ஐயப்பன் ஊருக்கு போயிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நமச்சிவாயத்தை அவர் மனைவியின் குரல் எழுப்பி கூடத்திற்கு அழைத்து வந்தது.
கூடத்தில் ஒரு ஓரமாக ஒரு உருவம், தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தது. குமார்
"என்ன குமாரு, இந்த நேரத்துல இங்க, ஏய் ஏண்டா அழுவுற, என்னடா ஆச்சு"
"சித்தப்பா. நீயே சொல்லு நான் எம்புட்டு தூரம் நியாய தர்மத்திற்கு பயந்தவன், ஏதாவது அநியாயமா பேசி பாத்திருக்கியா, சொல்லு சித்தப்பா"
"இப்ப எதுக்குடா அது எல்லாம்"
"சொல்லு சித்தப்பா, நீதான் நம்ம வீட்லயே மனசுல உள்ளத பட்டுன்னு சொல்ற ஆளு, சொல்லு சித்தப்பா"
நமச்சிவாயம் மனைவியை ஏறிட்டு பார்த்தார், அவர் முகத்திலிருந்த கேலியை கண்டு கோபம் வந்தவராக "உன்னவிட நியாயஸ்தன் யாருடா, எல்லாருக்கும் எது நல்லதுன்னு பாத்து பாத்து செய்வ, அதுக்கு என்ன இப்ப"
"அப்படி பேசுனதுக்குதான் எங்கப்பா என்ன பயங்கரமா வஞ்சிபுட்டாரு"
"அவன் கிடக்கான் வெண்ணையாண்டி. ஒரு எழவுக்கும் பிரயோசனம் கிடையாது."
குமார் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.
"ஏய் இவனுக்கு கொஞ்சம் காபி, டீ எதாவது கொடு"
"வேண்டாம் சித்தப்பா, நீயே வீட்ல காபி, டீ சாப்டறது இல்லன்னு எனக்கு தெரியாதா" என்று குமார் சொன்னதை கேட்டு, நமச்சிவாயத்தின் மனைவி கடும் கோபத்தில் வெளியே சென்றார்.
"இப்ப சொல்லு, அவள வெளிய அனுப்பதான அப்படி சொன்ன, எனக்கு தெரியும். இப்ப தைரியமா சொல்லு"
"இல்ல சித்தப்பா நிஜமாவே காபி எல்லாம் தயவுசெய்து வேண்டாம்"
"சரி,தொலையுது. சொல்லு என்ன ஆச்சு"
"பானு இருக்கா இல்ல, அவளுக்கு நம்ம வீட்டுக்கு பின்னாடி இருந்த காலி இடத்தை கொடுத்து வீடு கட்டிக்க சொல்லியிருக்காரு அப்பா"
"நல்லதுதான. பாவம் கட்டிக்கட்டும். நம்ம பொண்ணு நம்ம பக்கத்துலயே இருப்பா இல்ல"
"என்ன சித்தப்பா நீயும் இப்படி லூசாட்டம் பேசுற"
"என்னடா"
"உங்க அக்கா தங்கச்சிகளுக்கு எல்லாம் இப்படித்தான் நிலம் கொடுத்தீங்களா. இவளுக்கு மட்டும் என்ன"
"அவங்க எல்லாம் வெளியூர்ல இருக்காங்க, அவங்களுக்கு கொடுத்து என்ன பண்ண"
"ஏன் கொடுத்தா வந்து வீடு கட்டிட்டு இருக்க மாட்டாங்களா"
"இப்ப என்ன பண்ணனும்"
"கொடுத்தாம் எல்லாருக்கும் கொடுக்கனும், இல்லன்னா யாருக்கும் கிடையாது, அதுதான நியாயம்"
"சரி எல்லாருக்கும் கொடுப்போம் அவ்வளவுதான"
குமார், கொஞ்சம் அதிர்ச்சியாகி, "அப்படி இல்ல சித்தப்பா, அத்தைங்களுக்கு தரல இல்ல, அதனால இவளுக்கு தரக்கூடாது. அவ்வளவுதான்"
"சரிடா, அவங்களுக்கு கொடுப்போம். அவ்வளவுதான"
"அதுதான் சித்தப்பா, இப்ப அத்தைங்களுக்கு தரல இல்ல, நாளைக்கேவே தரப் போறோம். இல்ல இல்ல. அதனால இவளுக்கு இப்ப தரக் கூடாது. கொடுத்தா அத்தைங்க மனசு கஷ்டப்படும் இல்ல"
மறுபடியும் ஏதோ சொல்ல வந்த நமச்சிவாயம் குழம்பி "சரிதான், இப்ப தரவேண்டாம்."
தெளிந்த முகத்துடன் "இதுக்குதான் சித்தப்பா நீ வேணும்னு சொல்றது, சண்டை போட்டுட்டு வந்துட்டேன். ஒரு ரெண்டு நாள் இங்க தங்கிக்கவா"
"டேய் என்ன இப்படி கேட்டுட்ட, சத்யா ரூம் காலியாத்தான் இருக்கு போய் தூங்கு".
"கொஞ்சம் வேலை இருக்கு, லேட்டா வருவேன், நேரா மாடிக்கு போய்டறேன். சாப்பாடு கண்டிப்பா வேணாம் "
அடுத்தநாள் காலை, குமார் வீட்டில் இல்லை
ஐயப்பன் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.
ஐயப்பன் வந்தவுடன் "வா அய்யப்பா அண்ணன் வீட்டு வரை போய்ட்டு வரலாம்" என்றார் நமச்சிவாயம்.
"என்னய்யா புது பஞ்சாயாத்தா?"
"வாப்பா, நீ இருந்தாதான் எனக்கு பேச வரும்"
"நான் சொல்ற எதையும் நீ கேக்க மாட்ட அப்புறம் என்ன புண்ணாக்குக்கு நான்”
“சும்மா ஒரு துணைக்குதான்”
“நீ உங்கண்ணன் பையன் கூட பேசுறத பாத்தா எனக்கு பத்திகிட்டு வரும்"
"சே, நல்லவன்பா அவன், உனக்கு என்னவோ அவன பிடிக்கல விடு"
அய்யனார் வீட்டில்
"வாங்க சித்தப்பா, பொறந்த வீட்ல நல்ல மரியாதை வாங்கி தந்த" என்ற சடைத்தபடி வரவேற்றாள் பானு, குமாரின் அக்கா
ஐயப்பன் நமச்சிவாயத்தை பார்த்து “தேவையா உனக்கு” என்று பழிப்பு காட்டினார்.
"இல்லம்மா அப்ப ஏதோ ஒரு குழப்பம். ஆனா கரெக்ட்டா தாலி கட்டும் போது வந்துட்டேன் இல்ல"
"இப்ப என்ன, குமாருக்கு சப்போர்ட்டா வந்தியா"
"அவன் சொல்றதும் சரிதானம்மா"
"என்ன சரி, எனக்கு இடம் தர்றதுல இவனுக்கு என்ன நோக்காடு, எங்கய்யா எனக்கு தர்றாரு. இந்த பயலுக்கு என்ன கொள்ள"
"டேய், நான் சொந்தமா சம்பாரிச்சு வாங்குன இடத்துல இவளுக்கு கொஞ்சம் தந்தா ஏண்டா அவனுக்கு என்ன வந்தது " என்றார் அய்யனார்
ஐயப்பன், நமச்சிவாயதின் காதுகளில் "இது அவங்க குடும்ப உள் விவகாரம், உங்கப்பன் சொத்து கூட இல்ல, பேசாம விட்டுட்டு வா"
"அப்படியா, அப்ப சரி போ" என்றார் நமச்சிவாயம்
"என்ன சரியா, என்ன சித்தப்பா இப்படி சொல்லிட்ட" என்றபடி உள்ளேயிருந்து வந்தான் குமார்.
ஐயப்பன், "என்னவோ அவன் கோவிச்சிட்டு வந்தா, சாப்பிடவே இல்ல, அழுதான் உருண்டான்னு சொன்ன, அவன் என்னடான்ன நல்லா, தின்னு தூங்கி எந்திரிச்சி வாரவன் மாதிரி வாரான்"
"தெரியலப்பா, நேத்து நைட் என் வீட்லதான் தூங்கனும்னு சொன்னான். அவனே சமாதனமாகி வந்துட்டான் போல"
"சரிதான்" என்று இழுத்தார் ஐயப்பன்
“நீதான் நேத்து சொன்னியே சித்தப்பா, இப்பவந்து ப்ளேட்ட மாத்துரயே. நேத்து நீ சொன்னத நம்பி எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு வந்தா இப்ப சரிதான்னு போற”
“நான் என்ன சொன்னேன் நேத்து”
“இவளுக்கு கொடுத்து அத்தைங்களுக்கு கொடுக்கலன்னா அவங்களுக்கு சடவாகிப் போய்டும்னு சொன்னியில்ல”
“நீதான சொன்ன”
“நானா, அவங்க வருத்தப்படுவாங்களான்னு கேட்டதுக்கு நீதான சித்தப்பா சொன்ன அவங்க வருத்தப்படுவாங்கன்னு. உனக்கு உன் அக்கா,தங்கச்சிங்க மேல அவ்வளவு பாசம் இருக்கு. எங்கப்பாவுக்கு அந்தளவுக்கு இல்லதான்.”
“டேய், எனக்கு இல்லன்னு உனக்கு தெரியுமா” என்றார் அய்யனார்
“அப்படி இருந்தா, நீ சித்தப்பா வந்து சொல்ற வரைக்கும் காத்திட்டு இருந்திருப்பியா, இந்நேரம் அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு தந்திருக்க மாட்ட. உனக்கு அந்த ஆசையே இல்ல”
“ஆமாடா எனக்கு இல்ல, நீதான் பெரிய நியாய்ஸ்தன். கொடேன், உன் அத்தைங்களுக்கு, அக்காவுக்கு எல்லாம்”
“நான் ஏன் கொடுக்கனும், நீதான வீட்டுக்கு பெருசு. என்ன எதுக்கு இழுக்குற”
“பேச்சு பேசுறயில்ல, நீயே எல்லாம் பண்ணப்பா. இந்த சொத்து விவகாரமே வேண்டாம் எனக்கு. நீயாச்சு, உன் சித்தப்பனாச்சு, அத்தைங்களாச்சு. யார் யார்க்கு என்ன என்ன வேணுமோ கொடு”
ஐயப்பன் நமச்சிவாயத்திடம் மெதுவாக சொன்னார் "உடனே எதுவும் ஒத்துக்காத, யாருக்கு என்னன்னு யோசிச்சி நிதானமா முடிவு பண்ணலாம்"
“சித்தப்பா நம்ம குடும்பத்துல நியாஸ்தன் யாரு சித்தப்பா நீயே முடிவு பண்ணு. யாரு பங்க பிரிச்சி கரெக்ட்டா தருவாங்கன்னு நீயே சொல்லு. நீதா அடிக்கடி பேச்ச மாத்தத ஆள்”
ஐயப்பன், "உங்கண்ணன் பேர சொல்லு"
நமச்சிவாயம், “நேத்து சொன்னதுதான் இன்னைக்கு நீதான் எல்லாருக்கும் நல்லது என்னனு பாத்து பண்ணுவ”
ஐயப்பன், "படிக்கும் போது இந்தளவுக்கு நீ முட்டாளா இருந்தது இல்லயேப்பா" என்றார்
குமார், "சித்தப்பா நீ இல்லன்ன எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகியிருக்கும் தெரியுமா. இதுக்குதான் நீ வேணும்கிறது. ரத்த உறவுன்னா சும்மாவா, அவனவன் சண்டைய மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான்" என்றபடி ஐயப்பனை பார்த்தான் குமார்
ஐயப்பன் முறைப்பை கண்டுகொள்ளாமல், "நேத்து சொன்னதும் இன்னைக்கி வந்து எங்கள சமாதானம் பண்ணி, அத்தைகளுக்கு நியாயத்தை செஞ்சுட்ட சித்தப்பா"
நமச்சிவாயம், “டேய் என்னடா, நீ அண்ணன் பையன்டா, என் ரத்தம். ஏதாவதுன்னா பாத்துட்டு சும்மா இருப்பேனா”
ஐயப்பன் கையிலுருந்த துண்டை நமச்சிவாயத்திடம் கொடுத்தார்,”தொடைச்சிக்க”
கண்களை துடைத்தபடி "என் மேல எவ்வளவு பாசம்யா இவனுக்கு" என்றபடி வெளியே நடந்தார்.
நமச்சிவாயத்தை நோக்கி கையை ஓங்கிய ஐயப்பன் தன் தலையில் அடித்துக் கொண்டு கூட நடந்தார்.
இரண்டு மாதம் கழித்து
"ஐயப்பா, நாளைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வந்துரு, ஒரு சாட்சி நீதான்"
"இந்த பைத்தியக்கார வேலைக்கு நான் சாட்சியா வரமாட்டேன்"
"காலைல வீட்டுக்கு வர்றேன்"
"இல்ல வராத"
பின்னோக்கிய நடையில் வர்றேன் நானும்!
பதிலளிநீக்கு