02 ஜனவரி 2025

சிபிஐ கதைகள் - விமலாதித்த மாமல்லன்

சிபிஐ என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அரசியல் கட்சிகள் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது வேண்டும் என்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது வேண்டாம் என்று எதிர்க்கும் அமைப்பு. பெரிய குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு, கொலைகளை, பெரிய ஊழல்களை விசாரிக்கும் அமைப்பு. ஆனால் பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு டிடிஆரை பொறிவைத்து பிடிக்க இறங்கும் என்றால் நம்ப முடிகின்றதா? நம்புங்கள் என்கின்றார் விமலாதித்த மாமல்லன்.

புனைவு என்னும் புதிர், விளக்கும் வெளிச்சமும் போன்ற புத்தகங்களுக்கு பின் அவர் வெளியுட்டுள்ள புத்தகம் சிபிஐ கதைகள். 

சிபிஐ கதைகள் விமலாதித்த மாமல்லனின் புதிய புத்தகம். சிபிஐ விசாரணையை மையமாக கொண்ட கதைகள். சிறுகதை தொகுப்பு என்றும் வைத்து கொள்ளலாம், அல்லது அசோகமித்திரனின் ஒற்றன் நாவல் போன்ற நாவல் என்றும் வைத்து கொள்ளலாம். நரஹரி என்னும் பாத்திரம் அனைத்து கதைகளைக்குமான சரடு. 

பெரும்பாலான கதைகள் மத்திய அரசின் வரி துறைகளை பற்றியவை. வருமான வரி, கலால் வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி இன்னும் என்னவோ. பணம் புகுந்து விளையாடும் இடங்கள். வாங்குவது என்றால் சிக்குவதற்கும் வாய்ப்புகள் ஏராளம் உண்டு. அப்படி சிக்கியவர்கள்,  சிக்காத அதிர்ஷடசாலிகள் பற்றிய கதைகள். அரசு அலுவலகத்தில் ஏதாவது வேலை என்றால் உடனே பயப்படுவது பணத்திற்கும், நேரத்திற்கும் வரும் சேதாரம். அதோடு சில இடங்களில் மரியாதைக்கும் சேதாரம். பெரும்பாலனவர்கள் இதை சகித்து கொண்டு போய்விடுவார்கள், சில சமயம் இந்த சேதாரம் எல்லை மீறும் போது திருப்பி ஏதாவது செய்ய தோன்றும். அப்படி சிலருக்கு தோன்றி அடித்த கதைகள். துறைகளுக்குய் இடையிலான போட்டி, அதன் கதைகள்.  இத்துறைகளுக்குள் சிபிஐ கை வைத்த கதைகள்.

சாகசகதைகள் எல்லாம் இல்லை. சினிமாவில் பார்த்த சிபிஐ வானத்தில் இருந்தால், இது தரையில் நடக்கும் சிபிஐ. வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு. மண் ஒட்டாமல் தட்டி கொண்டு அடுத்த குறிக்கு நகரவேண்டியிருக்கும். சில இடங்களில் கிடைத்த வரைக்கும் லாபம் என்று வசமாக மாட்டியவனை போட்டு தள்ளிவிட்டு மெயின் குற்றவாளியை முடிந்த வரை அலையவிட்ட அல்ப திருப்தியுடன் திரும்ப வேண்டியிருக்கும். அது போன்ற கதைகள் இவை.

அரசாங்க ஊழியர் மொழி என்று தனியாக ஒன்று உண்டோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பல அரசு ஊழியர்கள் பேசுவதை கேட்கும் போது சம்பளம், படி, சீனியாரிட்டி, பதவி உயர்வு, ஓய்வு தேதி, பென்ஷன், ஜாதி இது இல்லாமல் இவர்களால் பேச முடியாதா என்று தோன்றும். இது எல்லாம் சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயில் வண்டியில் கேட்டவை. இந்த கதைகளிலும் அவை அனைத்தும் உள்ளன.  அதை தவிர சில டெக்னிகல் விஷயங்களும் உண்டு. ஒரு ரெய்ட் எப்படி நடக்கும்,  நடுநிலையை காட்ட வெளியிலிருந்து வரும் சாட்சிகள், அவர்களை எப்படி தயார் செய்வது, ரெய்ட் சொதப்பினால் என்ன செய்வது, பேப்பர் வேலைகள், எப்படி சில போர்ஜரிகள் நடக்கின்றன என்பது எல்லாம் அங்கங்கு எளிமையான வார்த்தைகளில் வருகின்றன. 

பெரும்பாலனவர்களுக்கு தெரியாத உலகத்தை கொஞ்சம் நமக்கு காட்டியுள்ளார்.  எல்லா அதிகரிகளும் அடித்து பிடுங்குவதில்லை, பொது ஜனம் எல்லாமும் வரி ஏய்ப்பு செய்வதில்லை. அதது அனுமதிக்கப்பட்ட அளவில் நடந்து கொண்டிருப்பதால்தான் அரசு ஓடுகின்றது.  நேர்மையான கொம்பன் என்பது எல்லாம் சினிமாவிற்குதான் நிஜவாழ்வில் இருப்பது எல்லாம் முடியாது. குறைந்தபட்சம் பக்கத்தில் இருப்பவன் வாங்கி போடுவதை பார்த்து கொண்டிருக்க வேண்டியது இருக்கும். 

கதைகளில் இன்னொரு விஷயம், லஞ்சம் வாங்கி ஒருவர் மாட்டி கேஸில் இருந்து வெளிவந்தாலும் வாழ்க்கை அப்படி ஒன்று சிறப்பாக இருப்பது இருக்காது போல பலருக்கு. செய்தானோ இல்லையோ இடைநீக்கம், டம்மி பதவி, பதவி உயர்வு நிறுத்தம், பென்ஷன் நிறுத்தம் என்று அனுபவிக்க வேண்டியதுதான். அடித்த கொள்ளை கையில் இருந்தால் தப்பிக்கலாம். அதை தாரைவார்த்தால் கஷ்டம்தான். ஒவ்வொரு கேஸும் வருடக்கணக்கில் இழுத்து நோகடிக்கும். 

கச்சிதமான கதைகள். சாகசக் கதைகள் எல்லாம் கிடையாது. லஞ்சம் வாங்குபவனை பிடிப்பதைப் பற்றியே பல கதைகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு வகை, ஒரு கதை மாதிரி மற்றொன்று இல்லை. பல உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கலாம். உண்மை பெயர்களும் இருக்கலாம் என்று தோன்றுகின்றது.  முன்பே சொன்ன மாதிரி இந்த பதவி பெயர்களை நினைவில் வைத்து கொள்வதும், மூன்றெழுத்து, இரண்டெழுத்து வார்த்தைகளின் அர்த்தம் கண்டு பிடிப்பதுதான் கொஞ்சம் எனக்கு சவாலாக இருந்தது.   

படிக்க நினைத்தால் ஒரே இரவில் படித்துவிடலாம். ஆனால் அப்படி படிக்க விடாது. படிப்பவர்களுக்கான இடம் கதைகளில் எப்போதும் இருக்கும். 

கண்டிப்பாக படியுங்கள்.

மாமல்லன் அவரது புத்தகங்களை அவரேதான் பதிப்பித்து கொள்கின்றார். இப்போது அதிகம் ஃபேஸ்புக் பக்கம் போவது இல்லை என்பதால் இக்கதைகள் கிண்டிலில் வெளிவந்ததும் தெரியாது. அவரது வாட்ஸாப் ப்ராட்காஸ்ட் மூலம் தெரிந்தது. 

அவரது ஃபேஸ்புக் கடையில் கிடைக்கின்றது. அவரது வாட்ஸாப் கடையிலும் கிடைக்கின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக