21 ஜூலை 2016

எட்டு திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்களுக்கு பிறகு வாங்கிய நாஞ்சிலாரின் நாவல்.

வீட்டை விட்டு சென்ற ஒருவனின் கதை. வீடு என்பது வெறும் தங்குமிடமட்டுமல்ல, குடும்பம் என்ற அமைப்பு. அதனுள் இருக்கும் வரை அது ஒரு பெரும் பாதுகாப்பு. வீட்டை விட்டு வெளியேறுதல் என்பது, குடும்பத்தை துறப்பது. தனியனாக இருப்பது. முதலில் வருவது ஒரு பாதுகாப்பின்மை, பயம். அதுவே ஒரு துணிவையும் தரும். அத்துணிவின் எல்லை, முதலில் அடைந்த பயத்தை பொறுத்தது.

கதையின் தலைப்பை பார்த்தே வாங்கினேன். தலைப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. தலைப்பு, ஒரு மத யானை கட்டின்றி எங்கும் திரிவது போன்ற ஒரு காட்சி தோன்றியது.

தோன்றிய காட்சி சரிதான். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை படங்கள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அதிகம் நினைவிற்கு வருவது ஜெயமோகனின் புறப்பாடு. ரயில் நிலையங்களும், வட இந்தியாவும் அந்த நினைப்பை தருவதை தவிர்க்க முடியவில்லை. இதைப் படிக்கும் போது அதுவும், அதை படிக்கும் போது இதுவும் நினைவில் வந்து வந்து போகின்றது.


பூலிங்கம் செய்யாத ஒரு குற்றத்திற்கு அடிவாங்கி, அதற்கு பழிவாங்க நினைத்து செய்த செயலின் விளைவாக வீட்டை விட்டு ஓடுகின்றான். ரயில் நிலையத்தில் ஐஸ்க்ரீம் விற்பது, கோவாவிலிருந்து பாட்டில் கடத்துவது, போதைப் பொருள் கடத்துவது, சாராயம் கடத்துவது என பரிணாம வளர்ச்சியடைகின்றான். நல்லவேளை ஒரு முழு தாதா கதையாகவில்லை.

கதை எங்கும் அவனின் செயலை நியாயப்படுத்துவது போன்று அமையவில்லை. அவனின் வாழ்க்கை அவ்வழியாக இயல்பாக போகின்றது. கதையின் முக்கிய பலமே, அவர் காட்டும் மனிதர்கள், வேறு உலகங்கள்.

நாஞ்சில் நாடன் ஒரு பயணி. அவரது பணி தொடர்பாக பல இடங்களுக்கு செல்பவர். அந்த அனுபவங்கள் எல்லாம் இதில் பயன்பட்டுள்ளது. வித விதமான ஊர்களை காட்டுகின்றர். குண்டக்கல், வாரங்கள், கோவா, பாம்பே. பூலிங்கத்தின் வழி நாமும் அந்த ஊர்களுக்கு போகின்றோம்.

பெரிய உறுத்தலாக இருப்பது, வட்டார வழக்கு மட்டுமே. கர்நாடகாவிலிருக்கும் ராஜஸ்தானி பாபி நாஞ்சில் வழக்கில் பேசுவதை மனதில் உருவகப்படுத்த முடிவதில்லை. அனைவரும் வட்டார வழக்கிலேயே பேசுகின்றனர். தலைகீழ் விகிதங்களில் அது தெரியவில்லை, காரணம் அதில் வரும் மனிதர்கள் அந்த ஊர்க்காரர்கள். இதில் வேறு மாநிலத்தவர்கள் அதை பேசுவது கொஞ்சம் அந்நியமாக இருக்கின்றது.

உணவு. நாஞ்சில் நாடனின் கதைகள் வரும் மற்றுமொரு அம்சம். இதில் விதவிதமான உணவுகள் பற்றி வருகின்றது. கதையோடு போக்காக அதுவும் வருகின்றது. உணவை கொண்டாடுபவருக்கே அது இயல்பானதே.

ஒரு நல்ல நாவல்2 கருத்துகள்:

  1. ஒரு நல்ல விமரிசனம். இன்னமும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  2. ஒரு புத்தகத்தை படித்து முடித்த சில் நாட்கள் கழித்து எழுதுவதே வழக்கம். அப்புத்தகத்தின் தாக்கம் எந்தள்விற்கு உள்ளது என்பதை அது காட்டும். இப்புத்தகத்தின் தாக்கம் இவ்வளவே :). மேலும் கதைசுருக்கத்தை எழுதுவதை முடிந்தவரை தவிர்க்க நினைத்தேன்.

    பதிலளிநீக்கு