தேசிகனின் புதிய புத்தகம். அவரது கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலனவை அவரது தளத்தில் வெளிவந்தவை. ஏற்கனவே சிலவற்றை படித்திருந்தாலும், ஆன்லைனில் படிப்பதை விட புத்தகத்தில் படிப்பது எனக்கு பிடித்திருக்கின்றது.
கட்டுரைகளை அவரே வகைப்படுத்தியுள்ளார்.அனுபவம், சுஜாதா, பொது, அறிவியல், பயணங்கள்.
முகவுரையில் கடுகு அவர்கள் கூறுவது போல யூசர் ஃப்ரெண்ட்லிதான் இப்புத்தகம். எளிமையாக சொல்வது எளிதல்ல, அதுவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும், அதோடு மிகவும் எளிமையாக போய் தினதந்தி ஸ்டைலில் போய்விடக் கூடாது. தேசிகன் இவையனைத்தையும் சமாளித்து எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளார்.
தலைப்பு கட்டுரை என் பெயர் ஆண்டாள். ஆண்டாள் அழகான தமிழ் பெயர். அப்பெயரின் சரித்திரம் சுவாரஸ்யமானது. அனைவருக்கும் தினமும் அனைவருக்கும் பற்பல அனுபவங்கள் கிடைக்கின்றன, அதை எழுத்தில் அப்படியே கொண்டுவருவது கடினம், அப்படியே வந்தாலும் அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பாதியிலேயே தூக்கம் வந்துவிடும். இவரின் கட்டுரையில் அந்த சுவாரஸ்யம் குறையாமல் இருக்கின்றது. அனுபவத்துடன் கொஞ்சம் கைச்சரக்கும் இருக்கும்தான். அதில் எது கைச்சரக்கு என்று கண்டுபிடிப்பது வாசகனுக்கான சவால்.
சுஜாதாவிற்கும் அவருக்கும் இருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தெரிந்ததுதான். புதிய விஷயம் இவரும் குருவை போலவே இவரும் மனைவி பெயரில்தான் எழுதுகின்றார். என்ன இவர் மனைவியின் முழுப் பெயரில் எழுதுகின்றார். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தீவிர வாசகர்கள் இருப்பார்கள், ஆனால் இது போன்று நெருக்கமான அன்பு உண்டாவது ஆச்சர்யம்தான்.
அறிவியல் கட்டுரைகளை படிக்கும் போது 'ஹாய் மதன்' படிப்பது போன்ற பிரமை. எனக்கு மூளைக்கு வேலை தருவது என்பது கொஞ்சம் சோம்பேறித்தனமான விஷயமாகிவிட்டது. சில கட்டுரைகள் மூளையின் உழைப்பை கேட்கின்றது. கஷ்டப்பட்டு தட்டி எழுப்ப வேண்டியதாகிவிட்டது. முடிந்த வரை எளிமையாக கூறியிருக்கின்றார். நொள்ளை சொல்லாவிட்டால் நமக்குத்தான் தலை வெடித்துவிடுமே, அதனால் ஒன்றே ஒன்று
அமைச்சர் மன்னனிடம் கேட்கும் பரிசு, சதுரங்கத்தின் அறுபத்து நான்கு கட்டங்களில் நெல் கேட்கின்றார். முதல் கட்டத்தில் ஒரு நெல், இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல், மூன்றாவது கட்டத்தில் நான்கு நெல், நான்காவது கட்டத்தில் எட்டு நெல் என்று அறுபத்து நான்கு கட்டத்திலும் நெல் கேட்கின்றார். புத்தகப்படி அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். எப்படி? மேல் கண்ட வரிப்படி கணக்கு போட்டால்
1 - 1 = 1
2 - 1 x 2 = 2
3 - 1 x 2 x 2 = 4
4 - 1 x 2 x 2 x 2 = 8
நிதானமாக யோசித்தால் அது இப்படி இருக்குமோ?
1 = 1 = 1
2 = 1 x 2 = 2
3 = 1 x 2 x 3 = 6
4 = 1 x 2 x 3 x 4 = 24
இக்கணக்குபடிதான் அந்த பெரிய நம்பர் வருகின்றது.
பயணங்கள். அதிக பயணங்கள் மேற் கொள்ளும் ஆசாமி போல. பெரும்பாலும் பெருமாளை பார்க்கத்தான் போயிருக்கின்றார். நமது அரசாங்கம் கோவில்களை பராமரிக்கும் அழகை கண்டால் கடுப்பாகத்தான் இருக்கின்றது. பாரம்பர்ய இடங்கள் எல்லாம் குடோன்களாக மாறி கிடக்கின்றது. பழமையை பேசினால் மட்டும் போதும் என்ற எண்ணம் உள்ள போது என்ன செய்ய. பயணங்கள் போகும் போது கண்களையும் காதுகளையும் நன்றாக திறந்து வைத்திருந்திருக்கின்றார்.
பயணத்தின் கடைசி கட்டுரையின் முடிவு ரியலா ரீலா?
முக்கிய குறிப்பு. சிலருக்கு புத்தகங்களை சாப்பிடும் போது படிக்கும் வழக்கம் இருக்கும். அவர்கள் எச்சரிக்கையுடன் படிக்கவும். 'ஆய' கலைகளை பற்றி பேசும் புத்தகத்தை சாப்பிடும் போது படிப்பது உசிதமாகாது.
இப்போதெல்லாம் கையை சொடக்கு போடும் போது பயமாக இருக்கின்றது. எனக்கு வேறு கையை சும்மா சுழற்றினாலே சத்தம் வருகின்றது.
சாதரண விஷயங்களை சுவாரஸ்யமாக கூறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள உதவும் புத்தகம்.
அழகான தூண்டுகிற மதிப்புரை.
பதிலளிநீக்கு