24 மே 2021

மிதவை - நாஞ்சில் நாடன்

தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ந்த பின் வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் சுலபமாகிவிட்டது. தகுதிக்கு ஏற்ற வேலை என்பது எப்போது கடினம்தான். ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட, மாலையில் ஸ்விகி, ஜொமொட்டோ போன்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர முடிகின்றது. 

இதற்கு முன்னால் இருந்த நிலை வேறு. எழுபதுகளின் இறுதிகள், எண்பதுகளின் ஆரம்பகாலப் படங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். தாடி வளர்த்த நாயகன், வேலை காலி இல்லை போர்டுகள், விண்ணப்பம் வாங்க பணம் தராத அப்பா, வேலைவெட்டி இல்லாதவன் மீது காதல் கொள்ளும் மக்கு பெண்கள்.

இந்த நாவல் அந்த காலகட்டத்தில் நடக்கின்றது. இன்று அந்த நிலை இல்லாத போது நாவல் கொஞ்சம் பழையதாகிவிடாதா? இல்லை. சில பல  பிரச்சினைகள் எப்போது மாறாது. வேலை சுலபமாக கிடைக்கும் என்றாலும் அதற்கான முயற்சி, நமக்கேற்ற வேலை அமையாமல் போவது எல்லாம் என்றும் இருக்கும். வேலைக்கான சிபாரிசுகள் இன்றும் தேவைப்படுகின்றன. அதன் பெயர் கொஞ்சம் மாறி இருக்கின்றது. ஃரெபெரன்ஸ். கேட்க கொஞ்சம் டீசன்ட்டாக இருக்கின்றது இல்லையா.

அனைவருக்கும் திறமையானவர்களே தேவை, முழு மக்குகளுக்கு பிரச்சினையில்லை. ஆனால் இதற்கு நடுவில் மாட்டிக் கொள்ளும் சிலர் இருக்கின்றார்கள். சராசரிகள். அவர்களால் கொஞ்ச கொஞ்சமாகத்தான் மேலே ஏறி வர முடியும். அப்படிப்பட்ட ஒருவனை சுற்றி நடக்கும் கதை. அவன் பெரிய புத்திசாலி இல்லை, பி.ஏ இரண்டாம் வகுப்பு, ரயிலில் தூங்கும் பெண்ணின் காலைத்தடவும் ஆசாமி. நாகர்கோவில் பக்கம் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து பம்பாய் செல்லும் அவனின் கதை.

பிழைக்க ஊர் விட்டு ஊர் செல்பவனைப் பற்றி நாஞ்சில் நாடன் ஒவ்வொரு நாவலிலும் எழுதுகின்றார். ஒவ்வொரு முறையும் அவருக்கு எழுத இருக்கின்றது. இன்னமும் இருக்கும். பணிக்காலம் முழுக்க ஊர் ஊராக சென்றவரிடம் எவ்வளவு கதைகளிருக்கும். தங்குமிடங்களில் எத்தனை வகை, நேவி குவார்டர்ஸில் ரகசிய வாசம், ஜாதி வாரியாக இருக்கும் சால்கள், ரயில் தண்டவாளத்திற்கருகிலிருக்கும் குடிசைகள். ஊர் விட்டு ஊர் போனவன் உணவிற்கு படும் பாடு, காசு இல்லாத பாடு ஒரு பக்கம், நாக்கு ஒரு பக்கம். ஒரு கப் சோறை விட ஆறு பூரி நல்லது.

மற்ற நாவல்களை விட இதில் கொஞ்சம் அரசியல் விமர்சனங்கள் அதிகம். முதல் பகுதிகளில் திராவிட அரசியலுக்கு ஒரு வலுவான கொட்டு. ஆட்சிக்கு வரும் முன்பு பேசிய வாய் ஆட்சிக்கு பின்னால் எப்படி மாறுகின்றது என்பதை எல்லாம் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகின்றார். 

நாவலின் ஊடே சின்ன சின்ன சமூக அவலங்களை காட்டுகின்றார். ஆவேசம் வந்து பொங்கி வழிந்து, அறச்சீற்றம் எல்லாம் இல்லை. அய்யர் தங்களுக்கு தனியே சோறு போடுவதை எண்ணி வருந்தும் விவசாயி, தன் நிலத்தில் வேலை செய்யும் கூலிகளுக்கு அதே மரியாதை தருகின்றார். அது அவருக்கு உறுத்தவில்லை, அவர் மகனுக்கு உறுத்துகின்றது, ஆனாலும் அதை சொல்ல முடிவதில்லை. கிராமத்தில் தனி குவளையில் காபி கொடுக்கும் குடும்பம், பம்பாயில் ஒரே மேஜையில் தட்டு வைத்து சோறு போடுகின்றது. எது அங்கே மாறியது? படிப்பு பணம்? இல்லை தமிழகத்துக்குள் ஜாதி, பம்பாய் சென்ற பின் மொழி? கவுரவர்க்கு ஐவர், அயலவர்க்க்கு நூற்றைவர் என்பது போலவோ? 

ஊரிலிருந்து அழைத்து சென்று வேலை தேடி வைக்கும் ஐயர், தன் இடம் பறி போகுமோ என்று அஞ்சும் சக ஊழியன், சினிமா பெரியப்பா, கள்ள மார்க்கெட்டில் அரிசி விற்கும் நண்பன் என்று குட்டி குட்டி சுவாரஸ்ய பாத்திரங்கள். 

நாஞ்சில் நாடனின் இயல்பான உரையாடல்கள், அங்கங்கு மெலிதாக குத்தும் விமர்சனங்கள், வாசகனுக்கு மெலிதாக காட்டி கற்பனையை தூண்டும். இன்று பெரும்பாலும் அனைவரும் ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்பவர்களே. பம்பாய், சென்னை இந்த இரண்டு ஊர்களைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். இன்று பல மாறியிருக்கலாம், இருந்தாலும். படிக்கும் அனைவரையும் எங்காவது ஓரிடத்தில் தொடும்.


படிக்க வேண்டிய நாவல். 

1 கருத்து: