05 பிப்ரவரி 2021

சண்டை (அவர் போடாதது)

 நமச்சிவாயமும், ஐயப்பனும் பண்டு கடை பெஞ்சில் அமர்ந்து கொண்டு சிய்யத்தை சாப்பிட்டு முடித்து விட்டு டீக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். 

எதிரில் குமார் வருவதை முதலில் ஐயப்பன்தான் பார்த்தார், “பண்டு இன்னம் ஒரு ரெண்டு காராச்சிய்யம் கொண்டு வா” என்றார்.


அவர் கொண்டு வரவும் குமார் அருகில் வரவும் சரியாக இருந்தது. நேற்றைய தினபூமியில் வைக்கப்பட்ட சிய்யத்தை கையில் வாங்கியபடி, “என்ன செட்டியாரே, இன்னும் பேப்பர்ல தர. தேனியில பாரு, ஒரு தட்டுல வச்சி நல்ல சட்டினி  ஊத்தி தரான். பாளையம் பைபாஸ்ல எலையில வச்சி சட்னி ஊத்தி தரான்” என்றபடி வடிசட்டியில்  இருந்ததிலேயே பெரிய சிய்யத்தையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான். 


“அங்க எல்லாம் சாப்டு முடிச்ச உடனே காசு தரணும் இல்ல” என்றார் ஐயப்பன்


அதை கண்டு கொள்ளாத குமார், “சித்தப்பா வழக்கம் போல இங்கதான் இருப்பன்னு தெரிஞ்சிதான் வந்தேன்.” “நம்ம மயிலு சித்தப்பா பொண்ணுக்கு கல்யாணம் தெரியுமுல்ல “


“ஆமாம், தெரியும். இப்பதான் வந்து பத்திரிக்கை எல்லாம் தந்திட்டு போறாங்க. உங்கக்கா கொழுந்தன் தான் மாப்பிள்ளை.”


“போகப்போறியா”


“போகாம! பையன் வீட்டுக்காரங்க உன் சித்தப்பன் சம்பந்தி, பொண்ணு வீடு பங்காளி.” என்றார் ஐயப்பன்.


“போன மாசம் அவங்க பேசுனது எல்லாம் மறந்து போச்சா சித்தப்பா”


“என்ன பேசுனாங்க”


“பாத்தியா மாமா, எங்க சித்தப்பாவ கொழந்த மனசு. சூது வாதே தெரியாது”


“ஆமா தெரியாதுதான்” என்றார் ஐயப்பன்


“சித்தப்பா, நம்மள  என்ன திட்டு திட்டுனாங்க”


“அவன எங்க திட்டுனாங்க, உன்னதான் திட்டுனாங்க. “


“என்ன திட்டுனா என்ன, எங்க சித்தப்பாவ திட்டுனா என்ன. என்ன அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எங்க சித்தப்பாவ சொன்னதாதான் எனக்கு தோணுச்சி. அதான் அவ்வளவு கோபமும் வந்துச்சு”


“கண்ணுல தண்ணி விட்ட மெதிச்சுருவேன்” என்று நமச்சிவாயம் காதில் முணுமுணுத்தார் ஐயப்பன்.


“விடுப்பா ஏதோ அப்ப அவனுக்கு கோபம்” என்று குமாரின் தோளில் தட்டினார் நமச்சிவாயம்.


“இல்ல சித்தப்பா எனக்கு விட்டுப்போச்சு, எப்படி கல்யாணதுக்கு வந்து அவங்க முகத்த பாக்குறது. அங்க  வந்து என்ன ஏதாவது சொல்லிட்டா நீ தாங்குவியா”


“எல்லாம் அவன் தாங்குவான்”


“மாமா, இது நாங்க ஒரே ரத்தம் பேசிட்டு இருக்கோம் ”


நமச்சிவாயம் திருதிருவென முழித்து கொண்டிருந்தார்


இறங்கிய குரலில், “என்ன பண்ணனும்கிற” என்றார் நமச்சிவாயம்

 

“பேசாம எங்கூட வா சித்தப்பா”


“வேண்டாம்” என்றார் ஐயப்பன்


தயங்கிய நமச்சிவாயத்தை பார்த்து “சரி சித்தப்பா என் மேல இவ்வளவுதான் நம்பிக்கையா”


“ஆமாம்” என்றார் ஐயப்பன்


தயங்கிய நமச்சிவாயத்தை பார்த்தவாரே நடக்க ஆரம்பித்தான் குமார்


கொஞ்சதூரம் போய் அவன் கண்ணை துடைத்து கொண்டதை பார்த்தார் நமச்சிவாயம். “ஒன்னும் பதறாத தூசி விழுந்திருக்கும்” என்றார் ஐயப்பன், ஆனால் நமச்சிவாயம் வேக வேகமாக நடந்து அவனுடன் சேர்ந்து கொண்டார்.


“பண்டு ஒரு டீ கேன்சல்”


பானுவின் வீட்டில்


“வாடா, வா சித்தப்பா என்ன திடீர்னு”


வழக்கமான பேச்சிற்கு பின்னால்


“உனக்கே தெரியும் மயிலு சித்தப்பாக்கும் எங்களுக்கும் இப்ப கொஞ்சம் கோப்பு சரியில்ல”


“அதனால”


“அவங்க முகத்துல கூட முழிக்கக்கூடாதுன்னு இருக்கோம்”


“அதுக்கு”


“நீங்க அங்க பொண்ணு எடுத்து இருக்கீங்க, அத ஒன்னும் சொல்ல முடியாது. ரஞ்சனி தங்கமான பிள்ளதான், இருந்தாலும் நம்ம சித்தப்பாவ அவரு அந்த பேச்சு பேசிட்டாரு.”


நமச்சிவாயம் பரிதாபமாக பானுவைப் பார்த்தார்


“இப்ப என்ன அதுக்கு, இந்த மாதிரி விசேஷமே அது எல்லாத்தையும் மறந்து ஜாலியா இருக்கத்தான”


“அக்கா, இனி எங்களுக்கு அவங்களுக்கும் இனி ஒட்டவே ஒட்டாது. என்ன சித்தப்பா”


நமச்சிவாயம் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்


“கிழக்க உதிக்கிற சூரியன் மேக்க உதிச்சாலும் நாங்க ஒன்னு சேர முடியாது.நான் ஒத்துக்கிட்டா கூட சித்தப்பா ஒத்துக்க மாட்டார், சித்தப்பா ஒத்துகிட்டா கூட நான் ஒத்துக்க மாட்டேன்.”


“பானு, டேய் நீ என்ன சின்னப்பையன், அப்பா வந்து சொல்லட்டும். நீ எல்லாம் இதுல் தலையிடாத”


“சித்தப்பா நான் தலையிடக்கூடாதாம், நான் என்ன சின்ன பையனா சொல்லு, எனக்கும் வயசாகல”


“ஆமாம்மா அவனுக்கும் வயசாச்சுல்ல”


“பாத்தியா சித்தப்பாவே சொல்லிட்டாரு, நாங்க வர மாட்டோம். உனக்கு வேண்டியது என்ன சேலை வேட்டி, நீ கேட்ட ஐஞ்சு லட்ச ரூபா அதுதான. இங்க வந்து வீட்ல கொடுக்குறோம்”


“ஏண்டா, உன் சேலை வேட்டிக்குதான் இங்க வீங்கிப் போய் கிடக்கோமா. வந்து சபைல மரியாதையா தரணும் இல்ல ஒன்னும் கிழிக்க வேண்டாம்.”


“சித்தப்பா அவளுக்கு ஒன்னும் வேண்டாமாம், வா போகலாம்.”


“டேய், இருடா அவசரப்படாத”


“வேண்டாம் சித்தப்பா, இனிமே இருந்தா நீ ஏதாவது கோவத்துல பேசிடுவ, பிரச்சன பெருசாகிடும். வா போகலாம். “


“அப்ப கண்டிப்பா வரமாட்டீங்களா”


“சூரியன் மேக்க....”


“மூடிட்டு கிளம்பு”


“வா சித்தப்பா, சித்தப்பா சொன்னபுறம் நான் வருவேனா”


ஒரு மாதம் கழித்து கல்யாண நாள் காலையில்


ஐயப்பன் வேக வேகமாக உள்ளே நுழைந்து சாப்பிட அமர்ந்த நமச்சிவாயத்தை எழுப்பினார். "முதல்ல வேட்டி சட்டையை மாத்திட்டு கல்யாணதுக்கு கிளம்பு"


“வரல, வந்தா குமார் வருத்தப்படுவான்”


“அவன் அங்க முதல் வரிசைல உக்காந்து போற வர பொண்ணுங்களை விசாரிச்சிட்டு இருக்கான்”


“பரவாயில்லையே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா வந்திருச்சி போல”


“டேய் நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற.”


ஒரு வழியாக கிளப்பி கொண்டு சேர்த்தார்.பந்தி முடிந்து, ஐயப்பன் குமாரிடம்


"டேய், சண்டைய சேர்ந்து போட்டுட்டு, இவன் விட்டுட்டு நீ மட்டும் வந்துட்ட"


"இல்ல மாமா, நேத்து காலைல மயிலு சித்தப்பாவை கோயில்ல பாத்தேன். அந்த வேட்டி சட்டைல பாக்க எங்க சித்தப்பாவ பாக்குற மாதிரியே இருந்தது. என்ன இருந்தாலும் ஒரே ரத்தம் இல்லையா"


“சரியான நரி குளுப்பாட்டிடா இவன். பானு வந்து பணம் ஏதும் வேண்டாம். சபைல நீங்க வந்தா போதும்னு சொன்னதால வந்திருக்கான்.”


“ஏண்டா சொல்லிட்டு வந்திருக்க கூடாது, நானும் வந்திருப்பேன் இல்ல.”


“எப்படியும் நீ வருவன்னு தெரியும், இப்ப பாரு வந்துட்ட இல்ல. மனசு கேக்கல இல்ல, என் சித்தப்பாவ பத்தி எனக்கு தெரியாதா என்ன மாமா”


“ஆமாமா, உனக்குதான்டா நல்லா தெரியுது” என்று தலையசைத்தார் ஐயப்பன்


ஒரு வாரம் கழித்து


“பானு அந்த ஐஞ்சு லட்சத்துக்கு பதிலா பின்னாடி இருக்குற நம்ம இடத்துல நீ ஒரு வீட்ட கட்டிக்க. பத்திரம் பதிஞ்சு தர்றேன்”


“சரிப்பா, குமாருக்கு இது பிடிக்கலையோ. கேட்டும் கேக்காத மாதிரி போறான்”


“உன் சித்தப்பன் வீட்டுக்குதான், இளிச்சவாயன் இருக்கான் இல்ல”


நமச்சிவாயம் வீட்டில்


“ஏங்க, உங்க அருமை புள்ள வந்து உக்காந்திருக்கான் வாங்க" என்ற குரல் நமச்சிவாயத்தை கூடத்திற்கு அழைத்து வந்தது.


2 கருத்துகள்:

  1. /“கண்ணுல தண்ணி விட்ட மெதிச்சுருவேன்” என்று நமச்சிவாயம் காதில் முணுமுணுத்தார் ஐயப்பன்.//


    அந்த எரிச்சல் எனக்கும் வந்தது!  ஆனால் பின்னோக்கிப் போகும்போது இதெல்லாம் அவருக்கு புதிதாகத்தானே இருக்க வேண்டும்! குள்ளநரி குமார்.

    பதிலளிநீக்கு