23 ஆகஸ்ட் 2013

அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

மோகமுள்ளை படித்துவிட்டு வைத்த போது இரவு 12. தண்ணீர் குடித்துவிட்டு வரும் போது கண்ணில் பட்டது அம்மா வந்தாள். படித்துவிட்டு படுக்கும் போது இரண்டு.

சின்ன நாவல். இரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். வெளிவந்த காலத்தில், படித்தவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம். தி. ஜாவை விலக்கி வைக்கும் அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்திய கதை. இன்றும் ஜீரணக்க கொஞ்சம் கடினமான கதைதான்.

இரண்டு பெண்களை பற்றிய கதை. இந்து, அலங்காரம். இவர்களுக்கு இடையில் அப்பு. அப்பு வேதபாடசாலையில் படித்து முடித்துவிட்டு கிளம்ப தயாராக இருக்கின்றான். இந்து வேதபாடசாலை நடத்திவரும் பவானியின் மருமகள். சிறுவயது முதல் அங்கு வளர்ந்து, கணவனை இழந்து மீண்டும் அங்கு வந்து இருக்கின்றாள். இந்துவிற்கு அப்புவின் மீது காதல். சிறுவயது முதல். அதை மறுக்கும் அப்பு அவளை தன் அம்மாவுடன் ஒப்பிடுகின்றான், இந்து அவனின் அம்மாவை பற்றி கூறி ("அவ யாரையோ நினைஞ்சிண்டு உங்கப்பாவ ஏமாத்திட்டு இருக்கா, நான் உன்ன தவிர யாரையுன் நினைச்சதில்டா பாவி"), அவளோடு என்னை ஒப்பிடாதே என்று கத்துகின்றாள். சென்னை செல்லும் அப்பு அவள் கூறுவது உண்மை என்று கண்டு கொள்கின்றான்.


அலங்காரம் அப்புவின் அம்மா. தான் செய்த பாவத்தை தன் மகனை வேதவித்தாக்குவதன் மூலம் தீர்த்துவிடலாம் என்று நம்புகின்றவள். அதனால் அவனை வேதபாட சாலைக்கு அனுப்புகின்றாள். கடைசியில் அவனும் அம்மா பிள்ளை யாகி விட்டதால் காசிக்கு போகின்றாள் பாவத்தை தீர்க்க.

அப்பு, தனியே இருக்கு இந்துவை காண பயப்படுவது. அவனுக்கு அவள் மேல் பயமில்லை, அவன் மீதே அவனுக்கு பயம் இருக்கின்றது என்பதை கூறாமல் கூறி செல்கின்றார். அதை மறைக்கவே விதவிதமான வாதங்களை அடுக்கிக் கொள்கின்றான். அலங்காரம் ஏன் அப்படி ஆனாள் என்பதை எல்லாம் விளக்க சிரமப்படவில்லை. அதை தண்டபாணி மூலம் ஒரு வரியில் கூறிச் செல்கின்றார். அறிவு இருந்தால் கூடவே பணம் இருக்கனும், பணம் இருந்தால் கூடவே கீர்த்தியிருக்கனும், கீர்த்தியிருந்தால் பலசாலியா இருக்கனும். இதில் ஒன்றுதான் அலங்காரத்தை சிவசுவிடம் தள்ளுகின்றது.

தண்டபாணிக்கு அலங்காரத்திடம் உள்ளது பக்தி கலந்த மரியாதை. அதுவே அவரை அவளின் செய்கையை மீறி அவளுடன் வாழச் செய்கின்றது. பகவான் எதுக்கு படைச்சிருக்கார், பார்த்துட்டு இருக்கத்தான் என்று வேதாந்தமாக பேசி தன் பலவீனத்தை மறைத்து கொள்ள செய்கின்றது. வெளியே ஒரு பெரிய வேதாந்தியாக காட்சிதருகின்றார், அவரின் முதலாளியே அனுமதி பெற்று வந்து பார்க்கு அளவிற்கு பெரியவர். மனைவியின் தவறை சகித்துக் கொள்ள அவருக்கு தேவைப்பட்ட முகமூடி அது. 

பவானியம்மாள் இந்துவின் காதலை ஏற்றுக் கொண்டு, பாடசாலை மாற்றவும் அனுமதி அளிக்கின்றாள். அவளுக்கு இந்துவின் காதல் தவறாக படவில்லை.

இது மிகவும் சிக்கலான கத்தி மேல் நடக்கும் கதை. தி.ஜா அதை சர்வ சாதராணமாக கையாள்கின்றார்.கொஞ்சம் தப்பினாலும் விரசமாகிவிடும். கதையை வெகு நேர்த்தியாக உரையாடல்கள் மூலமாகவே கொண்டு செல்கின்றார்.  வெளிப்படையாக தெரிவதை விட , மறைமுகமாக பல விஷயங்களை சொல்லி செல்கின்றார். அலங்காரத்தை பற்றி அப்பு தெரிந்து கொள்வதும் ஒரே வரியில் மிக நாசுக்காக கூறுகின்றார். இக்கதையை எங்கும் விரசம் என்று கூற முடியாதபடி அமைத்துள்ளார்.முதல் பகுதியில் வரும் காவேரி பற்றிய விவரிப்பு இதமான தென்றல் என்றால் சென்னையின் விவரிப்பு புழுங்க வைக்கும் காற்று.

முதல் பகுதிகளில் வரும் வேதங்களை பற்றிய விமர்சனங்கள் பலரை கோபப்பட வைத்திருக்கலாம். ஒரு வகையில் அது சரிதான். வேதம் என்பதை உயர்வாக நினைப்பதென்றால் அதை காசிற்கு விற்பது எப்படி சரியாகும். காசிற்கு வேதம் என்னும் போதே அது ஒரு பண்டமாகிவிடுகின்றது. பிறகு அதற்கு என்ன மரியாதை கிடைக்கும். மோகமுள்ளில் ரங்கண்ணா இசையை பற்றி கூறுவது, இங்கு வேதத்திற்கு அப்படியே பொருந்துகின்றது. நம் ஆன்மாவை சந்தோஷப்படுத்தும் ஒரு விஷயத்தை எப்படி விற்க முடியும்.

பவானியம்மாள் பாடசாலை வைத்து நடத்துவதை விட பத்து பேர்க்கு சாப்பாடு போட்டு படிக்க வை என்று கூறுகின்றாள். சுஜாதாவின் ஒரு கதையில் ஒரு பாடசாலை வரும். "வேத உபநிஷத்துகள் போன்ற ஞானங்களும் எந்த விதத்தில் அந்த பாலகனுக்கு உயிர் வாழ உபயோகம் என்று தெரியவில்லை. அதில் பாஸ் பண்ணிவிட்டு வெளியே வருபவர்கள் கெமிஸ்ட்ரி, ஃப்ஸிக்ஸ் தெரியாமல் என்ன ஆனார்கள் என்ற தகவல் இல்லை" என்று கூறுவார். சரிதான். இன்றைய சூழ்நிலையில் வேதத்திற்கு மரியாதை இல்லாத நிலையில் அதை கற்று, அதை விற்பதற்கு, வேறு ஏதாவது படித்துவிட்டு போகலாம்.

கடைசியாக, இக்கதையை பற்றி தி. ஜாவின் வரி

"அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏது சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கத்தோ அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதை தூற்றி விட்டார்கள். நான் பிரஷ்டன் என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிரிந்துதான் பிறந்து வருகின்றது என்று கூற விரும்புகின்றேன்


'அம்மா வந்தாள்' நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி. மனதுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றை பார்த்து ஊறி வெகுகாலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெருகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை. 



மையக் கருத்தை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன். அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குதான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம், அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள கூடாது"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக