03 பிப்ரவரி 2017

வலவன் - சுதாகர் கஸ்தூரி

முதலில் வளவன் என்பதைத்தான் தவறாக வலவன் என்று படித்துவிட்டேனோ என்று நினைத்தேன். இல்லை, வலவன்தான். வலம் வருபவன் வலவன். அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.  வலம் வர உதவுபவன் வலவன். ஓட்டுனர். "வலவன் ஏந்தா வானூர்தி" என்று ஒரு சங்கப்பாடல் இருப்பதாகவும், அது ஓட்டுனர் இல்லாத வான ஊர்தி பற்றியது என்றும், தமிழர்கள் அக்காலத்திலேயே செவ்வாய் கிரகத்திற்கு சென்றார்கள், என்று "உண்மையான் தமிழனாக இருந்தால் 'சேர்' செய்" கோஷ்டிகளில் ஒன்று எழுதியிருந்தது. சங்ககால வலவன்களை பற்றி எழுத எங்கு போக, இந்தக்கால வலவன்களான கார் ஓட்டுனர்கள் பற்றிய கதைகள்.

நாம் சந்திக்கும் ஓவ்வொருவரிடமும் கதைகள் ஏராளமாக இருக்கும். கற்பனையாசிரியர்கள் கற்பனை செய்வதை விட நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சிலருக்கு என்னை மாதிரி பல புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. தினமும் அதே மனிதர்கள். ஆனால் பயணம் செய்பவர்களுக்கு, ஏகப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பயணத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு எழுதவும் தெரிந்தால், நமக்கும் அந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி, தொழில் முறையில் அதிக பயணம் செய்பவர் என்று நினைக்கின்றேன். அந்த பயணங்களில் சந்தித்தவர்களை கதைகளாக்கியிருக்கலாம் என்பது அனுமானம். ஆனால் நம்மால் அவர் சந்தித்த மனிதர்களை, நம மனதிற்குள் சந்திக்க முடியவில்லை.



அனைத்து கதைகளும் சாதாரண மனிதர்கள் பின்னாலிருக்கும் கதைகள். அனைத்தும் வட இந்தியாவில் நடப்பவை. ஒன்றே ஒன்று கர்நாடகா - கேரளாவில். ஓட்டுனர்களின் பின்னாலிருக்கும் கதைகள், அவர்கள் மொழியில் வருகின்றது. பிந்தரன்வாலே கூட்டத்திலிருந்து பின் ஓட்டுனராகியிருக்கும் சர்தார்ஜி, ட்ராவல்ஸ் கம்பேனிக்கே முதலாளியாக இருந்து காரோட்டும் நபர் அவரது அண்ணா, அவர்கள் பின்னாலிருக்கும் கதை, காரை துடைத்துக் கொண்டே இருக்கும் ஓட்டுனர், ஜெய்மோகன் எழுதிய ஒரு கதையில் வரும் பாட்டியை நினைவு படுத்துகின்றார். பழி வாங்கல், துரோகம், ஏமாற்றம், நேர்மை என்று ஒவ்வொரு கதை.

கதைகளில் பெரும் சுவாரஸ்யம் என்று எதுவுமில்லை. ஓட்டுனர்கள் என்பதால் அந்த தொழில் சார்ந்து வருபவை ஏதுமில்லை. ஓட்டுனருக்கும் பதிலாக ஹோட்டல்க்காரர்களை வைத்து எழுதலாம். சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே தேவை. பிறகு எதற்கு ட்ரைவர்  கதைகள் என்ற தலைப்போ தெரியவில்லை.

டர்மரின் மாதிரி இதிலும் என்னை தொந்தரவு செய்தது அந்த எழுத்து நடை. சரளமான நடையாக இல்லை. ஒரு இறுக்கமான, அவசரமான ஒரு நடை. சட்டென்று நம்மை பிடித்து உள்ளிழுப்பதில்லை. வர்ணனைகள் அதிகம் கிடையாது, அதே சமயம் அதிக விபரங்களும் இல்லை. "எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கும்" என்று கூறும் அதே நபர் இரண்டு பத்தி தாண்டி, "அப்பா சீரியஸாக இருக்கின்றார்" என்று பேசும்போது கொஞ்சம் கடிக்கின்றது. குறுஞ்செய்தி என்று நீங்கள் யாரிடமாவது கூறினால ஏறஇறங்க பார்ப்பார்கள். அது கட்டுரைகளுக்கு சரி, இல்லை ஆசிரியர் மொழியாக இருந்தால் சரி. ஆனால் இருவர் பேசும் போது குறுஞ்செய்தி, அலைபேசி, குளம்பி, முகப்புத்தகம், கீச்சான், உள்ளொளி, மலைபடுகடாம் என்றால் மொத்த யதார்த்தமும் யாத்திரை போகிவிடுகின்றது. படிப்பவனை, "சே போ எட்ட நின்று படி" என்கின்றது. மலையாளி இந்தியில் பேசுகின்றான் என்று வருகின்றது, மலையாளியின் கூற்று எல்லாம் மலையாளத்திலேயே வருகின்றது. ஆனால் சர்தார்ஜி கூற்று மட்டும் தமிழாகின்றது. ஒரு வேளை தமிழ் வாசகர்களுக்கு இப்போது மலையாளமும் படிக்க தெரிந்திருக்கும் என்ற எண்ணமோ?

கருப்பொருள் சரியாக இருக்கின்றது. ஆனால் அதை வெளிப்படுத்தும் முறை அங்கங்கு சொதப்புகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக