வெய்யோன்
ஜெயமோகன் எழுதும் வெண்முரசின் ஒன்பதாவது நாவல். இதன் பிறகு இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டது.
வெண்முரசின் முக்கிய அம்சம் பாரதத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பதே. விடுபட்ட கண்ணிகளை சேர்க்கும் ஒரு முயற்சி. சிறிய பாத்திரங்கள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்கள். வெய்யோன், கர்ணனை இன்னும் சற்று அருகில் சென்று பார்க்கும் ஒரு முயற்சி.
வெய்யோன், கர்ணனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கர்ணனின் பெயரைக்கேட்டதும், சிவாஜி கணேசன், கண்களை மூடிக்கொண்டு அம்மா, அம்மா என்று அழுது புலம்புவதும், சிவாஜி மீசையை முறுக்கிக்கொண்டு கர்ஜிப்பதோ அல்லது சிவப்பு விளக்கு மேனியில் பட்டு ஜொலிக்க வேதனையை காட்டுவதோ நினைவில் வந்தால் நீங்கள் கண்டிப்பாக பாரதத்தையும், வெய்யோனையும் படிக்க வேண்டும். காரணம் இரண்டிற்குமான வித்தியாசம். வயதிலிருந்து காட்சிகள் வரை. கர்ணன் ஒரு நல்ல திரைப்படம்தான் (நமக்கேன் வம்பு).
வெண்முரசு வரிசையில் வெண்முகில் நகரத்திற்கு பின்னால் வந்த இரண்டு நாவல்களும் பாரதத்தின் மைய கதையை விட்டு வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது. தனி நாவலாக சரிதான். ஆனால் வெண்முரசின் வரிசையில் வைத்து பார்த்தால் ஒரு பெரிய இடைவெளி. இந்நாவல் அந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளது.
நமக்குத் தெரிந்த கர்ணன், கொடையாளி, கவச குண்டலங்களையே தானமாக தந்தவன், தாய்ப் பாசத்திற்கு ஏங்கியவன், கொடையாளி, பிறப்பின் காரணமாக பல இடங்களில் அடைந்த அவமானங்களின் வஞ்சத்தை உள்ளத்தில் கொண்டவன். ஒரு கலவையான பாத்திரம்.
துரியோதனன், சகுனி போன்றவர்கள் முழுக்க முழுக்க கெட்டவர்கள். கர்ணன் வேறு வழியின்றி செஞ்சோற்று கடன் தீர்க்க அங்கிருந்தான் என்பதே பொதுவான சித்திரம். ஆனால் வியாச பாரதமே எந்த பாத்திரத்தையும் அப்படி தட்டையாக காட்டுவதில்லை. துரியோதனனை ஒரு நல்ல அரசனாகவே காட்டுகின்றார் வியாசர். சகுனியும் முதலில் சூதிற்கு சம்மதிப்பதில்லை, போருக்கும் அப்படியே. அதே போல் தர்மனிடமும் பல குறைகளை காட்டுகின்றார். போர் வேண்டாம் என்று பீமனே கிருஷ்ணனிடம் கூறுகின்றான். கர்ணனின் பாத்திரத்தையும் பாரபட்சமின்றி காட்டுகின்றார். கர்ணனிடம் அதிகமாக இருந்தது பொறாமை. பாண்டவர்களின் மீது குறிப்பாக அர்ஜ்ஜுனன் மீது அவனுக்கு இருந்த பொறாமை. அதுவே அவனை அரங்கேற்ற களத்தில் அர்ஜ்ஜுனனை போட்டிக்கு அழைக்க செய்கின்றது. அதே சமயம் அவனின் வீரம், அவனுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளும் காட்டப்படுகின்றன.
புராணங்களில் எதிர்மறையாக காட்டப்படும் பாத்திரங்களின் மறுபக்கத்தை காண்பது என்பதை ஜெயமோகன் வெண்முரசில் செய்துவருகின்றார். இரணியன், ராவணன், பகாசுரன், கார்த்தவீரியன். இவர்கள் அனைவரும் ஒரு தேவ அம்சம் கொண்டவர்களால் வெல்லப்பட்டவர்கள். அவர்களின் தரப்பையும் சொல்வது என்பது தேவைதான்.இந்நாவலில் ஜெயமோகன் செய்திருப்பது அதுதான். ஆனால் முழுக்க முழுக்க அவர்களை தூயவர்களாக காட்டுவது என்பது ஒட்டாமல் போகின்றது. பாரதத்திலிருந்து கொஞ்சம் தனித்து தெரிகின்றது. வெய்யோனில், கர்ணன் ஒரு தெய்வாம்சம் கொண்டவனாக வருகின்றான். கிருஷ்ணனுக்கு அடுத்து ஒரு தெய்வாம்சத்தை பெறுகின்றான். கர்ணனின் கவச குண்டலங்கள் அவன் பிறப்பிலிருந்தே அவனுடன் இருப்பது என்பது புராணக்கதை. அக்கவச குண்டலங்கள் physical object ஆக காட்டாமல் ஒரு தோற்றமாக, மக்களின் விருப்பமாக காட்டுகின்றார். கர்ணனை வெண்முரசின் ஆரம்பத்திலிருந்தே ஒரு பெரிய ஆளுமையாகவே காட்டிவருகின்றார். அதுதான் உதைக்கின்றது. கர்ணனின் பொறாமைக்குணம் என்பது எங்கும் காட்டப்படவில்லை.
துரியோதனனும் ஒரு பெருந்தன்மையாளனாகவே வருகின்றான். வாரணவதம் கூட அவனது விருப்பமின்றி, வேறு வழியின்றி நிகழ்த்தப்பட்டதாகவே வருகின்றது. சாத்தியமே. ஆசிரியர் அப்படியும் இருக்கலாம் என்று கற்பனை செய்யலாம். இந்நாவலில் அது உச்சமடைகின்றது. துரியோதனன் தர்மனின் மறு உருவமாகவே வருகின்றான். பானுமதியே ஆட்சி செய்வது போன்ற தோற்றமும் வருகின்றது. அதே சமயம் பீமனும், அர்ஜ்ஜுனனும் வலிய பகைமை பாராட்டி, துரியோதனனை மீண்டும் பகையாளி ஆக்குவது போன்ற சித்திரம் வருவது கொஞ்சம் நெருடலாகவே இருக்கின்றது. அதுவும் துரியோதனன் மாயமாளிகையில் விழுவது என்பது ராஜசூய வேள்வியின் போது. ஆனால் இதில் அதற்கு முன்னரே வருவது போன்று வருகின்றது. இது எப்படி என்பது புரியவில்லை. பாத்திரங்களை வித்தியாசமாக காட்டலாம், அவர்களின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதற்காக சில கற்பனைகளை சேர்க்கலாம். ஆனால் ஒரு சீக்வென்ஸை மாற்றுவது என்பது எப்படி?? ஜராசந்தனுடன் துரியோதனன் ஒட்டி உறவாடுவதும், அவனுடன் பீமன் தோள் சேர்ந்தால் அனைத்து பமைமையையும் மறந்துவிடுவான் என்று நம்புவதாக காட்டுவதும் கொஞ்சம் அதீதமாகவே இருக்கின்றது. பீமனும், அர்ஜ்ஜுனனும் கொண்ட சந்தேகத்தை கூட புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு கனிந்த ஒருவனாக துரியோதனனை காட்டியிருப்பது படிக்கும் போது எனக்கு ஒட்டவில்லை. இதில் ஏதாவது உள்ளுறையாக ஞானம், தத்துவம், நாவல் நுட்பம் இருந்து எனக்கு புரியாவிடில், புரிந்தவர்கள் விளக்கலாம்.
கெளரவ பாண்டவர்களின் விரோதம் அவர்கள் சிறுவயதிலேயே உண்டாகிவிட்டது. முதல் படி பீமனை கொல்ல செய்த முயற்சி. அது பெரிதாக வளர்ந்தது துரியோதனன் அடைந்த அவமானத்தில். உச்சமடைந்தது சூதாட்டத்தில். அனைத்திற்கும் மூல காரணமாக பாரதத்தில் கூறப்படுவது துரியோதனின் பொறாமை. அது வியாசபாரதத்தில் தெளிவாகவே உள்ளது. வெண்முரசில் அது கொஞ்சம் மாற்றப்பட்டது. ஆனால் இந்நாவலில் பகை வளரக்காரணம் பீமனும் அர்ஜ்ஜுனனும் என்பது போல வருவதும் இடிக்கின்றது.
வெண்முரசில் ஆரம்பத்திலிருந்து வரும் மற்றுமொரு விஷயம் நாகர்கள். பாரத தேசம் முழுவதும் ஆதியிலிருந்தவர்கள் நாகர்களே. அவர்களை அழித்தே அனைத்து சத்ரியர்களும் மேலெழுந்தனர் என்பதே வெண்முரசு காட்டும் சித்திரம். இதில் காண்டவ வனத்தில் வாழ்ந்துவந்த நாகர்களை அழித்து உருவான இந்திரப்பிரஸ்தத்தின் கதை வருகின்றது. படிக்கும் போது நாகர்கள் மீது ஒரு பரிதாபம் வந்தாலும், அது இயல்பானதே என்று தோன்றுகின்றது. ஷத்திரியர்களின் குணமே அதுதானே. நாகர்களுக்கு இழைக்கப்பட்டதை அநீதி என்றும், அதன் காரணமாகவே அவன் பாண்டவர்கள் மீது வஞ்சம் கொண்டான் என்றும் வருகின்றது. கர்ணனுக்கு ஆரம்பத்திலிருந்து பாண்டவர்கள் மீது வஞ்சமிருக்கின்றது. பாஞ்சாலி மீதும். போர் என்பது ஷத்திரியர்களின் தர்மம் என்று உணர்ந்தவன், அவன் நாகர்களின் மீது தொடுக்கப்பட்ட போரால் பாண்டவர்கள் மீது வஞ்சம் கொண்டான் என்றால்.....
மிகவும் ரசித்த பகுதி, கர்ணன் அஸ்தினாபுரம் புகுவது, துச்சளை வருகை, பீமனின் வருகை. இவையனைத்தும் குழந்தைகளை வைத்து எழுதப்பட்ட பகுதிகள். ஓரிடத்தில் இரண்டு மூன்று குழந்தைகளிருந்தாலே, இடம் அதிரும். நூறு இளவரசர்கள், ஒவ்வொருவருக்கும் பல மனைவிகள். புதல்வர்கள். எப்படி இருக்கும். கற்பனை செய்யவே திகிலாக இருக்கின்றது. படிக்கும் போது உற்சாகமும், மகிழ்ச்சியும் வருகின்றது. படிக்கத்தான். நிஜத்தில் நடந்தால் ரத்தக்கொதிப்பு ஏறி மருத்துவமனைக்குதான் செல்லவேண்டும்.
பீமனின் வருகை, ஒரு திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சி போல. தலைவர் வருகை. கதவு திறக்கின்றது என்ற போதே வருவது பீமன் என்று தோன்றிவிட்டது.
ஒவ்வொரு வெண்முரசு நாவலிலும், ஜெயமோகனின் மொழி வன்மை, காட்சி சித்தரிப்புகள், உவமைகள் என்று பாராட்டி பாராட்டி போதும் என்றாகிவிட்டது. பழைய பதிவுகளில் தேடி படித்து கொள்ளுங்கள். ஒரு புத்தகத்தை படித்துவிட்டு ஒரு குறிப்பு எழுதும் முன்பு இரண்டு புத்தகம் எழுதிவிடும் அந்த உழைப்புக்கு வணக்கங்கள்.
இந்த முறை செம்பதிப்பில் வண்ணப்படங்களும் இணைக்கப்பட்டுள்ள்ன
மகிழ்ச்சி
இந்நாவலைப்பற்றி ஒரு சிறப்பான விமர்சனம் என் எண்ணத்தை ஒட்டிய விமர்சனம். நான் எழுத நினைத்து பதிவு பெரிதாகின்றது என்ற சோம்பேறித்தனத்தால் விட்டதையும் எழுதிவிட்டார். ஆ.ர்வி மொழியில் சகஹிருதயர்
வாங்க இங்கே செல்லவும்
பெரும்பான்மையாகப் பார்க்கப்பட்ட ஒரு கருத்தை எதிர்க்கும் மனோபாவம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும்! உங்கள் பதிவிலேயே ஒரு உதாரணம் கர்ணன் திரைப்படத்துக்கான அடைப்புக்குறிக்குள்ளான உங்கள் வரிகள்!! அந்த வகையிலேயே படித்துப் படித்துப் பழகிப்போன பாத்திர வகையிலிருந்து மாற்றுப்படுத்தி, துரியோதனை பெருந்தன்மையானவனாகவும், கர்ணனை தெய்வாம்சம் பொருந்தியவனாகவும் காட்ட முயலும் முயற்சி என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குமுன்ஷி எழுதிய பாரதத்தில் என்று நினைக்கிறேன். துரியோதனன் பானுமதியை கண்ணனை மயக்க அனுப்பி வைப்பதாகக் கூடப் படித்த நினைவு!
இவை எல்லாவற்றையும் வாங்கலாம்தான். ஒரு செட்டாக வாங்கினால் நிறைய காசு ஆகும். ஒவ்வொன்றாகக் கூட வாங்கியிருக்கலாம். திட்டிக் கொண்டே படிக்கலாம்! ம்ம்ம்.. விமர்சனங்களை படித்து விட்டு அமைதியாகி விட வேண்டியதுதான்! இருப்பதை இல்லை! சோம்பேறித்தனம் பெருகி விட்டது!
செம்பதிப்புப் புத்தகம்.. இது மட்டும் 1100 ரூபாயா? அம்மாடியோ!
நான் தந்திருக்கும் இணைப்பை படித்து பாருங்கள். சுரேஷ் மிகத்தெளிவாக முரண்பாடுகளை விளக்குகின்றார். துரியோதனன், கர்ணன் இருவரிடமும் இருந்த பொறாமை உணர்ச்சியே பாரதத்தின் அடிப்படை. ராமாயணம் பெண்ணாசை பற்றியும் பாரதம் மண்ணாசை பற்றியும் என்பதே பொதுவான கருத்து. இதற்கு முன்பிருந்த பாகங்களில் இல்லாத வகையில் துரியோதனன் மென்மையானவனாக மாறுவது தொடர்ந்து படிக்கையில் நெருடுகின்றது. பாண்டவர்களை பற்றி கூட கேலி கிண்டல் வருகின்றது, அவர்களது குறைகளும் வருகின்றன. ஆனால் கர்ணன் கிட்டத்திட்ட கண்ணனுக்கு அடுத்தபடியாக காட்டப்படுகின்றான். மாசுமறுவற்ற தங்கம். ஒரு தெய்வத்தை மையப்படுத்தி எழுதப்படும் புராணங்கள், அத்தெய்வத்தை உயர்த்தி, மற்ற தெய்வங்களை கொஞ்சம் தாழ்த்தி காட்டும். வெண்முரசு புராணம் இல்லையே. (புரணமாக மாற சில நூற்றாண்டு ஆகலாம்)
நீக்குவெண்முரசு முழுவதும் முடிந்த பின் மொத்தமாக வாங்க எண்ணுபவர்களுக்கு வங்கியில் சிறப்பு கடனுதவி அளிக்க திட்டமிட்டுள்ளார்களதாக ஒரு வதந்தி. அப்படி வாங்கினால்தான் மொத்தமாக செட்டாக வாங்க முடியும் :).