10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.



இவர்களையும் முழுவதும் குற்றம் சொல்வது பயனில்லை. நாம் படிக்கும் சரித்திரமும் அந்த லட்சணத்தில்தான் இருக்கின்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறையை பற்றி சொல்லும் போது அதிலிருந்த ஒரு அடக்கு முறையை, அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே பேசி, பேசி அவர்களின் பொருளாதார சுரண்டலை முற்றிலும் மறைத்து அல்லது மறந்து விட்டார்கள்.

காந்தியின் வழிமுறைகள் பலரால் இன்று கேலி செய்யப்படுகின்றது. எனக்கே சில விஷயங்களில் அவரின் வழிமுறைகள் மீது வேறு எண்ணம் உண்டு. ஆனால் அவர் ஒருவரே ஆங்கிலேயரின் இந்த சுரண்டலை முழுவதும் புரிந்து கொண்டு, அதன் வழியே அவர்களை எதிர்த்தார். உப்பு சத்தியாகிரகம், உப்பிற்காகவா இவ்வளவு பெரிய போராட்டம் என்று தொன்றிய எண்ணம், இப்புத்தகத்திற்கு பின் மாறியுள்ளது. அவரின் ஒவ்வொரு போராட்டமும் அவர்களின் பொருளாதாரத்தையே குறி வைத்தது.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்தியா பல பஞ்சங்களை கண்டுள்ளது. ஆனால் பஞ்சத்தில் பெரும்பங்கு அவர்களுக்கு உண்டு என்பதே பலருக்கு செய்தி.  வெள்ளையானை ஓரளவிற்கு (ஓரளவிற்குதான்) காட்டியது. அப்பஞ்சத்தின் மற்றுமொரு பரிமாணம், கோணத்தை இப்புத்தகம் காட்டுகின்றது.

ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்த ஒரு சிறிய குறிப்பு இந்தியாவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய உயிர் வேலியை பற்றி தெரிவிக்கின்றது. அதைத்தேடி இந்தியா வந்து, நீண்ட பயணம், அலைச்சலுக்கு பின் அதன் மிஞ்சிய துண்டை காண்கின்றார் ராய் மாக்ஸம். இதன் பின்னால் இருக்கும் அவரது உழைப்பு மிகப் பெரியது.

இரண்டு சரடுகளை கொண்டது புத்தகம், ஒன்று ராயின் தேடுதல். மற்றொன்று உப்புவேலியின் வரலாறு.

இந்தியாவில் உப்பின் மீதான முற்றதிகாரத்தை முழுவதும் கைப்பற்றினார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் மனசாட்சி லண்டனில் கொஞ்ச நேரம் விழித்து கொண்டதால், அதை விடுத்து உப்பிற்கு வரி விதிக்க ஆரம்பித்தனர். வரியின் மூலம் அவர்கள் அடைந்த வருமானம் அளப்பரியது. கொடிய பஞ்ச காலத்தில் கூட நிறுத்தப்படவில்லை. கடைசியில் சுதந்திரத்திற்கு முன்னால் இடைக்கால அரசால் உப்பின் மீதான வரி 1946ல்  நீக்கப்பட்டது.

உப்பு மீதான வரி பல விதமாக விதிக்கப்பட்டது. உற்பத்தி இடத்தில், சில மாகாணங்களை கடக்கும் போது. அதே சமயம், சுதேசி அரசுகள், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், அவர்களின் வரி விதிப்பு வேறு வகையாக இருந்தது.

உப்பின் விலை பல இடங்களில் வேறு வேறாக இருக்கும் போது என்ன நடக்கும்? கடத்தல். வரி கட்டாமல் உப்பை கடத்துவதை தடுக்க முள்வேலி அமைத்தனர். பின்னர் அதுவே உயிர் வேலியாக மாறியது. இலந்தை மரத்திலிருந்து கள்ளிச்செடி வரை நடப்பட்டு, நாற்பது அடி அகலத்தில் உண்டாக்கப்பட்ட வேலி, கடத்தலை தடுக்க பயன்பட்டது.

இறுதியில் 1890களில் அது கைவிடப்பட்டது.

படிக்கும் போது சாதரணமாகத் தோன்றலாம். என்னடா உப்புக்கு இவ்வளவு பெரிய வேலியா என்று. ஆங்கிலேயர்கள் நம்மை சுரண்ட பயன்படுத்திய முக்கிய விஷயம் உப்பு, இன்றைய சூழலில் நம்மால் அதை யோசித்து பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம். உப்பு இல்லாமல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடிகின்றதா? முதலில் சுவைக்கே என்று கூறினாலும், உடலில் உப்புச்சத்து குறைந்தால் எம பட்டணம் போக வேண்டியதுதான்.

தென்னிந்தியர்களுக்கு உப்பு எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகத்தான் எப்போது இருந்து வந்திருக்க வேண்டும். சுற்றிலும் கடல். ஆனால் வடஇந்தியாவில், கடலிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் மக்களுக்கு உப்பு என்பது எளிதில் கிடைக்கும் வஸ்து அல்ல. அதே சமயம் வேண்டாம் என்று விலக்கும் ஆடம்பர பொருளுமல்ல, அவசியமான ஒன்று. அதுதான் ஆங்கிலேயர்கள் சுரண்டுவதற்கு மிகவும் எளிதான் ஒரு விஷயமானது.

ஒரு ஆண்டில் ஒரு சராசரி குடும்பத்தின் உப்புத்தேவைக்காக அவர்கள் செலவிட வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா? அவர்களின் இரண்டு மாத சம்பளம். உப்பின் முக்கியத்துவத்திற்கு ஒரு சிறிய உதாரணம், சீனாவின் உப்பு வரி. சீனாவின் ஒரு கிராம் தங்கமும் 4.5 கிலோ உப்பும் சமம். தோரயமாக ஒரு கிலோ உப்பு 500 ரூபாய், இன்றைய விலையில்.

பஞ்சகாலத்திலும் உப்பின் வரி குறைக்கப்படவில்லை. சாவின் மடங்கு அதிகமானதிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். சுமார் 2300 மைல் நீளமுள்ள வேலி, 18000 பேர் பணி புரிந்த ஒரு அமைப்பிற்கு ஒரு அரசு செலவு செய்கின்றது என்றால் அதன் வருமானம் அதை விட எத்தனை மடங்கு இருக்க வேண்டும் என்பதை நமக்கு காட்டுகின்றது.

எத்தனை வேலி அமைத்தாலும் நமது ஆட்கள் அதனையும் மீறியிருக்கின்றனர். நெம்புகோல் வைத்து வேலியின் மீது தூக்கி எறிவது, மரங்களை ஏணியாக்கி ஏறித்தாவுவது.

வேலியின் காவலாட்களின் ரோந்து தூரம் என்பது ஒரு காவலாளி சத்தம் போட்டு கத்தினால் அடுத்த காவலாளிக்கு கேட்கும். ஒரு செய்தியை வெகு சுலபமாக பல மைல்கள் வெகு சீக்கிரமாக கடத்த முடியும். செய்தி எப்படி வடிவடையும் என்பது அடுத்த விஷயம். சிறு சிறு விவரங்களும் உண்டு. காவலாளிகள் நடக்கும் போது அவர்களின் காலடியை மூடிக் கொண்டே செல்ல வேண்டும், வேறு புதிய காலடிகளுக்கு அவரே பொறுப்பு. இஸ்லாமியக் காவலாளிகளின் 'எல்லை மனைவி', லஞ்ச ஊழல்.

லஞ்ச ஊழலுக்கும் முழுக்காரணம், ஆங்கிலேயர்களின் சுரண்டல் மனோபாவம், கிடைத்த அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடுவதில் மட்டுமே குறியாக இருந்திருக்கின்றனர். காவலாளிகள், சுங்க அதிகாரிகளின் சொற்ப சம்பளத்தின் காரணமாக, அங்கங்கு வாழும் மக்கள் தலையில் கை வைத்துள்ளனர்.

சிறிய உதாரணம், ராபர்ட் க்ளைவ். கிழக்கிந்திய கம்பெனியுடன் சேர்த்து, தன்னுடைய கம்பெனியையும் வளர்த்தவர். வெகு குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனவர். இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். முரண்.

உப்பை பற்றி பல புதிய விஷயங்களை இதிலிருந்து தெரிந்து கொண்டேன். உப்பு என்பது கடல் நீரில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படும் விஷயம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உப்பு பாறைகளிலிருந்து எடுக்கப்படும் என்று தெரியாது. இமயமலை பகுதிகளில் இருக்கும் உப்பு பாறைகளிலிருந்தும் உப்பு எடுக்கப்படுகின்றது என்பது, இன்று பாக்கிஸ்தான் வசம் சென்று விட்ட பகுதிகளில் உப்பு சுரங்கங்கள் இருந்தன என்பது மிக புதிய செய்தி.

உப்பிலும் 'மடி' உப்பு என்பதும் தெரியாது. பிராமணர்களுக்கு வேக வைக்கப்பட்ட பொருள் என்பது விழுப்பு. கடல் உப்பு என்பது ஏற்கனவே காய்ச்சப்படுவதால் மடி உப்பல்ல. எனவே மடி உப்பிற்கு தனி மதிப்பு.

இத்தனை பெரிய வேலி, பெரிய சுரண்டல் இது நாள் வரை யார் கண்ணிலும் படவில்லை. இதைப் பற்றி எழுத லண்டனிலிருந்து ஒருவர் வர வேண்டியதாக இருக்கின்றது. நமது நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்(??)களின் தகுதி கேள்விக்குறியாகின்றது. 

புதர்வேலியை பற்றி எங்கும் குறிப்புகளின்று பல இடங்களில அலைந்து திரிந்து, பல ஆதிகால அரசாங்க குறிப்புகளை படித்து, பல வரைபடங்களை தொகுத்து, ஜி.பி.எஸ் உதவியுடன் தேடுகின்றார். பல இடங்களில் அங்குள்ள மக்களுக்கே அதைப்பற்றி தெரியவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த வேலியை பற்றி தெரிந்திருப்பதன் சாத்தியங்கள் குறைவுதான்.

இது ஒரு மிகச்சிறந்த பயண நூலும் கூட. ராயின் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். 1996 - 98களின் நிலை. பெரும்பாலும் மாறியிருக்க வாய்ப்பில்லை. என்ன இப்போது செல்போனும், இணையமும் எல்லா இடங்களிலும் இருந்திருக்கும்.

ஒரு வெளிநாட்டினரின் பார்வையிலிருந்தாலும்,பார்த்ததை அப்படியே பதிவு செய்கின்றார். கிராம மக்களின் பரிவு, பாசம், விருந்தோம்பல். அதே சமயம் அவருக்கு கிடைத்த மோசமான அனுபவங்களை கூட 'சில பேரு அப்படித்தாம்பா' என்று கூறிச் செல்கின்றார்.

மிகப்பெரிய உப்பளமான சம்பர் ஏரியின் இன்றைய நிலை பரிதாபமானதுதான். ஒரு காலத்தில் வெகு பரபரப்பாக இருந்த சம்பர் ஏரி இன்றைக்கு கிட்டத்திட்ட கைவிடப்பட்ட கதைதான். அனைத்து உப்பு உற்பத்தியும் குஜராத்திற்கு சென்றுவிட்டது. பெரிய புயலில் மொத்தமாக அழிந்தாலும், மீண்டும் அதை உயிர்ப்பிக்க குறைந்த கூலியில் கிடைக்கும் மனித வளத்தை கொண்டு கட்டி எழுப்பியுள்ளனர்.

பல இடங்களில் ஏமாற்றத்தை சந்தித்தாலும், பலர் கிண்டலடித்தாலும் தன் முயற்சியை கை விடாத அவரின் உழைப்பிற்கு ஒரு வணக்கம். தன்னுடைய நாட்டின் மிகப்பெரிய சுரண்டலை வெளியில் கொண்டு வந்த அவரின் நேர்க்கைக்கும் ஒரு வணக்கம்.

ஏன் பலரால் இவரின் புத்தகம் கண்டு கொள்ளாமல் போனது என்பதற்கு காரணம் அவரின் புத்தகத்திலேயே உள்ளது. வெள்ளைக்காரன் சொல்வதையே நம்பும் பலருக்கும் இவர் உவப்பான ஆசாமியாக தெரியவில்லை. காரணம் சுலபம், அனைவரையும் போல இவரிடம் ஒரு போலி முற்போக்குத்தனம் இல்லை, இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கும் தன்மை இருக்கின்றது. கோவிலுக்கு சென்று அங்கு வேண்டிக்கொள்ளும் மனப்பான்பை இருக்கின்றது. இது ஒன்று போதுமே, அவர் ஒரு இந்துத்துவவாதி, அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டியதில்லை.


மொழிபெயர்ப்பு சுலபமான நடையில் உள்ளது. இன்னும் அதிகம் படங்களை சேர்த்திருக்கலாம்.

ஜெயமோகன் அவர் தளத்தில் எழுதிய விரிவான பதிவு இங்கே.

கேசவமணியின் பதிவு

ஹிண்டுவில் இப்புத்தகத்தை பற்றி

புத்தகத்தை வாங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக