11 நவம்பர் 2015

நளபாகம் - தி. ஜானகிராமன்

நளபாகம். 
சமையலில் சிறந்தவர்கள் நளனும், பீமனும் என்பார்கள். இது ஒரு நளபாகம் படைக்கும் ஒருவனின் கதை.

தி. ஜானகிராமனின் வழக்கமான அனைத்து விஷயங்களும் உண்டு. 

ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. யாத்ரா ஸ்பெஷல், ரயிலில் ஆரம்பிக்கும் கதை.

காமேச்வரன், யாத்ரா ஸ்பெஷெலில் யாத்ரீகர்களுக்கு வேண்டியதை வாய்க்கு ருசியாக சமைத்து போடும் தலைமை பரிசாரகன். அம்பாள் உபாசகன். அதே வண்டியில் வரும் ரங்கமணி என்னும் பெண் (வேறு பெயர் கிடைக்கலையா அய்யா) தன் மகனின் ஜாதகத்தை காட்டி, உடன் வரும் பெரிய  பண்டிதரிடம் கேட்க அவர் கூறும் பதில் விபரீதமாக இருக்கின்றது.

வில்லங்கமான விஷயங்களை நாசுக்கான வரிகளை போட்டு எழுதுவதில் தி.ஜா கில்லாடி. "உங்க மருமகளுக்கு பிள்ளை இருக்கு, உங்க மகனுக்குதான் இல்லை"

காமேச்வரனை வற்புறுத்தி தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள். காரணம் யூகிக்க கூடியதே. கத்தி மேல் நடக்கும், கொஞ்சம் விபரீதமான கதை. நல்லவேளை. 

பாதி படித்ததும் ஜெயகாந்தனின் ரிஷிமூலம் போல ஒளித்து வைத்து படிக்க நேரிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். கதை வேறுபக்கம் பாய்கின்றது.

ரங்கமணியின் மருமகள், காமேச்வரனை கண்டு உண்டாகும் உவகையின் காரணம், பின்னால் வேறு வடிவடைகின்றது.  

கதை குட்டிக்கரணம் அடித்து, பிடி அரிசி அது இது என்று ஓடிஎதற்கு அவன் அங்கு வந்தானோ அதில் முடிவடைகின்றது., வேறுவிதமாக.

காமேச்வரன், அம்மா வந்தாள் அப்புவின் வேறு வடிவமாகவே தோன்றுகின்றது. ஜோசியர் பாத்திரம் சுவாரஸ்யம். ஜோசியரின் கூற்றிற்கு அவர் இறுதியில் கூறும் சமாதானம், ஓரளவிற்கு சரிதான் என்று தோன்றுகின்றது. ஜோதிடத்தையும் மீறியது வாழ்க்கையின் ஆட்டம்.

இக்கதையில் என்ன சொல்ல வருகின்றார் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை. அவர் காட்டுவது வாழ்க்கையின் ஒரு பக்கத்தை. ஜெயகாந்தன் கூறியது போல, ஒரே அளவினா காய்கள், ஒரே விதிமுறைகள் எண்ணில்லாத ஆட்டம், அதில் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக