பாலகுமாரன் அறிமுகமான கதையை ஏற்கனவே சில பதிவுகளில் எழுதியிருந்தேன். 90களின் இறுதியிலும் கல்லூரி மாணவர்களிடம் ஹீரோவாகத்தான் இருந்திருக்கின்றார். வெகுஜன எழுத்து என்றாலும் அவர் எழுத்து பலரை மாற்றியிருக்கின்றது என்பதை பலர் பதிவுகளில் காணமுடிகின்றது. அவர் பல அரைவேக்காடுகளை உருவாக்கியிருக்கின்றார் என்பதிலும் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அது அவர் பிரச்சினையில்லை.
பாலகுமாரன் மீதான எனது ஒவ்வாமைக்கு காரணம் நான் படிக்க ஆரம்பித்தது அவரது பிற்கால எழுத்துக்களை. ஆன்மீக வகையறா, தலைகோதி, கன்னம் தடவி, நெட்டி முறித்து, முதுகை அழுத்தி கொடுத்து, உபதேசிக்கும் நாவல்களை எக்காலத்திலும் என்னால் படிக்க முடியாது. அப்பம் வடை தயிர்சாதம் ஓரளவு பிடித்திருந்தது. ஊர்விட்டு ஊர் சென்று வெற்றி பெரும் ஒரு பிராமண குடும்பக்கதை. படித்து முடித்து விட்டு வேலைதேடி வந்த எனக்கு அந்த நேரத்தில் உபதேசம் தேவையாகத்தான் இருந்தது. அவரது காதல் கதைகள் எல்லாம் ஒன்றும் படித்தில்லை என்பதில் கொஞ்சம் சந்தோஷம்தான். படித்து தொலைத்திருந்தால் என்னாவாகியிருக்குமோ என்று பலரின் அனுபவத்தை படிக்கும் போது தோன்றுகின்றது.
அவரது எழுத்து இலக்கியமா இல்லையா என்று வழக்கம்போல எங்காவது யாராவது பேசிக்கொண்டிருக்கட்டும். அவரது எழுத்து பலரை படிப்பிற்குள் இழுத்திருக்கின்றது, பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றது, பலரை தன்னம்பிக்கை கொண்டு முன்னேறவைத்திருக்கின்றது. அவரது ஆன்மீக நாவல்கள் கூட ஏதாவது ஒருவகையில் பலருக்கு நன்மை செய்திருக்கும். அது போதுமானது.
மெர்க்குரி பூக்கள், இரும்புகுதிரைகள், அப்பம் வடை தயிர்சாதம் போன்றவை நன்றாகத்தான் இருந்தது. தி.ஜாவுடன் ஒப்பிடுவது அதீதம். உடையார் லிஸ்ட்டில் இருக்கின்றது, கிண்டிலில் வந்தால் வாங்க உத்தேசம்.
ஜெயமோகன் அவரது பல கட்டுரைகளில் இவரும் விரைவில் வணிக அலமாரியில் சென்று அமர்வார், காலம் மறந்துவிடும் என்கின்றார். நடக்கலாம், ஆனால் அது எளிதில் நடக்காது. சமீபத்திலும் நடக்காது என்று தோன்றுகின்றது.
நேற்று பொதிகையில் பார்த்த அவரது பேட்டியின் மறுஒளிபரப்பு ஒன்றில் அவர் தனது படைப்புகளில் தனக்குப் பிடித்த முதல் மூன்றாய் உடையார். கங்கை கொண்ட சோழன், இது போதும் ஆகியவற்றைச் சொல்லி இருந்திருக்கிறார். நானும் அவரது பிற்காலப் படைப்புகளை படித்ததில்லை. உடையார் ஆரம்பித்து விட்டு, விட்டு விட்டேன். ஆனால் வசீகரிக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக் காரர் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குஉடையாரை முழுவதும் படித்தவர்கள் வெகு குறைவு போலயே, பெரும்பாலனவர்கள் ஆரம்பித்து பாதியில் சோர்வாகி விட்டு விட்டதாகவே கூறுகின்றார்கள். கிண்டிலில் வரட்டும், ஒரு கை பார்க்கலாம்
நீக்கு