03 ஆகஸ்ட் 2020

கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்

சாரு நிவேதிதா அவரது தளத்தில் மிகவும் புகழ்ந்து எழுதியிருந்த ஒரு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ். அதிலும் குறிப்பாக இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தார். பொண்டாட்டி நாவலின் சூடு நினைவிலிருந்தாலும், இவர் பழைய எழுத்தாளர், அதனால் பரவாயில்லை என்று ஒரு எண்ணம். 

இந்நாவலை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முன் வசதியாக இருந்த பல குடும்பங்கள், கால மாற்றத்தை உள் வாங்கததால் தேய்ந்து போனன. அது போன்று கால மாற்றத்தை சந்திக்கும் ஒரு குடும்பத்தின் கதை. அந்த குடும்பத்தின் சமூக கதையோடு பெண்களின் கதைகளையும் சொல்லியிருக்கின்றார். இரண்டையும் ஒன்றாக சேர்த்ததில் குழம்பிவிட்டது. கதை உடைப்பெடுத்த காவிரி வெள்ளம் போல நாலாப்பக்கமும் ஓடுகின்றது. 

வாழ்ந்து கெட்ட ஒரு வீட்டின் கதையையும், வீட்டி வெவ்வேறு வகைகளில் அடைக்கப்பட்ட பெண்களின் கதைகளும் இணைந்து வருகிறது. ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு வீடு. காவிரி அலைகள் எப்போதும் சுவற்றில் மோதும் சத்தக் கேட்கும் ஒரு வீடு. வீட்டு வெளிச்சுவரில் ஏறி காவிரியில் குதிக்கலாம், ஈரம் பட்டு பட்டு பாசி படிந்த சுவர்கள். இதுதான் முதலில் நாவலில் உள்ளே ஈர்க்கும் கண்ணி. இறுதியில் அதுவே இறுக்கவும் செய்கின்றது. 

கரமுண்டார்வூடு, கரமுண்டார்கள் வீம்பு பிடித்தவர்கள், ப்ரிவ்யூ கவுன்சில் வரை போராடி, ஆற்றின் நடுவே இருந்த வீட்டை காப்பாற்றும் வீம்பு, சொத்தைவிற்று பெருமையை காக்கும் வீடு, அந்த வீட்டை தாங்கும் பெண்ணாக காத்தாயம்பா என்னும் பெண், வாரிசு. அனைவரும் அந்த பெண்ணின் வழி கொஞ்சம் கதை நகருகின்றது. அவளை திருமணம் செய்து கொள்ள வரும் தெலகராஜு, அவளை கட்டி கொடுத்தால் சொத்து விட்டு போகும் என்று முழிக்கும் குடும்பம். இறுதியில் என்னவானது என்பதை சொல்லி தள்ளியிருக்கின்றார். சொல்லுதல்தான், எழுதியது போல இல்லை.

அந்த ஆற்றின் நடுவே இருக்கும் வீடு, வித்தியாசமான தஞ்சை மொழி, சாதரண பெண்ணை அவதாரமாக்கினால் என்ன நடக்கும் என்பது போன்றவை நம்மை படிக்க வைக்கும். இறுதிப்பகுதியின் வெள்ளக்காட்சிகளும் விறுவிறுப்பாகத்தன் போகின்றது.

நாவலின் பெரிய பின்னடைவு, நாவல் ஒரு சித்திரத்தை தரவேயில்லை. அந்த வீட்டை முழுவதும் கற்பனை செய்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளம் தெருவில் ஒரு ஆள் உயரத்தில் போகின்றது, பின்னால் சுவர்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன, வீட்டில் வெள்ளத்திற்கு பயந்து அனைவரும் இருக்கின்றனர், காவிரி வீட்டு மூன்றாம் கட்டு வரை மூழ்கடித்துவிட்டது, வீட்டில் அண்டா அண்டாவாக சமையல் நடக்கின்றது. இது அத்தனையும் ஒரே சமயத்தில் நடப்பதை நினைக்க முடியவில்லை.

பாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, முதலில் அந்த வீட்டில் எத்தனை பேர்தான் இருக்கின்றார்கள் என்பதே குழப்பம், இறுதியில் அந்த வீட்டில் இருந்து பத்து இருபது ஆண்கள் இறந்தார்கள் என்று வருகின்றது. முதற்பகுதியில் தினமும் ஏதோ ஒரு விஷேஷம் நடக்கும் என்றும் வருகின்றது. ஒரு நூறு பேர் இருப்பார்கள் போல, அத்தனை பேரும் வெட்டியாக தின்று கொண்டு இருந்த வீடு இருந்தால் என்ன போனால் என்ன என்றுதான் தோன்றுகின்றது. முதல் பகுதியை படிக்கும் போது அந்த வீட்டில் ஒரே ஒரு பெண் வாரிசு என்பதாக தோன்றும், கடைசி பகுதிகளில் சாரை சாரையக பெண் வாரிசுகள் வருகின்றன. கதையின் அடித்தளமே கொஞ்சம் ஆடுகின்றது.

அடுத்து கதையின் ஆண் பெண் உறவுகள், மாமனும் மருமனும் ஒரே பெண்ணிடம் போகின்றார்கள், அந்த பெண்ணின் மகள், இவர்களுடன் போகின்றாள், பெண்கள் எல்லாம் தெலகராஜுவிடம் அடுத்தடுத்து விழுகின்றார்கள், அக்கா தங்கையை திருமணம் செய்து கொண்டு, இன்னொரு பெண்ணையும் அதே வீட்டில் கொண்டு வந்து வைத்து கொள்கின்றான். அடப் போங்கடா, காதுல பூ சுத்தாதீங்க என்று தோன்றுகின்றது.

நாவலில் வருவதை மேற்கோளாக கூட எடுத்து போட முடியாது.  உள்ளே போக வேண்டியதுதான். இப்போது எழுதினால் கண்டிப்பாக ஜெயில் வாசம் கன்பார்ம். அந்தளவிற்கு ஜாதி நாவலின் உள்ளே கலந்துள்ளது. 

இத்தனையும் மீறி நாவல் மனதில் நிற்க காரணம், அந்த ஆற்றின் நடுவில் ஒரு வீடு என்பதும், அதில் வரும் சம்பவ கோர்வைகளும். முதல் பகுதிகள், அந்த பேச்சு வழக்கில் இருப்பதால் உள்ளே போவது கொஞ்சம் கடினம். யார் கதையை சொல்கின்றார்கள் என்று அறிந்து கொள்ள திறமை வேண்டும் போல. சாருநிவேதிதா, பெண்ணின் அவஸ்தையை இவரைப்போல யாரும் சொல்லவில்லை என்று புகழ்ந்திருந்தார். ஓரளவிற்கு ஒத்து கொள்ளலாம், ஆனால் சொல்லியிருக்கும் முறை கொஞ்சம் அயர்ச்சியை தருகின்றது. 

பொறுமை இருந்தால் படிக்கலாம்.

2 கருத்துகள்:

  1. தஞ்சை பிரகாஷ் பற்றி என் அப்பா உட்பட எல்லோரும் மிக உயர்வாக சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரகாஷின் மேன்மை வெளிப்பட்டது நாவல்களை விடவும் சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் வாசிங்க.

      நீக்கு