01 பிப்ரவரி 2021

கையெழுத்து (அவர் போடாதது) - குட்டி கதை

 நமச்சிவாயம் கையில் தபால்க்காரர் தந்த கடிதத்தை வைத்து கொண்டு முழித்துக் கொண்டிருந்தார். 

"சுத்த நச்சு பிடிச்ச மழையப்பா" என்றபடி உள்ளே வந்தவர் நமச்சிவாயத்தின் நண்பர் ஐயப்பன். "என்னப்பா லெட்டர்".


"இந்தா நீயே படிச்சி என்ன எழவுன்னு சொல்லு, எனக்கு ஒன்னும் புரியல."


ஐயப்பன் படித்து முடித்துவிட்டு, "ஒன்னுமில்லப்பா இன்னைக்கி இருந்து நீ நமச்சிவாயம் இல்ல, சின்னப்பா"


"அதுதான் ஊருக்கே தெரியுமே"


"ஆமா, ஆனா அது அரசாங்கத்துல செல்லாது இல்ல. இப்ப அரசாங்கமே உன் பேர சின்னப்பான்னு மாத்தி அரசாங்க இதழ்ல வந்துடிச்சி அம்புட்டுதான். நீ எதுக்குப்பா பேர மாத்த எழுதி கொடுத்த"


"நா எதுக்குயா எழுதிக் கொடுக்கணும்"


"சமீபத்துல எதுலயாவது கையெழுத்து போட்டியா, ஆதார் அது இதுன்னு" 


"இல்லயா, இப்படி பேர மாத்தாலாம்னே எனக்கு தெரியாதேப்பா. குமார் என் ஆதார் கார்டு வாங்கிட்டு போனான். நம்ம பெரிய வீட்ட விக்கனும் அதுக்காக ஏதோ வேணும்னு வாங்கிட்டு போனான். நீ கூட சொன்னியே என் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாதுன்னு."


"ஆமா இப்பவும் சொல்றேன், உன் கையெழுத்து இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. அவனுக்கு போன போடு. ஸ்பீக்கர்ல போடு."


"டேய் குமாரு, என்னடா என் பேரு என்னவோ மாறியிருகுன்னு தபால் வந்திருக்கு."


"வந்திருச்சா சித்தப்பா, அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு. ஒரு வேலை சரியா நடக்குதா இந்த அரசாங்கத்துல."


"யார கேட்டு என் பேர மாத்துன, எதுக்கு மாத்துன"


"இதுவா, அது ஒன்னுமில்ல சின்னப்பா. பங்கு பிரிச்சோமில்ல அப்ப உன் பேர பத்திரம் எழுதும் போது பேச்சு வழக்குல நான் உன் பேர எல்லா இடத்துலயும் சின்னப்பான்னே சொல்லி, அப்படியே ரெஜிஸ்ட்டரும் ஆயிடுச்சு.அத யாரும் கவனிக்கல. இப்ப அந்த வீட்ட விக்க போனா, யாரு சின்னப்பான்னு கேக்குராய்ங்க. அதான் பேர மாத்திட்டேன்."


"என் கையெழுத்து இல்லாம இது எல்லாம் பண்ண முடியாது, நீ என் கையெழுத்த போட்டுட்டன்னு சொல்றான் ஐயப்பன். "


"என்ன சின்னப்பா, இப்டி கேக்குறாரு உங்காளு. நான் போடுவனா. அப்படிப்பட்ட ஆளா நானு."


"பின்ன எப்படிடா மாத்துன. "


"ப்ரோக்கர்தான் போட்டான். "


"நீ போடல ப்ரோக்கர் போட்டான்,அத நீ பெருமையா வேற சொல்ற. கர்மம்டா. எவன கேட்டு என் பேர நீ மாத்துன"


"சித்தப்பா உன் நல்லதுக்குதான நான் மாத்துனேன், அதுக்கு போய் குதிக்கிறயே."


"ஏண்டா, கையெழுத்த போர்ஜரி பண்ணிட்டு, அத கேட்டா என்ன தப்புங்கிற. ஒருத்தன் கையெழுத்த இன்னொருத்தன் போடறது பேரு வேறடா. இதுக்கு எத்தன வருஷம் தெரியுமா. இன்னம் வேற எதுல எல்லாம் என் கையெழுத்த போட்டிருக்க. "


"என்ன விட்டா ரொம்ப குதிக்கிற, நான் என்ன உன் செக் புக்லயா கையெழுத்து போட்டேன். இல்ல நீதா உன் பாஸ்புக்கு, செக் புக்கு எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்து வச்சிருக்கியா. சும்மா பேசிட்டு இருக்க.நீ தான் படிக்கல , அந்த ஐயப்பனுக்கு அறிவில்ல. இப்ப என்ன நடந்து போச்சுன்னு கத்துற.  ஊருக்குள்ள எல்லாருக்கும் நீ சின்னப்பாதான். நியாயமா உன்  பேர நீதான் மாத்தியிருக்கனும். கூடவே இருக்காரே ஐயப்பன் சொன்னாரா அவரு. "


"டேய் நான் எதுக்குடா மாத்தனும், என்னக்கு என்ன தேவை மயிரு இருக்கு. "


"மாத்துனதுக்கு எம்புட்டு பணம் செலவாச்சு தெரியுமா, அத கூட உன்கிட்ட கேக்கலயே நான். அதுக்கு நீ காட்ற நன்றி இதுதானா. எங்கப்பா கையெழுத்த போட்ட எத்தன தடவ பணம் எடுத்துருப்பேன், எங்கப்பா ஒரு கேள்வி கேட்டிருப்பாரா என்ன. அதவிடு எத்தன தடவ என் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல எங்கம்மா கையெழுத்த போட்டிருக்கேன். என் கட்சி சார்பா அனுப்புற மனுல எத்தன கையெழுத்த போட்டுருப்பேன், எத்தன் மொட்ட கடுதாசில கையெழுத்து போட்டிருப்பேன். நீ என்னடான்னா ஒரு பேர மாத்துனதுக்கு இந்த பேச்சு பேசுற. "


"டேய் அது எல்லாமே ஃப்ராடுத்தனம்தான்டா"


"எல்லாம் என் கிரகம். நல்லது பண்ண போய் இப்ப நா பேச்சு வாங்கிட்டு இருக்கேன். நம்ம சித்தப்பா இப்படி ரெண்டு பேரோட இருக்காரே, ஒரு பேருக்கு ரெக்கார்டே கிடையாதே அப்படின்னு மனசு நொந்து பல நாள் தூக்கம் வந்ததே இல்ல. அவருக்கு ஏதாவது நல்லது பண்ணனும் பண்ணனும்னு மனசு கிடந்து தவிச்சது எனக்குதான் தெரியும். சரி ஒரு 5000 செலவானாலும் பரவாயில்ல அவருக்கு பேர மாத்தி நல்லது பண்ணனும் நினைச்சா இப்படி பேசிட்டயே. உன் கையெழுத்த போட எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா. எனக்கே அவ்வளவு கஷ்டமாயிருக்கும் போது, உன் வயசுக்கு அது எவ்வளவு கஷ்டம், எப்படி உன் கையெழுத்த போடுவ. அத எல்லாம் நினச்சு பாரு உனக்கே தெரியும். இப்படி இருக்க உன் கிட்ட வந்து உன்ன கஷ்டப்படுத்துவனா நானு."


"ஒரு சின்ன கையெழுத்துக்காக உன்ன கார் வச்சி கூட்டிட்டு போய கஷ்டப்படுத்த முடியுமா, பாவம் இல்ல. வயசான காலத்துல நீ எப்படி கார்ல வருவ. நீயே இங்க சோத்துக்கு கஷ்டப்பட்டுட்டு இருக்க. இதுக்கு மேல கார்ல போற கஷ்டம் வேறயா. நீ வேற நாங்க வேறயா சித்தப்பா. என்னதான் சொத்து பிரிக்கும் போது உனக்கு கம்மியா கொடுத்தாலும், உன் மேல பாசத்த கம்மியாவா கொடுத்தோம். வருஷ வருஷாவரும் எங்களுக்கு வர பொங்கல் வேட்டிய உனக்குதான் தரோம். "


"யோவ் ஐயப்பா அழுகுறான்யா, டேய் வேணான்டா"


"விடு மறுபடியும் நான் மாத்தி கொடுத்துடறேன். ஏற்கன்வே மாத்தினதுக்கும், இப்ப மறுபடியும் மாத்துறதுக்கும் சேத்து ஒரு பத்தாயிரம் கொடு போது. நீ கையெழுத்து கூட போட வேண்டாம்." 


போனை வைத்த நமச்சிவாயம் கண்ணில் நீர். 


நமச்சிவாயம் "யோவ், பாவம்யா அவன் என் நல்லதுக்குதான் பண்ணியிருக்கான் போலய்யா"


ஐய்யப்பன் அவஸ்தையாய் தலையை அசைத்தர்.




1 கருத்து: