கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.
பந்தயப்புறா
பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.
அகல்யா
அவரின் பிரபல நாவல், இந்நாவலின் பாத்திரங்களின் பெயர் இன்று வரை நினைவுகூரப்படுவதே வெற்றி. நான் பிறந்த வருடம் வெளியான நாவல் போல, இன்றும் படிக்க முடிகின்றதே பெரிய விஷயம். இன்று அந்த கைம்பெண் மறுமணம் என்பது மட்டும் புராணகாலம் மாதிரி தெரியும். ஆண் பெண் உறவுகளை பற்றியே அவர் திரும்ப திரும்ப பேசினாலும், இதில் மிக இயல்பாக, அதிக நாடகத்தன்மையின்றி இருக்கின்றது. இறுதிப்பகுதிகள் கொஞ்சம் அடித்து பிடித்து போவது போல இருப்பதுதான் பிரச்சினை
தலையணைப் பூக்கள், 333 அம்மையப்பன் தெரு
எனக்கு படிக்கும் பழக்கத்தை கற்று கொடுத்த என் மாமாவிற்கு, பாலகுமாரனும், ஜெயகாந்தனும் பிடிக்காது. பாலச்சந்தரையும். காரணம் இவர்கள் பிராமணர்களை மட்டும் வைத்து எழுதுவதாக அவர் கருதியது. பிற்கால பலகுமாரனை அவர் ஏற்று கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பிராமணர்கள் தமிழகத்தில் கொஞ்சம் இம்சையை அனுபவித்தார்கள் என்பது உண்மை. ஆனால் அது அவர்கள் தங்கள் கூட்டை உடைத்து பறக்க உதவிதான் செய்தது. அப்பம் வடை தயிர்சாதம் நாவல் போலவேதான் அவையிரண்டும். பிராமணர்கள் தங்கள் இயல்பிலிருந்து வெளியேறி வெற்றி பெற்ற கதையைதான் பக்கம் பக்கமாக சொல்கின்றார்.
தலையணைப் பூக்களில் ஒரே குடும்பம், வெற்றி, தோல்வி, துரோகம். சீரியலாக கூட வந்தது போல. சின்ன சின்ன விஷயங்கள்தான் பாலகுமாரன் ஏன் ஒரு சராசரி எழுத்தாளர் இல்லை என்பதை காட்டுகின்றது. மகாபெரியவர் இந்நாவலிலும் வருகின்றார். 333, அதே விஷயம் பல குடும்பங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி சென்று வெல்வது என்று போகின்றது. இதில் ஒரு நல்ல காதல் கதையை உள்ளே வைத்துள்ளார். அவருக்கு சினிமா பாடல்கள் மீது ஏதோ அதீத பிரேமை போல, பல நாவல்களின் பாத்திரங்கள் சினிமா பாடல்களை பாடிக் கொண்டே இருக்கின்றன. இது பிற்கால நாவல் என்று சுலபமாக யூகிக்க முடிகின்றது. தியானம், குண்டலினி, சக்கரம் என்று வலிய திணிக்கப்பட்டவை, பிராமணர்கள் எல்லாம், பல விஷயங்கலை முன் கூட்டியே கணித்து சென்றவர்கள் என்பது போன்ற கருத்து எல்லாம் ஒட்டவில்லை. பிராமணர்கள் வாய்ப்பை தயக்கமின்றி ஏற்று கொண்டனர் எனலாம். அது அவர்களை முன் செல்ல உதவி செய்தது.
பாலகுமாரன், சின்ன சின்ன சித்தரிப்புகளில் கவர்ந்து விடுகின்றார். ஆனால் சில அவர் நாவலில் திரும்ப திரும்ப வருவதும் அயர்ச்சியாக இருக்கின்றது. அலட்டல், கொண்டாடுவது, போன்ற வழக்குகள், தியானம், வகையறா. காதலும், கோபமும் அதீதமாக இருப்பது என்று. வத்தகுழம்பு மீது அவருக்கு என்ன கொலை வெறியோ, வத்தக்குழம்பு தின்பவனையும், புளியோதரை தின்பவனையும் படு பயங்கரமாக திட்டுகின்றார்.
ஒரு விஷயத்தை எழுதுவதில்லும், சொல்லுவதிலும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. முதல் இரண்டும் எழுதப்பட்டவை என்பதும், பின்னிரண்டும் சொல்லப்பட்டவை என்றும் தெரிகின்றது. சொல்லும் போது, அது வளவள என்று அமைகின்றது.
இன்னும் சில நாவல்கள் நினைவில் நிற்கவே இல்லை.
கிண்டில் அலிமிடட் ? எங்கள் பிளாக்கிலிருந்து மூன்று புத்தகங்கள் அமேசானில் இருக்கிறதே... படித்தீர்களா? என்னுடைய "காசிக்குப் போகும் சம்சாரி", கேஜிஜியின் "அனுபவப் பாடங்கள்", மற்றும் "கதைத்தொகுப்பு"...
பதிலளிநீக்குபாலகுமாரன் கதைகளை மிக விரும்பிப் படித்ததுண்டு. மாதம் சம்பளம் வாங்கியதும் நேராக எக்மோர் சென்று ஒரு குறிப்பிட்ட கடையில் ஒன்றோ இரண்டோ பாலகுமாரன் புத்தகம் வாங்கிச் சேமித்திருக்கிறேன். இப்போதும் அவை என் கலெக்ஷனில் இருக்கின்றன. ஆனால் அப்புறம் அப்புறம் அலுத்து விட்டது.
பதிலளிநீக்குஇங்கு சொல்லப்பட்டிருக்கும் கதைகள் யாவுமே படித்து விட்டேன்.
உடையார் இரண்டு பாகத்துக்குமேல் படிக்க முடியவில்லை!
இல்லை, புத்தக வரிசையை பார்த்து வாங்க முடிவதில்லை. தமிழ் புத்தக வரிசையை பார்த்தால், எல்லாப் அட்டைப்படத்திலும் பெண்கள் சிரித்து கொண்டிருக்கின்றார்கள், இல்லை ஏதாவது திராவிட கட்சிக்காரர்கள் முறைத்து கொண்டு இருக்கின்றார்கள். அதனால், தெரிந்த எழுத்தாளர்கள், புத்தகங்கள் என்று படித்து கொண்டிருக்கின்றேன்.
பதிலளிநீக்குகதைதொகுப்பு என்றால் நிறைய வருகின்றது. மற்ற இரண்டும் கிடைத்தது.
பதிலளிநீக்குhttps://www.amazon.in/dp/B08CXBPPYN
நீக்குபாலகுமாரனின் நான்கு கதைகளைப்பற்றிய விமர்சனம் நன்றாக இருந்தது. என்னப்பொருத்தவரை, பாலாவின் படைப்புகளை மூன்று கட்டங்களாகப் பிரித்துவிடலாம். 1)தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு, எழுத்தே தொழிலாக வந்த ஆரம்பகாலம்- இரும்புக்குதிரைகள், தாயுமானவன், அகல்யா போனற காவியங்கள் வந்த காலம். 2) திரைத்துறையில் கால் பதித்து, பாக்கியராஜ் அவர்களிடம் இணை இயக்குநராக, திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய காலத்தில் எழுதிய கதைகள். 3) பாலகுமார சுவாமிகள் ஆன பிறகு எழுதியவை. முதல் காலகட்டம் இலக்கியப் பெருமை. 2-வது திரைப்பட வசன பெருமை- 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி'. மற்றும் புற்றீசல் போல வந்த பாக்கெட் சைஸ் நாவல்கள். 3-வது சரித்திர, புராணப் பெருமை. சரிதானா விமர்சனப் பிதாமகரே!.
பதிலளிநீக்குஅவர் எப்போது இந்த பிரவச்சன பாணியில் எழுத ஆரம்பித்தார் என்பதை அவரது பரம ரசிக வாசகர்தான் சொல்ல வேண்டும். கிண்டிலில் அவரது இன்னும் பல நாவல் எல்லாம் கிடைக்கின்றது. சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி, காந்தளூர்ச் சாலை பற்றி, அபிராமி பட்டர் பற்றி எல்லாம் எழுதிவைத்துள்ளார். படிக்க முடியவில்லை.
பதிலளிநீக்குபிதாமகரா, கொரானாவால் தாடி வளர்த்து கொண்டிருந்தாலும், அந்தளவிற்கு பெரிய தாடியும் இல்லை, அந்த அளவிற்கு வெள்ளை முடிகளும் இல்லை.