இந்த ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எழுதி வைத்தது, அப்படியே புதைந்து போனது. இன்று அகழ்வார்ய்ச்சியில் கிடைத்தது. சராசரிக்கும் மோசமான கதைதான், இருக்கட்டுமே என்ன இப்போ.....
"லாரில போங்கய்யா"
பஸ் ஸ்டாண்டில் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் டபுள் விசில் குடுத்து பறந்தது பஸ். காரணம் பதினைந்து பேர், நாற்பது பெட்டி, பைகள். தவிர ஐந்து (இல்லை ஏழு, எட்டு, நினைவில்லை விடுங்கள்) குழந்தைகள். திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வந்திறங்கினோம்.
"பேசாம ஒரு வேன் பிடிச்சி போய்டலாமா?"
"வேண்டாம் ஒரு ஆட்டோல லக்கேஜ் எல்லாம் போட்டு விட்டுட்டு நாம பஸ்ல போய்டலாம்"
"ம்கும் ஆட்டோ, ஒரு மினி டோர் கூட பத்தாது"
"ஒன்னும் வேண்டாம், இப்போ ஒரு ப்ரைவேட் பஸ் வரும் போலாம்"
"இப்ப லாரில போங்கன்னு சொல்லிட்டு போனானே அதுதான் நீங்க சொன்ன பஸ்"
"அப்படியா"
"ஒன்னு பண்ணுங்க லக்கேஜ மொத்தமா வைக்காம, தனிதனியா வச்சிட்டு கொஞ்சம் தள்ளி தள்ளி நில்லுங்க, பஸ் வந்ததும் ஓடி வந்து ஏறிக்கலாம், கொஞ்ச பேரு பஸ் ஸ்டாண்ட் உள்ள போங்க, கொஞ்ச பேர் வெளில நில்லுங்க"
அடுத்த பஸ் ஏமாந்தது.
"சீக்கிரம் ஏறுங்கையா"
"யோவ் பஸ்ல பாதி உங்க லக்கேஜ்தான் இருக்கு, மத்தவங்க நிக்க கூட இடமில்ல, எடுத்து சீட்டுக்கடியில வைங்க"
கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் கல்லூரி நண்பன் ஒருவன் ஏறினான். பேசிக்கொண்டே வந்தோம்.
"என்னடா பஸ் முழுக்க உங்க சொந்தக்காரங்கதான் போல"
பத்து நிமிடத்தில் ஊர் வந்துவிட்டது. அவசர அவசரமாக லக்கேஜை எல்லாம் இறக்கினோம். கண்டெக்டர் தன் பங்கிற்கு நாலை எடுத்து வெளியே எறிந்தார். லபக்கென்று கைப்பற்றிக் கொண்டு
"தேங்க்ஸ் ஸார்"
"திரும்பிவரும் போது இதே பஸ்ல மட்டும் ஏறிராதீங்க"
வீட்டிற்கு வந்த பின்னரே லக்கேஜை எண்ண முடிந்தது.
"ஐயய்யோ என் பையக் காணோம்" அக்காவின் அலறல்.
"நல்லா பாரு, இங்கதான் இருக்கும்"
"எல்லாம் பாத்தாச்சு, அந்த பைய மட்டும் காணோம்"
"திருச்சிலயே விட்டுட்டு வந்துட்டியா"
அப்பா அவசரமாக எங்களூர் பஸ் ஸ்டாண்டிற்கு ஓடி தேடிவிட்டு வந்தார், இங்க பஸ்ஸ்டாண்டுல எதுவும் இல்ல. அதற்கு முன்னாலேயே அவள் பெரிதாக அழ ஆரம்பித்திருந்தாள்
"அப்ப பஸ்லதான் இருக்கனும்"
"லக்கேஜ எண்ணி இறக்கியிருக்கனும்"
வரிசையாக என்ன செய்திருக்க வேண்டும், செய்திருக்க கூடாதென்று என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள்
"ஏண்டி லக்கேஜ பத்திரம பாத்துக்க தெரியல பேச்சு மட்டும் பேசுற"
"என்னக்கு என்ன தெரியும், அவசர அவசரமா ஏத்துனீங்க, இறக்குனீங்க, அதுல் என் நகையெல்லாம் இருக்கு. மாமியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான், அவங்க நகையும் சேர்ந்து இருக்கு"
"அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக்கோ கிடைக்கும்"
"வெல்லத்துல பிள்ளையார் செஞ்சு வெல்லம் நைவேந்தியம் பண்ணு"
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அப்பாவின் டி.வி.எஸ் எக்ஸலை தெருவில் இறக்கினேன்.
"இதுல போய் எப்படி பிடிக்க"
"மெட்ராஸ்ல இத வச்சி நாங்க பல்லவன் பஸ்ஸையே விரட்டி போயிருக்கோம், எக்மோர்ல இருந்து அம்பத்தூர் வரை , ஸ்பெலென்டர் எல்லாம் சைடு வாங்கும், நான் போய் பார்த்துட்டு வர்றேன், அம்மாகிட்ட சொல்லிடுங்க"
"இரு நானும் வர்றேன்"
மாமாவும் ஏறிக்கொண்டார். ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலேட்டரை திருக வண்டி இடது பக்கம் போவதற்கு பதில் வலது பக்கம் போய் ஒரு சைக்கிள் காரரை சிதறிஓட வைத்தது. "தம்பி பார்த்து போப்பா"
"டேய் ஓட்ட தெரியுமா, ஓட்றத பார்த்தா பல்லவன் எல்லாம் விரட்டினா மாதிரி தெரியலயே"
"மாமா அது நான் பின்னாடி உக்காந்து போவேன், வசந்த்தான் ஓட்டுவான்"
வண்டியை ஒரு உழட்டு உழட்டி, ஒரு வழியாக என் கட்டுக்குள் கொண்டு வந்தேன். எப்படி ஹெட்லைட் ஆன் பண்ணுவது என்று தெரியவில்லை. கண்டுபிடித்து ஹெட்லைட்டை ஆன் செய்து, அது தந்த அளவு வெளிச்சத்தில் தடுமாறி ஊரை தாண்டினேன்.
ஆளில்லா ரோட்டை கண்டதும் எனக்கு குஷியாகி விட்டது. ஆக்ஸிலேட்டரை முழுக்க திருகினேன். வண்டி முழுவேகத்தில் போய்க்கொண்டிருந்தது, மேடு பள்ளம் எல்லாம் ஏறி விழுந்து, நூலிழையில் இரண்டு ப்ரைவேட் வண்டியை தவிர்த்து அரை இருட்டில் குத்துமதிப்பாக போய்க்கொண்டிருந்தது.
எனக்கு ஸ்பீட் ப்ரேக்கரை கண்டால் சைக்கிளில் போகும் போதே குஷியாகும், அதுவும் பின்னால் ஆளிருந்தால் படு குஷி, சரியாக அதனை தாண்டும் போது நான் சீட்டிலிருந்து எழுந்து விடுவேன். பின்னால் உள்ளவனுக்கு....
மோட்டார் சைக்கிள் கிடைத்தால்...
"இந்த வண்டி இவ்வளவு வேகம் போகும்க்றதே இன்னக்கிதான் தெரியும், கொஞ்சம் மெதுவா போடா, வேகத்த குறைக்கதாண்டா ஸ்பீட் ப்ரேக்கர். உனக்கு எவண்டா லைசன்ஸ் குடுத்தது"
"எவன் குடுத்தது, லைசன்ஸ் எல்லாம் கிடையாது, வண்டிக்கே பேப்பர் கிடையாது"
மாமா வண்டியை இறுக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். எல்லாத்திருப்பத்திலும் வண்டி சாலை முனையை தொட்டு தொட்டு திரும்பியது. சாலை ஓரமெல்லாம் ஓடைப் பள்ளம், முள் காடு. இரண்டு இடத்தில் கையை கிழித்தது. என் கையை அல்ல.
"டேய் ரேஸ்லயா ஓட்ற, பாத்து திரும்புடா"
ஆக்ஸிலேட்டரை முழுக்க திருகி பிடித்துக்கொண்டிருததில் கை வலிக்க ஆரம்பித்தது, ஒரு வழியாக பஸ்ஸ்டாண்டை அடைந்தது. அதே வேகத்தில் உள்ளே நுழைந்து முதல் முறையாக ப்ரேக்கை பிடிக்க அது பத்தடி தள்ளி போய் நின்றது.
மாமா முகம் எல்லாம் வேர்வை, சட்டை நனைந்திருந்தது.
பஸ் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது, அப்போதுதான் உள்ளே வந்திருக்க வேண்டும். அதனருகே நிறுத்திவிட்டு உள்ளே ஏறி கடைசி சீட் அடியில் பார்த்தேன், இல்லை அவ்வளவுதான். போய்விட்டது.
கீழே இறங்கினேன், மாமாவை காணோம், டீக்கடையில் கண்டெக்டருடன் பேசிக்கொண்டிருந்தார். கண்டெக்டர் அவரை அழைத்து கொண்டு, அலுவலகத்துள்ளே சென்றார்.
"நல்ல வேளைசார், யாரும் கொண்டுபோகல, போர்டு மாத்தும் போது பார்த்தேன், நீங்கதான் விட்டுட்டு போயிருப்பிங்கன்னு தெரியும்"
"ரொம்ப நன்றி சார்"
"பரவாயில்ல சார்"
"இந்தாங்க இத வச்சுக்கங்க"
"வேண்டாம் சார்"
"பரவாயில்ல சார் இருக்கட்டும்"
அவர் கையில் ஒரு நூறு ரூபாயை தந்துவிட்டு பையை வாங்கிக்கொண்டு வந்தார்.
"ஒரு இளநி சாப்பிட்டப்புறம் போலாம்"
"இல்ல மாமா பரவாயில்ல, எனக்கு வேண்டாம்"
"உனக்கில்ல எனக்கு, படபடன்னு வருது எனக்கு வேணும்"
குடித்துவிட்டு வண்டியை ஸ்டார் செய்தேன்
"பை கிடச்சிடிச்சு, மெதுவாவே போ, இல்ல வேண்டாம் நானே ஒட்டிட்டு வர்றேன்"
போனதை விட இரண்டு மடங்கு நேரமானது.
வீடு மொத்தமும் வெளியே நின்று கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்து அக்காவிடம் பையை தருவதற்கு முன்னர் அவளே கையிலிருந்து பறித்து கொண்டு ஓடினாள். அப்பாவும் காத்திருந்தார்
"நல்லவேளை மாப்ள நீங்க ஓட்டிட்டு போனீங்க, அவன் வண்டிய இறக்கிட்டு போனான்னு சொன்னதுமே பயந்துட்டேன், அவனுக்கு சைக்கிள் மட்டும்தான் ஒட்ட தெரியும், இதுவரைக்கும் இந்த வண்டிய தொட்டதேயில்லயே எங்காவது விழுந்து வைக்க போறான்னு பயந்துட்டே இருந்தேன். அந்த வண்டிக்கு ப்ரேக் வேற சரி கிடையாது"
மாமாவிற்கு மறுபடியும் வேர்க்க ஆரம்பித்தது. "ஏண்டா ஓட்ட தெரியாமவா வண்டி எடுத்த, அது சரி எப்படி சரியா போய் நீ உக்காந்திருந்த சீட்ல மட்டும் பாத்த?"
மிகவும் ரசித்தேன். சிரித்தேன். நல்ல ஃப்ளோ!
பதிலளிநீக்கு