19 பிப்ரவரி 2021

அஞ்ஞாடி - பூமணி

காவல் கோட்டம், ஆழி சூல் உலகு வரிசையில் மற்றுமொரு பெரிய நாவல்.2014ம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்ற நாவல்.  நூற்றாண்டு கால கதையை சொல்லும் நாவல். சுமார் 1200 பக்கங்கள். படித்து முடிக்க இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்டது 

அஞ்ஞை என்றால் அம்மா என்று பொருளாம். அஞ்ஞாடி என்றால் அம்மாடி என்று பொருள் கொள்ளலாம். படித்து முடித்ததும், அம்மாடி எவ்வளவு பெரிய நாவல் என்றுதான் கூற முடிகின்றது. 

கலிங்கல் கிராமத்தில் வாழும் இரண்டு குடும்பங்களின் கதையோடு, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை தந்துள்ளார். மிகப்பெரிய நாவல். அத்தனை குடும்பங்கள். கலிங்கல் என்னும் ஊரில் வாழும் இரண்டு சிறுவர்கள் ஆண்டி - மாரி. ஆண்டி நிலபுலங்களுடன் வாழும் ஒரு சம்சாரி குடும்பத்து சிறுவன், மாரி கலிங்கல் கிராமத்து மக்களின் அழுக்குகளை வெளுக்கும் குடும்பத்து சிறுவன். இருவரின் நட்பு, மெதுவாக வளர்ந்து, பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றது. அவர்களின் குடும்ப கதையோடு, அந்த பிரதேச வரலாறும் சேர்ந்து சொல்லப்படுகின்றது.

ஆண்டி - மாரி - இருவரின் சிறார் பருவம், கிராமத்து சிறார்களின்  உற்சாகமான விளையாட்டுகளால் நிரம்பியுள்ளது, கபடி, காக்கா குஞ்சு, கோலி போன்ற விளையாட்டுகள், காடு மேடுகளில் திரிதல், வேட்டையாடுதல். அதைவிட, சிறுவர்களின் "அடித்துவிடும்" விளையாட்டு. அவரவர் கற்பனையில் தோன்றுவதை பிறருடன் பகிர்வதும், அடுத்தவர் கற்பனைகளை பொய்யென்று தெரிந்தாலும் நம்புவது எல்லாம் தற்கால குழந்தைகளுக்கு கிடைக்குமா தெரியவில்லை. அதிகமாக கற்று கொண்டுவிடுகின்றனர்.

கணவன் - மனைவி உறவு முறை, கணவனை என்ன இவனே, அவனே என்று அழைப்பது என்பது எல்லாம் புதிதாக இருக்கின்றது. கணவன் மனைவி இருவரும் அவரவர் வேலையை பகிர்ந்து கொள்வது, கணவன் இறந்த பின்னால் திருமணம் செய்து கொள்வது, விரும்பியவனை திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் சுதந்திரமாகவே இருந்திருக்கின்றனர். இன்று தமிழகத்தில் பேசிவரும் பல திருகல் பேச்சுகளை தெரிந்தோ தெரியாமலோ அங்கங்கு உடைத்துள்ளார். கதை நடக்கும் கிராமத்தில் ஒரு ஜாதியினர் மட்டுமே வாழ்கின்றனர். ஆண்டி குடும்பன், ஊர்க்குடும்பன் என்றே பல இடங்களில் வருகின்றது. அனைவரும் நிலபுலம் உள்ள சம்சாரிகளாக இருக்கின்றனர், பெருமாள் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு போகின்றார்கள், அதே சமயம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையையும் மறைப்பதில்லை. ஒரு ஜாதியினர் மட்டும்  வாழும் ஊரில் மெதுவாக மற்றவர்களும் வந்து வேர் பிடிக்கின்றனர். அவர்களுக்கு பின்னாலும் பெரிய கதை.

அப்படி ஊருக்குள் வரும் ஒரு குடும்பம் நாடர் குடும்பம். நாடார்கள் தங்கள் ஒற்றுமையின் மூலம் முன்னேறியவர்கள். கொற்கை, ஆழி சூல் உலகு நாவல்களிலும் நாடார்களின் வியாபார முன்னேற்றம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும், சமூகத்தில் அவர்களின் இடம் கேள்விக்குறியதாக இருந்தது. அதை முறியடிக்க அவர்களின் பணம் அவர்களுக்கு பயன்படவில்லை, மதம் மாற்றமும் பயன்படவில்லை. மிக மெதுவாக நடந்த சமூக மாற்றமும், கல்வியும் மட்டுமே அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தை தந்துள்ளது. அதற்கான அவர்களின் போராடம் நெடியதாக இருந்துள்ளது. 

சிவகாசியில் நாடர்களுக்கு எதிரான கலவரம், கலவரம் என்பதை விட அவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்றுதான் சொல்ல வேண்டும். அதைப் பற்றி எல்லாம் எந்த பாடமும் நமக்கு சொல்லித்தரப்படவில்லை.  அந்த கலவரமும், கழுகுமலை கோவில் நுழைவு கலவரமும் மிக விரிவாக சொல்லப்படுகின்றது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்திருப்பதால், அனைத்தும் விரிவாக ஆவணப்படுத்த பட்டிருக்க வேண்டும். அதனால் நாவலில் வரும் தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை என்றுதான் நம்பவேண்டும். (இதுவரை யாரும் எதுவும் சொன்னதாக தெரியவில்லை). ஆனால் அதுவே கொஞ்சம் ஆயாசத்தையும் தருகின்றது. மிக அதிகமான பக்கங்களில் மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் வருவது பொன்ற பிரமையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆசிரியர் இடதுசாரி பார்வை கொண்டவர் போல, அங்கங்கு மெலிதான ஒரு பக்க சார்பு தெரிகின்றது. மதமாற்றம் பற்றிய விஷயங்கள் கொஞ்சம் கவனமாக எழுதப்பட்டுள்ளது. நடுநடுவே விவிலியம், புராணம் என்று வருவது எனக்கு நாவலின் சீரான நடையை குலைப்பது போல தோன்றுகின்றது. 

இது பல நாவல்களின், சிறுகதைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். ஊரை கொள்ளையர்களிடமிருந்து காக்க கொள்ளைக்காரனாக மாறும் ஒருவனின் கதை, ஒரு நல்ல வைத்தியரின் கதை, ஊருக்குள் திரியும் விதவிதமான மனிதர்களின் கதைகள், என்று கதைகளின் கொத்து.

உள்ளே ஏகப்பட்ட சொலவடைகள். பெரும்பாலும் உரையாடல்களால் நாவல் நகர்த்தபடுகின்றது. மகாமனுசன், ரோசாப்பூ மனுசன், என்று அரசியல் தலைவர்களுக்கு பெயர்கள். ஆசிரியர் நினைப்பதை உள்ளே சொருகிவிடலாம். உரையாடல்களில் அது ஒரு வசதி. 

நாவலின் முக்கிய கருவாக ஆசிரியர் நினைத்தது சிவகாசி கலவரமாக இருந்திருக்க வேண்டும். அதுதான் நாவலின் சரிபாதி இடத்தை பிடித்திருக்கின்றது. சில இடங்களை தாண்ட பொறுமை வேண்டும், தாண்டி படித்தால் ஒருபுதிய வரலாற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது. கிண்டிலில் வாங்குவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக