19 மே 2021

கல்லுக்குள் ஈரம் - ர.சு.நல்லபெருமாள்

அகிலன், நா.பா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கும் போது "இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கின்றார்கள்" என்ற எண்ணம் ஏற்படும்.  நாவலில் அனைவரும் தத்துவமாகவும், உயர்ந்த லட்சியங்களை பற்றியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த நாவல் கொஞ்சம் தப்பியிருந்தால் அந்த வகையில் விழுந்திருக்கும்.

சுதந்திர போராட்ட காலத்து நாவல். கல்கி  சுதந்திர போராட்டத்தை பின்புலமாக வைத்து பல நாவல்கள் எழுதியிருக்கின்றார் அலையோசை, தியாகபூமி, சோலைமலை இளவரசி. ஆனால் அவரின் நாவல்களில் அனைவரும் கற்பனை பாத்திரங்களே. இந்நாவலில் கற்பனை பாத்திரங்களுடன் பல சுதந்திர போராட்ட வீரர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். காந்தி, சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சி நாதன், ராஜாஜி, நேரு.

இன்றும் காந்தியின் அஹிம்சை வழி போராட்டம்தான் சுதந்திரம் பெற உண்மையான காரணமா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஆயுத வழி சென்ற பலரை தன் பக்கம் திரும்ப வைத்தார் என்றால், அதை எளிதாக நம்ப முடியும். அவர் மீது பலருக்கு அத்தகைய பக்தி இருந்துள்ளது. அப்படி ஆயுத வழி சென்ற ஒரு சுதந்திர்ப் போராட்ட வீரனின் கதைதான் இது. 

கதையை ஒரு ட்வீட்டில் சொல்லிவிடலாம். ஆயுதப் போராட்டத்தின் வழி சென்ற நாயகனை, நாயகி தன் தியாகத்தால் அஹிம்சை வழி திருப்பினாள்.
 
கதையை சுவாரஸ்யமாக்குவதே கதையை பல உண்மை சம்பவங்களுடன் பிணைத்து சொல்லியிருப்பதே, அதீத கற்பனை ஏதும் இல்லை. கதை பாத்திரங்கள் எதுவும் ஞான திருஷ்டி அடைந்து காலத்தில் முன்னே சென்று அருள்வாக்கு சொல்வதில்லை. சில இடங்களில் பிரச்சார தொனி வந்தாலும் பெரிதாக உறுத்தவில்லை. கதைக்குள் ஒரு சிறிய சஸ்பென்ஸ் வைத்திருப்பதாக எண்ணி ஆசிரியர் எழுதிய சம்பவங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கின்றது, பள்ளி குழந்தை கூட கண்டு பிடித்துவிடும் அதை. 

நாவல் இறுதிக் கட்ட சுதந்திரபோரின் காலத்தில் நடக்கின்றது. சுதந்திர போரட்ட காலத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்ள உதவும் இந்த புத்தகம். ஒரு காலத்தில் மக்களிடையே எப்படிப்பட்ட தீவிர உணர்ச்சி பரவியது, எப்படி பலர் சுதந்திர போரில் எதற்கும் துணிந்து இறங்கினார்கள் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள உதவும். 

இறுதிப்பகுதிகளை படிக்கும் போது உங்களுக்கு ஹேராம் நினைவிற்கு வந்தால் கமல் பொறுப்பல்ல. அவர் இந்த புத்தகத்திலிருந்துதான் சுட்டிருப்பார் என்று எல்லாம் சொல்லவில்லை, ஹாலிவுட் கதைகளிலிருந்து இன்ஸ்பையர் ஆவது போல இந்த நாவலிலிருந்து இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம். 

ஓரளவிற்கு பெரிய புத்தகம்தான், அங்கங்கு வரும் சின்ன சின்ன சம்பிரதாய ஆசிரியர் கூற்றுக்களை தவிர்த்து பார்த்தால் சுவாரஸ்யமான நாவல்தான்.

படிக்கலாம். 

2 கருத்துகள்:

  1. 1966-ல் எழுதப்பட்ட கதை. அந்த காலகட்டத்தில், கதையில் வரும் சஸ்பென்ஸ் அக்காலகட்ட வாசகர்களுக்கு திகைப்பைக் கொடுத்திருக்கலாம். தற்போதய காலகட்ட வாசகர்கள் இப்போது இக்கதையைப் படித்துவிட்டு சஸ்பென்ஸ் சிரிப்பை வரவைக்கிறது என்று எழுதுவது நகைச்சுவை. // கதைக்குள் ஒரு சிறிய சஸ்பென்ஸ் வைத்திருப்பதாக எண்ணி ஆசிரியர் எழுதிய சம்பவங்கள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கின்றது, பள்ளி குழந்தை கூட கண்டு பிடித்துவிடும் அதை.//

    பதிலளிநீக்கு
  2. நாற்பதுகளில், ஐம்பதுகளில் வந்திருக்க கூடிய சஸ்பென்ஸ். இன்னமும் இதற்கு அதிர்ச்சி, திகைப்பு அடையும் வாசகர்கள் உண்டு என்றால், அவர்களின் கள்ளங்கபடமில்லா மனது அப்படியே இருக்க வேண்டிக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு