13 ஜூலை 2016

இந்திரநீலம் - ஜெயமோகன்

நீலத்திற்கு பின்னால் கிருஷ்ணனை நாயகனாக கொண்ட நாவல். கிருஷ்ணனின் திருமணங்கள் பற்றிய புத்தகம். 

ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வகையான கதை சொல்லலை எடுத்துகொள்ளும் ஜெயமோகன், இதில் எடுத்துகொண்டது, சியமந்தகம். சியமந்தகத்தின் கதையே ஒரு சுவாரஸ்யமான கதை. என் பெண்ணிற்கு பல நாள் அக்கதையை சொல்லியிருக்கின்றேன். இ.பாவும் இக்கதையை கிருஷ்ணா கிருஷ்ணாவில் எழுதியுள்ளார். ஆனால் அதை வேறு கோணத்தில் காட்டி, அதை மையமாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் திருமணங்களின் கதைகளையும், யாதவர்களின் அரசியலையும் கூறுகின்றார். வெண்முகில் நகரத்திற்கு பூரிசிரவஸ் போல இதில் திருஷ்டத்துய்மன்.

வழக்கம் போல ஒரு சூதர் கதையுடன் ஆரம்பிக்கின்றது.விஸ்வாமித்திரரின் கதை. திருஷ்டத்துய்மன் துவாரகைக்கு போகின்றான். அவனும் அங்குள்ள அரசியல் சூழலில் மாட்டிக் கொண்டு, கிருஷ்ணனை அறிகின்றான், தன்னையும் சுப்ரை மீதிருக்கும் தன் காதலையும் அறிகின்றான்.கிருஷ்ணனை ஒரு மானுடனாக காட்ட முயன்றாலும், அவன் விஸ்வரூபம் எடுத்து ஒரு முழுமையான மானுடனாக, அதி மானுடனாக, ஒரு தெய்வமாகவே மாறுகின்றான்.

பாமா திருமணம், நீலம் நாவலின் எளிமைபடுத்தப்பட்ட வடிவம். பாமாவின் பித்து, ராதையின் பித்தை விட குறைந்ததல்ல, ஆனால் பாமா பாஞ்சாலி + ராதை கலவை. பாமா முதன் முதலில் கிருஷ்ணனனை பார்க்கும் காட்சியிலேயே அவன் விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றான். கிருஷ்ணனை விளையாட்டு தோழனாக, குழந்தையாக மட்டுமே பார்த்த, கேட்ட எனக்கு முதன் முதலில் கிருஷ்ணன் ஒரு அரசனாக, ஒரு அச்சமூட்டும் வீரனாக காட்சி தருகின்றான்.

சியமந்தகத்தின் பயணம் ஆரம்பிக்கின்றது. சியமந்தகம், அதை தொட்டவர்கள் அனைவரையும் ஆக்கிரமிக்கின்றது. ஒவ்வொருவராக அதில் விழுகின்றனர். கிருஷ்ணனின் பக்தனான சாத்யகியும் கூட.

சியமந்தகத்தின் பயணத்துடன், திருஷ்டத்துய்மன், கிருஷ்ணனின் திருமண கதைகளையும் அறிகின்றான்.

பாமாவை காண வரும் சிசுபாலனின் காட்சிப்பிழைகளின் உட்பொருள் என்னவென்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அதற்கு கொஞ்சம் பெண் தெய்வ வழிபாடு, தொன்மையான பல கதைகள் துணை வரவேண்டும்.

ஜாம்பவான், ராமனின் காலத்தவர். அது நடை முறை சாத்தியமில்லாதது. அவர்களின் வம்சத்தார் என்பது பொருத்தமே. ஜாம்பவதி திருமணம், தொல்குடிகளை பற்றிய ஆர்வத்தை தருகின்றது.

ருக்மணி - ஒரு சாகச திருமணம். வரதாவின் அழகு, மழைக்காட்சிகளின் விவரணை, மூச்சு திணறத்தான் செய்கின்றது. பாமாவை போல் ருக்மணியும் சிசுபாலனை ஒரு பரிவுடனேதான் பார்க்கின்றாள்.

மித்ரவிந்தை, கைகேயி, லக்ஷ்மணை - சின்ன கதைகள். நக்னஜித்தி. கோசல நாட்டு இளவரசி. கோசலராமனின் மறுவடிவமல்லவா இவன். மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள். என்னையும் அங்கு கோசல மக்களுடன் அமரவைத்துவிட்டார்.

காளிந்தி  - சியமந்தகத்தை வெறும் கல்லென்றாக்கியவள். யோகத்தில் முதிர்ந்தவள். அனைவரின் கதையையும் சூதர் வாயல் கேட்கும் திருஷ்டத்துய்மன், காளிந்தி கதையை மட்டும் கிருஷ்ணனே சொல்ல கேட்கின்றான். காளிந்தியின் தூய்மை. அவளின் திருமணம், நெகிழச்செய்யும் ஒன்று.

திருமணங்கள் ஒரு சரடு. அரசியல் இன்னொரு சரடு.

சியமந்தகத்தின் வழியாக யாதவர்களின் அரசியலையும் கூறுகின்றார். முதலில் யாதவர்களின் குலச்சண்டை. யாதவர்கள் என்று ஒற்றையாக சொன்னாலும், அவர்கள் பல குலங்களின், குழுக்களின் கூட்டு. அவர்களில் யார் பெரியவன் என்பது கடைசிவரை இருக்கும் பூசல். அதுவே சத்ராஜித்தை, பெருமிதம் கொள்ள செய்கின்றது.

சததன்வா, கிருதவர்மன், அக்ரூரர், சாத்யகி என அனைவரையும் சியமந்தகம் மாற்றுகின்றது. சததன்வாவின் மரணம், ஒரு அற்புத காட்சியாக விரிகின்றது. அடர்ந்த காட்டிலிருந்து வரும் குதிரை, குதிரை மேல் கிருஷ்ணன், உடனே பற்ந்து வரும் சுதர்சனம். கற்பனை செய்ய ஒரு பிரமிப்பான காட்சி.

அக்ரூரரின் கதை ஏற்கனவே படித்ததிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. இதில் அக்ரூரரின் கதை அரசியல் பார்வையில் காட்டப்படுகின்றது. கிருதவர்மன் பாரதப்போரில் மிச்சமிருந்தவரில் ஒருவன். பாண்டவர்களின் குலம் அழியக்காரணமானவன், திருஷ்டத்துய்மனின் மரணத்திற்கும் காரணமானவன், யாதவ குலமழியவும் காரணமானவன். அனைத்திற்குமான விதையை இதில் காட்டுகின்றார்.

யாதவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்களை பற்றிய சிறுசிறு பகடிகள், பாமாவின் தாயாரின் பெருமித பேச்சு வழியாக அனைத்தையும் கிண்டல் செய்கின்றார். திருஷ்டத்துய்மன், சாத்யகி பங்கு பெரும் போர்க்காட்சி சிறப்பானதொன்று. அதில் வரும் முதிய வீரனின் பார்வை சொல்வது ஏராளம்.

எட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டவன் நிலை எப்படியிருக்கும்! அனைத்து அரசிகளுக்கு ஒவ்வொரு டிபார்ட்மெண்ட். தொல்லை விட்டது. சிரித்துக் கொண்டே சியமந்தகத்தை வைத்து அனைவரையும் ஆட்டி வைக்கின்றான்.

துவாரகையையும் தன் எழுத்தால் கண் முன் தருகின்றார். கிருஷ்ணனை அவன் இவன் என்று சொன்னால்தான் நெருக்கமாக இருக்கின்றது, இதில் அவராக்கி கொஞ்சம் எட்டி நிற்க வைத்துவிட்டார். இவன் நாம் விளையாடும் கிருஷ்ணனல்ல, துவாரகை மன்னன் இளைய யாதவர்.

துவாரகையில்
பெண்களின் விடுதலை உணர்வு முதலில் கொஞ்சம் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. அட்லீஸ்ட் எனக்கு. ஆனால் கிருஷ்ணனை உணர்ந்தவர்களுக்கு, ஏதுமில்லை. அவனிருக்கும் இடம் வேறுஎப்படியிருக்கும். அதை புரிந்து கொள்ள இ.பாவின் நாவல் உதவுகின்றது. கிருஷ்ணன் பெண்களுக்கு காட்டுவது அவர்களின் விடுதலை.

கிருஷ்ணனை, அவன் காதலை அரசியலை நுணுக்கமாக காட்டும் நூல்.

செம்பதிப்பும் கிடைக்கின்றது வழக்கமான பதிப்பும் கிடைக்கின்றது. வெறும் நூறு ரூபாய் வித்தியாசம். என்ன வித்தியாசமிருக்கும் நூறு ரூபாய்க்கு???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக