12 ஆகஸ்ட் 2020

மாயப் பெரு நதி - ஹரன் பிரசன்னா

"கவிஞர் ஹரன் பிரசன்னா" எழுதியுள்ள புதிய நாவல் மாயப் பெரு நதி. சாதேவி, புகைப்படங்களின் கதை என்று இரண்டு சிறுகதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். இது அவரின் முதல் நாவல். சாதேவி தொகுப்பை பற்றிய குறிப்பில், 

//தமிழகத்தில் தமிழை தாய் மொழியாய் கொண்டவர்களை விட பிற மொழியை வீட்டில் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எனது ஊரிலேயே வீட்டில் தமிழ் பேசுபவர்கள் குறைவுதான். கன்னடமும், தெலுங்கும் பேசுபவகளே அதிகம். அந்த மொழியும் தமிழுடன் கலந்து மிகவும் திரபடைந்து போயிருக்கும். பிராமணத்தமிழ் என்பதாக ஒன்று உண்டு, ஆனால் அந்த தமிழ் இந்த பிற மொழி பிராமணர்களிடம் இயல்பாக வருவது கிடையாது. என்னுடைய தமிழைக்கேட்டு பலருக்கு ஐயருன்னு சொல்லிட்டு அந்த பாஷை பேச மாட்டேங்கிறியே என்பார்கள். அது வராது, அந்தந்த ஊரின் வட்டார வழக்குதான் வாயில் வரும்.  அதே போல பல பழக்க வழக்கங்கள், பண்டிகைகள் எல்லாம் தமிழகத்து பிராமணர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே இருக்கும். உதாரணம், ஆடி மாதத்தில் யாரும் திருமணம் வைத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் தெலுங்கு, கன்னட பிராமணர்களுக்கு அம்மாவாசை தாண்டியது என்றால் அடுத்த மாதம் பிறந்ததாக கணக்கு. இந்த கூட்டத்தைப் பற்றி எந்த எழுத்தாளரும் பதிவு செய்ததில்லை. பிரசன்னா அதை ஓரளவிற்கு தீர்த்து வைக்கின்றார், சில கதைகள் மூலமாக மட்டும். சும்மா இப்படியும் ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்று தெரிந்து வைத்துக் கொள்ளமட்டும் பயன்படும்.// என்று எழுதியிருந்தேன். 

இந்த நாவலில் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார். 

புத்தக கண்காட்சி -  ஏதோ ஒரு காலத்தில் நடந்த நிகழ்வுகள் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து எழுதப்பட்ட நாவல். பதிப்பகத்தில் வேலை செய்யும் ஒருவர், தன்னுடைய நாவலை விற்பனைக்கு வைக்க கொண்டு வருகின்றார். அவர் எழுதிய நாவல், பண்டைய காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றியது. ஒரு மாத்வ குடும்ப சகோதரர்களின் கதை.

சென்னை புத்தக கண்காட்சிக்கு ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கின்றேன். காயிதே மில்லத் காலேஜில் என்று நினைவு. அவ்வளவு புத்தகங்களை பார்த்து குஷியாகி, கையில் இருந்த காசு, கூட வந்த நண்பனின் பையிலிருந்த காசு என்று அனைத்தையும் காலிசெய்து வந்தேன். அது ஒரு ஜாலியான விஷயம் வாங்குபவனுக்கு. விற்பவனுக்கு? அங்கேயே பத்து நாட்கள் இருக்கும் ஒருவனுக்கு எவ்வளவு கதைகளிருக்கும் சொல்ல. அதில் கொஞ்சமே கொஞ்சம்தான் சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். 

ஏற்கனவே பல சிறுகதைகள் எழுதியுள்ளதால் உரையாடல்கள் எளிமையாக, இயல்பாக உள்ளன. புத்தக கண்காட்சி பகுதிகளில் கிசுகிசு தேட வேண்டாம், நானும் தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க முடியவில்லை . பதிப்பகத்திற்கு வெறு பெயர் வைத்திருந்தால், கிசுகிசு கிளம்பும் என்று அவர் பதிப்பகத்தை ஒட்டிய பெயர் வைத்துவிட்டார் போல. 

புத்தக கண்காட்சியின் ஒரு எளிமையான சித்தரிப்பை தருகின்றார். சில விஷயங்கள் நம் கண்ணிலே படும், சிலது அங்கேயே இருப்பவர்களுக்கு தெரியும். உள்ளே நடக்கும் திருட்டு, ஊழல், வேலை செய்பவர்கள் படும் அவஸ்தைகள், புத்தக கண்காட்சிக்கு வரும் பிரபலங்கள் செய்யும் இம்சைகள் எல்லாம் நம் கண்ணில் அந்தளவிற்கு படாது. சிலவற்றை நானே பார்த்திருக்கின்றேன், மளிகை கடை லிஸ்டு போட்டது போல, லிஸ்டுடன் வந்து அதை மட்டும் வாங்கிவிட்டு மற்ற புத்தகங்களை திரும்பி கூட பார்க்காமல் போவது, கண்ணில் பட்ட ஸ்டால் உள்ளே நுழைந்து அள்ளி போட்டு கொண்டு போவது, சும்மாவே சுற்றி விட்டு போவது என்று பெங்களூர், மதுரையில் பார்த்துள்ளேன். 

ராகவன் தான் எழுதிய ஒரு நாவலை விற்க கண்காட்சிக்கு கொண்டு வருகின்றான். அந்த விற்பனைக்கு வந்த நாவல் இரண்டாம் பகுதியில். 

முதற்பகுதி கொஞ்சம் லேசாக போவது போல தோன்றும் போது, பிற்பகுதி கொஞ்சம் கனமாக இருக்கின்றது. ஒரு மாத்வ குடும்பத்தை பற்றியது. வேதம் படிக்க செல்லும் இரு சகோதரர்களின் கதை. இரண்டு சகோதரர்களின் குணங்களை முதல் சில பத்திகளிலே காட்டி செல்வது புத்திசாலித்தனம். 


ஆனந்தன், மாதவன் இரு சகோதரர்களின் கதைதான் நாவலாக வருகின்றது. கன்னடம் பேசும் பிராமணர்களின் ஒரு சிறிய சித்திரம். அவர்களுக்கு மடங்களுடன் இருக்கும் பிணைப்பு, அவர்களின் பூஜை முறை (சாளக்கிராமம், சாலிக்கிராமம் என்று புத்தகத்தில் இருக்கின்றது. குழம்பி விட்டேன் கொஞ்சம்), பந்தி முறை (தீர்த்தம் கொடுத்த பின் உண்பது), முந்திரை இட்டு கொள்வது (கோபி சந்தனம்), துறவற சடங்குகள், மடங்களின் சம்பிரதாயங்கள் என்று பல விஷயங்களை பற்றி சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். தாமிரபரணியும் ஒரு முக்கிய பாத்திரம்.   மேற்கொண்டு வாங்கி படித்து கொள்ளுங்கள்.

பல புத்தகங்களின் அட்டைப்படங்களைப் பற்றி எனக்கு குறை உண்டு. உள்ளடக்கத்தை ஒரு ட்ரெய்லர் போல காட்ட வேண்டும்.படிக்கும் போது எங்காவது அது நினைவில் வரவேண்டும். அதை அட்டைப்படத்தில் காட்ட வேண்டாமா? இப்புத்தகத்தின் அட்டைப்படம் சிறப்பாக உள்ளது, படிக்கும் போது அட்டைப்படம் மனதில் வராமல் போகாது.

முதல் நாவல் என்பது போல் தெரியவில்லை. சரளமான நடை, சித்தரிப்புகள், உரையாடல்கள் என்று அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றது. சில பழைய கால நடைமுறைகளை விரிவாகவே விவரித்துள்ளார். 

கனவு, மற்றொரு முக்கியபாத்திரம். பல விஷயங்களை கனவே இணைக்கின்றது. அதுவே கொஞ்சம் அயற்சியையும் தருகின்றது. பாத்திரங்கள் தங்கள் நினைவுகளிளும், கனவுகளிலும் முன்னும் பின்னும் போவது கொஞ்சம் சரியாக அமையவில்லை. பட்டென்று பின்னால் போய்விட்டு முன்னால் வருகின்ற போது படிக்கும் கோர்வை  தடை படுகின்றது. முதல் சில பக்கங்களை படிக்கும் போது கொஞ்சம் பா.ராகவனின் சமீபத்திய நாவல்கள் நினைவிற்கு வந்தன், போச்சுடா, ராகவன் ஶ்ரீனிவாசனும் கஞ்சா கிஞ்சா அடித்திருப்பானோ என்று நினைத்தேன். நல்ல வேளை, தெளிந்து விட்டான் சில பக்கங்களில்.

உள்நாவலில் வரும் இறுதி பகுதிகள் கொஞ்சம் பட படவென்று போவது போல தோன்றியது. இறுதி பகுதிகள் இன்னம் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம். பெரிய களம், அதில் அவர் எடுத்து கொண்ட கதை சிறியதாக உள்ளது. முதலில் வரும் சில பக்கங்களை தாண்டிவிட்டால், புத்தகம் உள்ளே இழுத்து கொள்ளும். ஒரே நாளில் படித்து விடலாம். புத்தக் கண்காட்சி, மாத்வர்கள் புதிய களம். 

களம் பெரிது, டெஸ்ட் மேட்சே ஆடலாம், அட்லீஸ் ஒன் டே மெட்ச். ஆனால் டி20 ஆடிவிட்டார். அதற்கான பலமும், பலவீனமும் சேர்ந்தே இருக்கின்றது.

கிண்டிலிலும் இங்கேயும் கிடைக்கின்றது. 

படம் அவர் ஃபேஸ்புக் பதிவில் எடுத்தது.

4 கருத்துகள்:

  1. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம். ஆழ்ந்த வாசிப்பு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. Thanks a lot RV.

    //(சாளக்கிராமம், சாலிக்கிராமம் என்று புத்தகத்தில் இருக்கின்றது.//

    Will fix this. :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம். சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி வாசிக்கப்போகும் நண்பர்களை ஊக்குவித்திருக்கிறீர்கள்.

    பிரசன்னாவின் களம் எழுத்து. அதை சிறப்பாய் செய்திருக்கிறார் என்பதை உங்கள் விமர்சனத்தின் மூலம் உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு