15 செப்டம்பர் 2024

I have the streets - Ashwin

சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் 100 டெஸ்ட் ஆடுவது என்பது சாதரண விஷயம் இல்லை என்று பேசியிருந்தார். அவர் பேசியது இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி. ஸ்ரீகாந்த் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல நிலைகளில் இருந்தவர். ஆட்டக்காரர், தேர்வு கமிட்டி தலைவர், வர்ணனையாளர், பயிற்சியாளர். பல உள் விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அந்த கூற்றிற்கு பல வண்ணங்கள் இருக்கலாம்.  

நூறு டெஸ்ட் போட்டிகள் 500 விக்கெட்கள், உலககோப்பை. ஆஸ்திரேலியாவை கலக்கியவர். சயன்டிஸ்ட் அஷ்வினின் குட்டி ஸ்டோரிஸ்தான் இந்த புத்தகம். 

இந்த புத்தகம் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாம் கூறி அவரை வயதானவராக்க வேண்டாம். புத்தகமும் அப்படி எல்லாம் இல்லை. இந்த புத்தகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பேசுகின்றது. அவரது தொழில்முறை கிரிக்கெட் இல்லை. அவது வீட்டு கிரிக்கெட், தெரு கிரிக்கெட், க்ளப் கிரிக்கெட். 

சென்னை வெஸ்ட் மாம்பலம் ராமகிருஷ்ணாபுரத்தில் திரிந்த ஒரு சிறுவன் எப்படி தொழிற்முறை கிரிக்கெட் ஆட்டக்காரராக மாறினார் என்பதை படு சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். அஷ்வின் என்னும் சிறுவனைப் பற்றிதான் நிறைய உள்ளது. 

தெருவில் கிரிக்கெட் ஆடிய பலருக்கும் மிகவும் நெருக்கமாகத் தோன்றும், என்னடா நம்ம கதை மாதிரியே இருக்கு என்று. எனக்கு கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் பிடிக்கும். ஆடியது எல்லாம் விடுமுறையில் சென்னை வரும் போது மொட்டை மாடியில் ஆடுவது மட்டும். அதுவும் அதிகம் கிடையாது, பள்ளியிலும்  விளையாட்டு நேரத்தை எப்படியாவது அமர்ந்தே ஓட்டுவதுதான் வழக்கம். சோம்பேறி. இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.

பந்து தொலைந்தால் அவுட், மாடியிலிருந்து பந்தை கீழே அடித்தால் அவுட். லெக்ஸைட் இடம் கிடையாது அதனால் ஆஃப்ஸைட் மட்டுமே ஆடவேண்டும், ஒன் பிட்ச் கேட்ச் அவுட்,  கிடைப்பது எல்லாம் பேட், ஒரு கிரவுண்டுக்குள் பதினைந்து டீம் கிரிக்கெட் ஆடுவது, இது எல்லாம் அனைத்து சிறுவர்களும் செய்வது, அது அவர்களது கிரிக்கெட்டை எவ்வாறு மாற்றும் என்பது கொஞ்சம் நுணுக்கமானது. தூக்கி அடித்தால் அவுட் எனும் போது தரையோடு ஆடி பழக்கம் வரும், ஆப்ஸைட் மட்டுமே ரன் என்றால் அந்தப்பக்கம் திறமை வளரும். ஆனால் அதை எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டில் பயன்படுத்துகின்றார்கள் என்பதுதான் அவரவர்க்கான திறமை. ஸ்ட்ரீட் கிரிக்கெட் எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டை செம்மைபடுத்தியது என்பது இப்புத்தகத்தின் ஒரு திரி. 

இதுநாள் வரை எனக்கு தெரியாத இன்னொரு உலகத்தையும் காட்டியுள்ளது. எனக்கு தெரிந்த கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட், ஐபில், டிஎன்பில் போன்ற போட்டிகள், ரஞ்சி, துலீப், போன்று மாநில அளவிலான கிரிக்கெட். ஆனால் இதைவிட மாநில அளவில் ஏகப்பட்ட க்ளப்கள், அதற்கான பயிற்சி முகாம்கள், க்ளப்களுக்கு இடையிலான போட்டி இது எல்லாம் புதிது எனக்கு. 

ஒரு ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ஆரம்பித்து பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்யப்பட்டு ஒரு பேட்ஸ்மேனாக போக வேண்டிய அஷ்வின் பெளலரானது அவரது கர்மா என்றுதான் கூறவேண்டும். அஷ்வினின் பயணம் ஒரு வகையில் பலருக்கு ஒரு தைரியத்தையும் தரும். சிறுவயதில் உடல்நிலை பிரச்சினை, ப்ரைமரி காம்பெள்க்ஸ், ஆஸ்த்மா அட்டாக் பிரச்சினைகள் இருந்தும் பேட்ஸ்மேனாக மாறும் போது முதுகுவலி. கிரிக்கெட் ஆடமுடியாத நிலை. மீண்டு வந்தாலும் உடனே ஆடமுடியாது, உடலை மிகவும் வருத்தி கொள்ளாமல் செய்யலாம் என்று ஆரம்பித்த ஆஃப்ஸ்பின், இன்று அவரை உலகில் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக மாற்றியதை கர்மா என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு திறமையான நாவல் போல ஒவ்வொரு பாத்திரங்களையும் மிகவும் நெருக்கமாக உணர வைத்துள்ளார். அஷ்வினின் அப்பா, அம்மா, தாத்தா ஒவ்வொருவரை பற்றி அவர் பேசும் போது அவர்கள் நம்முள் எழுந்து வருகின்றார்கள்.  காவலர்கள் வணக்கம் வைக்கும் தோற்றம் கொண்ட, நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோட்ஸை எழுதிவரும், அப்பா, சர்வதேச போட்டிகளில் எப்படி பந்துவீசியிருக்க வேண்டும் என்று ஐடியா தரும், அம்மா, தானே சமைத்து உண்டு, பேரனை கோச்சிங்கிற்கும், வெளியூர் போட்டிகளுக்கு அழைத்து செல்லும் தாத்தா, நண்பர்கள் அனைவரையும் மிகவும் தெரிந்தவர்கள் போல ஆக்கிவிட்டார். 

மாம்பலத்து தெருக்களில் இருக்கும் சாதரணர்களையும் உயிரோடு பார்க்க முடிகின்றது. அஷ்வினின் இன்றைய நிலைக்கு காரணம் அவரது அப்பா. எந்த அப்பா ஸ்கூலை கட்அடித்து விட்டு டெஸ்ட் மேட்ச் பார்க்க பையனை அழைத்து போவார், அவர் செய்திருக்கின்றார். அஷ்வினின் அப்பாவும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்துள்ளார்.  அவரால்  முடியாததை பையனை சாதிக்க வைத்துவிட்டார். 

வழக்கமான சுயசரிதைகளில் பல பிரபலர்களைப் பற்றி அதிகம் இருக்கும். அதுவும் அஷ்வின் தனக்கு தெரிந்த பிரபலங்களை பற்றி எல்லாம் விலாவரியாக எழுதியிருக்கலாம். தோனியை பற்றி ஒரு ஐம்பது பக்கம் எழுதியிருந்தால் போது புத்தகம் இன்னமும் பரபரப்பாகியிருக்கும். ஆனால அது எல்லாம் இல்லை, பிரபலங்களைப் பற்றி எவ்வளவு தேவையோ அவ்வளவே இருக்கின்றது. சச்சின், தோனி, ஷேவாக், யுவராஜ், கங்கூலி, ட்ராவிட், கார்த்திக் என பலரைப் பற்றி பல சுவாரஸ்ய குறிப்புகளாகவே வருகின்றன.

கிரிக்கெட் தொழில்நுட்ப விவரங்களும் இருக்கின்றன, அவரது ஸ்பெஷல் சொடுக்கு பாலின் வரலாறு, சில பல பிரபல போட்டிகள் பற்றிய குறிப்புகள், சில பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்.

வெகு சுலப நடை, பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் தாரளமாக படிக்கலாம். ஒரு புன்னகையோடு படிக்க முடிகின்ற புத்தகம். ஒரு ஃபீல் குட் படம் என்பார்களே அது மாதிரி . அஷ்வினுடன் சித்தார்த் மோங்கா பெயரும் ஆசிரியர் பெயரில் வருகின்றது, எடிட்டர் போல. சித்தார்த் மோங்கா என்பவரை பற்றி தேடினால் திரைக்கதை ஆசிரியர் என்று வருகின்றது. சுவாரஸ்யத்தை கூட்டுவதில் அவர் பங்கு இருந்திருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இது ஒரு பகுதிதான், இன்னமும் அவரது தொழிற்முறை கிரிக்கெட் பற்றி எழுதவேண்டும், ஓய்வு பெற்றபின் எழுதலாம். பிரச்சினை இல்லாமல் இருக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக