வலம் இதழ் கைக்கு கிடைத்தது. முதலில் அனுப்பிய இதழ் பெயருக்கேற்றபடி வேறெங்கோ வலம் வந்து கொண்டிருக்கின்றது. என் கைக்கு வரவில்லை. வலம் இதழுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின் அவர்கள் உடனடியாக மற்றொரு இதழை அனுப்பினர். வெள்ளிக்கிழமை அனுப்பியது இன்று கையில் கிடைத்தது. முதல் இதழ் தவறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ஹரன் பிரசன்னா ஆகிய மூவரும் ஆசிரியர்கள். கவிதையெல்லாம் இல்லையாம். அதை படித்த பின்னரே தைரியமாக பணம் கட்டினேன்.
ஒட்டப்பட்ட தபால் தலைகூட பத்திரிக்கையின் தலைப்பிற்கேற்றபடி இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும்,கணித மேதை ராமானுஞரும். அதுவாக அமைந்ததோ, திட்டமிட்டதோ. பாலிதீன் கவரில் முகவரியுடன் சேர்த்து அதையும் டேப் போட்டு ஒட்டியதில், பாவம் கஷ்டப்பட்டு அதில் பேனாவை வைத்து டிக் அடித்திருந்தனர். (முத்திரையெல்லாம் இப்போது கிடையாதா? இருந்தாலும் இதில் அடித்திருக்க முடியாது. எல்லாப்பக்கமும் பாலிதீன் கவர்.)
வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழ். என்ன? எத்தனை வெங்கட்சாமிநாதனா? ஒரே ஒரு வெங்கட்சாமிநாதன்தான். வெ.சா வின் பழைய கட்டுரைகளை எல்லாம் படித்ததில்லை. தமிழ் ஹிந்துவில் சில கட்டுரைகள் படித்ததுண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவது வழக்கம். மொழி நடை கொஞ்சம் கடினமானதாக எனக்கு தோன்றியது. இவ்விதழில் இருந்த கட்டுரைகள் அவ்வெண்ணத்தை கொஞ்சம் மாற்றியுள்ளது.
இன்றைய சூழலில் இவ்விதழுக்கு அவசியம் என்ன? படிக்கும் வழக்கம் குறைந்துள்ளது என்று பலர் சொல்லும் நிலையில் புது இதழுக்கான இடம் என்ன? இரண்டாம் கேள்விக்கு விடை, இன்று உண்மையில் படிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. காரணம் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை. நல்லதோ கெட்டதோ அனைவரும் ஒரு நாளில் ஏராளமாக படிக்கின்றனர். அச்சில் படிப்பதை வழக்கத்திற்கு கொண்டுவருவது சாத்தியமே. முதல் கேள்விக்கு;
இன்று வரும் மாத, வாரப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் பொழுது போக்கை முழு அம்சமாக கொண்டவை. அரசியல் பத்திரிக்கைகள் என்பவை கிட்டத்திட்ட ஜோசியப் பத்திரிக்கைகளே. கிளி சீட்டு எடுப்பதற்கு பதில் கழுகு, ஆந்தை போன்ற பறவைகள் ஜோசியம் கூறுகின்றன. ஆன்மீக பத்திரிக்கைகள் எண்ணிக்கை இவற்றிற்கு சரி சமானமாக உள்ளது.
பாலகுமாரன் ”கோவிலில் வரும் கூட்டத்திற்கு ஈ.வெ.ரா காரணம்” என்று சொல்லி கொஞ்சம் அர்ச்சனை வாங்கிக் கொண்டார். அப்படி இருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே அது நடந்திருக்க வேண்டும். இப்போதைய கூட்டத்திற்கு காரணம் இந்த ஆன்மீக பத்திரிக்கைகளே. இந்த நாளில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில்களில் ஆரம்பித்து, நட்சத்திரம், கிழமை, வேளை, திதி என்று போகின்றது. பரிகார லிஸ்ட் மிகப்பெரிது. கடந்த மாதம் புரட்டாசி சனிக்கிழமை, நல்ல கூட்ட நேரத்தில் ஒருவர் வந்தார். (எங்கள் கோவில் இந்த ஐந்து கிழமைகளில் மட்டும் திருப்பதி மாதிரி. ஐந்து செகண்ட் தரிசனமே. அடுத்த நாள் பெருமாள் மட்டும் படுத்து இருப்பார், யாரும் இருக்க மாட்டார்கள்.) அந்த கூட்டத்தையும் சமாளித்து ஒரு ஓரமாக நின்று “ஓம் நரசிம்மாய நமஹ” என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். அதே போல் ஆஞ்சநேயருக்கு விளக்கு போட ஓரு கூட்டம், நவக்கிரக்கிதிற்கு விளக்கு போட ஒரு கூட்டம். இவையனைத்தும் கடந்த ஐந்தாறு வருட முன்னேற்றம். முன்பு வருவார்கள், தேங்காய பழம் கொண்டு வந்து அர்ச்சனை, பொங்கல் வைப்பார்கள், பாசுரம் பாடுவார்கள். இது எல்லாம் இந்த புத்தகங்கள் செய்கின்ற வேலை. சரி கதைக்கு மீண்டும் வருவொம்.
இது போன்ற இதழ்களில் தப்பித்தவறி வராத விஷயம், நமது பாரம்பர்ய கலாச்சாரத்தை பற்றிய கட்டுரைகள், இன்றைய அரசியல் நிலைமையை நடுநிலையோடு பேசுவது, போலி மதச்சார்பின்மை பேசாமல் நேர்மையாக மக்களுக்கு தகவல்களை தருவது. சில இதழ்கள் வெகு தீவிர அரசியல் பேசும். ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் இடதுசாரி அரசியல், திராவிட அரசியல் என்ற சட்டத்தில் மட்டுமே அடங்கும். நாட்டில் அனைத்து பிரச்சினைக்கு காரணம் இந்து மதமும், பார்ப்பானும். முடிந்தது கட்டுரை. மறு தரப்பு என்பதே இல்லை. தினமலர், தினமணி போன்றவை கொஞ்சம் இடம் தந்தாலும், அவையும் மிக வெளிப்படையாக செய்ய தயங்குகின்றன. “ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியூம் இருக்கனும்” என்ற கதைதான்.
இந்த வெற்றிடத்தை இணையத்தில் நிரப்ப சில பத்திரிக்கைகள் உண்டு. தமிழ்ஹிண்டு (தி ஹிண்டு இல்லை. முன்பு இந்த தொல்லை இல்லை. இப்போது இதை வேறு சொல்ல வேண்டியிருக்கின்றது. தடத்திற்கும் இதே கதி). சொல்வனம். அச்சுப்பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் ஸ்வராஜ்ஜியா (ஆங்கிலம் அந்தளவிற்கு படிப்பதில்லை என்பதால் வாங்குவதில்லை, ஆனால் அங்கங்கு பகிர்ந்து கொள்வதை படிப்பதுண்டு - தலைப்பை மட்டும்). தமிழில் அச்சில் ஒரு இதழ் தேவை. வலம் அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளது.
முதல் இதழை படிக்கும் போது முதலில் தோன்றியது தமிழ் ஹிந்துவின் அச்சு பதிப்பை படிக்கின்றோம் என்பதுதான். பெரும்பாலன கட்டுரையாசிரியர்கள் தமிழ்ஹிந்துவில் எழுதி வருபவர்கள். பத்திரிக்கை கருப்பு வெள்ளை என்றாலும், வெகு நேர்த்தியாக இருக்கின்றது. காகிதத்தின் தரத்திலிருந்து, வடிவமைப்பு வரை அருமை.
கட்டுரைகளும் கனமான கட்டுரைகள் (ஒவ்வொன்றும் நான்கைந்து பக்கங்கள் :) ). மதர் தெரேசா பற்றிய கட்டுரை - அனைவரும் ஒரு தேவதை ரேஞ்சில் பேசும் போது, அவருக்கு என்று ஒரு மறு பக்கமும்ம் உள்ளது என்று கூறும் கட்டுரை. இதை கண்டிப்பாக இன்றிருக்கும் எந்த இதழிலும் எழுத முடியாது. சகிப்புத்தன்மையற்றவன என்ற தண்ணீர் தெளித்து திவசம் செய்துவிடுவார்கள் இதழுக்கு.
சுகாவின் கட்டுரை நன்றாக இருந்தாலும், இவரும் வர வர விகடனின் ராஜுமுருகன் போல ஆகிவிடுவாரோ என்ற பயம் வருகின்றது. ஒரே மாதிரியான டெம்ப்ளேட். ஊர்ப் பக்கம் இருக்கும் அண்ணன், அண்ணி, அக்கா கதைகளாக எழுதினால் விரைவில் போரடித்துவிடும். அவர் எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கின்றது, எழுதும் கன்டெண்டை மாற்றினால வலம் சே நலம்
நமது பாரம்பர்ய சிற்பக்கலையை பற்றிய ஒரு நல்ல கட்டுரை. கோவில் துவாரபாலகர்கள் கையில் பிராசத ஸ்டால் அறிவிப்பு பலகையை போடும் நமது இந்து அறநிலையத்ற்துறை மக்களுக்கானது. இன்னும் இந்து அறநிலையத்துறையின் அட்டகாசங்களை பக்கம் பக்கமாக எழுதி ஒரு சிறப்பிதழே கொண்டு வரலாம். அர்ச்சகர்கள் படும் பாட்டை நேரடியாக காண்பவன் நான்.
அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை வழக்கம்போல பல தளங்களை தொட்டு, பல விஷயங்களை இணைக்கின்றது.
இப்போது தனிச்சுற்றுக்கு என்று முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் வரும் இதழ், பெரும்பாலனவர்களுக்கு போய்ச் சேர வேண்டும். வருடம் 500 என்பது இன்றைய நிலையில் பெரிய தொகையே இல்லை. ஒரு சினிமா போனால் முடிந்தது. இடதுசாரி, போலி முற்போக்கு, போலி மதச்சார்பின்மை பேசி கண்டதையும் எழுதி குவிக்கும் இதழ்களுக்கு மத்தியில் வலம் போன்ற இதழ் தேவை. ஒரே பார்வையில், ஹிந்த்துத்துவ இதழ் என்று ஒதுக்க நினைத்தால் நஷ்டம் அவர்களுக்கே. வாசிப்பில் நாட்டமுடைய, புதிய விஷயங்கள், மாற்று பார்வைகளை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும்
முதல் இதழ் திருப்திகரமாக இருக்கின்றது. இனி வரும் இதழ்கள் இன்னும் அருமையாக வர ரெங்கநாதரை வேண்டிக்கொள்கின்றேன். பாலிதீன் கவரை விட்டு சாதரண பேப்பர் கவரிலேயே அனுப்பலாம். (போ பச்சை).
முதல் இதழ் என்பதால் ஒரு அறிமுகம், விமர்சனம், சில குறிப்புகள். இனி வரும் இதழ்களுக்கு எல்லாம் விமர்சனம் எழுத மாட்டேன் பயப்படவேண்டாம்.
மேலும் வலம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக