30 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் கிச்சா - கிரேசி மோகன்

பாலஹனுமான் தளத்தில் கிரேசி மோகனின் பேட்டி (துக்ளக்கில் வந்தது என்று நினைக்கின்றேன்) இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. கிரேசி மோகனின் நாடகம் மட்டுமல்ல, பேட்டியும் ஒரே மாதிரிதான். புதிய பேட்டியை படித்தாலும் எங்கோ படித்தது போல இருக்கும். காரணம், அனைவரும் அவரை ஒரே மாதிரி கேள்வி கேட்பதுதான். அவரின் பதிலும் ரெடி மேடாக இருக்கும். அவரின் ஆனந்த விகட பக்தி, ஜானகி டீச்சர், நண்பர் ரவி, சேப்பு குழந்தை கருப்பு குழந்தை உதாரணம் என்று சொல்லலாம்

இந்த பேட்டியில் கொஞ்சம் புதிய தகவல்கள், அவரின் நாடகத்தை பார்த்துவிட்டு சொல்லப்பட்டது, 'ஒன்று நாடகம் ப்ளாப், ஊத்தி மூடிக்கும். இல்லை இனிமே இதுதான் நாடகம்'.இரண்டாவது பலித்து விட்டது. கிரேஸி மோகனின் பாணி நகைச்சுவை என்பது துணுக்கு தோரணம் என்றாலும், வார்த்தை விளையாட்டு, ஆள் மாறாட்ட குழப்பம், அதையும் மீறி சில இடங்கள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும். ஏதோ ஒரு நாடகத்தில் முடி திருத்துபவரை பார்த்து ஒரு பெண் 'உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே' என்று கூற, அவர் 'சே சே, ஐ அம் ஒன்லி ஃபார் மென்' என்பார். என்னதான் சொன்னாலும் இன்றைய தேதியில் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்றால் இவரைத்தான் சொல்ல முடியும்

இவரால் வேறு வகை எழுத்து எழுத முடியும். இவரது படு சீரியசான கதை ஒன்றை ஒரு தீபாவளி மலரில் படித்திருக்கின்றேன். கவிதை (வெண்பா??) வேறு எழுதியிருக்கின்றார். கவிதைக்கு இன்ஸ்ப்ரேஷன் வாலி போல. விகடனில் இவருக்கு ஒரு ஆஸ்தான இடமுண்டு பல தொடர்களை எழுதியிருக்கின்றார். அதில் ஒன்று அமெரிக்காவில் கிச்சா


கிரேஸி மோகன் தன் அமெரிக்க அனுபவங்களை, கற்பனை கலந்து விகடனில் தொடராக எழுதியது. மிஸ்டர் கிச்சா என்று ஏற்கனவே எழுதியிருக்கின்றார். அதை தொடராக வந்த போதே படித்த நினைவு உள்ளது. சாவியின் வாஷிங்டன்னில் திருமணம் போன்று எழுத நினைத்து செய்திருக்கின்றார் , பல இடங்களில் அதை நகலெடுத்துள்ளார்.

கிச்சா என்னும் கற்பனை பாத்திரத்தை அமெரிக்காவிற்கு அழைத்து செல்கின்றார். முழுக்க முழுக்க கற்பனையும் இல்லை என்கின்றார். அவரின் நண்பரை நக்கலடிக்க எழுதினாரோ என்னவோ. கிறுக்குத்தனமாக கிச்சா செய்யும் வேலைகள் அவனுக்கு பெருமை தேடித்தருவதால் மோகனுக்கு வரும் வயித்தெரிச்சலே 'அமெரிக்காவில் கிச்சா'

விமானத்திற்கு பயப்படும்  அவர்து ட்ரூப் ஆசாமி, கேமராவுடன் தன்னையும் சேர்த்து புகைப்படும் எடுத்துக் கொள்ளும் மற்றுமொரு நடிகர், ஆமைக்காக வண்டியை நிறுத்திவிட்டு ஆமைக்கறி சாப்பிடும் ட்ரைவர் என சின்ன சின்ன சுவாரஸ்யங்கள். 

வழக்கமான அமெரிக்கா பற்றி கதைகளும் உண்டு, ரோடு அப்படியாக்கும், இப்படியாக்கும், சுத்தமான ஊர், மானே தேனே பொன்மானே. மோகன் அவற்றை அவர்க்கே உரிய வகையில் எழுதியிருக்கின்றார். புன்னககையையாவது வரவழைக்கின்றது.

சில இடங்கள் மிகவும் ரசிக்கும் படி இருக்கின்றது. அவரது வழக்கமான துணுக்கு தோரணத்தையும், வார்த்தை விளையாட்டையும் வைத்து சிரிக்க வைத்திருக்கின்றார்.

அவரது சிரிப்புராஜ சோழனை படித்துவிட்டு பக்கத்தில் யாராவது அமர்ந்து கிச்சுகிச்சு மூட்டினால்தான் சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தேன். இதில் மோகனே அதை செய்து விடுகின்றார்

கிச்சா, கிச்சுகிச்சா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக