27 டிசம்பர் 2022

ஆடி - மகாபாரத கதை

நண்பர்  சிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி எழுதிய மகாபாரத கதையை சொல்வனத்தில் படித்தேன். அந்த கருவும், வடிவமும் எனக்கு பிடித்திருந்தது. அதை கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவரும் இதற்கு எல்லாம் கேட்க வேண்டுமா என்றார். அவருக்கு நன்றி. இனி கதை...

பதினான்காம் நாள் போர் முடிந்த மாலை


துரியோதனனின் வார்த்தைகளால் கோபமுற்ற துரோணர் சிறிய ஓய்விற்கு பின் இரவிலும் போரை தொடர ஆணையிட்டு விட்டு கூடாரத்திற்கு வந்தார், கூடவே அஸ்வத்தாமனும் 


திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது துருபதர் கவசங்களை கழட்டாமல் இருப்பதை கண்டவுடன் ஒரு கணம் ஆச்சர்யம் வந்து சென்றது.


"துரோணனின் வீழ்ச்சி" என்றார் துருபதன்.


"உங்களை வீழ்த்த யாராலும் முடியாது" என்றான் அஸ்வத்தாமன்.


துருபதரின் கண்கள் கூடாரத்தின் மேல் கூரையில் நிலைத்திருந்தன, கவசங்களை பார்த்தது   "நாளை இது தேவைப்படாது" என்றார் துருபதர்.


துரோணர் கையிலிருந்த அம்பின் கூரை கையால் தடவிக் கொண்டிருந்தார், கண்கள் தூரத்தில் இரவுப் போருக்கு ஏற்றி வைத்த பந்தங்க்களில் எதையோ தேடி கொண்டிருந்தன. "நாளை இது தேவைப்படாது" என்று அழுத்தமான குரலில் சொன்னார் துரோணர்.


"நாளை அவன் என்னை தவிர்க்க முடியாது, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாக சபதம் செய்துள்ளான்" என்றார் துருபதன்.


"அவன் ஆத்மாவை பல ஆண்டுகளுக்கு முன்பே கொன்றுவிட்டேன் அஸ்வத்தாமா! கணக்கை முடிக்கத்தான் அவன் உடல் காத்திருந்தது" என்றார் துரோணர். 


"துரோணன் கனன்று கொண்டிருக்கிறான். சினமும், வஞ்சமும், நன்றிக்கடனும், தோல்வியும், புத்திரபாசமும், ஆசிரிய கர்வமும்  அவனை எரித்துக் கொண்டிருக்கின்றன."  என்றார் துருபதன் 


"அஸ்வத்தாமா! அவன் தினமும் முன் வருகின்றான், ஒவ்வொரு முறையும் சிம்மத்தை எதிர்த்து வரும் முயலைப்  போல வருகின்றான். கொல் கொல் என்று அறைகூவுகின்றான் "


"மகா ஆசாரியன், மூன்று தலைமுறையாக க்ஷத்ரியர்களுக்கு பயிற்சி அளிப்பவன், போர் நெறிகளை போதிப்பவன், இரவில் போர் புரிகிறான்! தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் கொன்றது அவன்தான்"


"அவனை கொல்ல முடியாமல் மற்றவர்களை கொன்று குவிக்கின்றேன், தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் வீழ்த்தினேன், இரவில் போர் தொடங்க ஆணையிட்டேன்."


"அவன் மேலும் மேலும் வீழ்வதை நான் பார்க்க விரும்பவில்லை திருஷ்டத்யும்னா!, என்னோடு அவன் வேகமும் அடங்கும்"


"நாளை அவனுடன் நான் போர் புரிவதற்கும், நிராயுதபாணியான ஒருவனை கொல்வதும் ஒன்றுதான்.  இது இழிசெயல் என்று அறிந்திருந்தாலும், நாளை அவனை கொல்வேன் என்று ஆணையிட்டுள்ளேன்"


"அக்னிவேசரின் மாணவன் என்றாலும், இறந்தவன் என்ன போர் புரிவான்"


"அவனும் என் ஆசிரியரின் மாணவன், இருந்தும் ஏற்கனவே இறந்தவன் கொன்றவனுடன் என்ன போர் புரிவான்."


"ஆச்சாரியர் உங்களைக் கொல்வது என்று தீர்மானித்துவிட்டால் அர்ஜுனனால் கூட உங்களைக் காக்க இயலாது"


"போர் என்று வந்துவிட்டால் வலியவன் வெல்வதுதான் இயற்கை. வருந்துவதில் பொருளில்லை அப்பா!, அவரின் தலையை அறுத்து எறிவதுதான் செய்யக்கூடியது"


“எல்லாம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டுவிட்டது மைந்தா! “ 


திருஷ்டத்துய்மனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.


அஸ்வத்தாமன் முகத்தில் சலிப்பு தெரிந்தது.


"துரோணரின் இறப்பு என் கையில்தான் என்ற நிமித்திகர் கூற்று துரோணருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னை பயிற்றுவிக்க ஏன் ஒப்புக்கொண்டார்? எனக்கு முழு விழைவோடு கற்பித்தார். அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இணையாக வைத்திருந்தார்"


"என் நண்பன் துருபதன் மகனுக்கு முழு வீச்சோடு பயிற்சி அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது? அவன் இன்னும் கொஞ்சம் முனைப்போடு பயின்றிருந்தால் அவனையும் உன் தரத்துக்கு, அர்ஜுனன், கர்ணன் தரத்துக்கு கொண்டு வந்திருப்பேன்! அஸ்வத்தாமா"


"அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் உலகறிந்தது. உங்களைக் கொல்லும் ஊழ் கொண்ட ஒரு மகன் வேண்டும் என்று யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றார். அவனும் உங்களை கொல்ல காத்துக் கொண்டிருக்கின்றான்"


"அன்றும் சரி, இன்றும் சரி, துரோணன் என்னை உயிர்த்தோழனாகத்தான் கருதுகிறான். அதனால் என்னுடன் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான்.  உன்னுடனும் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். நீ கூடவா இதைப் புரிந்து கொள்ளவில்லை?"


"நட்பும் தோழமையும் தேர்க்காலில் கட்டி இழுக்குமோ"


"அவன் பாதி நாட்டைக் கேட்டது நியாயம்தான், திருஷ்டத்யும்னா! நான் அவனை அப்படி கோபப்படுத்தி இருக்கக் கூடாது"


"அவன் பசுவைத் தர மறுத்தது நியாயம்தான், அஸ்வத்தாமா! நான் அவனை அப்படி சினமூட்டி இருக்கக் கூடாது"


" பிராமணனின் பொறுமையும் ஞானமும் அவருக்கு இல்லை.நீங்கள் அவரை நண்பராக கருதலாம். என்னுடைய ஆச்சாரியார் ஆனாலும் அவர் உங்களுடைய எதிரி மட்டுமே!" என்று திருஷ்டத்யும்னன் கூவினான். கண்ணில் வலி தெரிந்தது.


"ஷத்ரியர்களுக்கான பெருந்தன்மையும், அற உணர்வும் இல்லாத அற்பத்தனமே உருவான மனிதன்!" என்று அஸ்வத்தாமன் கூவினான். அவன் முகம் இறுகி இருந்தது. பற்கள் அறைபட்டன.


துருபதர் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார், அவர் கை ஓங்கியது. பிறகு மெதுவாகத் தாழ்ந்தது.


இயலபாக பின் நகர்ந்த அஸ்வத்தாமன் கண்களில் சிறிய மாற்றம் வந்தது.


"உன் தந்தை மீது கொஞ்சம் கருணை காட்டு மைந்தா! அவனை இழிவாகப் பேசாதே!" 


திருஷ்டத்யும்னன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். துருபதர் அவன் தலை முடியைத் தன் கையால் மீண்டும் அளைந்தார்.


தோள்களை பிடித்த கைகளை இறுக பற்றிக் கொண்டான் அஸ்வத்தாமன்


"அவன் ஒரு பிடி மண்ணுக்கும் ஆசைப்பட்டவனில்லை. வில்லைக் கரை காண வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது."


"சொன்ன சொல் தவறாதவன் அவன். நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது."


"இன்று வஞ்சமும் சினமும் கொண்ட கொடுந்தெய்வமாக எழுந்திருக்கிறான், அவனை இந்த நிலைக்குத் தாழ்த்தியவன் நானே" 


"என் தவறு!" என்று திடீரென்று கூவியபடி தன் நெஞ்சில் அறைந்து கொண்டார் துருபதன்.


துரோணரின் கையை இறுகப்பற்றி தடுத்தான் அஸ்வத்தாமன் 


"சபையை விட்டுவிட்டு வெளியேறியபின் மீண்டும் வருவான், என்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான் என்று வெகு நாள் காத்திருந்தேன்." என்றார் துருபதர்.


"அவனும் அதே எதிர்பார்ப்புடன் எனக்காகக் காத்திருப்பான் என்று எனக்குத் தோன்றவே இல்லை" என்றார் துரோணர்.


திருஷ்டத்யும்னன் முகத்தில்  மெல்லிய பரிதாப உணர்ச்சி தோன்றியது அது மெல்லிய இளிவரலாக வெளிப்பட்டது.


அஸ்வத்தாமன் முகத்தில் கோபம் எரிந்தது.


"நீயும் புரிந்து கொள்ளவில்லையா?" என்று மன்றாடும் குரலில் கேட்டார்


"ஒரு நண்பனை காணவே பாஞ்சாலம் சென்றேன், ஆனால் அரண்மனையில் கால் வைத்ததும்  என்னுள் இருந்த துருபதனின் நண்பன் மறைந்து நான் மறைத்து வைத்த பிராமணன் வெளிப்பட்டு விட்டான்"


"நண்பனை காண விரைந்து வந்த நான் பார்த்தது என்னுடன்  சாலையில் படித்த நண்பனல்ல, யாசகம் கேட்டு வந்த ஒரு பிராமணன். அதைக் கண்டதும் என்னுள் இருந்த ஷத்திரியன் வெளிப்பட்டு விட்டான்"


"நண்பனை காண சென்றவனுக்கு யாசகம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வர வேண்டும்"


"யாசகம் கேட்கும் அளவிற்கு ஒரு நண்பனை விட்டு விட்டோமே என்று ஏன்   எனக்கு அப்போது தோன்றவில்லை"


"கிருஷ்ணனைக் காண சுதாமா அவலை எடுத்துக் கொண்டு சென்றார், அரசனுக்கு அவலைக் கொண்டு செல்கின்றோமே என்று அவருக்கு ஒரு கணமும் தோன்றவில்லை"


"சுதாமாவை கண்ட கண்ணனுக்கு தான் அரசன் என்று ஒரு கணமும் தோன்றவில்லை, தாவி ஓடி அவன் கையிலுருந்த அவலை பறித்து தின்றானே அது போல் ஏன் என்னால் முடியவில்லை"


"துவாரகையின் அதிபதி என்று சுதாமா பார்க்கவில்லை, காவியங்களின் தலைவன் என்று பார்க்கவில்லை, தன் நண்பன் என்றுதானே பார்த்தான்,அந்த சுதாமவிற்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை?"


"சுதாமாவை யாசகம் கேட்க வந்த பிராமணன் என்றா பார்த்தான் கிருஷ்ணன், நண்பன் என்று தன் அரியணையில் அமர வைக்கவில்லையா, அது ஏன் எனக்கு தோன்றவில்லை, கண்ணன் என்னுடையது எல்லாம் உன்னுடையது என்றானே தவிர என்னைப் போல்  கணக்கு பார்க்கவில்லையே"


"சுதாமன் கண்ணனிடம் எதையும் கேட்க வில்லையே"


"வந்தவனை என் அரியணையில் அல்லவா அமர வைத்திருக்க வேண்டும், அவனை ராஜகுருவாக இல்லை, பாஞ்சாலத்தின் மஹா ஆசார்யனாக இல்லை இணை அரசனாக நியமித்திருக்க வேண்டும். பசு என்னடா பசு, பாதி ராஜ்யமே உன்னுடையதுதான் என்று சொல்லி இருக்க வேண்டும். சுதாமாவை கண்ட கண்ணனாக நடந்து கொண்டிருக்க வேண்டும் "


"உயிரும் நண்பனுடையதே என்று நினைத்திருந்தவனிடம் போயும் போயும் ஒரு பசுவைக் கேட்டால், அதுவும் சபை நடுவே தானமாகக் அவன் எப்படி உணர்ந்திருப்பான்? சுதாமாவாக  அல்லவா நான்  சென்றிருக்க வேண்டு"


"ஒரு நிமிஷ கோபத்தால் மறுத்தேன். அதில் எழுந்த கோபத்தால் அவன் பாதி நாட்டைக் கேட்டான். வீம்பு அதிகரித்து அவனை அவமானப்படுத்தினேன். "


"வஞ்சம் கொண்டு அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்தேன்"


"அவனைக்  கொல்ல யாகம் செய்து உன்னைப் பெற்றேன்"


"கொல்லத்தான் வெல்ல அல்ல" என்றார் துரோணர்.


"கொல்லத்தான் வெல்ல அல்ல" என்றார் துருபதர்.


"இப்போது அவை அனைத்திற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை"


:"இருவரும் அதை எல்லாம் தாண்டி வந்துவிட்டோம்"


"இன்று வஞ்சமும் இல்லை, கோபமும் இல்லை, குற்ற உணர்வுதான்


"ஒரு காலத்திற்கு பின் மனைவியும் நம்மை விட்டு மனத்தால் விலகுவாள்"


"அடேய் என்று யாராவது அழைக்க மாட்டார்களா என்று மனம் ஏங்கும்"


"அனைவராலும் மரியாதையாக பார்ப்பது சலித்து, யாராவது அடேய் முட்டாள் எதற்கு இப்படி கேவலமான ஆடை அணிந்து வந்துள்ளாய் என்று கேட்கமாட்டார்களா என்று தோன்றும்"


"நமது செயல்களை கேலி செய்ய, விளையாட்டாய் முதுகில் அடிக்க, கை கோர்த்து நடக்க ஆள் தேவைப்படும்"


"தலை நரைத்தாலும், மனதை இளமையாக்க நட்பால்தான் முடியும்"


"அப்படி ஒரு நண்பனாக அவன் இருந்திருப்பான்"


"நண்பனாக இருந்தும் குற்ற உணர்வு விடுவதில்லை"


"செல்வத்தில் நான் அவனளவு இல்லை என்பது என்னை ஒரு படி தள்ள செய்கின்றது"


"அவனது ஞானம் என்னை அவன் முன் நிற்க விடுவதில்லை"


"ஆஸ்ரமத்தில் நாங்கள் வெறும் மாணவர்கள்"


"இன்று எங்களிடம் வாழ்வின் கறை படிந்து விட்டது"


"இருந்தும், அவனை நினைக்காத நாள் இல்லை, அதே போல் அவனும் என்னை நினைக்காமல் இருக்க மாட்டான் என்று தெரியும்"


"அவனின் அம்பு பட்டு என் உயிர் பிரிவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அவனுக்கும் விடுதலையாக இருக்கு" என்ற கூறியபடி வெளியே செல்லுமாறு கை காட்டினார் துருபதன்


"அவனை கொல்வதுதான் அவனுக்கு நான் தரும் விடுதலையாக இருக்கும்,  அவன் மகனின் கையில் இறப்பதுதான் அவனுக்கு நான் செய்யும் பரிகாரமாக இருக்கும்" என்றபடி வெளியே சென்றார் துரோணர்


திருஷ்டத்தூய்மனின் கண்களில் வழிந்த நீரைத்தாண்டி வஞ்சமும், கோபமும் நிறைந்து நின்றது.


அஸ்வத்தாமன் கோபமும், வஞ்சமும் நிறைந்த கண்களில் கண்ணிர் ததும்பி நின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக