17 நவம்பர் 2015

உயிர்த்தேன் - தி. ஜானகிராமன்

உயிர்த்தேன்.

தலைப்பு எதை குறிக்கின்றது என்பது கொஞ்சம் குழப்பமான விஷயம். கதையில் நாயகியையா இல்லை, கதையில் வரும் விவசாயத்தையா? ஏதோ ஒன்று, பெரும்பாலும் கதைக்கும் தலைப்பிற்கு சம்பந்தமிருப்பதில்லை.

தி. ஜாவின் சுமாரான கதை என்ற வரிசையில் தான் இதை என்னால் வைக்க முடியும். கதையமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி மிகவும் சாதரணமான கதை.

சொந்த ஊருக்கு வந்து வாழ நினைக்கும் பூவராகனுக்கு செங்கம்மாவின் அறிமுகம். தி. ஜாவின் நாயகர்களை போல அவளை மனதில் வைத்து போற்றும் பூவராகன் ஒரு பக்கம், அதே போற்றுதலை செய்யும் பழனி ஒரு பக்கம். திருமணம் ஆனவள் என்பதால், பூவராகனின் போற்றுதல், ஒரு வித பக்தியாகின்றது. பழனியின் தாபம், வெறியாகின்றது.ஆண் பெண் உறவை பற்றியே பேசினாலும், ஒவ்வொரு நாவலிலும் அதை வேறு வேறு விதமாக காட்டுகின்றார்.

செங்கம்மாவை சுற்றி சுற்றி கதை போகின்றது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு பெண், அனைவரையும் அரவணைத்து போக நினைக்கும் ஒரு பிராணி என்பதெல்லாம், ஒரு வித உயர்வு நவிர்ச்சி (இலக்கணம் சரிதானே)யாகவே போகின்றது. இக்கதை கொஞ்சம் யதார்த்தத்தை தாண்டி குதித்துவிட்டது போலவே தோன்றுகின்றது.

செங்கம்மா சொன்னதற்காக, ஊர் நிலத்தை எல்லாம் சொந்த செலவில் பயிரிட்டு, ஏக போக விளைச்சலை உண்டாக்குவது, செங்கம்மாவை ஊர் தலைவராக்குவது என்பது எல்லாம் படிக்கும் போது ஆயாசத்தை தருகின்றது. ஆசிரியரின் எழுத்து வன்மைக்காகவும், வந்து விழும் அந்த உரையாடல்களுக்காகவுமே படிக்க முடிகின்றது.

பழனி இறுதியில் எடுக்கும் முடிவு எல்லாம் சுத்த நாடகத்தனம். ஏதாவது பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்து, பத்திரிக்கை ஆசிரியர் அளித்த யோசனையோ என்னவோ.

தி.ஜாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையுடையவர்களும், எது கிடைத்தாலும் படிப்போம் என்பவர்களும் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக