15 ஜூலை 2014

கொற்கை - ஜோ டி குரூஸ்

முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.

வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை. 

கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.


பரதவர்களில் தோணித்தொழில் செய்பவர்கள் , பர்னாந்துமார்கள், மெனக்கெடக்காரர்கள், மேசைக்காரர்கள். இவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். மேசைக்கார குடும்பங்கள் சிங்கராயர்கள், பல்டோனாக்கள், ரெபெராக்கள், தல்மெய்தாக்கள், இவர்களின் கதை. 

காலம். அதுதான் கதையின் நாயகன். காலம் கொற்கையில் தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்த மாற்றங்கள். தோணிவைத்து இலங்கைக்கும், பம்பாய்க்கும் செல்லும் கடலோடிகளின் வாழ்க்கை  தேய்ந்து தேய்ந்து ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களுக்கு சரக்கை கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய தொழிலுக்கு வந்து சேர்கின்றது. கொற்கையில் உள்ள மல்லாங்குளம் எனும் பாறை மேடு, குற்றால மலையின் தொடர்ச்சி எனப்படும் அது, பெரிய கப்பல்களை துறைமுகத்திற்குள் விடுவதில்லை. மல்லாங்குளத்தை கணக்கில் கொண்டு கட்டப்படும் தோணிகளே தாண்ட முடியும். தோணிகளை வைத்து நடுக்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு சரக்கை கொண்டு சேர்ப்பது ஒரு முக்கிய தொழில். அதோடு இலங்கைக்கும், பம்பாய்க்கும் சரக்குகளை கொண்டு செல்வதும் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து, பெரிய கப்பல்களின் வருகை, தோணிகளை மறைய செய்தது. புதிய துறைமுகமும் தன் பங்கை செய்தது. காலம் காலமாக கடல் தொழிலிருந்த குலத்தவர்களுடன், புதியவர்களும் சேர்ந்து கொண்டனர். கடலை ஆண்டவர்கள், மற்றவர்களிடம் வேலை செய்யும் நிலைக்கு மெதுவாக மாறினர்.

வியாபார நோக்கில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. அக்கம் பக்கத்து மாநிலங்களில் சென்று வியாபரம் செய்வது போல இருந்த உறவில் குறுக்கே புகுந்த அரசியல் செய்த மாற்றம். 

வியாபாரத்திற்கு வந்த நாடார்கள் மெதுவாக தோணித்தொழிலிலும் நுழைந்து ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி கொண்டனர். ஒற்றுமை என்ற ஒரு விஷயம் எப்படி ஒரு கூட்டத்தை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்யும் என்பது கதையில் இழையோடும் ஒரு விஷயம். கடலை முழுவதும் ஆண்ட பரதவரிடம் இல்லாத ஒற்றுமை அங்கு வியாபாரம் செய்ய வந்த நாடார்களிடம் முழுமையாக இருந்தது. மதத்தை தாண்டிய ஒற்றுமை. அது அவர்களை கொற்கையில் ஒரு தன்னிகற்ற சக்தியாக வளர வைத்துள்ளது.

கதை ஆரம்பிக்கும் போதே பரதவர்களின் தொழில் நுட்ப அறிவையும், கடலின் மீது அவர்களுக்கு இருக்கும் பிணைப்பையும் காட்டும் ஒரு காட்சியில் ஆரம்பிக்கின்றது. ஒரு பெரிய பாய்லரை கடலிலிருக்கும் கப்பலிலில் இருந்து சர்வசாதரணமாக இறக்கி கரைக்கு கொண்டுவரும் காட்சி.

ஆழி சூழ் உலகு போலவே இதிலும் கிறித்துவத்தின் மீதான விமர்சனமும், கத்தோலிக்க பரதர்வர்களின் தாய் மத பாசமும் பல இடங்களில் வருகின்றது. குமரி அன்னையும்,  சந்தன மாரியும் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவை. 

சில சரித்திர சம்பவங்களின் விமர்சனமும் அக்கால மக்களின் மன ஓட்டத்தை காட்டும் இடங்களும் நமக்கு அக்காலகட்டத்தை பற்றி ஒரு பிம்பத்தை அளிக்கின்றது. சிதம்பரம் பிள்ளை கப்பல் விட்டார், கப்பலோட்டிய தமிழன் என்று நமக்கு தெரியும், அவரைப் பற்றிய அக்கால விமர்சனங்கள் எல்லாம் யாருக்கு தெரியும், கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். ஈ.வே.ரா, வ.வே.சு ஐயர், காந்தி, அண்ணா, திமுக என்று அக்கால விவகாரங்கள், மனிதர்கள் அங்கங்கு வந்து போகின்றார்கள்.

தோணித் தொழில் நுட்பங்கள், தோணி கட்டும் முறை, பயன்படுத்தப்படும் மரங்கள், எதிர்கொள்ளும் ஆபத்துகள் எல்லாம் திணிக்கப்படாமல் கதையின் போக்கில் வருகின்றது. கடற்கொள்ளைக்காரர்கள், பல ஆண்டுகளுக்கும் முன்னால் தரை தட்டி நின்ற கப்பல் வேறொரு புயலில் தண்ணீருக்குள் மீண்டும் வருவது, முத்துக் குளிப்பதன் வழிமுறை, வலம்புரிஞ்சங்கு போன்ற விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது. உயிரை பணயம் வைத்து கொண்டு வரும் முத்தையும், சங்கையும் அரசு விலை நிர்ணயம் செய்து கொண்டு போவதை படிக்கும் போது, ஜோடி குரூஸின் கோபமும் வருத்தமும் புரிகின்றது.

கதையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். பல குடும்பங்கள். அனைத்தையும் நினைவில் வைத்து படிப்பது என்பது சாத்தியமில்லாதது. பலர் திடிரென காணமல் போய் பலவருடங்கள், பல நூறு பக்கங்கள் கழித்து வருகின்றனர், இல்லையென்றால அவர்களது வாரிசுகள் வந்து நிற்கின்றனர். பிலிப் தண்டல். பிலிப் சிறுவனாக ஆரம்பித்து மரணிக்கும் வரை கதை போகின்றது. ஆனால் அவரே பல இடங்களில் பல வருடங்கள் காணமல் போகின்றார். பல குடும்பங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கொற்கையுடன் இணைந்து செல்கின்றது. பின்னால் இருக்கும் குடும்ப வரைபடத்தை வைத்தே படிக்க வேண்டும். 

அத்தனை பாத்திரங்கள் இருப்பதால்தான் இது டாக்குமென்டித்தனத்திலிருந்து தப்பித்துள்ளது. ஊரின் வரலாறு என்றாலும் மனிதர்கள் இல்லாமல் என்ன ஊர். மனிதர்களின் அடிப்படை குணம் என்பது எந்த ஊரிலும் மாறாதது. இதில் பலத்தரப்பட்ட மனிதர்களை பார்க்கலாம், அனைத்தும் வகை குணங்களூம் கலந்த மனிதர்கள். அனைவரும் எப்போதும் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதில்லை. காலத்தையும், வயதையும், சூழ்நிலையையும் பொறுத்து மாறுகின்றனர். 

மனிதர்களின் குணங்கள் என்றால காதலும், காமமும் கலந்ததே. ஆழி சூழ் உலகு போலவே, இதிலும் பல இடங்கள் வருகின்றன. முறைதவறிய காதலும் காமமும், பாதிரியார்கள் செய்யும் லீலைகள், தோணியில் நடக்கும் சிறுவர்களின் மீதான அத்து மீறல்கள். படிக்கும் போது சில விஷயங்கள் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. இப்படியும் நடக்க கூடுமா என்று கொஞ்சம் யோசனை வரத்தான் வருகின்றது.

குறை. சில இடங்களில் வருடங்களை தடாலென தாவி செல்கின்றது. சில விஷயங்களை எடிட் செய்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. சில பக்கங்கள் எனக்கு தூக்கத்தை தந்தது என்பதை மறுக்க முடியாது. ஆழி சூழ் உலகோடு ஒப்பிடுகையில், ஆழி சூழ் உலகே சிறந்ததாக இருக்கின்றது. அது என் மனதோடு ஒட்டிய அளவு இது ஒட்டவில்லை, அப்புத்தகத்தை படித்து முடித்தபின் மனதில் ஒரு மகிழ்ச்சி, நிறைவு இருக்கும். இதை படித்தவுடன் ஒரு வெறுமை வருகின்றது. காரணம் ஒரு தேய்ந்து கொண்டிருக்கும் வரலாற்றை படித்ததால் கூட இருக்கலாம்.

ஒரே புத்தகத்திற்கு பதில் இரண்டு பாகங்களாக கொண்டு வந்திருக்கலாம். கைவலி, முதுகுவலி இல்லாமல் வசதியாக வைத்து படிக்கலாம். 



3 கருத்துகள்:

  1. கடந்த வருட புத்தக சந்தையில் கொற்கை வாங்கிவிடுவது என்று சென்றேன். புத்தகத்தைப் பார்த்ததுமே ஒன் ஸ்டேப் பேக்.. எப்படி ரெங்கா சார் உங்களுக்கு இவ்வளவு நேரமும் பொறுமையும் இருக்கு.. ஆச்சரியமாவும் பொறாமையாவும் இருக்கு... ஆழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... கற்றது கடலளவு இலக்கியப் புத்தகமல்ல கட்டுரைத் தொகுப்பு.. அது படிதத்தன் தாக்கம் கடல் மீதும் இன்னும் அதிக பிரியத்தை ஏற்படுத்திவிட்டது...

    ஆழிசூழ் உலகு முதலில் படிக்க முயல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் ஒரு நல்ல உடற்பயிற்சி கருவியாகவும் பயன்படும். இப்புத்தகத்தை படிக்க எளிதாக இருந்தது, இதன் அட்டை சைசிலிருக்கும் அபிதாவை படிக்குமுன் தலை சுற்றிவிட்டது.

      நேரம் கிடைக்க எளிய வழி, மனைவி மக்களை ஊருக்கு அனுப்பவும், இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக அனைத்து தமிழ் சேனல்களை பார்க்கவும்.குறிப்பாக ஆதித்யா. பிறகு பொறுமையும், நேரமும் கிடைக்கும் :)

      நீக்கு
    2. //நேரம் கிடைக்க எளிய வழி, மனைவி மக்களை ஊருக்கு அனுப்பவும், // இது உங்களைபோன்ற கல்யாணம் ஆனவங்களுக்கு சார்.. என்னைபோன்ற சிறுவர்களுக்கு இரண்டாம் வழிமுறை தான் உகந்தது என்று நினைக்கிறன் :-)

      நீக்கு