12 ஆகஸ்ட் 2014

லஜ்ஜா (அவமானம்) - தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு விலை வைத்த புத்தகம். இப்போது தமிழில். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜவர்லால் (ஜவகர்லால் இல்லை) மொழி பெயர்த்துள்ளார். 

உலகெங்கும் பரபரப்பை கிளப்பிய புத்தகம் என்று கூறப்படுகின்றது. நமது உள்ளூர் (இந்து) மதச்சார்பற்றவர்களுக்கு பங்களாதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தஸ்லிமா நஸ்ரின் தொடுத்த போரை எதிர்த்து போராட ஒரு வாய்ப்பை அளித்த புத்தகம். 

அவர் மீது பத்வா பிறப்பித்து, தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில்தான் புத்தகத்தையே வாங்கினேன். ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிராக பல கருத்துக்கள் இருக்குமோ என்று நினைத்தால், அப்படி எதுவுமில்லை. இதற்கு பத்வா என்றால், நாட்டிலிருக்கும் பல செய்தி பத்திரிக்கைகளுக்கும் சேர்த்து பத்வா பிறப்பிக்க வேண்டும், ஊரிலிருக்கும் எல்லா செய்திபத்திரிக்கையாளர்கள் தலைக்கும் விலை வைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எனப்படும் கட்டிடத்தை இடித்ததன் பின் விளைவை பற்றியதுதான் இக்கதை. இந்துக்களின் நிலை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான். அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடையாது. இப்போது பா.ஜ.க அசுரபலத்துடன் இருக்கின்றது. இருந்தாலும் அவர்களாலும் இந்துக்களுக்கு முழு ஆதரவு தரமுடியாது. காரணம் மதச்சார்பன்மை என்ற பெயரில் பிற கட்சிக்கள் எடுக்கும் ஓட்டு பிச்சை. இந்துக்கள் அதிகமிருக்கும் இந்தியாவில் இந்த நிலை என்றால், இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மற்ற இடங்களில், அதுவும் அடிப்படைவாதிகள் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில், மற்ற மதங்களை அடியோடு வெறுக்கும் மதத்தலைவர்களின் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கும். அதைத்தான் காட்டுகின்றது இப்புத்தகம்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டபின் இந்தியாவில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது அதுவிரைவில் அடக்கவும் பட்டது. அந்த நிகழ்ச்சியின் எதிரொலியாக பங்களாதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பற்றி பேசுகின்றது இப்புத்தகம். ஒரு வகையில் ஒரு மனசாட்சியின் குரல். தன் நாட்டு மக்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று வேதனைப்படும் ஒருவரின் குரல்.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த பங்களாதேஷ், அவர்களின் வங்காள இன உணர்வினால் தனியாக போக நேர்ந்தது. இனத்தால், மொழியால் தனியாக இருந்தவர்களை மதத்தால் இணைத்தது அதிக நாள் தாங்கவில்லை. பிரிந்த பின் அதே மதம் அங்கே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. யாரெல்லாம் சுதந்திரத்திற்கு போராடினார்களோ அவர்கள் நசுக்கப்பட்டார்கள், சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் கையில் அதிகாரம் போனது. மதச்சார்பற்ற அரசு என்பது பங்களாதேஷ் பிறந்த போது இருந்த வார்த்தை, அது அழிக்கப்படு இஸ்லாமிய நாடானது. இந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களானார்கள். 

லஜ்ஜா அவமானம்எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்ததோ அப்போதெல்லாம் இந்துக்கள் தாக்கப்பட்டு வந்திருக்கின்றனர். வன்முறை மூலம் ஒரு வகை, இந்து என்பதால் கல்வியில் பாகுபாடு, பள்ளியில் மதக்கல்வி, தொழில் தொடங்க வேண்டுமென்றால் ஒரு முஸ்லீமும் கூட இருக்கவேண்டும், இல்லையென்றால் ஒன்றும் நடக்காது. முட்டாளாக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தால் பதவி உயர்வு, எங்கும் மதிப்பு. இது அன்றாட நடைமுறையில் இந்துக்கள் மீது எறியப்படும் கற்கள்.

சந்தர்ப்பம் கிடைத்தால், கொலை, இந்துக்களை குறிவைத்து தாக்குவது, அவர்களின் சொத்துக்களை அபகரிப்பது, கோவில்களை உடைப்பது, பெண்களை தூக்கிசெல்வது என்பது போன்ற காரியங்களை செய்வதன் மூலம், முப்பது சதவீதம் இருந்த இந்துக்களை பத்து சதவீதமாக்கிய பெருமை அங்கிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு உண்டு.

இந்துக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாட்டிக்கொண்ட ஒரு குடும்பத்தை வைத்து கலவரத்தின் வீச்சை சொல்ல முயற்சி செய்திருக்கின்றார். தான் ஒரு இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் இந்துவாக இருந்தாலும், தனக்கு அந்த மண்ணில் இருக்கும் உரிமை என்பது ஒரு மயிரளவிற்கு கூட மற்றவர்களால் மதிக்கப்பட மாட்டாது என்று தெரிந்து, தன் நாடு, சொந்த மண் என்று வாழும் ஒருவர், கடைசியில் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்கின்றார்.

சுதாமய் தம்பதியரின் மகன் சுரஞ்சன் மகள் மயா. சுதாமய் பங்களாதேஷ் சுதந்திர போரில் ஈடுபட்டவர். என்றும் பங்களாதேஷ் தன் தாய் நாடு தன்னை கைவிடாது என்று நம்புபவர். பலமுறை பலர் அழைத்தும் நாட்டைவிட்டு போகதாவர், ராமஜென்ம பூமி பிரச்சனையை காரணம் காட்டி நடைபெற்ற வன்முறையில் மகளை இழக்கின்றார். சுரஞ்சன் மத நம்பிக்கையில்லாத தன்னை இந்து என்று முத்திரை குத்தி இந்து மதம் நோக்கி தள்ளும் நாட்டை விட்டு வெளியேறுவதே மேல் என்று நினைக்கின்றான். கடைசியில் சுதாமயும் அதை ஏற்கின்றார். ஒரு வரியில் சொல்வதென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சிக்கிய நாட்டில் அமைதிக்கு இடமில்லை, இந்துக்களுக்கும் இடமில்லை.

அங்குவாழும் இந்துக்கள் சந்திக்கும் போது எல்லாம் பேசிக்கொள்வது எங்கெங்கோ நடக்கும் தாக்குதலை பற்றி, ஏன் தங்களால் திருப்பி தாக்க முடிவதில்லை என்றும்.  சின்ன இடங்களில் இந்துக்களின் சமூக வாழ்க்கையை பற்றி சில குறிப்புகள் வந்து செல்கின்றன. பள்ளிகளில் ஒதுக்கி வைக்கப்பட்டும் இந்து குழந்தைகள், விளையாடக்கூட சேர்த்து கொள்ளப்படாத அவர்களின் வருத்தம், குழந்தைகளிடம் கூட தங்கள் மத அரசியலை சேர்க்கும் பெரியவர்கள், கலப்பு மணங்களின் கஷ்டம், பதவி உயர்வு போன்ற விஷயங்களில் காட்டப்படும் மத வேறுபாடு, காவல்துறையின் ஓர வஞ்சனை, நீதிமன்றங்களில் இந்துக்களுக்கு மறுக்கப்படும் நீதி, இந்து பெண்கள் பாதுகாப்பிற்காக இஸ்லாமியர்களை மணந்து கொள்வது. 

தாங்கள் செய்த குற்றங்களை தங்களை சேர்ந்தவர்களே போட்டுடைக்கும் போதுவரும் எரிச்சல்தால் தஸ்லிமா மீதான பத்வா. இதில் இஸ்லாமிய மதத்தை பற்றி ஒரு வார்த்தை கிடையாது. 

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இங்குதான் வருகின்றது. பக்கத்து நாட்டில் இத்தனை இந்துக்கள் அழிக்கப்பட்டும் இங்கு இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார்கள். ஒரு வேளை இந்துக்களும், அவர்களை போல கிளம்பியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதை செய்யவிடாமல் இந்துக்களை தடுப்பது அவர்களின் மதம். அது கற்று தரும் அறவுணர்ச்சி, தர்மம். ஒரு சிறிய உயிரிடம் கூட கருணைகாட்ட சொல்லும் இந்துமதம், அவ்வளவு எளிதாக அவர்களை தன் நிலை மறக்க விடாது.

பல இடங்களில் இந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் குலையாமல் இருக்கின்றது. இன்றும் என் வீட்டின் எதிரிலிருக்கும் பள்ளிவாசலுக்கு குழந்தைகளை தூக்கி கொண்டு வரும் இந்துக்கூட்டம் அதிகம். எங்கள் கோவில் திருவிழாவிற்கு வரும் இஸ்லாமியர்களும் உள்ளனர். இன்றும் எங்கள் ஊரில் அதற்கு பெயர் அல்லா கோவில் தான். என் பெண்ணும் அதைத்தான் சொல்கின்றாள். நமது பாரம்பர்ய குணம் இன்றும் இருவரிடம் நிறைந்திருக்கின்றது. ஆனால் மெதுவாக வரும் மாற்றமும் இருக்கின்றது.


வரலாற்றில் பல இடங்களில் இந்துக்களும் திருப்பி தாக்கியிருக்கின்றார்கள். அது பொறுக்க முடியாமல் போனதன் விளைவு என்றுதான் இருக்கின்றது. எங்கோ இஸ்லாமியர்களின் மீது நடக்கும் தாக்குதலுக்கு இங்கே போராட்டம் செய்ய முடிகின்றது, ஏதோ ஒரு நாட்டில் போட்ட கார்டூனுக்கு பெங்களூர் சிவாஜிநகரில் இரண்டு பைக்குளை எரிக்க முடிகின்றது. ஆனால் பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தேசங்களில் இந்துக்களுக்கு அங்கே நடக்கு அநீதிக்கு ஒரு சிறிய எதிர்ப்பு குரல் கூட தரமுடியவில்லை. இருந்தும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை, வாழ்க்கைதரமில்லை, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்ற ஓலங்களை கேட்டால் அருவெருப்பாக இருக்கின்றது. 

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எங்கெல்லாம் அதிகாரத்திற்கு வருகின்றார்களோ, அதிகாரத்தை இயக்குகின்றார்களோ அங்கெல்லாம் முன்னேற்றம் என்பதில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ்,ஈராக். ஒன்றாக பிறந்த பாகிஸ்தானை விட இந்தியா எங்கோ இருப்பதன் காரணமும் அதுதான். மதத்தை முதலாக நினைத்து, மக்களை புறக்கணித்தன் விளைவு இது. காலத்தின் போக்கிற்கு தன்னை மாற்றி கொள்ளாவிடில் ஆபத்துதான். பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள்ளேயே நடக்கும் சண்டையை பார்க்கும் போது இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.  மத ரீதியாக அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலுமில்லை. பொருளாதார ரீதியாக, ஏழை இந்துவும் ஒன்றுதான், ஏழை முஸ்லீமும் ஒன்றுதான்.

இந்தியாவில் நடந்த பெரும்பலான கலவரங்கள் அனைத்தும், ஒரு எதிர்வினையாக நடந்து விரைவில் அடக்கப்பட்டுள்ளது. அரசின் ஆதரவு என்றும் கிடையாது, ஆனால் பங்களாதேஷில் நடந்தது திட்டமிடப்பட்ட இன அழிப்பு. அரசின் முழு ஆசீர்வாதத்துடன் நடந்தது.

படித்து முடித்தவுடன் மனதில் தோன்றியது, அரசியல்வாதிகளின் கேவலமான நடத்தை. சிறுபான்மை சிறுபான்மை என்று ஓப்பாரிவைக்கும் இவர்கள், பால்ஸ்தீனத்திற்காக போராட்டம் நடத்து இந்த புண்ணாக்குகள், பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்பட்ட போது என்ன ....... கொண்டிருந்தார்கள். 

இன்று பங்களாதேஷிலிருந்து அடிபட்டு வரும் இந்துக்களை இந்தியா பாதுகாக்கும் என்றால் உடனே சீறி பாய்ந்து இந்துத்துவ பட்டம் கட்டுகின்றார்கள். இந்துக்களை இந்தியா காப்பாற்றாமல் பாகிஸ்தானா பாதுகாக்கும். அதே சமயம் சட்ட விரோதமாக வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமாம். குஜராத் கலவரத்தை பற்றி பக்கம் பக்கமாக அழும் பலருக்கு இது எல்லாம் தெரியாதோ? கேட்டால் புத்தகமே பொய் என்று ஒரே வரியில் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் புத்தகத்தில் உள்ள புள்ளி விபரங்கள், கலவர நிலவர விவரங்கள் எல்லாம் அதிகாரப்பூர்வனமான மூலத்தில்ருந்து எடுக்கப்பட்டுள்ளது,. கேவலம். நாசாமாய் போகட்டும். விடுங்கள். மீண்டும் நாவலுக்கு

நாவலின் பெரும்பகுதி செய்தி அறிக்கை போலத்தான் உள்ளது. ஏகப்பட்ட புள்ளி விபரங்கள். ஒரு சாராசரி நாவல், மிகுந்த பிரச்சார தொனி உள்ள நாவல். ஆனால் அது காட்டும் நிதர்சனமான உண்மையால் மட்டுமே மதிப்பு பெறுகின்றது. இந்துக்கள் தங்கள் மதசின்னங்களை துறந்து, மத அடையாளங்களை துறந்து, பண்டிகைகளை துறந்து சொந்த ஊரிலியே பயந்து வாழும் வாழ்க்கையை உலகிற்கு காட்டியுள்ளது.

மொழிபெயர்ப்பு வெகு இயல்பாக உள்ளது. சில இடங்களில் சின்ன சின்ன சொதப்பல்கள். சுதாமயின் மனைவியை எப்படி அழைப்பது, அவர் (அ) அவள். "அவள் செய்தார்", "அவர் செய்தாள்" என்று சில இடங்களில் குழம்பிவிட்டது. வட்டார வழக்கு இல்லாதது பெரிய நிம்மதி. கொஞ்சம் இயல்புதன்மை வருகின்றது. 

லஜ்ஜா என்றால் அவமானம் என்று பொருள். அவமானம் பங்களாதேஷ் நாட்டிற்கும், அங்குள்ள அடிப்படை வாதிகளுக்கும், அதை பற்றி ஒன்றும் தெரியாதமாதிரி வேஷம் போடும் இங்குள்ளவர்களுக்கும்.

கிழக்கில் கிடைக்கின்றது. 

1 கருத்து: