தாயார் சன்னதி எழுதிய சுகாவின் மூன்றாவது புத்தகம் சாமானியனின் முகம். அதிகம் சினிமா பற்றிய கட்டுரைகளே உள்ளது அதிலும் குறிப்பாக சினிமா இசை பற்றிய கட்டுரைகள்.
யாரும் அறியாத புதிய விஷயம் எதுவும் சொல்லவில்லை. சினிமா ஆள் என்பதால் சினிமா வம்புகள் தேடினால் ஒன்றுமில்லை. சும்மா அங்கங்கு நாலு கிசுகிசுவை சேர்த்திருக்கலாம்.
சுகா சிறுவயதிலிருந்து இசை கற்றவர் என்பது, இசைக் கருவிகளை வாசிப்பவர் என்பதும் அவரது முதல் புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது. இதில் அவரது திரையிசை பற்றி பல கட்டுரைகளும் நடுவில் மானே தேனே என்று வேறு சில கட்டுரைகளும் உள்ளது.
இப்புத்தகம் இளையராஜா ரசிகனால், இளையராஜா ரசிகர்களுக்கு பிடிக்கும் படி எழுதப்பட்டது. நான் ஏ.ஆர். ரகுமான் ரசிகனாக இருந்து ராஜாவிற்கு மாறியவன். ரேடியோ கேட்டு வளர்ந்ததில்லை, டீவி அவ்வளவாக பார்ப்பதுமில்லை. சொந்தமாக டேப் வாங்கி பாடல் கேட்கும் வசதி வந்த போது ஏ.ஆர். ரகுமான் வந்துவிட்டார். சென்னை வந்தபின், ரேடியோ மிர்ச்சியில் இரவும் 11 - 1 வரை ஒலிபரப்பாகி வந்த காதல் காதல் (பெயர் சரிதானோ என்னவோ?) ராஜாவை அதிகம் கேட்கவைத்து, ராஜாவை மட்டும் கேட்க வைத்துவிட்டது.
இளையராஜாவை இன்று பலர் விமர்சிப்பதை ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதுகின்றார்கள். அதுவும் அவரது இசையை விடுத்து அவர் போடும் சட்டை வேட்டியிலிருந்து கோவிலுக்கு போவது வரை விமர்சிக்கின்றார்கள். சில சமயம் அவர் பேட்டி, மேடை பேச்சு என்றாலும் பயமாகத்தான் இருக்கின்றது. எதை சொல்வாரோ, அதை எப்படி பத்திரிக்கைகள் வெளியிடுமோ, படிப்பவர்கள் அதை எப்படி புரிந்து கொள்வார்களோ என்று ஒரு கவலை வரும்.
ராஜாவும் அவரது இசை அறியாமல் அவரது இசையை விமர்சனம் செய்யும் போது, அவரிடம் சென்று கிறுக்குத்தனமாக கேள்வி கேட்கும் போதும் ஏடாகூடமாக பதில் சொல்லிவிடுகின்றார். ஆனால் அவர் சுகா போன்று இசையறிந்தவரிடம் இசையை பற்றி அதிகம் பேசுவதாக ஜெ. மோ கூறுகின்றார். அந்தளவிற்கு ராஜாவுடன் நெருக்கமான ஆள் இவர்.
கோவைக்கு வந்த ராஜாவை காண தற்கொலை மிரட்டல் விடுத்தவரும், அவர் தமிழனின் சொத்து என்று கூச்சலிட்டவரும் அவர்களவிற்கு ராஜாவிடம் நெருக்கமானவர்கள்தான். பல பழைய ராஜாவின் பாடல்களை நினைவு கூர்ந்திருக்கின்றார்.
பழைய சினிமா பாடல்களை பற்றியும் சில கட்டுரைகள் உள்ளது. கர்ணனுக்கு ஒரு கட்டுரை. மலேசியா வாசுதேவனை பற்றிய ஒரு கட்டுரை. வாசுதேவன் எஸ்.பி.பி அளவிற்கு மற்றவர்களால் புகழப்படுவரில்லை என்பது ஓரளவிற்கு உண்மை. அவரை பாராட்ட எஸ்.பி.பி யை திட்ட வேண்டும் என்ற நியதியை மீறி, வாசுதேவனின் பல பாடல்களையும் , அதன் சிறப்புகளையும் எழுதியுள்ளார். ரஜினிக்கு எஸ்.பி.பியை விட வாசுதேவனின் குரல்தான் அதிக பொருத்தமாக எனக்கு தோன்றுகின்றது. அவரது ஊருவிட்டு ஊரு வந்து எனக்கு மிகவும் பிடித்தபாடல். அதே போல் ஸ்வர்ணலதா. அவருக்கு பல வித்தியாசமான பாடல்களை தந்தவர் ராஜாதான்.
மற்றுமொரு முக்கிய கட்டுரை பி.பி. ஸ்ரீநிவாஸ். என்ன ஒரு குரல். பழைய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் அனைத்து பெரும்பாலும் இவருடையதுதான். மென்மையாகவும், அதே சமயம் கம்பீரமாகவும் ஒலிக்கும் குரல்.
பாடல்களை கூறு போட்டு ஆராயாமல், அது எப்படி அவரை பாதித்தது, சாதாரண ஒருவரின் வாழ்வில் ராஜாவின் பாடல்கள் உண்டாக்கிய தாக்கம் என்ன என்பதுதான் இதன் சிறப்பு.
வழக்கம் போல அவரது குசும்பு. போகின்ற போக்கில் அனைவரையும் வாரிவிடுகின்றார். பாரதிமணி, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் என அனைவரையும் ஜாலியாக கிண்டல் செய்கின்றார்.
பல பிரபலங்களை பற்றிய கட்டுரைகள் சிதம்பரம் பிள்ளையின் புதல்வர், தி.க.சி. திருநவேலி கட்டுரைகள், அந்த ஊர்காரர்களுக்கு பிடிக்கும், மற்றவர்களுக்கு அவரவர் ஊர் நினைவில் வரும்.
கொஞ்சம் சீரியசான கட்டுரைகளும் உண்டு, காந்திமதியின் தாயார், சுப்பையாவின் மருமகன், வேட்டி.
பல இடங்களில் தன்னை பற்றி பயங்கர அடக்கத்துடன் சொல்லிக் கொள்கின்றார். ஆனால் எனக்கு என்னவோ அதை அடக்கமாக காட்டுவதே தனித்து நின்று அதை கெடுத்து விடுகின்றது. அவர் தனியாக அந்த இடத்தில் தெரிந்துவிடுகின்றார். சாதரணமாக கடந்து சென்றாலே போதுமானதாக இருந்திருக்கும். முதல் புத்தகம் தாயார் சன்னதி என்றும் முதல்.
இக்கட்டுரைகள் அனைத்தும் சொல்வனத்தில் வந்தவை. ஆன்லைனில் படிக்கலாம், புத்தகமாகவும் படிக்கலாம். வம்சி பதிப்பகம். 170/
இளையராஜாவிற்காக....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக