19 ஜூலை 2020

நாரத ராமாயணம் - புதுமைபித்தன்


கிண்டிலில் மேய்ந்து கொண்டிருந்த போது நாரத ராமாயணம் என்று ஒன்று கண்ணில் பட்டது. புதுமை பித்தன் எழுதியது. ஒரு முறை சரிபார்த்து கொண்டேன், ஒரிஜினல் புதுமைபித்தன் தான் என்று. 300 வகை ராமாயணங்கள் உண்டு என்பார்கள். ராமரை அனைவரும் சொந்தம் கொண்டாடியதன் விளைவு. ஜைனர்கள், புத்தர்கள் என்று அனைவரும் ராமரை அவரவர் வசதிக்கு மாற்றி கொண்டார்கள். திராவிட புத்திசாலிகள், பிராமண ராவணனை சொந்தக்காரனாக்கி, ராவண காவியம் எழுதிக் கொண்டார்கள். 

புதுமைபித்தன் கிண்டலான எழுத்துக்கு சொந்தக்காரர். புதுமைபித்தன் நடை திருவிளையாடல் சிவாஜி  நடையை விட பிரபலமானது என்பதால் என்ன எழுதியிருக்கின்றார் என்று படிப்போம் என்று படித்தால், சரியான திராபை.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அகல்யை, காஞ்சனை போன்றவற்றை எழுதியவரா இதையும் எழுதினார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஹிந்து மதத்தில் கடவுள்களை ஜாலியாக நாம் கிண்டல் செய்யலாம், திட்டலாம். (பக்தியுடன் அவனை நம்பும் பக்தர்களுக்குதான் அந்த உரிமை, நம்பாத பொறுக்கிகளுக்கு இல்லை), அதனால் முதல் பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. வயதான ராமருக்கு போரடிக்கின்றது. அதனால் மீண்டும் காட்டிற்கு சீதையுடனும், அனுமனுடனும் போகின்றார். வேறு ஏதாவது அரக்கன் வருவான், அவனுடன் போர் செய்யலாம் என்று. அனுமனுக்கு பர்ணசாலை கட்ட தெரியவில்லை என்று கொஞ்சம் ஜாலியா போகின்றது. 

ஆனால் அதன் பின்னால் வருவது எல்லாம் கேடிபி சிரிப்புராஜ சோழனே பரவாயில்லை ரகம். கொடூரம், என்ன நினைத்து இதை எழுதினாரோ, இது எஸ்.ரா இதை பகடியின் உச்சம் என்கின்றார். அவரின் நகைச்சுவை உணர்ச்சி பற்றி எப்பொழுதும் எனக்கு சந்தேகம் உண்டு. 

பாதிக்கு மேல் படிக்கவே முடியவில்லை. புதுமைபித்தனுக்கும், கல்கிக்கும் ஆகாது என்பார்கள். கல்கி வலிந்து புகுத்திய நகைச்சுவையை எழுதுவார், புதுமைபித்தன் நையாண்டி செய்வார் என்று. 

கல்கியின் ஒரு கட்டுரையில், ராமாயணத்தை கிண்டல் செய்திருப்பார் "நீங்கள் காட்டிற்கு உங்கள் தம்பியோடும், மனைவியோடும் செல்கின்றீர்கள், அப்பா நீ இங்கேயே உன் மன்னியின் காலை பார்த்து கொண்டிரு, நான் சென்று வருகின்றேன் என்று போகின்றீர்கள்." என்று ஆரம்பித்து ராமன் புலம்புவதை கிண்டலடிப்பார். இது இயல்பாக உள்ளது. 

நாரத ராமாயணம், பலருக்கு தெரியாது என்று எஸ்.ரா வருந்துகின்றார். தெரியாமல் இருப்பதே புதுமைபித்தனுக்கு நல்லது. 


1 கருத்து:

  1. இது கேள்விப்பட்டதில்லை.  என்னிடம் புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு என்று ஒரு புத்தகமும் இன்னொரு தொகுப்பும் இருக்கின்றன.  அதில் இது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.  முதலில் அந்தப் புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்று பார்க்கவேண்டும்!

    பதிலளிநீக்கு