05 செப்டம்பர் 2015

வெண்முரசு - பிரயாகை - ஜெயமோகன்

கடந்த திங்களன்று மதுரை புத்தக கண்காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் கண்ணில் பட்டவை இரண்டு. முதல் இடம் பொன்னியின் செல்வனுக்குதான். பெரும்பாலான அரங்குகளில் பொன்னியின் செல்வன். வித விதமான வடிவங்களில், படங்களுடன், படங்கள் இல்லாமல், பல வடிவங்களில். இரண்டாவது வெண்முரசு. நற்றிணையிலும், கிழக்கிலும் திரும்பிய பக்கமெங்கும் வெண்முரசு.

வெண்முரசு வரிசையில் ஐந்தாவது நாவல். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை. இருப்பதிலேயே நீலம் சிறிய புத்தகம் என்றாலும், இரண்டு முறை முழுவதும் படித்திருந்தாலும் மனதில் அது முழுவதும் சென்று அமரவில்லை. பெரும்பாலும் அதை பயணத்தின் போது படித்ததால் வந்த விளைவாக இருக்கும். ஒரு நாள் முழுவதையும் முழுக்க முழுக்க செலவிட்டு படிக்கவேண்டும்.

பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.

துருவனின் கதையுடன் ஆரம்பமாகின்றது பிரயகை. சிறுவயதில் கேட்ட கதை. சிறுவயதில் கேட்கும் போது, ஒரு பரிதாப சிறுவன் என்றுதான் தோன்றியிருக்கும். யாருக்கும் கிடைக்காத ஒரு இடத்தை பெற்றவன், என்றும் மாறா உறுதி கொண்டவன். அவனே இக்கதையின் ஆரம்பம்.பாரதக் கதை என்ற வகையில், குரு வம்சத்தவரின் குருகுல வாச முடிவு, பாஞ்சாலி பிறப்பு, தருமனின் முடி சூடல், அரக்கு மாளிகை, இடும்பவனம், பகாசுர வதம், பாஞ்சாலி சுயம்வரம்.

ஒரு கதை என்ற வகையில் இவை அனைத்தும் ஒரு வேகமான விறுவிறுப்பாக சுவாரஸ்யத்துடன் செல்பவை. துரோணரின் குரோதமே கூட ஒரு வகையில் பாரதப் போருக்கு காரணமாக இருக்கலாம். துரோணரின் ஆணைக்கு கட்டுப் பட்டு துருபதனை தேர்க்காலில் இழுத்து வரும் அர்ச்சுனனின் செயல், துருபதனை குரோதத்திற்கு இட்டு செல்கின்றது.

போர்க்காட்சி, சமீபத்தில் வந்த பாகுபலி போர்க்காட்சியை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். படம் பார்த்த எனக்கு அது எவ்வித பிரமிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாஞ்சாலம் மீது படையெடுக்க செல்லும் பாண்டவர்கள், கெளரவர்களின் போர்க்காட்சியை படிக்கும் போது உண்டான பிரமிப்பில் பாதி கூட எனக்கு பாகுபலி தரவில்லை. வியூகங்கள், போர் தந்திரங்கள் அனைத்தையும் விட, போரில் ஈடுபடும் மனிதர்களை பற்றியும் பேசுகின்றது வெண்முரசு

எங்கும், எதிலும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் இருப்பவர்கள் மனிதர்களே. ஒரு பிரம்மாண்ட விஷயம் என்றாலும், சிறிய விஷயம் என்றாலும் ஈடுபடும் மனிதர்கள் ஒன்றே, அவர்களின் மனமும் ஒன்றே. அலுவலகத்தில் பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது என் வழக்கம், முதலில் அக்கம் பக்கத்தில் கவனம் சிதறாது, இரண்டாவது நொய்நொய் என்று பேசுபவர்களை தவிர்க்கும் ஒரு கவசம். கேட்டால் கூட கேளாதது போல தலையை ஆட்டி கொண்டிருக்கலாம். ஆனால் முழு வேகத்தில் வேலை செய்யும் போது. என் கைகளும் மூளையும் அது பாட்டிற்கு தன் வேலையை செய்து கொண்டிருக்கும், ஆனால் இன்னொரு பகுதி அந்த பாடலை முணுமுணுத்து கொண்டிருக்கும். இது பலருக்கும் நிகழ்வதே.

அந்த போர்க்களத்திலும், அம்பால தலையை கொய்து கொண்டே சுற்றி நடப்பதை அர்ச்சுனன் பார்த்து கொண்டிருக்கின்றான்.

போரில் வெற்றி தோல்வியை தருவது மனிதனின் உடல் பலமல்ல, மனம். ஒருவனின் மனதை பேதலிக்க செய்து ஒரு அவநம்பிக்கையை தந்துவிட்டால் போது. தொத்துவியாதி போல் நிமிடத்தில் பரவி கூட்டத்தையே நொறுக்கி விடும். அப்படித்தான் இன்றும் பல கலவரங்கள் அடக்கப்படுகின்றன. ஆனால் அதே கூட்டத்திற்கு தரப்படும் சிறிய நம்பிக்கை, வெள்ளமென பெருகி மூழ்கடித்துவிடும். அதே கலவரங்கள் அப்படித்தான் நடத்தப்படுகின்றன்.

சாண்டில்யன் கதைகளிலும் போர்க்காட்சிகள் வரும், இரண்டிற்குமான வித்தியாசம் இதுதான். சாண்டில்யன் போர்க்காட்சிகள் ஒரு சாகசம். இதில் வருவது சாகசத்துடன், ஒரு தத்துவம், பல விஷயங்களை ஆராய்கின்றது.

பெரும்பாலானவர்களுக்கு கோபம், குரோதம் தலைக்கு ஏறும் பொது, ஒருவன் மீது தீராப்பழி கொள்கின்றார்கள். ஆனால் நாள்ப்பட அது சாம்பல் தட்டிவிடும். "அவனை வெட்டுவேன், குத்துவேன்" என்பவர்கள் கூட சிறிது நாளில் போகின்றான் போ என்று சலித்துவிடுவார்கள். ஆனால் துரோணரின் குரோதம், அதன் எல்லையை தாண்டுகின்றது. அர்ச்சுனனின் ஏமாற்றம் புரிந்து கொள்ளக் கூடியதே.

அதே போல தோல்வியுற்ற துருபதனின் நிலையும். துர்வாசர் அவனின் உண்மையை அவனிடமே போட்டுடைக்கின்றார். நம்முடைய மூளையும் மனதும் நமக்கு எட்டாதது. பல வித்தைகள் காட்டக் கூடியது. பெரும்பாலனவர்கள் அடுத்தவர்கள் மீது கொள்ளும் பாசம், கோபம், விரக்தி எல்லாவற்றையும் இரக்கமின்றி ஆராய்ந்தால் இறுதியில் நிற்பது அவர்களை பற்றிய உணர்வுகளே, தன்னையே அடிப்படையாக கொண்டு அமையும் உணர்ச்சிகள், வெளிப்படையாக தோன்றும் அனைத்தும் அதன் அடிப்படையில், அதன் மீது கட்டப்பட்டதே. அதை உறுவி எடுத்தால் அனைத்தும் சரிந்து விடும். துர்வாசக் அதை எடுத்து போடுகின்றார்.

துருபதன் தீயை வளர்த்து அதன முன் நாட்டியமாடுவதை படிக்கும் போது, எனக்கு 'பாரதி' படத்தில் பாரதியார் 'தத்தரிகிட தத்தரிக்ட தித்தோம்' என்று ஆடுவதே கண்முன் தெரிகின்றது. ராஜாவின் இசை செய்யும் வேலை.

அவர் முன்பு எப்போதோ எழுதிய அதர்வம் கதையை சேர்த்துள்ளார்.

குந்தி தர்மனுக்கு அரியணையை பெற்று தரும் இடம் படு சுவாரஸ்யம். தினமும் படிக்கும் போது, காத்திருந்து காத்திருந்து படித்தவை.

நாவலிலேயே வரும் உவமை, பால் திரியத் தொடங்குவது. சகுனி. இது வரை சகுனி, தன் மருமகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று மட்டும் விரும்பும் ஒரு ஷத்திரியன். அது தவறான விஷயமும் அல்ல. பாண்டவர்களிடமோ, குந்தியிடமோ வஞ்சம் என்று தனியாக ஏதுமின்று, ஒரு போட்டியாளர்கள் என்ற எண்ணம் மட்டுமே. சகுனி மனம் மாறுமிடம், அவனை ஒரு கெட்டவன் என்று வெறுக்க முடியாதபடி செய்து விட்டது. ஹேராமில் வரும் ஒரு வசனம் 'ஒநாயா இருந்து பார்த்தாதான் அதன் நியாயம் புரியும்'. சகுனியின் அந்த கதை ஜைன பாரதத்தில் வருகின்றதாம்.

சகுனியுடன் வரும் கணிகர். பல மேனேஜ்மெண்ட் கன்ஸல்டண்டுகளின் முன்னோடி.

அடுத்து திரியும் பாத்திரம் திருதராஷ்டிரர். இது வரை ஒரு பெருந்தன்மையாளராக வரும் அவரிடம் இருப்பது, மக்கள் பாசம். என்ன இருந்தாலும் தன் மகன்கள் என்ற பிரியம் (வேறு ஏதாவது நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல). தர்மனின் செயல்,விதுரரையும் மீறி திருதராஷ்டிரரை அசைக்கின்றது. இங்கும் பீமனின் வார்த்தைகளே அனைத்தையும் காட்டுகின்றது "பசித்த புலிக்கு மனித ரத்ததை காட்டுவதை போல"

பிரயாகையில் முக்கிய பாத்திரங்கள் பீமனும், பாஞ்சாலியுமே. அவர்களின் ஆளுமையே முழுவதும். அடிப்படையில் சமையலிலும், உண்பதிலும் விருப்பமுள்ளவன் என்பதால் பீமனே மிகவும் நெருக்கமானவன் எனக்கு.  பீமனின் நஞ்சு தோய்ந்த வார்த்தைகள், பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றது. தருமனை அடிக்கடி வாரும் சொற்கள். அதே சமயம் தர்மனை மீறாத செயல். அர்ச்சுனனிடம் தத்துவம் பேசுவது, படகில் தர்மனை கிண்டலடிப்பதும் என பீமன் மிக நெருக்கமானவாகி விட்டான்.

நீலத்தில் வந்த மாயக்கிருஷ்ணன், இதிலில்லை. வேறு ஒரு அமானுஷ்ய வடிவம். ராஜதந்திரி,  துதுவன், போர் நிபுணம், வீரன், குழந்தை என பல முகம் காட்டும் கண்ணன். அவன் வரும் பக்கங்களை மட்டும் பல முறை படித்தேன். ஒவ்வொரு முறையும் புதிதாக காட்சி தருகின்றான் கண்ணன். கிருஷ்ணனை பிடிக்காதா ஆளுண்டோ (சுயதம்பட்டம், அந்த பிரியத்தாலே என் மகனுக்கு கிருஷ்ணன் என்று பெயர் வைத்தேன், அந்த பெயர் வைத்தாலே குறும்பும் சேர்ந்து விடும் என்றும் தெரிந்து கொண்டேன்).

"மூக்குகளை சேகரிக்க கூடையையும் பின்ன சொல்லியிருப்பான்" ஒரு வரி அவனை கச்சிதமாக காட்டுகின்றது.

அரக்கு மாளிகை, அதிலிருந்து தப்பித்து குகை வழி செல்வது, இடும்பையை மணப்பது எல்லாம் வேகமாக போகின்றது.

பீமனின் காட்டு வாழ்க்கை மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த குரங்குச் சிறுவன் தர்மனை கிண்டலடிக்கும் இடங்கள் பிரமாதம். பாவம் தர்மன். பீமனுக்கும் இடும்பனுக்குமான சண்டை வர்ணனையை சொல்லிக் கொண்டே போகலாம். என் பெண்ணிற்கு இரவு கதை சொல்ல இப்போதெல்லாம் இங்கிருந்தே கதைகளை எடுத்து கொள்கின்றேன். அவளுக்கு பிடித்த கதை அனுமன் சூரியனை பிடிக்க சென்ற கதை. 

வெண்முரசின் மற்றுமொரு சிறப்பு, அரக்கர்கள், அசுரர்கள் என்று சொல்பவர்களின் மறு பக்கத்தை காட்டுவது. இடும்பன் என்பவன் ஒரு அரக்கன் என்றுதான் படித்துள்ளேன். அவர்களின் மறுபக்கத்தையும் காட்டுகின்றார். "வண்ணமக்கள், நெருப்பை வழிபடுவர்கள், அதைவைத்து காட்டை அழிப்பார்கள்" இன்றுவரை அதுவே. இதற்கு தொடர்புடையதுதான் பகாசுரன் கதையும். மலைவாழ் மக்களின் துயர்.

பாஞ்சாலி வருவது முதலில் ஒரு சிறு பெண்ணாக. ஏழு வயது (??) அந்த வயசிற்கு பேசுவதெல்லாம் அதிக பிரசிங்கித்தனம் :). பாஞ்சாலியை பற்றிய முழு சித்திரம் கிடைத்துவிடுகின்றது. அவளின் படிப்பு, கம்பீரம், கர்வம் அனைத்தும். சுயம்வரத்தின் முன்னால் நடக்கும் நிகழ்ச்சிகள், ஓவ்வொருவரையும் சந்திப்பது. அவளை மேலும் புரிந்து கொள்ள உதவுகின்றது. பலிதெய்வம், தான் விரும்பியதை அடைய எதையும் செய்ய தயாராகும் ஷத்திரிய பெண். பீமனுடன் அவள் கொள்ளும் விளையாட்டை படிக்கும் போதும், ஏற்கனவே படித்த பாரத புத்தகங்கள் கதைகளாலும்,  எனக்கு என்னவோ, பாஞ்சாலியிடம் பெரும் அன்பு கொண்டவன் பீமனே என்று தோன்றுகின்றது.

கிந்தூரம். சுயம்வரத்தின் சவால். இதற்கு முன்னால் படித்ததில் கர்ணன் எள் அளவிற்கு இருக்கும் போது வில் தூக்கி அடித்தது என்று படித்ததாக நினைவு, இதி நாலு அம்பு வரை முன்னெறி இருக்கின்றான். தோற்றதற்கு காரணமாக, பாஞ்சாலியின் மன விலக்கத்தை காட்டுகின்றார். இந்த விரோதமே கடைசிவரை வருகின்றது.

இதிலும் பீமனின் குசும்பு கவர்ந்தது. 'காயத்திரியை சொல்லி சொல்லி இப்படி ஆகிவிட்டேன்", "எப்படி அண்ணன் நூல் கற்றவர் என்று அறிந்தார்கள், ஒரு முறை கூட கிந்தூரத்தை வெல்வதை பற்றி யோசிக்காததால்". ஆனால் அவன் குரங்கு போல சேட்டை செய்வதாக எழுதியிப்பதில் என் மனம் "புண்பட்டுவிட்டது".

கிருஷ்ணன் தன் லீலையை மறுபடியும் காட்டுமிடம் சுவாரஸ்யம். சண்டையை ஆரம்பித்து வைத்துவிட்டு அவனே முடித்தும் வைக்கின்றான்

காற்றில் விளக்கை அணைக்காமல் எடுத்து செல்ல வேண்டும் என்ற கட்டளைக்கு, புல்வெளியை கொளுத்தி, அந்த நெருப்பை அணைக்காமல் வைக்கும் பாஞ்சாலியின் பாத்திரம் பரிபூரணம்.

பிரயாகையில் வரும் மற்றுமொரு முக்கிய சித்திரம், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவு. குந்திக்கும் அவள் பிள்ளைகளுக்குமான உறவு, அவர்கள் காட்டில் சென்றபின்னரே பலப்படுகின்றது, முதல் மூவரிடம் எப்போதும் விலகியிருக்கும் அவள், காட்டில் வந்து அனைத்தையும் மறந்த பின்னரே நெருங்கி வருகின்றாள். அதுவும் பீமன் வலுக்கட்டாயமாக அவளை தூக்கி சென்ற பின்னர். அம்மா -மகன் சென்டிமென்ட், சினிமாக்களிலிருது பல புத்தகங்கள் வரை துவைத்து இஸ்திரி செய்யப்பட வஸ்து.

பீமனும், கடோத்கஜனுக்கும் இருக்கும் அந்த பாசம். பீமனிடம் ஒரு வினாடி வந்து போகும் குரோதம். அப்பாக்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு இடத்தில் மகன்கள் மீது ஒரு கோபம் வந்து போகுமோ? ஏதோ ஒரு இடத்தில் அவர்கள், தந்தையை தாண்டி செல்வதை அனைவராலும் சகஜமாக ஏற்று அதை தாண்டி செல்வது கடினமே.

'பெண்ணை பெற்றவன் பாக்கியவான்', எதற்கோ பா.ராகவன் எழுதியது. எதற்கு என்று நினைவில்லில்லை. அப்பனை விட பையன் புத்திசாலி என்றால் அப்பன்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் ஒரு சிறிய பொறாமை வந்து போகும், ஆனால் அப்பனை விட பெண் புத்திசாலி என்றால் முழுக்கு முழுக்க ஒரு பெருமை. என் அண்ணா ஒருவர், பெண்ணை "என் அம்மாடா" என்பார். துருபதன், வழிபடும் தெய்வம் பாஞ்சாலி.

மகள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், பெரிய ஆளாக இருந்தாலும் , அவள் அவளூடைய அம்மாவிற்கு ஒரு பெண் குழந்தை. அவ்வளவே. பாஞ்சாலியை பற்றி அவள் தாயின் பார்வையில் வருபவை அனைத்தும் அருமை.

திரும்ப திரும்ப வருவதாக நான் நினைக்கும் ஒரு விஷயம், "ஏற்கனவே பல முறை நடித்த பார்த்த நாடகத்தை மீண்டும் நடத்துகின்றார், பல முறை பேசிய விஷயம், தயார் செய்த விஷயம்" என்ற உவமை / காட்சி.  துருவனிடம் அவள் சித்தி பேசுவதை கண்டு துருவனின் தந்தை இதை நினைக்கின்றார், துரோணர் துருபதனிடம் பேசுவதை கண்டு அர்ச்சுனன் நினைக்கின்றான், குந்தி சபையில் பேசுவதைக் கண்டு பீமன் நினைக்கின்றான். இருக்கலாம், அனைவரும் சில சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், தயார் செய்து கொண்டிருக்கின்றனர், ஒத்திகை பார்த்து கொண்டிருக்கின்றனர். சந்தர்ப்பம் கிடைத்ததும் நடித்து முடித்து விடுகின்றனர். ஆனால் அதை திரும்ப சொல்வது கொஞ்சம் உறுத்துகின்றது.

இது மற்ற நாவல்களை விட ஒரு படி மேலே சென்று உள்ளமர்ந்துள்ளது. முதற்கனல், நாடகீய சம்பவங்களாலும், உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு செல்லும் ஒரு உணர்ச்சிகர நாவலாக இருந்தது. மழைப்பாடல், அதிக அரசியல் சம்பவங்களை கொண்டு பின்னப்பட்டது. வண்ணக்கடல், பாத்திரங்களின் உணர்வுகளையும், மாற்றங்களையும் பேசினாலும், நிலச்சித்திரங்கள், பிற விஷயங்கள் வந்து முன்னதை நீர்க்க செய்துவிட்டது கொஞ்சம். நீலம் முற்றிலும் வேறு தளம்.

பிரயாகை, கச்சிதமாக அனைத்தையும் தன்னுள் வைத்துவிட்டது.

ஒரே வருத்தம், ஓவியங்களுடன் வந்த கடைசி செம்பதிப்பாகிவிட்டது. அடுத்த வெண்முகில் நகரில் ஓவியங்கள் இல்லை.

இந்திரநீலமும் முடிந்துவிட்டது. அதில் கூடுதல்வருத்தம் வேறு. கிருஷ்ணன், பீமன், அர்ச்சுனனை எல்லாம் அவர், இவர் என்று எழுத ஆரம்பித்துவிட்டார். ஏதோ அவர்களுக்கு வயதான தோற்றம் வந்துவிட்டது. அவர்கள் எல்லாம், நம் தோழர்கள், வேண்டாம் சரியான வார்த்தை இல்லை, நண்பர்கள். அவன், இவன் என்றே சொல்லலாம்.

புத்தகங்களை இரண்டாக போடக்கூடாதா? எல்லாரும் ஜிம்மிற்கு செல்பவர்களில்லை, என்னை மாதிரி சிலரும் இருக்கின்றனர்.

நான் வாங்கியது படங்களுடன் இருக்கும் செம்பதிப்பு. கிழக்கில் செம்பதிப்பு, சாதரண பதிப்பு இரண்டும் கிடைக்கின்றது.

இங்கே அனைத்து விவரங்களும்

அடுத்த புத்தகத்திற்காக ........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக