முதற்கனல் புத்தகம் வந்து பல மாதம் ஆகிவிட்டது. இருந்தும் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம் மற்றுமொரு புதுவரவு. நேரம் கிடைத்ததும் இரண்டு முறை படித்து விட்டேன். தினமும் ஆன்லைனில் படித்தாலும் எனக்கு அது அந்தளவிற்கு பிடித்தமானதாக இல்லை, படித்தவுடன் மறந்துவிடும். பலருக்கு அதுதான் பிடித்திருக்கின்றது போல, படித்துவிட்டு நாளெல்லாம் அதைப் பற்றி நினைத்து கொண்டிருக்க வசதியாக இருக்கின்றது என்கின்றார்கள், ஆனால் எனக்கு அலுவலகம், குடும்பம் என்று இருப்பதால் அதற்கும் கொஞ்சம் நினைவை தர வேண்டியிருக்கின்றது. முழுப்புத்தகமாக கையில் வைத்து படிப்பதுதான் எனக்கு திருப்திதரக்கூடியது. அதைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் அதிக நேரம் பிடித்துவிட்டது. எதை விட்டு எதைப் பற்றி எழுத.
மகாபாரதம்.
இல்லாதது எதுவுமில்லை என்று அனைத்தையும் கொண்ட இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருளாம். மேலோட்டமாக பார்த்தால் மகாபாரதம் முழுவதும் அரசியல் சதுரங்கமாகத்தான் தோன்றும். அரசியல் சதிகள், போர்கள். ஆனால் மகாபாரதம் முழுவதும் பேசப்படுவது தர்மம். ஜெயமோகனின் மகாபாரதம் என்பதால் அறம் என்றே சொல்வோம்.
எது தர்மம், எவ்விடத்தில் எது தர்மம் என்று பல விவாதங்களை கிளப்பி அதற்கு விடையை கூறிச்செல்லும். இது ஒரு பரிமாணம் என்றால் மறுபுரம் பல தரப்பட்ட பாத்திரங்களை படைத்து அவற்றை மோதவிட்டு பார்க்கும் ஒரு பரிமாணம். கருப்பு வெள்ளை போல பாத்திரங்கள் தட்டையானவை அல்ல. சராசரி மனித உணர்ச்சிகளின் கலவை. நம்மை போன்ற மனிதர்கள்தான். இதுதான் மகாபாரதத்தை பலருக்கும் நெருக்கமானதாக காட்டுகின்றது. பாத்திரங்கள் அனைவரும் அந்தந்த நேரத்திற்கு தர்மானதை செய்கின்றனர்.
பாண்டவர்களுடன் சமாதானமாக போகச்சொல்லும் சகுனிதான் வேறுவழியின்றி துரியோதனனுக்கு பகடையாடி நாட்டை வென்று தருகின்றான். பழி வாங்க சபதம் ஏற்கும் பீமனும் அர்ச்சுனனும் போருக்கு முன் சமாதான பேச்சிற்கு ஆதரவளிக்கின்றனர். இந்த முரண்பாடுகள்தான் சுவாரஸ்யத்தை தருகின்றன.
பாரதம் சகோதர யுந்தத்தை பற்றி மட்டும் கூறுவதல்ல. அதோடு நம் பாரத நாட்டின் கதையையும் சேர்த்தே கூறுகின்றது. வெவ்வேறு நாடுகள், நாடுகளின் கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், புவியியல் அமைப்புகள், ஆயுதங்கள், போர் முறைகள் என்று ஏராளமானவை. மகாபாரத சுருக்கங்களை படிக்கும் போதே ஓரளவிற்கு இதை நாம் அறிந்து கொள்ள முடியும். முழு மொழிபெயர்ப்பை படிக்கும் போது இன்னும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் அதிலும் சில இடங்கள் வெறுமையாகத்தான் இருக்கும். காரணம் அது பாடப்பட்ட காலம். அந்த வெறுமையை நாம் இன்றைய சூழலில் நிரப்பி கொள்ளலாம். மீண்டும் பாரதத்தை எழுதிப்பார்ப்பது; சொல்லாத இடங்களை கற்பனையாலும், பல்வேறு பிற நூல்களின் அறிவாலும் நிரப்பி கொள்ளலாம். அதே சமயம் பாரதம் உருவாக்கியுள்ள பாத்த்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை அவற்றின் ஆளுமைகளை கொண்டு பல நூறு கதைகள் புனையலாம். இந்த இரண்டையும் சரியாக சேர்த்து செய்யப்பட்டதுதான் முதற்கனல்.
பாரதமும், ராமாயணமும் ஒரு கதை என்ற அளவிலேயே நம்முள் இருக்கின்றது. சம்பவங்களின் கோர்வை. இது இப்படி நடந்தது என்ற அறிதல் மட்டுமே நமக்கு இருக்கும், அதோடு கொஞ்சம் பக்தி, நீதி, தர்மம் இன்ன பிற விஷயங்களும் கொஞ்சம் தேறும். அனைத்தும் நமது மூளையோடு நேரடியாக பேசுபவை. பக்தியை விடுங்கள், அது வேறு ஏரியா.
இரண்டாவது, கதை என்றாலும் அது ஒரு புராண கதை. பாத்திரங்கள் அனைவரும் நம்மை விட ஒரு படி மேலானவர்கள் என்ற எண்ணம். ஆனால் இதிகாசம் என்பதே நடந்ததை கூறுவது என்னும் போது பாத்திரங்கள் மட்டும் எப்படி மனிதர்கள் அல்லாமல் போவார்கள். நம்மை போன்ற மனிதர்கள்தான் அவர்களும். நல்லது கெட்டது கலந்தவர்கள். கோபமும், கயமையும், இரக்கமும் கொடூரமும், பாசமும் கலந்துதான் இருப்பார்கள்.
மூன்றாவது கதையிலிருக்கும் மாயத்தன்மை. புராணத்தன்மை. பல விஷயங்கள் இலை மறை காயாக, இல்லை ஒரு உருவகமாக வைக்கப்பட்டிருக்கும். பல விஷயங்கள் இன்றைய அளவுகோலை வைத்து அளந்தால் சரிவராமல் போகலாம்.
இவைகளனைத்தையும் தற்கால நாவல் வடிவில் சரி செய்து கொள்ளலாம். அதை செய்திருக்கின்றார் ஜெயமோகன். நம்மை அக்காலகட்டத்திற்குள் இழுத்து சென்று விட்டிருக்கின்றது. முதலில் முதற்கனல் ஒரு புராணக்கதையில்லை, ஒரு வரலாற்று கதை என்றே கொள்ளலாம். பக்தி வகையறா இல்லை, அதுவே கதையை பல நிலைகளில், பல பரிமாணங்களில் காண உதவுகின்றது இரண்டாவது, மாயத்தன்மை. சரியான இடத்தில் தேவையான அளவிற்கு வருகின்றது. கண்டிப்பாக இது போன்ற கதைகளில் இடைச்சொருகல்கள் இருக்கும், அது எவை என்று அறிவது மிகவும் கடினம். அது போன்ற இடங்களை லாவகமாக கடந்து செல்கின்றது. உதாரணமாக சிகண்டி ஆணாக மாறுவது, விநாயகர் பாரதத்தை எழுதியது.
ஜெயமோகன் : மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.
பாரதத்தை மீண்டும் எழுதுவது என்பது சாதரணமானதல்ல. சோ எழுதியது போன்ற பாரத சுருக்கம் எழுதவே பல ஆண்டு உழைப்பு வேண்டும், படிப்பு வேண்டும். அதை மீண்டும் வேறு ஒரு மொழி நடையில் எழுதுவதற்கு சரஸ்வதியின் அருளும் சேர்ந்து வேண்டும். அது ஜெயமோகனுக்கு கிடைத்துள்ளது.
பாரதத்தில் வரும் ஒரு குட்டி பகுதி ஒரு பெரிய புத்தகமாக விரிந்து கிடக்கின்றது. ராமாயணத்தை ஒரு பெண்ணின் சோகக்கதை என்பார்கள். சீதையின் துயரமே ராமாயணம் என்று. பாரதத்திற்கும் காரணம் பெண்ணே, இதுவும் பெண்களின் கதையே. பாரதத்தில் வரும் ஒவ்வொரு பெண்ணின் துயரமும் அதிகம்தான். பாஞ்சாலிக்கு முன் மூன்று தலைமுறையில் ஆரம்பிக்கும் துயரம். அம்பை, அம்பாலிகை, அம்பிகை, சத்தியவதி, சுனந்தை.
கதையின் நாயகன் பீஷ்மர், நாயகி அம்பை. இவர்களை சுற்றிதான் கதை என்றாலும், பாரதத்தில் ஒரு தக்குனூட்டு பாத்திரமாக வரும் விசித்திர வீரியன் இதில் ஒரு முக்கிய பாத்திரம். அம்பையின் கதை அனைவருக்கும் தெரியும், அதை உணர்ச்சி மயமாக தந்துள்ளார். இது பெண்களின் கதை. சுனந்தை, அம்பை, அம்பாலிகை, அம்பிகை, அவர்களின் தாய், சிவை. அரசியல் விளையாட்டுகளில் மற்றவர்களால் பலி கொடுக்கப்பட்டவர்கள், அதே அரசியலில் தன்னை பலி கொடுத்த சத்தியவதி. ஒவ்வொருவரின் பாத்திரமும் அருமையாக செதுக்கப்பட்டுள்ளது. முப்பெரும் குணங்களின் உருவமான காசி நாட்டு இளவரசிகள், அரசியல் விளையாட்டில் சிறையெடுத்து போன மகள்களை நினைத்து இறக்கும் காசி நாட்டு அரசி, பெண்ணாக இருந்து ஆணாக மாறும் சிகண்டி, அண்ணனை தோளில் சுமந்துதிரியும் பால்ஹிஹர், பீஷ்மர்.
கதை நாகங்களால் நடத்தப்படுகின்றது. நாகங்கள் காமத்தின் உருவகமாகவும், இச்சையின் உருவகமாமகவும் வருகின்றது. கருமையை அழிக்க முயலும் ஜனமேஜயனின் யாகத்தில் ஆரம்பித்து முன்னும் பின்னும் போகின்றது. ஒரு வகையில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவைப்ப்பது இச்சைதான்.
குருஷேத்திர யுத்தத்தின் பின்னால் இருக்கும் துயரம் பெரும்பாலும் அறியப்படாதது. பெண்களின் துயரம். பல லட்சம் ஆண்கள் கொல்லப்பட்டபின், மிஞ்சும் பெண்களின் நிலை என்ன. மிஞ்சும் ஆண்களின் நிலையும் என்ன? பாண்டவர்களுக்கு கிடைப்படுதும் வெறும் வெறுமை. ஒரு பெரும் போருக்கு பின்னால் கிடைக்கும் நாடு வெறும் சுடுகாடு போலத்தான், இருப்பவர்களும் பிணங்கள் போலத்தான். அந்த காட்சி முதல் அந்தியாத்திலியே கிடைக்கின்றது. அதன் பின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றது.
மகாபாரதத்தை ஒரு சமூகவியல் பார்வையிலும் காட்டுகின்றது. பீஷ்மர் ஒரு கங்கன், கங்கை கரையில் வாழும் கூட்டத்தை சேர்ந்தவர், சத்தியவதி யமுனை கரையில் வாழும் மீனவ பெண். இருவரும் முழு ஷத்திரயராகின்றனர். மக்களை ஆளும் ஒருவனுக்கு மக்களே குழந்தைகள், அவர்களுக்காக தன் குழந்தைகளையும் விடுவதே ஷத்ரிய தர்மம். (இன்று தன் குழந்தைகளே மக்கள், என்னும் ஆட்சியாளர்களுடன் எல்லாம் இணைத்து பார்க்க வேண்டாம்) பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் இருந்த நமது ஆட்சியமைப்பும், அற உணர்வும் பெருமை தரக்கூடியது. போர்முறைகள், வில்லை நாணேற்றும் முறை, கிராமங்களின் அமைப்பு, விருந்தோம்பல் என்று அக்கால சூழலை நுணுக்கமாக காட்டுகின்றது.
பீஷ்மர் போல வாழ்நாள் முழுவதும் பெண் விலக்கு என்பது சாத்தியமா? சுக மகரிஷி போல இருப்பது ஒரு வகை, ஆனால் நாட்டிற்காக, தந்தைக்காக, மக்களுக்காக, தன் சொல்லிற்காக வைராக்கியத்துடன் இருக்கும் ஒருவனின் மனதின் ஓட்டங்கள், சஞ்சலங்கள் எல்லாம் அருமையாக காட்டப்பட்டுள்ளது. அம்பைக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல்கள், சத்தியவதிக்கும் பீஷ்மருக்கும் நடக்கும் உரையாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சில விஷயங்கள் தர்க்கத்திற்கு மீறி இருக்கும், அதற்கு கண்டுபிடித்த ஒரு வழி சூதர்கள். பீஷ்மரும், அம்பையும் சூதர்களின் பாடல்களின் மூலமே மக்களிடம் வாழ்கின்றனர். சூதர்களின் கதைகளுக்கு எல்லைகள் கிடையாது, காலங்கள் கிடையாது. பீஷ்மரின் கதையை ஒரு சத்திரத்தில் சொல்லும் சூதனின் கதைக்கு ஈடு கிடையாது. பீஷ்மரையும், சந்தனுவையும், பிரதீபரையும் சரியாக பகடி செய்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியையும் நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றார். நகரங்களின் அமைப்பிலிருந்து, உண்ணும் உணவு வரை ஏராளமான விவரங்கள். சின்ன சின்ன நுணுக்கங்கள் ஏராளம். பல இடங்களில் பல உப கதைகள் பூடகமாக வந்து கதையுடன் இணைகின்றது. உதாரணத்திற்கு பக்தியால், பணிவால், குரோதத்தால், சினத்தால் சிரஞ்சீவியாக இருப்பவர்கள், விசித்திரவீரியன் இறப்பதற்கும் முன் வரும் சாவித்திரியின் கதை, சத்தியவதிக்கு சியாமை சொல்லும் பரசுராமரின் தாயின் கதை,சித்ரகர்ணி என்னும் சிங்கத்தின் கதை என்று பல கதைகள்.
தியானம், யோகம் போன்றவற்றை ஒரு இந்தியன் நாற்பது வயதிற்கு மேலே ஆரம்பித்து நாற்பத்திரண்டில் முழுவது கற்று மற்றவர்க்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்து நாற்பந்தைந்தில் விட்டு விட வேண்டும் என்ற விதிப்படி, அது சம்பந்தமான பகுதிகளை அடுத்த எட்டு வருடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளேன். பெங்களூரில் பல இடங்களில் மரத்தடியில் கற்சிற்பங்கள் இருக்கும், இரண்டு பாம்புகள் பின்னி பினைந்து இருக்கும். (அதை டி.என்.ஏ வுடன் ஒப்பிட்டு பலர் மெய்சிலிர்த்து கொண்டுள்ளார்கள்), அது போன்ற படங்கள் காட்டும் தத்துவங்களை பத்து வருடம் கழித்து விரிவாக எழுதுகின்றேன்.
கவித்துமான வரிகள் என்பார்கள், அதை பல இடங்களில் காணலாம். அலங்காரத்திற்கு வந்து அமராமல், காட்சியையும், உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்தும் வண்ணம் வந்து அமர்ந்திருக்கின்றது. துண்டாக தெரிந்தால் மிகவும் செயற்கையாக போயிருக்கும்.
ஷண்முகவேல், கதையை உள்வாங்கி அருமையாக வரைந்துள்ளார். கம்ப்யூட்டரில் வரைந்தது என்றாலும் நன்றாக இருக்கின்றது.
வழக்கம் போல குறைகள். ஒன்றும் பெரிதாக இல்லை. அட்டைப்படம். எனக்கு பெரிய குறை, புத்தக்ங்களின் அட்டைப்படம் உள்ளடக்கத்தை காட்ட வேண்டும், ஒரு பிரம்மாண்டத்தை தர வேண்டும். வியாசர் அஸ்தினாபுரிக்கு வருவதை அட்டைப்படமாக போட்டுள்ளனர். எனக்கு பொருத்தாமாக தோன்றுவது மேலே உள்ள படமே.
முதற்கனல். ஒரு பெரிய முயற்சியின் முதற்கனல். பிற பகுதிகளுக்காக காத்திருக்கின்றேன்
இன்றுதான் மழைப்பாடல் செம்பதிப்பு அறிவிப்பை கண்டேன். 1400. புத்தகத்தில் விலையை அச்சிடாமல் தந்தால் பலருக்கு வீட்டில் பலனளிக்கும்.
பின் குறிப்பு.
இணையத்தில் பலர் இதை நக்கலடித்து கொண்டிருப்பதை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. இதன் பின்னால் இருக்கும் உழைப்பை மதிக்காமல், எழுத்தின் தரத்தை மதிக்காமல் கிறுக்குத்தனமாக பேசும் இவர்களை என்ன செய்யலாம். ஜெயமோகன் மேலும் மேலும் எழுத வேண்டும், இவர்கள் மேலும் மேலும் உளற வேண்டும், அவர்களின் மூடத்தனம் மேலும் மேலும் வெளிப்படவேண்டும் (என்ன ஒரு மோசமான வார்த்தை கோர்வை!!)
பிற்சேர்க்கை
இந்த புத்தகம் பற்றி இணையத்தை தாண்டி முழுவதும் மக்களிடம் போய் சேர்ந்துள்ள மாதிரி தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா? பெரிய பத்திரிக்கைகளி, நாளிதழ்களில் ஒரு சிறு குறிப்பாவது வந்துள்ளதா? எதிர்பார்ப்பது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம்தான். ஜெயமோகனின் ஒரு வார்த்தைக்கு அவரை விரட்டி வரும் இந்த பத்திரிக்கைகள், இந்த பல நூறு பக்கங்களை விட்டு விட்டார்கள். வாழ்க.
பிற்சேர்க்கை
இந்த புத்தகம் பற்றி இணையத்தை தாண்டி முழுவதும் மக்களிடம் போய் சேர்ந்துள்ள மாதிரி தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு தெரியவில்லையா? பெரிய பத்திரிக்கைகளி, நாளிதழ்களில் ஒரு சிறு குறிப்பாவது வந்துள்ளதா? எதிர்பார்ப்பது கொஞ்சம் பைத்தியக்காரத்தனம்தான். ஜெயமோகனின் ஒரு வார்த்தைக்கு அவரை விரட்டி வரும் இந்த பத்திரிக்கைகள், இந்த பல நூறு பக்கங்களை விட்டு விட்டார்கள். வாழ்க.
I agree with your comment about Proce tag :-)
பதிலளிநீக்குHowever, I booked one... ( போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே ( Jeyamohanukke!!!)
kaliprasadh R
ஜெயமோகனின் ஒரு வார்த்தைக்கு அவரை விரட்டி வரும் இந்த பத்திரிக்கைகள், இந்த பல நூறு பக்கங்களை விட்டு விட்டார்கள். வாழ்க.- அற்புதம்
பதிலளிநீக்குஜெயமோகன் மேலும் மேலும் எழுத வேண்டும், இவர்கள் மேலும் மேலும் உளற வேண்டும், அவர்களின் மூடத்தனம் மேலும் மேலும் வெளிப்படவேண்டும் (என்ன ஒரு மோசமான வார்த்தை கோர்வை!!) :-)
பதிலளிநீக்கு