24 பிப்ரவரி 2017

உடையும் இந்தியா? - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

எச்சரிக்கை - 1
பெரிய பதிவு. கொஞ்சம் சுய புராணமும், அந்நிய மதவிமர்சனமும் கலந்திருக்கின்றது. 
எச்சரிக்கை - 2
இது புத்தகத்தைப் பற்றிய முதல் பதிவு, இரண்டாம் பாகம் விரைவில்.

ஆங்கிலத்தில் Breaking India என்ற பெயரில் வெளிவந்த நூல், மூல நூலின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளிவந்த போதே வாங்க நினைத்த புத்தகம், எப்படியோ தவறிவிட்டது. கிண்டல் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.

நம்மில் பெரும்பாலனவர்கள் தினசரி செய்திகளில் பார்க்கும் பல நிகழ்வுகளை போகின்ற போக்கில் படித்துவிட்டு போய்விடுவோம். நம் வாழ்க்கையில் அது என்ன பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடப் போகின்றது என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஆனால் பல சமயம், அதன் பின்னால் மிகப் பெரிய சர்வ தேச சதி இருந்தால் கூட ஆச்சர்யப்பட முடியாது. ஜல்லிக்கட்டிற்கு தடை என்பது நம் தினசரி வாழ்வில் எந்த தாக்கத்தை உண்டாக்க போகின்றது. ஒன்றுமில்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கும் வலை மிகப்பெரியது என்பதை இன்று பலர் அறிந்திருக்கின்றார்கள். அதுவும் அதன் ஒரு பகுதியைத்தான். நாட்டு மாட்டை ஒழிக்க முயற்சி என்பதாகத்தான் அதைப் பார்க்கின்றார்கள், ஆனால் அதனோடு இந்து மதம் சார்ந்த , நமது மண்ணின் பாரம்பர்ய, நிகழ்வை அழிக்க செய்யும் முயற்சி என்பது மறைக்கப்படுகின்றது. ஒருவேளை அதை மறைக்கவே நாட்டுமாட்டினம் என்பதை கூட பெரிதாக்கியிருக்கலாம். ஃபேஸ்புக்கில் ஒருவர் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார் "இன்று ஜல்லிக்கட்டு கொண்டாடக்கூடாது என்று சொல்பவர்கள் நாளை பொங்கல் வைக்கக் கூடாது என்பார்கள்" என்று, மிகத்தாமதம். அது ஏற்கனவே நடந்துவிட்டது. நமது பாரம்பர்யமுறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதை பிற மதத்தவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்திற்காக தடை செய்ய காவல்துறையே வந்தது. ஆனால் இது எல்லாம் நமக்கு தெரிவதில்லை. 


ஒரு சராசரி ஹிந்து என்பவன் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கு நம் மதத்தின் மீது பற்றில்லை என்று அர்த்தமில்லை, மதத்தை மட்டும் பிடித்து தொங்கி கொண்டிருக்க நம் மதம் நமக்கு கற்றுத்தரவில்லை. நான் உன்னை படைத்தேன், அதற்காக நீ என்னிடம் நன்றி உடையவனாக இரு, என்னை மட்டும் நம்பு என்றெல்லாம் நம் தலையில் ஏறி அமரும் தெய்வங்கள் நமக்கில்லை. நம் தெய்வங்கள் நம்முடன் சந்தோஷத்தில் ஆடிப்பாடி, கோபப்பட்டால் திட்டும் வாங்கிக் கொண்டிருப்பவரகள். அந்த பெருந்தன்மையான மனது, இதையெல்லாம் நம்மை கண்டு கொள்ளாமல் விடச் செய்கின்றது. ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கின்றது. நம்மை சுற்றிப் பின்னப்படும் சதிவலைகளை தெரிந்து கொள்ளாமலிருப்பது முட்டாள்த்தனம். நூறாண்டுகளுக்கு மேலாக நம்மை குறிவைத்து எய்யப்படும் அம்புகள் ஏற்கனவே நாசத்தை விளைவித்துவிட்டன. இன்றும் அவை வருகின்றன, வேறு வழியில். அந்த சதிகளை பற்றி விளக்கமாக, பல நூலகளை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட நூல். இந்தியாவை உடைக்க பாடுபடும் பல சதிகளை பற்றி இதில் காணலாம். அனைவரும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பேசி வருகின்றன. அது உலகளவில் பல நாசங்களை விளைவித்து விட்டது. அது இன்று தூய இஸ்லாம் என்ற பெயரில், தமிழக்த்தில் நுழைந்துள்ளது. ஆனால் இஸ்லாமியர்கள் இன்றும் தமிழக கலாச்சாரத்தில் கலந்துதான் இருக்கின்றார்கள். ஆனால் கண்ணிற்கு தெரியாத கிருமி போல உள் நுழைந்து வேரை அரிக்கும், கிறிஸ்துவ புரட்டுகளைப் பற்றி வெளியில் தெரிவதில்லை. அதை தெளிவாக காட்டுகின்றது இந்நூல்.

விகடன், ஒரு பாரம்பர்ய பத்திரிக்கை. அதில் வரும் தகவலகள் அனைத்தும் பெரும்பாலும் உண்மை என்று அனைவரும் நம்புவார்கள். விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று நாயகர்கள் என்ற ஒரு தொடர் வந்தது. அஜயன் பாலா என்பவர் எழுதினார் என்று நினைவு. அதன் முதல் பகுதி "ஆரியர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து இங்கிருந்த பூர்வ குடிகளான திராவிடர்களை அடிமை கொண்டனர்" என்பதாக ஆரம்பித்தது. ஆரியப்படையெடுப்பு என்பதே முதலில் ஒரு யூகமாகாத்தான் பலரும் வைக்கின்றார்கள், அதையும் மறுத்து அம்பேத்கர், விவேகானந்தர் போன்றவர்கள் எழுதியும் அதை முழு உண்மை போல எழுதக்காரணம் என்ன? வரலாற்று நாயகர்களுக்காக அம்பேத்கார் பற்றி படித்தவருக்கு, அதே அம்பேத்கர் ஆரியப் படையெடுப்பை பற்றி கூறியது தெரியாதா?  இருந்து அதை அடித்துவிடக் காரணம் என்ன? அதன் பின் என்ன இருக்கலாம் என்பதை இப்புத்தகம் விளக்குகின்றது. 

நாம் படித்த வரலாறு, நம் குழந்தைகள் காலத்திலியே மாற ஆரம்பித்துவிட்டது. சிந்து - சமவெளி நாகரீகம் என்பது இன்று சிந்து - சரஸ்வதி சமவெளி நாகரீகம் என்று மாறுகின்றது. ஆரியப்படையெடுப்பு என்பது ஆரிய இடப்பெயர்வாகி, பின்னர் அது சந்தேகத்துக்குரியதாகி, இன்று அப்படி ஒன்று இல்லை என்று நிற்கின்றது. இந்த ஒரு கோட்பாடு தமிழ்கத்தில் பல குடும்பங்களை வாழ வைத்துள்ளது. அந்த நன்றிக்கு இன்றும் அதை பரப்பிக் கொண்டு விசுவாசிகளாக இருக்கின்றார்கள்.

ஆரியர்கள் என்ற சொல் மேன்மையான மக்கள் என்ற அளவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் பாடல்களில் அதைப் பயன்படுத்தியிருக்கின்றார். திராவிடம் என்பது இடத்தின் பெயர். விந்தியமலைக்கு தெற்கிலிருந்த பகுதிகளுக்கு முன்பு வழங்கி வந்த பெயர். இது இரண்டும் எவ்வாறு, ஒரு மிகப்பெரிய இனப்பாகுபாட்டை உண்டாக்கி, பல உயிர்களை காவு வாங்கியிருக்கின்றது எனபதை படிக்க மிரட்சியாக இருக்கின்றது. அனைத்திற்கும் பின்னால் இருப்பது கிறிஸ்துவ மனநிலை. கிறிஸ்துவ சட்டகத்தில் அனைத்தையும் அடக்க நினைத்து, அடங்காதவற்றை திரித்து கட்டிய கோட்டை, அதனடியில் பலரை புதைத்து கட்டப்பட்டிருக்கின்றது.

உலக நாடுகளின் வரலாற்றை ஆராயப் போனால், சில நூற்றாண்டுகள் வரை பின் செல்லலாம். ஆனால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பர்யத்தை இன்றும் கட்டி காக்கும் ஒரே இடம் நம் பாரத பூமி. கிரேக்கம், சீனம், பாரதம், போன்ற வெகுசில நாடுக மட்டுமே மிகப் பழமையான வரலாற்றை கொண்டவை. மற்றவையெல்லாம் மக்களிருந்தாலும் அவர்கள் இந்தளவிற்கு பண்பட்டவர்களா என்பது சந்தேகமே. சீனப்பாரம்பர்யம் புத்தமதத்தால் கவரப்பட்டு, கம்யூனசத்தால் விழுங்கப்பட்டு இன்று என்ன நடக்கின்றது என்பதே தெரியாத நிலை. மற்ற அனைத்து நாடுகளும், கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமால் விழுங்கப்பட்டு விட்டது. ஆனால் நம் பாரத பூமி, கிட்டத்திட்ட 700 ஆண்டுகள் இஸ்லாமிய படையெடுப்புகளாலும், இஸ்லாமிய மன்னர்களாலும் ஆளப்பட்டாலும் முழுமையாக மாற்ற முடியவில்லை. இதில் தென்னிந்தியாவின் பங்கு மிகப் பெரியது. ஆனால் இந்த மதமாற்றம் மெலிதாக ஊடுருவி பலமாக அதன் வேலையை காட்டிக் கொண்டிருக்கின்றது. மதமாற்ற வெறி என்பது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. புதிதாக யாரைப்பார்த்தாலும் அவர்கள் மதத்தை பற்றி பேச எப்படி ஒருவனால் முடிகின்றது என்பது எனக்கு புரியவேயில்லை. அப்படி என்ன ஒரு வெறி. பஸ்ஸில், ரயிலில், அலுவலகங்களில் பல இடங்களில். என் நெற்றியில் இருக்கும் கோபி சந்தனம் அவர்களை அருகில் விடவில்லையோ என்னவோ, என்னிடம் யாரும் வந்ததில்லை. எத்தனை செய்திகள், ஐயப்ப பக்தர்களிடம் சென்று பிரச்சார நோட்டிஸை தருவது, கோவிலருகே தருவது. மனிதன் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காதவர்களால் தான் இதையெல்லாம் செய்ய முடியும். 

இதை ஏதோ அவர்கள் சாதரணமாக செய்கின்றார்கள் என்றும் விடமுடியாது. எங்கிருந்து அவர்களுக்கு பணம் வருகின்றது? ஒரு கோவிலை நீங்கள் புனருந்த்ராணம் செய்ய குட்டிக்கரணம் போட வேண்டும். பணத்திற்கு அலையவேண்டும், அப்படியே செய்தாலும் அறநிலையத்துறையிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்க வேண்டும். உங்கள் பணத்தை போட்டு உங்களூர் கோவிலை சரி செய்ய அனுமதி தேவை, இறுதியில் போஸ்டரில் அவர்களின் பெயரையும் போட்டு அவர்கள் தலையில் துண்டைக்கட்டி மாலை போட வேண்டும். ஆனால் சர்வசாதரணமாக ஒரு சர்ச்சை கட்ட முடியும், பணம் வசூல் செய்ய முடியும். புத்தகங்கள் அடித்து இலவசமாக தரமுடியும்.கூட்டங்கள் நடத்த முடியும். சிறிய உதாரணம், எங்கள் கல்லூரி அருகில் ஒரு சிறிய இடம். நான் படிக்கும் போது காலி இடம். முதலில் ஒரு சிறிய குடிசை போடப்பட்டது. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் அதன் வளர்ச்சியை பார்க்கின்றேன். பெரிய குடிசை, சிறிய கட்டிடம் என்று வளர்ந்து இன்று ஒரு பெரிய சர்ச். கட்டிக் கொள்ளட்டும், ஆனால் அது எப்படி இது எல்லா இடங்களிலும் வெகு எளிதாக நடக்கின்றது? 

மதுரை - தேனி வழியில், உசிலம்பட்டி கணவாய் இருக்கின்றது. அதில் ஒரு சாஸ்தா கோவில், ஐயனார் என்று கூறுவார்கள். இப்போது அதற்கு பக்கத்தில் ஒரு மாதா. முன்பு கிடையாது. திடீர் உதயம். திருமலையிலேயே சிலுவை வரைந்திருக்கின்றார்கள். எங்கள் ஊர் கோவில் அருகிலும் சர்ச் கட்ட இடம் வாங்க இருந்ததாகவும், பின் இந்து இயக்கங்கள் தலையீட்டினால் அது தடைபட்டதாகவும் கேள்விப்பட்டேன். மலையடிவாரத்தில் அந்த கோவிலைத் தவிற ஏதும் கிடையாது. மலைக்கு மேலே கேரளா, ராமக்கல் மெட்டு. போக வர சாலையும் கிடையாது. நடை பாதை மட்டுமே. கோவிலுக்கு வரும் கூட்டம் கண்ணை உறுத்த, சர்ச் கட்ட யோசனை. சர்ச் கட்டுவதில் என்ன தவறு என்று கேட்கலாம், தவறில்லை. வழிபட கட்டி கொள்வதில் என்ன தவறு. கிறிஸ்தவ குடும்பங்களிருந்தால் அவர்கள் வழிபட ஒரு இடம் தேவை, ஆனால் யாருமற்ற மலைப்பாதையில், அதுவும் ஒரு பிரபல கோவிலின் அருகில் கட்ட என்ன அவசியம்? சபரிமலை அருகிலிலும் இது போன்ற வேலைகள் நடந்திருக்கின்றன.

ஈஷாவை மையமாக் கொண்டு சுற்றிவரும் சர்ச்சைகள், அதற்கான எதிர்ப்புகளை காணும் போது, அதன் மீது கொஞ்சம் ஐயம் உள்ள எனக்கே அவர்கள் எதிர்ப்பாளர்கள் மீது சந்தேகம் வருகின்றது. காரணம், எதிர்ப்பவர்கள் அனைவரும் என்.ஜி,ஓக்கள், தமிழ்தேசியர்கள், முற்போக்கு மொன்னைகள். ஈஷாவை எதிர்க்கும் இவர்கள் கண்ணில் அருகில் வெகு வேகமாக காட்டையும், நாட்டையும் விழுங்கிவரும் காருண்யா தெரிவதில்லை. கொஞ்சம் போனால் போகின்றது என்று, வலிக்காத மாதிரி காருண்யாவை திட்டி, செல்லமாக கன்னத்தில் தட்டிவிட்டு, ஈஷாவிற்காக கைகளை தேய்த்து கொண்டு காத்திருக்கின்றார்கள். எதிர்ப்பாளர்களின் உள்நோக்கம் பற்றி கொஞ்சம் கூட எனக்கு சந்தேகம் கிடையாது. இதுவரை இந்து மதத்தை எதிர்த்து ஒரு திட்டமிட்ட, நிறுவனமயமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் கும்பலுக்கு, அவரகள் பாணியிலேயே அவர்கள் அளவிற்கு இல்லாவிடிலும், ஓரளவு பணபலத்துடன், இயங்கும் இந்து நிறுவனம் (ஈஷா அப்படி சொல்லிக்கொள்வதில்லை என்றாலும்) வளர்வதை எப்படி தாங்கமுடியும். வியாபரத்திற்கு பங்கம் வராதா? அதுவும் இப்போது அரசியல் பலமும் கிடைக்கின்றது எனும் போது காய்ச்சல் அதிகமாகத்தான் ஆகும்.

இது போன்ற கிறிஸ்து மதவெறியை பற்றியும் அதன் பிண்ணனியை பற்றியும் ஆராய்கின்றது இந்த நூல்.

இதுவரை வந்தது வெறும் முன்னுரை மட்டுமே,இனி புத்தகத்தை பற்றிய குறிப்புகள்.

ஆரிய புரட்டுகளின் மூலத்தை ஆராய்வதில் ஆரம்பிக்கின்றது. நமக்கு ஆரியர்கள் என்ற பதம் பள்ளியில் அறிமுகமாகியிருக்கும். அதுவும் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தார்கள் என்ற அளவில். எங்கிருந்து வந்தார்கள் மந்திய ஆசியாவிலிருந்து என்று. ஆனால் முதலி இந்த கோட்பாடு ஆரம்பிக்கப்பட்டது, இந்தியாவிலிருந்து பரவியது என்பதாகத்தான். ஐரோப்பாவிற்கு தேவைப்பட்ட உயர்ந்த கலாச்சார பாரம்பரியத்தை பெற அவர்கள் நம்பியது இந்தியாவை. மொழியியல் வழியாக ஆரம்பித்தது இந்த ஆய்வு(?) சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பித்த இந்த ஆய்வு, ஆரிய இனத்தை அடைந்தது. பிறப்பால் தங்களை உயர்வாக காட்டிக்கொள்ளவும் இது பயன் பட்டது. வெள்ளையின ஐரோப்பியர்கள் ஆரிய வழி வந்தனர் என்பதை நம்ப ஆரம்பித்தனர். அதே சமயம் இந்தியாவை ஆண்ட ப்ரிட்டீஷாருக்கு அதில் பிரச்சினை. இந்திய மக்களை தங்களை விட கீழானவர்களாக காட்ட, அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆரியர்களின் தோற்றம் ஐரோப்பா, அவர்கள் இந்தியாவிற்கு பெயர்ந்த ஆரியர்கள், இங்கிருந்த மக்களுடன் கலந்ததால அவர்கள் கீழானவர்களானர்கள் என்று காட்டினார்கள். இதற்கு அவர்கள் பல விதமான புரட்டுகளை செய்தனர். மூக்கிஅளவு, நிறம் என்று. அதற்கு இங்கிருந்த ஆங்கிலேயர்களின் நிர்வாக முறை பயன்பட்டது. 

இயல்பாகவே வெள்ளை ஆய்வாளர்கள் கிறிஸ்துவ கண்ணாடியை அணிந்தே ஆய்வுகளை செய்தனர் என்று ஆசிரியர் கூறுகின்றார். பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கதையை சரித்திரமாக்கி, அதன் வழி, ஹாமின் சந்ததியினர்களே இந்தியாவிற்கு வந்தனர் என்று திரிக்க ஆரம்பித்தனர். ஆனால் இவர்களின் ஆய்வுகள் இளிப்பது காலத்தில். கிறிஸ்துவ மதப்படி உலகத்தின் வயதை கணக்கிட்டால் 20,000 ஆண்டுகள் வரை செல்லலாம், ஆனால் இந்து மதக்கணக்குகள் கோடி வருடங்களுக்கு முன் செல்கின்றன. ஆசிரியர்களின் வரியில //இந்தியக் கால அளவிலோ காலம் பல நூறு கோடி ஆண்டுகளும் யுகச் சுழற்சிகளுமாக அமைந்திருந்தது. (ஒரு தற்செயல் ஒற்றுமையாக இந்தக் கால அளவு இன்று அறிவியல் சொல்லும் பிரபஞ்ச உற்பத்திக் கால அளவுடன் ஒத்தும் போகிறது என்பது வேறு விஷயம்//. அனைத்து பண்பாட்டு ஆராய்ச்சிகளும் விவிலிய அடிப்படையிலேயே செய்யப்பட்டன என்பதை பல தரவுகளின் மூலம் விளக்குகின்றார். 

இந்தியாவில் சாதிமுறைகளை கட்டமைத்ததில் பெரும் பங்கு ஆங்கிலேயர்களுக்குத்தான் உண்டு என்பதை சொன்னால், இல்லை,பிராமண சதி என்று கூக்குரல் எழும். ஆனால் சாதி என்னும் சொல்லே வேதங்களில் கிடையாது என்பதை பலர் கூறியிருக்கின்றனர். வர்ணம் என்பதுண்டு, அது செய்யும் தொழிலால அமைவது. தந்தையின் தொழிலை மகன் செய்வது என்று தொடர்ந்திருக்கலாம். பிறப்பின் அடிப்படையில்தான் வர்ணம் என்பது இல்லை. வேதத்தை மொழி பெயர்த்த மாக்ஸ்முல்லர் வழியில் வந்த ரிஸ்லே என்னும் ஆய்வாளர் தான் கண்டறிந்த ஆரிய கோட்பாட்டை தனது பதவி (மக்கள் தொகை கணக்கெடுப்பு) வழி நிலைநிறுத்திய முயற்சியில் வலுவாக அமைக்கப்பட்டது சாதி முறை. //ரிஸ்லே எழுதும்போது இந்த ஆதாரங்களாலேயே ‘சாதி முறையின் அடிப்படை, பலர் சொல்வதுபோல தொழில்குழு அடிப்படையில் அல்லாமல், இனக்குழு அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார்// ஆனால் இந்த ஆரிய - திராவிட புரட்டுகளை, வேதங்களை நன்கு படித்து ஆராய்ந்த அம்பேத்கரே மறுத்துள்ளார் என்பதுதான் உண்மை. இதைப்பற்றி அம்பேத்கரின் கருத்து //பிராமணர்கள் திராவிடர்கள் என்றால், தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்படுபவர்களும் திராவிடர்களே. பிராமணர்கள் நாகர்கள் என்றால், தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்படுபவர்களும் நாகர்களே. தரவுகள் இப்படி இருக்கையில் (ஆரிய இனவாதக்) கோட்பாடு என்பது, பொய் என்ற அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.// 

இது இந்திய அளவிலான சதி என்றால், தமிழக அளவில் பிராமண - திராவிட சதியாக் மாறியது. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஜி.யு,போப் மற்றும் கால்டுவெல். இவர்களை பற்றி நமக்கு என்ன தெரியும். ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், கால்டுவெல் மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மொழிபெயர்த்தார். ஆனால் இதன் பின்னாலிருந்தது அவர்களின் மிஷினரி நோக்கம் என்பது தெளிவாக நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் பார்வையில் நமது மொத்த நாகரீகமும் கிறிஸ்துவத்துடன் இணைக்கப்படுகின்றது. தமிழர்களை பாரத கலாச்சாரத்திலிருந்து தனியாக பிரிக்கும் கைங்கர்யத்தை செய்தது அன்னாரின் தொண்டு. நமது பாரம்பர்ய சைவ சமய நூல்களை கிறிஸ்துவ கண்ணாடி கொண்டு பார்த்து, அனைத்தையும் அதன் வழி விளக்கியிருக்கின்றார். அனைத்து மதங்களின் நோக்கமும் மானுடத்தை நல்ல வழியில் திருப்புவது. ஆனால் கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கு வேறு நோக்கங்களும் சேர்கின்றன. இவை கிறிஸ்துவின் மதமல்ல, சர்ச்சுகளின் மதம். ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட மதம். அதன் நோக்கங்கள் வேறு வைகையானவை. 

மக்களை ஒரு அமைப்பிற்குள் கொண்டுவந்து அடிமைபடுத்துவது. இந்துமதம் என்பதையே கிறிஸ்துவத்தின் திரிந்த வடிவம் என்பதை போன்ற புரட்டு ஏதுமில்லை. இதற்கு அடித்தளமாக இவர்கள் வைப்பது தோமாவின் இந்தியா வருகை. இதை வாடிகனே ஏற்பதில்லை என்பது முக்கியமானது. அவர் பாகிஸ்தானில் ஏதோ ஓரிடத்தில் மரணமடைந்தார் என்பதே யூகிக்ககூடிய, ஒரு குத்துமதிப்பான வரலாறு. ஆனால் இங்கிருக்கும் மோசடியாள்ர்களின் பிழைப்பிற்கு அவர் சிக்கிகொண்டார். கிறிஸ்துவின் சம காலத்தவரான தோமா, கிறிஸ்துவின் மரணத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்பு தொகுக்கப்பட்ட பைபிள் புத்தகத்தை (அச்சுப் பயன்பாட்டின் காலம் வேறு) வைத்திருக்கும் முரணை எப்படி விளக்குவது. தோமாவின் கருத்துக்களே இங்கு பக்தி இலக்கியமாகவும், திருக்குறளாகவும் வந்தது என்பது எப்படிபட்ட மோசடி. இதற்கு பல நிறுவனங்களின் ஆதரவு, திராவிட இயக்கங்களின் ஆதரவு. மக்களை முட்டாள்கள் என்று கருதுபவர்களால் மட்டுமே இது போன்ற மோசடிகளை தைரியமாக் செய்ய முடியும். இந்த மோசடி வலை இன்னும் பெரிது, அதை இந்நூலில் விரிவாக பார்க்கலாம்.

//தமிழகத்தில் ஒருவித திரிந்த கிறிஸ்தவம் நிலவியதைப் போன்ற மாயத்தை உருவாக்க வரலாற்று ஆதாரங்கள் தேடப்பட்டன. இத்தகைய தேடல்களில் விளைந்த ஒன்றுதான் புனித தோமா புனைவு."
திருக்குறளை வலியுறுத்தி பிராமணர்களை பிராமணரல்லாதவர்களிடமிருந்து பிரிப்பது. இரண்டாவதாக, கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு இடைநிலையாக, திராவிடக் கொள்கையை சைவ சித்தாந்தத்துடன் இணைப்பது."
பிராமணர்கள் காலனியவாதிகள் ஆக்கப்பட்டனர். கால்டுவெல் போன்ற அசல் காலனியவாதிகளோ தமிழ் மக்களின் ரட்சகர்களாகக் காட்டப்பட்டனர்//

அல்சூரில் கிறிஸ்துவ பண்டிகைகள் பல கொண்டாடப்படும். வெளியிலிருந்து பார்க்க இந்து பண்டிகைகளுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. இதை மத நல்லிணக்கம் என்று எளிதில் கடந்துவிட முடியாது. இதற்கும் சீனாவிலிருந்து வரும் போலி பொருட்களுக்கும் எவ்வித வித்தியாசமில்லை. கொடியேற்றம், தேரோட்டம் என்று நமது இந்துக்களின் பண்டிகைகளை காப்பியடிப்பது இப்போது விஜயதசமியில் வந்து நிற்கின்றது. நமக்கு ஓவ்வொன்றின் பின்னும் ஒரு புராணம், தத்துவம் இருக்கின்றது. இது போன்ற போலிகளின் பின்னால் என்ன இருக்கின்றது? ஒன்றுமில்லை. அதற்கும் வலுவில் ஒன்று கட்டமைக்கப்படுகின்றது. அழிக்க முடியாததை மெதுவாக உள்ளிழுத்து செரித்து அதனை ஒழிப்பது ஒரு முறை. இதன் விளைவு ஏற்கவே ஆரம்பித்து விட்டது //இன்றைக்கு தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வேதம் என்பது கிறிஸ்தவ மதத்தையும், வேதக் கோவில் என்பது கிறிஸ்தவ சர்ச்சையும், வேதப் புத்தகம் என்பது பைபிளையும் குறிக்கும் சொற்களாக இந்துக்களால்கூடப் பயன்படுத்தப்படுவதை காணலாம்//.

பரதநாட்டியம் மெதுவாக உள்ளிழுக்கப்பட்டு மாற்றப்படுகின்றது. புகழ் பெற்ற கலாசேஷ்த்ரா இப்போது கிறிஸ்துவர்களிடம் சென்றுவிட்டது. ருக்மணி அருண்டேல்லால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று நடராஜரையும், கணபதியையும் தூக்கி எறிய தயாராகி விட்டது. நடராஜர் இல்லாத பரதம் எங்கிருக்கின்றது. நடராஜர தத்துவத்தையும் திரித்து அபகரிக்க முயற்சி நடைபெற்று வருவதை காணலாம். 

எனக்கு பட்ட குறை, கிறிஸ்துவ புரட்டுகளை பற்றி விரிவாக எழுதிவிட்டு அதன் உண்மைத்தன்மையை பற்றி கொஞ்சமே கொஞ்சம் எழுதப்பட்டுள்ளது. அனைத்தையும் மறுத்து ஆதரங்களுடன் எழுத வேண்டுமென்றால அதற்கு ஒரு ஐம்பதாண்டுகள் ஆகும். ஆனால் தேவையான் இடங்களில் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. இதை மறுப்பதற்காக தி.க கூட்டம் போட்டு, வழக்கம் போல சம்பந்தமில்லாமல் பிராமணர்களை திட்டிவிட்டு கலைந்தார்கள். இதை மறுத்து பேச இதை முழுமையாக படிக்க வேண்டும். அதற்கான கூறு எல்லாம் அவர்களிடம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆசிரியரின் பல பதிவுகளை, கட்டுரைகளை படிக்கும் போது நல்ல நகைச்சுவையுணர்வு கொண்டவர் என்பதும்,  நல்ல புனைவு மொழியை கொண்டவர் என்றும் தெரிகின்றது. ஆனால் இதில் கையாண்டுள்ள நடை கொஞ்சம் பள்ளி புத்தக ஸ்டைலில் இருக்கின்றது. டாகுமெண்ட்ரி ஸ்டைல். கடின நடை.

நூல் பெரிய ஆய்வுகளுடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதை மற்ற புத்தகங்கள் மாதிரி மிக மேலோட்டமாக படித்துவிட்டு செல்ல முடியாது. வாசகனின் கூரிய கவனத்தை கோரும் புத்தகம்.  இந்துத்துவர்களிடம் கவனம் பெற்ற நூல் ஆனால் விற்பனை அதிகமிருந்ததா என்பது சந்தேகம்தான்.

இதுவரை 40% மட்டுமே படித்துள்ளேன். மிச்ச பகுதிகளை பற்றிய குறிப்புள் அடுத்த பதிவில்...

2 கருத்துகள்:

  1. நானும் இந்தப் புத்தகத்தை வாங்க எண்ணியிருந்தேன். ஆனால் மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் பெரிய குறை அதை வாசிப்பதிலும், உள்வாங்கிக்கொள்வதிலும் இருக்கும் சிரமம். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இதுவும் அந்தவகைதான் போலிருக்கிறது. சட்டென புத்தகத்தின் பெயர் நினைவுக்கு வரவில்லை. இந்திய வரலாறு பற்றிய ஒரு புத்தகம் என்று நினைவு. படிக்க ஆரம்பித்து பத்துப் பக்கங்களைத் தாண்ட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூல நூலின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனால் மொழிபெயர்க்கப்பட்டது அதனால் வழக்கமான மொழிபெயர்ப்பு பிரச்சினைகள் இல்லை. நேரடி நூல் போன்றே கருதலாம். ஆனால் இது அரசியல் நூல் என்பதால் கொஞ்சம் கடினமாக இருக்கின்றது. இதில் பல அமைப்புகளின் அறிக்கைகள், ஆராய்ச்சி கட்டுரைகளிலிருந்து பல விஷயங்கள் எடுத்தாளப்பட்டுள்ளதால் கொஞ்சம் பாடபுத்தகத் தன்மை வந்துவிட்டது.

      நீக்கு