01 ஜூலை 2016

உபசாரம் - சுகா

உபசாரம்

சுகாவின் நான்காவது புத்தகம். வழக்கம்போல கட்டுரை தொகுப்பு. தாயார் சன்னதி, மூங்கில் மூச்சு, சாமானியனின் முகம் வரிசையில் அடுத்த புத்தகம். 

புத்தகத்தில் பல கட்டுரைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அனைத்தும் பிரமாதம் என்று கூற முடியவில்லை. மூன்று வருடங்களில் எழுதிய அனைத்தையும் கலந்து கட்டி வைத்துள்ளனர். பெரும்பாலும் மறைந்தவர்களை பற்றிய கட்டுரைகள். அவர்களை பற்றிய ஒரு நினைவை நம்முள் கிளப்பிவிடுகின்றது. ஜெயகாந்தன், பாலு மகேந்திரா, கல்பனா, கலாபவன் மணி, வெங்கட் சாமிநாதன், எம்.எஸ்.வி பற்றிய கட்டுரைகள்  எல்லாம் அவர்கள் மறைவின் போதும் அதையொட்டியும் எழுதப்பட்டவை. அவர்களை பற்றிய பொதுவான கட்டுரைகளாக இல்லாமல், அவர்களுடனான தன் அனுபவங்களை கூறியிருப்பதுத்தான் அவற்றை சிறப்பாக்குகின்றது.


சினிமாக்காரர்களுக்கு சாப்பாட்டுக் கடை வேட்டை என்பது ஒரு பொழுது போக்கோ? நல்ல உணவை தேடி தேடி சாப்பிட ஆசையாகத்தான் இருக்கின்றது. ஆனால் பெங்களூரில் தேடித்தேடி அலைந்தாலும் கடைசியில் எங்காவது வெல்லம் போட்ட சாம்பார் தான் கிடைக்கும் . இல்லையென்றால் அடையாறு ஆனந்தபவனில், இந்தியில் தோசை கேட்டு சாப்பிட வேண்டியதுதான். அவர்கள் தரும் சாம்பாரை நுனிவிரலில் தொட்டு தோசையில் தடவி சாப்பிட்டால் சரியாக இருக்கும்.  தேடித்தேடி பல ஹோட்டலில் சாப்பிடுவர்களை கண்டால் வயிற்றெரிச்சலாகத்தான் இருக்கின்றது.

இரண்டு, மூன்று விழா அனுபவங்கள், புத்தகங்களின் அணிந்துரைகள். பக்க நிரப்பிகள். ஒரே ஒரு எழுத்து பிழை. அவரை விழாவில் பார்த்தவர், “ மூங்கில் மூச்சு எழுதின சுரா” என்று கூறியதாக இருக்கின்றது. எனக்கென்னவோ அவர் ”சுறா” என்றுதான் சொல்லியிருப்பார் என்று தோன்றுகின்றது.

ஜெயமோகனின் முன்னுரையுடன் வந்துள்ளது. இவர் கட்டுரைகள். சுகா - கூறுவது போல அடுத்தவர் டைரியை படிப்பது போன்றது என்றாலும், இவரை படிப்பதற்கு காரணம், ஜெயமோகன் முன்னுரையில் கூறியிருப்பது போல, வாழ்க்கையை மெல்லிய சிரிப்புடன் சொல்லி செல்வதும், வலிந்து திரிக்காத நகைச்சுவையும், எளிமையான யதார்த்தமான மனிதர்களும் தான். இப்புத்தகமும் அதற்காகவே வாங்கினேன். நோக்கம் முழுமையடைந்ததா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். மூங்கில் மூச்சு வாசகர்களை பற்றி ஒரு கட்டுரை உள்ளது, அவர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். சுகா நாவலோ, கதையோ எழுதுவதற்காக காத்திருக்கின்றேன்

தடம் பதிப்பகம் (ஒரிஜினல்) வெளியீடு. இதோடு சேர்த்து தடம் பதிப்பகத்தின் காலம்தோறும் நரசிங்கம், ஹிந்துத்துவ சிறுகதைகள் புத்தகங்களும் வாங்கினேன். அவற்றுடன் ஒப்பிடும் போது இப்புத்தகத்தின் பைண்டிங், கொஞ்சம் சுமார். பிரித்து படிக்கவே முடியவில்லை. ஆட்டோ லாக் டோர் போல, அதுவாக மூடிக்கொள்கின்றது. பக்க எண்கள், எப்போது வேண்டுமானாலும் புத்தகத்திலிருந்து வெளியே விழுந்துவிடும் என்று தோன்றுமளவிற்கு இடமில்லாமல் அச்சிடப்பட்டுள்ளது. மிகக்குறைவாக மார்ஜின் விடப்பட்டு, படிக்க மிகவும் கடினமாக இருக்கின்றது. 

வாங்க விரும்பினால் இங்கே செல்லவும்

1 கருத்து:

  1. "பக்க எண்கள், எப்போது வேண்டுமானாலும் புத்தகத்திலிருந்து வெளியே விழுந்துவிடும் என்று தோன்றுமளவிற்கு" - 'நல்லா எழுதியிருக்கீங்க

    பதிலளிநீக்கு