08 டிசம்பர் 2013

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று எழுதிவைத்ததால் தேடினார்களோ இல்லை அப்படி தேடியதால் எழுதி வைத்தார்களோ தெரியவில்லை. பல நூறு ஆண்டுகளாக நமது மக்கள், பல நாடுகளுக்கு சென்று திரவியம் தேடி வந்துள்ளனர். அதில் முக்கிய இடங்கள் மலேசியா,பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா. இரண்டாம் உலகப் போரில் அதிக பாதிப்பு அடைந்தவர்களும் இங்கிருந்தவர்கள். அப்படி இரண்டாம் உலகப்போர் காலத்து தமிழர்களின் வாழ்வினை காட்டுகின்ற ஒரு நாவல் புயலிலே ஒரு தோணி. ஒரு சாகசக் கதை என்று பலர் குறிப்பிடுகின்றார்கள். எனக்கு இதில் வரும் சாகசம் எல்லாம் போதாது. கொஞ்சம் சாகசம் உள்ள கதை என்று வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில்தான் நேதாஜி இந்திய தேசியப் படையை அமைத்தார். ஐ.என்.ஏ ஜப்பானியர்களுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டாஷாரை எதிர்த்து போரிட்டது. நேதாஜியுடன் சேர்ந்தவர்களில் தமிழர்கள் அதிகம். வெளிநாட்டில் பிழைக்க சென்ற ஏராளமான தமிழர்கள், நேதாஜியுடன் சேர்ந்து கொண்டனர். அப்படி சேர்ந்த ஒரு தமிழனின் கதை.


பாண்டியன் தென்பாண்டி நாட்டை சேர்ந்தவன்.  அன்னெமெர் பாண்டியன் இந்தோனேஷியாவில் கெர்க் ஸ்ட்ரீட்டில் அறிமுகமாகி, அங்கிருந்து பினாங் சென்று வியாபாரம் செய்கின்றான். நேதாஜியின் ஐ.என்.ஏவில் சேரும் அவன், அங்கு ஒரு முகாமில் நடந்த சண்டையின் காரணமாக தண்டனை அடைந்து வெளியேற்றப்படுகின்றான். பின்னர் ஒரு முக்கிய பணியில் அமர்த்தப்பட்டு அதில் வெற்றி பெறுகின்றான். நேதாஜியின் திடீர் மரணம், ஐ.என்.ஏவில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலனவர்கள் பிரிந்து அவரவர் பழைய தொழிலை பார்க்க திரும்புகின்றனர். பாண்டியனால் அது முடியவில்லை. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் சுதந்திர போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றான். 


முதலில் படிக்கும் போது கதை கண்ணில் கட்டி விட்டது போல இருந்தது. காரணம் இதில் வரும் பல வேற்று மொழி சொற்கள். இரண்டாம் முறை படிக்கும்போதுதான் கதை வசப்பட்டது. மூன்றாம் முறை படிக்கும் போது பல புதிய விஷயங்கள் கண்ணில் பட்டன. அடுத்த முறை இன்னும் பல கிடைக்கும்.

பாண்டியனின் நிறைவுறா தேடல்தான் கதையின் மைய சரடு. சராசரி வாழ்க்கையின் மீது பற்றில்லா அவன் தேடுவது எதை என்பதை கதை முழுக்க பேசியிருக்கின்றார். பிழைக்க கடல் கடந்து வந்தவன், அதற்கு முன்பே பல வகையில் முதிர்ச்சி அடைந்தவன். துணிந்து முகாமை கைப்பற்றுவது, ஜப்பானிய தளபதியை தேடி கொல்வது, இந்தோனிஷிய விடுதலை படைக்கு பயிற்சியளிப்பது என ஆபத்தை தேடி ஓடுகின்றான். கங்காணி வேலை, வியாபாரம், ஐ.என்.ஏ, போர், ஆயிஷா, சாகசங்கள், கேளிக்கை, கொரில்லா போர், வெறுமை, கடைசியில் மரணம். குண்டடி பட்டதும அவன் மனதில் ஓடும் காட்சிகள், கொஞ்சம் நம்மையும் யோசிக்க வைக்கும். இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று. மிகவும் யோசித்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று அந்த யோசனையை ஒரு இருபதுவருடம் தள்ளி போட்டுவிட்டேன்.

பாண்டியன் கதையோடு அக்கால தமிழர்களில் வாழ்க்கை, ஐ.என்.ஏவை பற்றிய பல விஷயங்களும் கிடைக்கின்றது. ஐ.என்.ஏ என்றவுடன் நமக்கு கிடைக்கும் ஒரு பிம்பம், வீரப்படை. பல வீரர்களை கொண்ட படை, சுதந்திர போரில் ஈடுபட்ட தியாகிகள். ஆனால் அவர்களும் மனிதர்கள்தான், குற்றம் குறைகள் உள்ளவர்கள் என்பது கொஞ்சம் மறந்துதான் போகின்றது. ஐ.என்.ஏவில் இருந்தவர்கள் செய்த சில்லறைத்தனங்களையும் இதில் காட்டுகின்றார். பொருட்களை திருடி விற்பது, பெண்களின் பின்னால் அலைவது, அவர்களுக்குள்ளே நடக்கும் போட்டி, பொறாமை. நேதாஜியும் ஒரு பாத்திரமாக வருகின்றார்.

இது ஒரு பக்கம் என்றால், அங்கு பிழைக்க சென்றவர்களின் நிலை. அங்கிருந்த அதிகார படிகள். பெட்டியடிப்பையன், மேலாள், அடுத்தாள். அவர்களுக்குள்ளே புழங்கிய மொழி. வானா ரூனா, பானா, மார்க்கா, வட்டிசிட்டை, சம்பளம் எழுதி கொண்டு விற்பது. அக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கு இடையிலிருந்த பாசம், சித்தப்பா, மாமா, தங்கச்சி முறை வைத்து பேசிக்கொள்வது. அவர்களின் மொழி, இருங்கிய, போயித்து வாங்க. தமிழர்களுக்கு சீனர்களிடமும், பெரிய வங்கிகளிடமும் இருந்த செல்வாக்கு. ஓகோவென்று வாழ்ந்த பலரின் வீழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் காரணங்கள், அவர்களின் பெண் விளையாட்டு, அதில் வரும் போட்டி என ஒரு உலகம்.

இதை சாதரணமாக படித்தால் போரடித்திருக்கும். எடுத்த வேகத்தில் முழுவதும் படிக்க வைத்திருப்பது, சிங்காரத்தின் மொழி. பலவிதமான மொழிகள் கலந்திருக்கின்றது. மதுரைப் பக்க பேச்சுதமிழ், சுத்த தமிழ், வெளிநாட்டு வியாபாரத்தமிழ். காட்சிகளை நம் கண்முண் ஒட வைக்கின்றார். கேலியும் கிண்டலும் குதித்தோடுகின்றது.

கதையின் ஆரம்பத்தில் வரும் ஜப்பானியர்கள் வருகை காட்சி. பாண்டியன் தன்நிலை மறந்த நிலையில் ரிக்‌ஷாவில் போகும் போது அவனுள் ஓடும் காட்சிகளை படிக்கும் முன் நம் கண்முன் ஓடுகின்றது. ஒருவனின் மன்வோட்டத்தை எழுத்தில் வடிப்பது மிகக்கடினம். அது ஒன்றோடு ஒன்றோடு ஒட்டாது. இங்குமங்கும் ஓடும். சம்பந்தமில்லாததை இழுக்கும். ஒரு முழு அந்தியாயமும் அப்படி ஓடுகின்றது. ஆசிரியர் வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஏதும் சொல்வதில்லை, பாண்டியனின் மனதில் ஓடுவதை அப்படியே படம் பிடிக்கின்றார். அது நமது கண் முன் ஓடுகின்றது.

அதே போன்று, கப்பலில் போகும் போது சொல்லப்படும் செட்டியாரின் கதை. கடைசியில் பாண்டியன் சுடப்பட்டவுடன் அவனின் மனதில் ஓடுவது, சில சில வார்த்தைகளில்தான் கூறப்படுகின்றது. ஆனால் அதுவே போதுமானதாக இருக்கின்றது. பொன்னியின் செல்வனில் ஒரு காட்சி, கப்பலி வந்தியத்தேவன் தனியாக மாட்டிக் கொள்ளும் போது கொடும் சூறாவளியில் மாட்டிக் கொள்வான். அதை கல்கி அருமையாக வர்ணித்திருப்பார். நாம் அதை நேரில் பார்ப்பது போல தோன்றும். இதிலும் அதே போல் ஒரு காட்சி. சிங்காரத்தின் வரிகளில் நாமே மாட்டிக் கொண்டது போல தோன்றுகின்றது. 

பாண்டியனும், மாணிக்கமும் செய்யும் பழந்தமிழ் விவாதங்கள், அங்கங்கு வரும் பல பழையபாடல்கள். அவர்களின் விமர்சனம். மாயைகளை போட்டு உடைத்து, தலையில் ஒரு தட்டி தட்டி, யதார்த்தத்திற்கு வா என்கின்றது. சில தமிழுணர்வாளர்களுக்கு உவப்பாயிராது, என்ன செய்ய. பழம் பெருமை மட்டும் பேசி, ஒன்றும் செய்யாமால், முன்னோரின் பெருமையில் வாழும் பலருக்கு ஒரு அடி.

அவர் மதுரைக்காரர் என்பதால், எங்கள் பக்கம் கேட்க முடிந்த பலவற்றை படிக்க ஒரு அல்ப சந்தோஷம். குதக்கு பையன், உன் துருத்திய நீ ஊது, விரசா வா, வைவான். நிறைய இடங்களில் அக்குசும்பும், கேலியும் தெரிகின்றது. 
இதை திரைப்படமாக எடுக்கலாம் என்று யாரோ எழுதியிருந்தனர். தேவையேயில்லை. நாவலே ஒரு திரைப்படம் போல நம்முள் ஓடுகின்றது. சிங்காரம் அவது மொழியால் அதை சாதித்திருக்கின்றார். எந்த மாதிரியும் இல்லாமல், சின்ன வார்த்தைகளாலும், வெட்டி வெட்டி தாவியும் நம்முள் சித்திரத்தை உண்டாக்குகின்றார்.

தமிழ் புத்தகங்களை படிக்கும் ஒருவன் தவற விடவே கூடாத ஒரு நாவல். முதலில் படிக்கும் போது உள்ளே போக முடியாதது போல தோன்றும். ஆனால் அடுத்தடுத்த முறை உங்களை உள்ளே இழுத்து போட்டு வெளியே விடாது.

இவர் வாழ்நாளில் எழுதியது இரண்டே இரண்டு கதைதான் என்பது நமக்கு இழப்புதான்.

அவரின் மற்றுமொரு நாவலுடன் சேர்த்து ஒரே புத்தகமாக கிடைக்கின்றது. கால வரிசைப்படி தொகுத்துள்ளனர். இதை படித்துவிட்டு கடலுக்கு அப்பாலை படிப்பது சுலபம். நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாங்க இங்கே செல்லவும்

3 கருத்துகள்:

  1. //இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று. மிகவும் யோசித்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று அந்த யோசனையை ஒரு இருபதுவருடம் தள்ளி போட்டுவிட்டேன்.//

    //இதை சாதரணமாக படித்தால் போரடித்திருக்கும். எடுத்த வேகத்தில் முழுவதும் படிக்க வைத்திருப்பது, சிங்காரத்தின் மொழி. பலவிதமான மொழிகள் கலந்திருக்கின்றது. மதுரைப் பக்க பேச்சுதமிழ், சுத்த தமிழ், வெளிநாட்டு வியாபாரத்தமிழ். காட்சிகளை நம் கண்முண் ஒட வைக்கின்றார். கேலியும் கிண்டலும் குதித்தோடுகின்றது.//

    //சில தமிழுணர்வாளர்களுக்கு உவப்பாயிராது, என்ன செய்ய. பழம் பெருமை மட்டும் பேசி, ஒன்றும் செய்யாமால், முன்னோரின் பெருமையில் வாழும் பலருக்கு ஒரு அடி.//

    இந்த வரிகள் எல்லாம் தூண்டில்கள். படிக்கத் தூண்டுகின்றன. ஆன்லைனில் வங்கிப் பழக்கமில்லை. புத்தகத் திருவிழாவில் வாங்குகிறேன். :)))

    பதிலளிநீக்கு
  2. ஆன்லைனில் வாங்குவது சுலபம். நேரில் வாங்குவது சுகம்.

    பதிலளிநீக்கு
  3. இந்நாவல் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். தமிழின் பெருமிதம். இதைப் போல் ஒரு நாவல் மீண்டும் தமிழில் வருவது சாத்தியமில்லை. வாழ்ந்த காலத்தில் ப.சிங்காரத்தை உதாசீனப்படுத்தியதையும் இப்போது கொண்டாடுவதையும் பார்க்கும்போது, காலம், எப்போதும் எதற்கும், காலம் தாழ்த்தியே பதில் சொல்லும் என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு