12 டிசம்பர் 2012

தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 3

முந்தைய பகுதிகள்

பகுதி - 1
பகுதி - 2

21. திண்ணை வீரா !

         நாம் அடிக்கடி பார்க்கும் மனிதர்தான். வாயால் பேசியே காரியம் சாதிக்கும் ஒருவர். ஊரார் பஞ்சாயத்தை தீர்க்கும் பெரிய மனிதர். "எழுந்து வந்தேன்னா என்ன ஆகும் தெரியுமா" என்று மிரட்டியே அனைவரின் பஞ்சாயத்தை தீர்ப்பவரின் மிரட்டலின் முரண் கடைசியில். நடக்காத மிரட்டல் என்றாலும் அதற்கு கீழ்படியும் மக்கள். தி. ஜாவின் விவரிப்பும், வட்டார வழக்கும்  மிகவும் கவர்ந்துவிட்டது.

22. அடுத்த

          பிரசவத்திற்கு ஆம்புலேடத்திற்கு காத்திருக்கும் தம்பதியினரின் கதை. ஒரு குழந்தையை வளர்க்கவே அவனவன் திணறும் போது அக்காலத்தில் எப்படி இரட்டை இலக்க குழந்தைகளை வளர்த்தனரோ. செல்வம் உடையவருக்கும் மேலும் செல்வமும், இல்லாதவர்க்கு இல்லாமையே தொடர்வதும் குழந்தைச் செல்வத்திற்கும் பொருந்தும். எல்லாம் பகவான் செயல் (எஸ்.வி சேகர் குரலில் படித்துக் கொள்ளவும்)

23. கோபுர விளக்கு

        புராதானத் தொழிலில் ஈடுபட்ட ஒரு பெண் மரணமடைகின்றாள். அதையொட்டிய் கதை. அப்பிரேதத்தை கூட எடுத்துப் போட ஆளில்லை. வறுமை கொடிது, அதற்கு பலியானவர்கள் இறந்த பின்னும் பழிக்கு ஆளாகின்றனர். அந்த கோபத்தில் கோவில் நடை மூடியபின், விளக்கையும் சேர்த்து அணைத்து வைக்கின்றார் மேனேஜர். ஊரார் கொஞ்சமாவது சாவை உணரட்டும் என்று.

24. யாதும் ஊரே

       அனைத்தையும் துறந்தவன் துறவி. சிலர் துறவிற்கு காரணம் கோபம், இயலாமை. உண்மையான துறவிகளை தேடித்தான் பார்க்க வேண்டும். அடுத்தவர்கள் காட்டிய பயத்தால் சந்நியாசம் வாங்கி, வேறு வழியின்றி யாதும் ஊரே என்று திரியும் ஒரு துறவி(?)வியின் கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது

25. கண்டா மணி

        எனக்கு பிடித்த இன்னொரு சிறுகதை. ஊரில் உணவகம் நடத்தும் மார்க்கம், அவரின் தவறுதலால் வாடிக்கையாளர் ஒருவர் விஷ உணவை உண்டு இறந்து போகின்றார். அதற்கு பரிகாரமாக ஒரு கண்டா மணியை கோவிலுக்கு தருகின்றார். அதன் ஒலி அவருக்கு நிம்மதிக்கு பதிலாக பயத்தையும், குற்றவுணர்ச்சியையும் தூண்டுகின்றது. மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்காத கதைதான். அனைவரும் இது போன்று ஏதாவது ஒரு தவறை செய்து அதற்கு பரிகாரமாக எதையாவது செய்வார்கள். எனக்கென்னவோ அது அவர்களுக்கு அவரது தவற்றை நினைவுபடுத்த மட்டுமே செய்கின்றது என்று தோன்றுகின்றது.

26. யோஷிகி

         ஜப்பானியர்களின் விருந்தோம்பலை காட்டும் கதை. விருந்தோம்பல் என்று கூறுவதை விட மனிதப்பண்பு என்று கூறலாம். ஹிரோமி கடைசியில் கூறுவதைப் போல் யோஷிகி ஒரு பழைய ஜப்பானியர். டச்சிங்கான கதை.

27. மணம்

         ஒரு சினிமா எக்ஸ்டரா நடிகை, ஒரு இரவிற்கு ஒரு பெரிய மனிதரை சந்தோஷப்படுத்த செல்கின்றாள். மின்சாரம் இல்லாத இரவில் அவரைக் காண முடியாமல், அவரிடமிருந்து வரும் மணத்தை மட்டும் அறிகின்றாள். மகிழம்பூ மாதிரி, ஜவ்வாது மாதிரி, ரோஜாப்பூ மாதிரி. அடுத்த நாள் புதுப்பட பூஜையில் அதே மணம், ஆளைக் கண்டு அதிர்ச்சி. பாவம்

28. அப்பா பிள்ளை

         சிலர் கடன் வாங்குவதை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான காரணத்திற்கு உபயோகப்படுவது அம்மாதான். நல்லவர்கள் அவர்கள் சொல்வது பொய் என்றாலும் கொடுத்து பின் புலம்புவார்கள். அது நல்லதா கெட்டதா? அது போன்ற பிள்ளை ஏமாந்த அப்பாவை சமாதனப்படுத்தும் கதை.

29. யதுநாத்தின் குருபக்தி

         எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு சமஸ்தான மன்னர், அவரது குரு வேங்கடதாசருக்கு தனி மரியாதை தந்து வைத்துள்ளார். ஆனால் அவரோ ஒரு பெண்ணுடன் யாருக்கும் தெரியாமல் அல்லது அனைவருக்கும் தெரிந்து மன்னருக்கு தெரியாம தொடர்பில் உள்ளார். அதைக் கண்டு பிடிக்கும் மன்னன், அவருக்கு தனி மாளிகை கட்டி அதில் அப்பெண்ணையும் கொண்டு வைக்க முடிவு செய்கின்றான்ர். என்ன கதையோ, யாருக்கவது என்ன சொல்ல வருகின்றார் என்று கூறுங்கள்

30. ஆரத்தி

        ஒரு அக்காலத்து கதை. சிறு வயதில் திருமணம் ஆகி சரியான வயது வரும் போது அவளின் கணவன் காணமல் போகின்றான். அவளை ஒரு சுமங்கலியாகவே கருதிவரும் அவளது மன்னி ஆரத்தி எடுக்க வேறு ஒருவரை அழைத்ததும் மனம் வெறுத்துப் போகின்றாள். மன்னி கூட கைவிட்டு விட்டாளா என்று. கடைசியில் போனவன் திரும்பி வருகின்றான். அழகான நடை.

அடுத்த பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக