29 ஜனவரி 2018

புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்

சென்னையிலிருக்கும் போது எனக்கும் என் நண்பனுக்கும் அடிக்கடி புத்தக விஷயமாக விவாதம் வரும். அவன் புத்தகங்கள் படிப்பதே குறைவு, அதுவும் அர்த்தமுள்ள இந்துமதம் மாதிரி புத்தகங்கள். நான் புனைவுகள். அவனின் வாதம் புனைவுகள் உனக்கு எதை கற்று தருகின்றன. இதற்கு பதிலை என்னால் விளக்கமாக சொல்ல முடிந்ததில்லை. அதிகம் விவாதத்திற்குள்ளும் போக விரும்பாதவன் என்பதால், புனைவுகளிடமிருந்து பெறுவது என்பது அவரவர் கற்பனையை பொறுத்தது என்று அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவது வழக்கம். 

இணையத்தில் வலம் வந்த பின்பு பல புத்தகப்பிரியர்களின் தளங்களில் புத்தக விமர்சனங்கள், மதிப்புரைகள் இன்னபிற உரைகளை காண முடிந்தது. பெரும்பாலனவை புத்தக விமர்சனம் என்ற பெயரில் கதைச் சுருக்கததை கூறுவதுடன் முடிந்தது. ஆர். வி, அறிமுகத்துடன் அவரை அப்புத்தகம் எப்படி பாதித்தது என்பதை மட்டும் எழுதும் பாணி பிடித்திருந்தது. நான் இந்த தளத்தில் எழுதும் போது அதே முறையை முடிந்த வரை கையாள ஆரம்பித்தேன். இது புதிய வாசகனுக்கு பயன்படாது, குறிப்பாக அசோகமித்திரனின் கதைகள் என்ன சொல்கின்றது என்பதை எப்படி விளக்க? அது ஒரு அனுபவத்தை தருகின்றது, அதை விளக்கமாக சொல்வது ஒரு ஆசிரியருக்குத்தான் கை வரும் இல்லை ஒரு நல்ல எழுத்தாளரால் முடியும்.
புனைவு என்னும் புதிர், தலைப்பே உள்ளடக்கத்தை சொல்கின்றது. கண்டதையும் கேட்டதையும் மாற்றி சொல்கின்றேன் என்றார் அசோகமித்திரன். புனைவு என்பது அதை மட்டுமா செய்கின்றது. வாசகனை அந்த உலகிற்குள் அழைத்து செல்கின்றது. ஒருவர் தன் வாழ்நாளில் அடைய முடியாத அனுபவங்களை ஒரு புனைவு நமக்கு அளிக்கும், ஆனால் அதை அனுபவத்தை அடைய தடையாய் இருப்பது நமது வாசிப்பு முறை. எதையும் 'பண்ணிச்" சொல்லும் முறையை அனைவரும் கையாள்வதில்லை. சில விஷயங்களை அப்படி சொல்ல முடியாது, வாசகனின் பங்களிப்பும் அங்கு தேவை. ஒரு காட்சியை ஓவியமாகவும் வரையலாம், புகைப்படமாகவும் எடுக்கலாம். ஓவியம் புகைப்படம் போல தத்ரூபமாக இருக்க தேவையில்லை, வெறும் கோடுகள் கூட போதுமானது, புகைப்படத்தை விட ஓவியம் ஏன் மதிப்புமிக்கதாக கருதப்படுகின்றது? காரணம் அது நம்மை உணரச்செய்கின்றது, அனுபவிக்க செய்கின்றது. மூளையுடன் நமது மனமும் அங்கு சேரவேண்டும்.

புனைவுகளும் அப்படியே, நமது மனதுடன் நெருங்கியது,ஆனால் அதற்கும் மூளையின் துணை வேண்டும். ஆசிரியர் எழுதும் வரிகளுக்கு பின்னால் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும், இடைவெளிகளை இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். பல வாசகர்களுக்கு அது கடினமாக இருக்கலாம், எதற்காக இதை ஆசிரியர் எழுதவேண்டும் என்று தோன்றும், இந்த வர்ணனைகள் எதை விளக்க என்று தோன்றும். சில கதைகள் எதை சொல்ல வருகின்றன என்பதே புரியாமல் போகவும் கூடும். சிலருக்கு அவை புரிந்தாலும் விளக்குவது கடினம். விளக்குவது என்பது வேறு விதமாகவும் போகக் கூடும். ஒரு சிறுகதையை படிக்கும் போது, அதன் முடிவை அடையும் போது, சே, என்ன ஓரு கதை என்று நமக்கு ஒரு பூரிப்பு, மகிழ்ச்சி உண்டாகும். நல்ல இசையை கேட்கும் போது நம்மை அறியாமல், சபாஷ் போடுவது போன்ற அனுபவம். சிலரின் விளக்கவுரை அதை கெடுத்துவிடும். திரைப்படம் பார்க்கும்போது அருகிலமர்ந்து கதை சொல்லும் பைத்தியங்கள், கதையை விளக்குகின்றேன் என்று வாசகனின் அனுபவத்தை கெடுக்கும் விமர்சகர்களை கண்டவுடன் ஓடுவது நலம். வாசகனுக்கு, சில விஷயங்களை மட்டும் காட்டினால் போதும். அது தேர்ந்த எழுத்தாளர்களுக்கு அது சுலபம்.

விமலாதித்த மாமல்லன் அதை செய்திருக்கின்றார். ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கதையை எடுத்துக் கொண்டு அதை அணுகும் விதத்தை விளக்குகின்றது. சாதரணமாக புலப்படாத நுட்பங்களை விளக்குகின்றது. எழுத்தாளர் என்பதால் சொல்ல வந்ததை தெளிவாக, எளிமையாக விளக்குகின்றார்.  உங்களுக்கு ஒரு கொடு போடுகின்றது, அதை பிடித்துக் கொண்டு நீங்களே செல்லுங்கள், உங்கள் அனுபவம் உங்களுக்கு. இதை ஆசிரியர் கற்பனையில் விரித்து கொள்ள சொல்கின்றார், உங்களின் கற்பனையின் அளவை பொறுத்து நீங்கள் கொள்ளலாம் என்பதுடன் நின்று கொள்கின்றது. குறிப்பாக அசோகமித்திரனின் கதையும், ஷோபாசக்தியின் கதையும் இரண்டும் மேலோட்டமாக பார்த்தால் சாதரணக்கதையாகத் தோன்றும், இடைவெளியை நிரப்பி பார்த்தால் கதையின் ஆத்மா புரியும். அந்த இடைவெளியை எதைக் கொண்டு நீங்கள் நிரப்பி கொள்ளலாம், கதையாசிரியர் எங்கு அதற்கான முடிச்சுகளை, கண்ணிகளை தன் வாசகர்களுக்கு வைத்திருக்கின்றார் என்று மட்டும் உங்களுக்கு காட்டுகின்றார் மாமல்லன்.

மாமல்லன், அவர் தன் சிறுகதைகளை கச்சிதமாக எழுதுபவர், அசோகமித்திரனின் சாயல் தெரியும், சொல்லெண்ணி எழுதுவது, தர்க்க பிழைகள் ஏதுமில்லாமல் எழுதும்பாணி கட்டுரைகளையும் கச்சிதமாக்கியுள்ளது. மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைப்பது போல, சாருவின் பழுப்பு நிற பக்கங்கள் நினைவிற்கு வருகின்றது. தேர்ந்த வாசகனுக்கும் பாவனைக்கும் இருக்கும் வித்தியாசம் புலப்படுகின்றது.

குறை சொல்லாமல் கட்டுரையை முடிப்பது எப்படி, எழுத்துப் பிழைகள், வார்த்தைகளை முழுங்கி வைத்திருக்கின்றார்கள். காலச்சுவடு போன்ற பதிப்பகத்திடமிருந்து இத்தனை பிழைகளுடன் புத்தகமா என்று வருத்தமளிக்கின்றது.

இன்னும் பல கதைகளை பற்றி அவர் எழுத வேண்டும். முடிந்தால் அவரின் சத்ரபதி மூலமாகவே பதிப்பிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக