில் பிடித்தது காவி, விளக்கு. புனைவுகளில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

மாமல்லனின் ஃபேஸ்புக் லிங்க். அவரது சொந்தக்கடை. அவர் வெளியிட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியும், எப்படி வாங்கலாம் என்பது அங்குள்ளது. 

புத்தகம் பற்றிய குறிப்பு இதோடு முடிந்தது, பின்னால் வருவது முதல் பாராவில் சொன்ன வம்பு.

மாமல்லனின் ஃபேஸ்புக் பதிவுகளை அனைத்தையும் படிப்பதுண்டு, ஆனால் பின்தொடர்வது, நட்பு அழைப்பு எல்லாம் இல்லை, லைக் போடுவதும் இல்லை. கலந்து கட்டி டைம்லைனில் வருவதை பெரும்பாலும் படிப்பதில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை  வழக்கமாக படிப்பவர்கள் பக்கத்திற்கு சென்று பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதுதான் வழக்கம். ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால் சில சமயம் அதை அனுப்புவது வழக்கம். சில சமயம் இணைப்பு அல்லது எழுதிய குறிப்பை மட்டும் அனுப்புவேன். ஜெயமோகனுக்கும் மட்டும் மெயிலில் அனுப்புவதுண்டு. சில சமயம் அதையும் மறந்து போவதும் உண்டு. புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி எழுதிவிட்டு அந்த குறிப்பை மட்டும் மாமல்லன் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். தளத்தில் எழுதும்போது சில சமயம் இது போன்று எனக்கு தோன்றுவதை எல்லாம் சேர்த்து எழுதுவேன். இந்த பதிவிலேயே புத்தகம் பற்றி மூன்று பாராதான் மீதம் எல்லாம் சொந்தக்கதைதான்.  அதையெல்லாம் எதற்கு அவருக்கு அனுப்பி இம்சை செய்ய வேண்டும் என்று பதிவின் இணைப்பை  அனுப்பவில்லை. எழுதிய குறிப்பின் ஸ்க்ரீன் ஷாட்டை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அவர் புத்தகத்தை பற்றி ரகசியமாக படிக்கின்றார்கள் என்றோ படித்தை பொதுவில் சொல்ல மாட்டேன் என்கின்றார்கள் என்றோ எழுதியிருந்தார் சரியாக நினைவில்லை. 

அவருக்கு தளத்தில் வெளியான இணைப்பை அனுப்பலாமா என்று யோசித்தேன். ஃபேஸ்புக்கில் என்னுடைய நட்பில் இருப்பது எல்லாம் பெரும்பாலும் சொந்தக்காரர்கள், யாரும் படிக்கும் வழக்கம் கொண்டவர்களும் அல்ல. பலருக்கு புத்தகம் படித்தாலே தூக்கம் வரும்.  அவர்கள் கண்ணில் படவேண்டும், படித்தால் அவர்கள் கடுப்பாவர்கள் என்று நினைப்பதை மட்டுமே ஷேர் செய்வது, லைக் போடுவது வழக்கம். என் தளத்தில் எழுதும் பதிவுகளில் பெரும்பாலனவற்றை நான் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதில்லை. ஒன்றிரண்டை ஷேர் செய்து பார்த்தேன், யாரும் அதை திறந்து பார்த்த மாதிரி கூட தெரியவில்லை. பிறகு இது ஒரு வேலை என்று செய்வதா என்று விட்டு விட்டேன். அதனால் இந்த புத்தகம் பற்றிய பதிவையும் ஷேர் செய்யவில்லை. செய்திருந்தாலும் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்று நன்றாக தெரியும். 

சொந்தக்காரர்கள் பலருக்கு ப்ளாக்கில் எழுதுவது கூட தெரியாது. நான் புத்தகங்களைப் பற்றி எழுதுவது படித்ததை எனக்குள் தொகுத்து கொள்வதற்கும், யாராவது அந்த புத்தகத்தை வாங்க விரும்பி தேடினால் புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் தான். ஒரு சினிமா பார்த்தால் அதைப் பற்றி பத்து பேரிடம் பேச முடியும் புத்தகத்தைப் பற்றி என்னால் ஒருவரிடம் கூட பேச முடியாது முயன்று தோல்வி அடைந்த அனுபவம் உண்டு.   யாரிடமாவது சொல்ல வேண்டியதை இங்கு எழுதி வைக்கின்றேன். இங்கு எழுதுவதை ஒரு பத்து பேர் படிக்கின்றார்கள், ஃபேஸ்புக்கில் எழுதினால் ஒருவர் கூட படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான். இதை எல்லாம் என்னத்தை விளக்க என்று விட்டு விட்டேன். அராத்து எழுதிய மொக்கை புத்தகத்தைப் பற்றியும், காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்கதாராவிற்கே வேலை மெனக்கெட்டு எழுதியிருந்தேன், இது போன்ற புத்தகங்களைப் பற்றி எழுத என்ன? 

1 கருத்து:

  1. சிலிகான் ஷெல்ப் மெயில் பார்த்து இங்கு வந்தேன். சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு