02 நவம்பர் 2015

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

ஊரில் எனது வீட்டின் எதிரில் பள்ளி வாசல், பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கு ஒலி கணீரென்று கேட்கும். வேறு வேலையில் இருக்கும் போது கூட அவ்வொலி நேரத்தை காட்டிவிடும். மாலை நேரங்களில் கூட்டமாக குழந்தைகளுடன் பெண்களை காணலாம், மந்திரிக்க வருவார்கள். 

கொஞ்சம் வளர்ந்தபின் முதலில் ஆச்சர்யத்தை அளித்தது, இறந்தவர்களின் உடல் உள்ளேயே புதைக்கப்படும் என்பது. இரண்டாவது கொஞ்சம் பயத்தையும், உடன் படித்தவர்களின் கதைகள். உள்ளே ஒரு ஜின் இருக்கின்றது, அதை கைகளை கட்டி உள்ளே அடைத்து வைத்திருக்கின்றார்கள். ஜின் என்பது ஒரு பேய் என்றளவிற்கு விபரம் தெரியும். மாமா ஒரு இஸ்லாமியரிடம் வேலை செய்ததால், இன்னும் கொஞ்ச விபரங்களும் தெரிந்து கொண்டேன். 

எனக்கு எப்போதும் அவர்களின் பக்தியும், நம்பிக்கையும், ஆச்சர்யமூட்டுபவை. மார்கழி மாதம் ஏதாவது ஒரு நாள் காலையில் கோவிலுக்கு போவதே, பெரிய கொடுமையாக தோன்றும் எனக்கு. ஆனால் சின்ன சின்ன சிறுவர்கள், காலை தொழுகைக்கு தினமும் போவது என்பது மிகவும் போற்றக்கூடியது. அவர்களின் கடவுள், மார்க்கம், கட்டளை மீதான நம்பிக்கை மதிப்பிற்குரியது. பலர் கூறுவது போல இஸ்லாமியர்கள் ஒன்று ஒரு தனிப்பட்ட சமூகமாக வாழ்வது போன்று எனக்கு தெரிந்ததில்லை. பலர் அப்படி கூற என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒரு வேளை நான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு. 


நெய்தல் நிலத்தில் இருக்கும் தேங்காய்ப்பட்டிணம் கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாவல். நெய்தல் நிலத்தைப் பற்றி ஏற்கனவே ஜோ.டி.குரூஸ் இரண்டு நாவல்களை எழுதியிருக்கின்றார், இது நெய்தல் நிலத்தின் மற்று மொரு வகை.

சுதந்திரத்திற்கு முன்பான கிராமம். பணம் படைத்தவன் முதலாளி என்னும் நிலையில், முதலாளிக்கு எதிராக எழும் குரல், ஊருக்கு வரும் பள்ளிக்கூடம், என கொஞ்ச கொஞ்சமாக முடிவுக்கு வரும் ஒரு காலகட்டத்தின் கதை.

கதை சுருக்கமாக, ஊரில் பெரிய முதலாளி, அவரை எதிர்க்கும் சாதரணன். இவற்றிற்கு நடுவில் முதலாளியின் குடும்பம்.

கதையில் வரும் புதிய சொற்களை அறிந்து கொண்டால்தான் கதையுடன் முழுக்க ஒன்ற முடியும். இஸ்லாமியர்கள், இஸ்லாம் என்ற மதத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் நடைமுறை எந்தளவிற்கு நம் பாரம்பர்யத்துடன் இணைந்திருக்கின்றது என்பதை காண முடிகின்றது. தாலி, ஹோமக் குழி, மந்திரித்தல். 

பாரம்பர்யமாக வரும் நமது சமூக ஏற்றத்தாழ்வு, அங்கும் உள்ளது. முதலாளியை எதிர்த்து பேசுவதை ஒரு பாபம் என்று கருது மக்கள், அவர்களை சுரண்டும் முதலாளி. முதலாளி பெயரை தன் பிள்ளைக்கு போட்டதற்கு அபராதம் போட்டு பிடுங்கிய நிலம், வெட்டி கெளரவத்திற்கு போகின்றது. லெப்பை, குரான் கற்றுத்தரும் ஆசிரியர், அவரை கேவலமாக பேச வைக்கின்றது. தன் தலைப்பாகையை தொழுகை நடத்த உத்தரவாக அனுப்ப வைக்கின்றது.

இப்புத்தகத்தில் இருக்கும் சமூகம் இன்று இருக்குமா என்றால், சந்தேகம் தான். பள்ளி சென்று ஆங்கிலம் படிப்பது என்பது ஹாராம் என்று நம்பும் மக்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள், ஆனால் இருந்திருக்கின்றார்கள் என்பதை கூறுகின்றது. ஏவல், சூனியம், தாயத்து மந்திரிப்பது, தகடு எழுதுவது, தர்க்கா என்பதை எல்லாம் கடுமையாக எதிர்க்கும் கூட்டமும் இருக்கின்றது.

கதையை மிக எளிமையான வார்த்தைகளில் எழுதிச் செல்கின்றார். சின்ன சின்ன உரையாடல்கள். கிராமத்தின் கதை, கிராமத்தை பற்றிய சித்திரம் அதிகம் இல்லை, அந்த கிராமம் மனதில் உருவாக மறுக்கின்றது. பாத்திரங்களை பற்றியும் பெரிய விவரிப்பு ஏதுமில்லை. இருந்தும் கதையின் ஓட்டம் எங்கும் பாதிக்காமல், கதையை, அதன் பாத்திரங்களை மனதினுள் பதிய வைத்து விடுகின்றார். 

இஸ்லாமியர்களின் சமூகத்தை அதன் உள் நுழைந்து நுட்பமாக காட்டும் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. பலர் இந்த புத்தகம் அத்தகையது என்று கூறியிருந்ததை படித்து, வாங்கியது. உண்மையில் அது முழுவதும் உண்மையல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.முஸ்லீம் முதலாளிக்கு பதில் ஒரு தஞ்சாவூர் மிராசை வைத்தாலும் பொருந்தும். இது ஒரு காலகட்டத்தின் கதை. பல ஊர்களிலும் நடந்திருக்கும் கதை. வித்தியாசப்படும் ஒரே விஷயம், இஸ்லாமிய சமூகம் என்பது மட்டுமே.

இஸ்லாமியர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த பல விஷயங்கள்தான் இதிலும் உள்ளது. 'இறுகிப் போன சமூகம்' என்பது போன்ற வார்த்தைகள் எங்கோ படித்தேன். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, அனைவரும் கலந்துதான் இருக்கின்றனர். தெரிந்து கொள்ள யாருக்கும் அக்கறையில்லை. தொழுகை செய்வார்கள் என்பது அனைவருக்கும், அதை எப்படி செய்வார்கள், என்ன செய்வார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

தொழுகை செய்யும் முன் கை கால்களை சுத்தம் செய்து கொள்வார்கள் என்பது வரை எனக்கு தெரியும், காரணம் அலுவலகத்தில் ஒருவர் (இந்திய / ஊடக மதச்சார்பின்மை தத்துவப்படி / வழக்கப்படி சகோதரர் என்று கூறவேண்டும், பரவாயில்லை), வாஷ்பேசினில் கஷ்டப்பட்டு காலை கழுவிக் கொண்டிருந்தார். பிறகு திண்டுக்கல் போகும் வழியில், ஒரு பள்ளியில் தொட்டியில் கை,கால் சுத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்தேன்.

அது போன்றுதான் நாம் தெரிந்து கொள்ள முடியும், நீர் அருந்தும் போது இரண்டு கைகளால் அருந்த வேண்டும் என்பதை என் நண்பர் ஒருவர் கூறினார். 

இப்புத்தகம், நாமறிந்த பல விஷயங்களை, இஸ்லாமியர்களிடம் புழங்கும் பெயரோடு நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.

இஸ்லாமிய சமூகம் என்ற ஒருவிஷயம் மட்டுமே இதை ஓரளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகமாக்குகின்றது. 

காலச்சுவடு பதிப்பகம், கிழக்கில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக