09 செப்டம்பர் 2020

பதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்

தூர்வை, கூகை, சூல் ஆகிய நாவல்களை எழுதிய சோ.தர்மன் அவர்களின் அடுத்த நாவல் பதிமூனாவது மையவாடி.  ஜெயமோகன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. முன்னுரை நாவலை எந்த கோணத்திலிருந்து படிக்கலாம் என்பதை மெலிதாக காட்டுகின்றது. எனக்கென்னவோ, வேறு ஒரு கோணத்தில் யாரும் படித்துவிட வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கை போலதான் தோன்றுகின்றது. தமிழ்ஹிந்து நாவலைப்பற்றி மிக எதிர்மறையான விமர்சனத்தை எழுதியிருந்தது. நாவலைப் பற்றியல்ல நாவலாசிரியரைப் பற்றி.சூல் நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்ததும் இந்நாவலில் கிறிஸ்தவமத நிறுவனங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும், வழக்கம் போல அவருக்கு சங்கி பட்டம் கட்டிவிட்டார்கள். விட்டால் இனி கோவிலுக்கு செல்பவன், நெற்றியில் விபூதி வைப்பவன் என அனைவருக்கு இந்த பட்டம் கிடைக்கும். முட்டாள்கள்.

ஒரு சிறுவன் எப்படி ஒரு இளைஞனாக மாறுகின்றான் என்பதுதான் நாவல். கருத்தமுத்து உருளக்குடி கிராமத்திலிருந்து படிப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியே செல்கின்றான். பாடப்படிப்புடன் உலகத்தையும் கற்று கொள்கின்றான். சமூகம் அவனுக்கு கற்று கொடுக்கின்றது. அவனுக்கு வரும் குழப்பங்கள் அதிர்ச்சிகள் வழியாக அவன் மெதுவாக கற்று கொள்கின்றான். கல்வி, மதம், காமம், களவு, அன்பு எல்லாம் அவனுக்கு அனுபவங்களாக கிடைக்கின்றன. அதை அவன் எப்படி பயன்படுத்தி கொள்கின்றான்? எதைப் பெற்று கொள்கின்றான் என்பதுதான் நாவல்.

முன்னுரையில் ஜெயமோகன் கல்வியே ஒருவன் தன் தடைகளை விட்டு வெளியேறும் வழி என்பதே இந்நாவலின் அடிநாதம் என்பது போல சொல்கின்றார். ஓரளவுதான் அது சரி. கல்விதான்  ஒருவனை எவ்வித தளைகளிலிருந்தும் அகற்றும். சமூக ஏற்றதாழ்வோ, பொருளாதார ஏற்றதாழ்வோ அனைத்தும் அறிவின் முன் அடங்கிதான் போக வேண்டும். அது இந்நாவலின் மிக மெலிதான ஒரு சரடு. ஆனால் தலைப்பை பின்தொடர்ந்தால் நமக்கு கிடைப்பது நாவலின் முக்கிய சரடான நிறுவனமயமாக்கப்பட்ட மதமும், அதனுள் இருக்கும் முரண்கள், பிரச்சனைகளும்.

கருத்தமுத்துவின் மத நம்பிக்கையை ஒட்டிய குழப்பம் ஏன் அவன் அம்மா சிலநாட்களில் கோவிலுக்குள் வருவதில்லை என்பதில் ஆரம்பிக்கின்றது. அவனது நண்பன் நீங்கள் எல்லாம் சைத்தனை வணங்குபவர்கள் எனும் போது மறுத்து பேச முடிவதில்லை. அதே மனம் கடவுள் இல்லை என்பதையும் பின்னால் ஏற்று கொள்கின்றது. அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சக மனிதர்களுக்கு ஏதாவது செய்தால் போதும் என்று நிற்பதில் நாவல் முடிகின்றது. 

மதம், கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எப்போதும் வளரும் மனத்தில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். கேள்வி கேட்கும் வயது எதையும் கேள்வி கேட்கும். ஹிந்துமதம் கேள்விகளை அனுமதிக்கும் மதம். நான் சொல்வதை சொல்கின்றேன். நீ உன் அறிவால் ஆராய்ந்து முடிவு செய் என்றுதான் கண்ணனே சொல்கின்றான். ஹிந்துமதம் அனைவரும் ஒன்று, அனைவருக்கு ஒரே வழி என்று சொல்வதில்லை. ஒருவர் செல்லும் வழி, இன்னொருவருக்கு சாத்தியமில்லாமல் போகலாம். வரையாடு செல்லும் வழியில் மனிதன் செல்ல முடியாது, யானை செல்லும் வழியிலும் ஓரளவுதான் மனிதன் செல்ல முடியும். மீறினால் எங்காவது ஏதாவது உடையும். ஏன் செல்ல முடியாது என்று கேள்விக்கு சில சமயம் பதில் கிடைக்காத போது குழப்பம் வருகின்றது. அந்த குழப்பமே மற்றவர்களுக்கு சாதாகமாகி ஒரு சராசரி ஹிந்துவை குழப்ப முடிகின்றது.

பெங்களூரில் சிவாஜிநகரிலிருந்து இந்திராநகர் பஸ்ஸில் ஒரு நாள். எனக்கு பின்னால் ஒரு கிறிஸ்தவர். சிவாஜி நகர் சர்ச்சிற்கு வந்தவர் போல. பிங்க் கலர் சட்டை அதை உறுதி செய்தது. அருகிலிருந்தவரிடம் மிக சத்தமாக மதம் மாற்றுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். "நாம ஒவ்வொருத்தரும் குறைஞ்சது நாலு பேருக்காவது ஆண்டவரோட ப்ளெஸ்சிங்ஸ கொண்டு போகனும்". விடாமல். என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு நேரம்தான் அவரது ஆண்டவரைப் பற்றியே கேட்பது. பக்கத்து வரிசை சீட்டில் அமர்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெரியவர் அவரும் இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தார். என்னைப் பார்த்து ஒரு விதமான புன்னகை செய்தார் விடு விடு அவங்க அப்படித்தான் என்பது மாதிரி. கூட வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், ரயிலில் பார்த்த பத்தாவது நிமிடம் பைபிளை பற்றி பேச ஆரம்பித்த பெண்ணை பற்றி கூறும் போது இது எப்படி இவர்களால் எப்போதும் மதத்தை கட்டி அழமுடிகின்றது என்றுதான் தோன்றியது. நாவல் ஏன் என்று கொஞ்சம் காட்டுகின்றது. பல கல்வி சாலைகள் அவர்கள் கையில். அங்கு அவர்கள் மதத்தை பற்றி போதிக்கின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஒரு சர்ச்சுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி அதைப் பற்றி பேசாமல் இருப்பார்கள். 

ஆனால் ஹிந்துக்கள் மெதுவாக மதத்தை விட்டு விலகி செல்கின்றார்கள். முன்பு எல்லாம் ஒவ்வொரு சமூகத்தவர்களும் அவர்களுக்கு என்று தனிக்கோவில் திருவிழா என்று செய்வார்கள். அது இல்லாமல் ஒன்று கூடி வேறு ஏதாவது ஒரு பெரிய கோவில் திருவிழாவில் பங்கு வகிப்பார்கள். அனைத்தும் தேய்ந்து வருகின்றது. 

கருத்தமுத்து எங்கும் தன் மதத்தை பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லை, அதைப்பற்றி அதிகம் நினைப்பதில்லை. அவனைப் பொறுத்தவரை அவனது மத நம்பிக்கை எப்போதாவது கோவிலுக்கு போய் நெற்றியில் நீறு பூசுவதுடன் சரி. இதுதான் இன்று வரை ஒரு சராசரி ஹிந்து இளைஞனின் நிலை. அவனுடன் பள்ளியில் இணையும் ராயப்பன்; அவனுக்கு அவன் மதம் என்பது உடன் இருக்கும் ஒன்று. எப்போதும் அதைப் பற்றி நினைப்பவன். ஞாயிறு தோறும் சர்ச் போவது, பைபிள் படிப்பது என்று அவனுடன் கலந்த ஒன்று. மிக எளிதாக அவனால் நீங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்று முத்துவிடன் கூற முடிகின்றது, வா வந்து ஜபம் செய் என்று அழைக்க முடிகின்றது, தாயத்து வாங்க நினைப்பவனை இயேசுவின் சொரூபத்தை வாங்கி கழுத்தில் மாட்ட வைக்கின்றது. ராயப்பனின் குடும்பம் அதை அடுத்த கட்டம் நகர்த்துகின்றது. பைபிள் வாங்கி கொடுக்கின்றது. சர்ச்சுக்கு கூட்டிட்டு வா ஃபாதர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கட்டும் என்கின்றது. பல மதமாற்றத்தின் பிண்ணனி இப்படித்தான் இருக்கின்றது.

சிறுபான்மை கல்வி கூடங்களில் நடக்கும் பல ஊழல்களை கருத்தமுத்து வழியாக போட்டுடைக்கின்றார். சமீபகாலங்களில் பல சர்ச்களில் நடைபெறும் முறைகேடுகள், பாலியல் அத்துமீறல்கள் பற்றிய விஷயங்களை படிப்பதால் பெரிய அதிர்ச்சி இல்லை, தைரியமாக எழுத ஒருவர் இருக்கின்றாரே என்றுதான் தோன்றுகின்றது. 

துறவு என்பதன் விளக்கமே அனைத்தையும் துறப்பது. ஆனால் கிறிஸ்துவ மதத்தின் துறவிகள் மீது பல கடினமான விமர்சனங்களை வைக்கின்றார். துறவி எனபவனின் உணவு இவ்வளவு கைப்பிடிதான் இருக்க வேண்டும் என்று மகாபாரதம் கூறுகின்றது. மாணவனுக்கு மட்டுமே அளவில்லை. ஆனால் பாதிரியார்களின், கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கை முறை, சாதரணர்களை விட ஒரு படி மேலாக இருக்கின்றது. அவர்கள் எதை துறந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. குடும்பத்தை மட்டுமா? 

கருத்தமுத்துவுடன் நட்பாக இருக்கும் ஒரு கன்னியாஸ்திரி, தன் அங்கியை உதறி ஒரு சாதரண பெண்ணாக செல்வதில் நாவல் முடிவடைகின்றது. வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அவள் கருத்தமுத்துவிடம் கண்டு கொள்கின்றாள், இறுதியில் வரும் ஒரு பறவை அவளை பறக்க செய்கின்றது.

நாவலாசிரியர் கிறிஸ்துவ மதத்தை இழிவு செய்துவிட்டார் என்பது போல சில விமர்சனங்கள் கண்ணில் பட்டன. மேலோட்டமாக படிக்கும் போது இது கிறிஸ்துவமதத்தின் மீதான விமர்சன நாவல் என்றே தோன்றும். ஆனால் கிறிஸ்து மீதோ, பைபிள் மீதோ எவ்வித விமர்சனமும் இல்லை. மதத்தை ஒரு நிறுவனமாக வைத்து நடத்தப்படும் அட்டூழியங்களைத்தான் விமர்சித்துள்ளார். 

குறிப்பாக கத்தோலிக்கர்கள் சேவை என்ற பெயரில் மக்களிடமும், அரசிடமும், வெளிநாட்டவரிடமும் அடிக்கும் கொள்ளையைத்தான் மிக தைரியமாக விமர்சிக்கின்றது. கிறிஸ்துவ மதத்தின் மீது எவ்வித விமர்சனமும் இல்லை. பைபிள் வாசகங்களை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கின்றார். ஆனால் எங்கு தவறாக பயன்படுத்தவில்லை. சொல்லப்போனால் சில இடங்களில் அட பைபிளை படித்து பார்த்தால் கூட என்ன என்று தோன்றிவிட்டது (தீவிர மதமாற்றிகள் படித்தால் ஒரு புத்தகம் பார்சல் அனுப்பிவிட போகின்றார்கள். வேண்டாம். வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் படிக்கவே ஆயுள் போதாது. அவ்வளவு ஏன் பாரதத்தையும், ராமாயணத்தையும் படிக்கவே ஆயுள் போதாது என்னும் போது, இது எதுக்கு என்ற எண்ணம் உடனே வந்துவிட்டது).

சோ. தர்மனின் மிக எளிமையான மொழி இது ஒரு சாதரணமான, யதார்த்தமான நாவல் என்பது போன்ற பாவனையை காட்டி பல விஷயங்களை ஒளித்து வைத்து கொள்கின்றது. தோண்டி எடுத்து கொள்வது வாசகனின் பொறுப்பு. தலைப்பே சாட்சி.


1 கருத்து: