05 மே 2021

ராமோஜியம் - இரா.முருகன்



முதலிரவில் மனைவி மூக்குபொடி டப்பாவைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வித்தியாசமான கற்பனையில் விளைந்த நாவல். 

நாற்பதுகளில் சென்னையில் வாழும் ஒரு தம்பதியரின் தினசரி அனுபவங்களின் ஒரு சிறியத் தொகுப்பு. கருப்பு வெள்ளை பிண்ணனியில் சென்னை, டில்லி, கும்பகோணம் போன்ற இடங்களில் சுற்றித் திரிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும், அந்த வாய்ப்பைத் தவற விடாமல் இருக்க இந்த நாவலைப் படிக்கலாம்.

தேவனின் துப்பறியும் சாம்பு, சிஐடி சந்துரு போன்ற தேவனின்  புத்தகங்களைப் படிக்கும் போது சென்னையைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். நாற்பதுகளின் சென்னை, கொரட்டூர் கிராமம், வெளாச்சேரி கிராமம், ஊரை விட்டு எங்கோ இருக்கும் குரோம்பேட்டை, பங்களாக்கள் நிறைந்த நுங்கம்பாக்கம், வளர்ந்து வரும் மேற்கு மாம்பலம், ட்ராம் வண்டிகள் என்று,  ஒரு கருப்பு வெள்ளையில் ஒரு நகரம் நம் கற்பனையில் உருவாகிவரும். அந்தக் கற்பனையை இன்னும் விரிவாக்கும் இந்தப் புத்தகம்.

நாற்பதுகள். இரண்டாம் உலகப்போரின் காலம். சுதந்திர போரின் உச்சக்கட்டம். உலகப்போர்களின் காலத்தை இன்று நாம் ஓரளவிற்கு கொரானா காலத்தில் உணர முடிகின்றது. அந்த நாற்பதுகளில் நடக்கின்றது இந்த நாவலின் கதை.

ராமோஜிராவ், மதறாஸ் மாகாண, பிரிட்டீஷ் அரசின் ஊழியன். அவனது மனைவி ரத்னா பாய். இவர்களின் வாழ்வின் அனுபவங்கள்தான் நாவல் முழுவதும். ராமோஜி ஏ.ஆர்.பி வார்டனாவது, அவனது சினிமா அனுபவங்கள், இருவரும் டெல்லி சென்ற அனுபவம், கும்பகோணம் சென்ற அனுபவம், யுந்த கால அரசாங்கத்தின் வேலை என்று சென்று கொண்டே இருக்கின்றது. இதன் நடுவே ஏகப்பட்ட தகவல்களைக்  கொட்டியிருகின்றார்.

சென்னைநகர் வீதிகளின் பங்கர்கள், கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட வீடுகள், குறைவான வெளிச்சத்தில் வாழும் குடும்பங்கள், விறகு முதல் அரிசி வரை ரேஷன், ஊருக்கு சென்றாலும் ரேஷன் கார்டை கொண்டு செல்ல வேண்டிய நிலை, டீ யை மக்களிடம் கொண்டு சேர்க்க போராடும் டீ போர்ட், சென்னை முதல் டெல்லி வரையிலான ரயில் பயணத்தில் என்ன என்ன ஊர்கள் வரும், எங்கு என்ன கிடைக்கும், என்று பலவித தகவல்கள். 

விதவிதமான மனிதர்கள். வரலாற்றிலிருந்து வந்தவர்கள், நாம் கேள்விப்பட்டவர்களின் சாயல் கொண்டவர்கள் என்று பலரை உலவ விட்டிருக்கின்றார். தெலக்ஸ் புவனா என்ற பெயரில் வரும் சினிமா நடிகை, காளிங்க ரத்னம் என்னும் நடிகர், கழுதை வளர்க்கும் ஆர்ட் டைரக்டர், ரயிலில் வரும் பிராமண பாட்டி, கங்கா - கோபு, கானோஜி ஆங்க்ரே, அருணாச்சல கவிராயர் என்று பல சுவாரஸ்யமான பாத்திரங்கள். 

முதலில் வரும் தசாபதி, காளிங்கரத்னம் என்று வந்தவுடன், சும்மா பெயர் மாற்றி வைத்து எழுதும் ஸ்பூஃப் நாவல் என்றுதான் நினைத்தேன். இல்லை. ஒவ்வொரு பாத்திரத்தையும் அழுத்தமாக பதியும்படி சித்தரத்துள்ளார். நடுவே, மோகமுள் பாத்திரங்கள் முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வருகின்றன. சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது.

விஷ்ணுபுரம் மாதிரி, தற்போது நடக்கும் அனைத்தும் ஏற்கனவே நடந்தது என்பது மாதிரி, ராமோஜி, ராமோஜி ஆங்க்ரே என்ற பெயரில் கானோஜி ஆங்க்ரேயின் பிரதான தளபதியாக வருகின்றார், பின்னார் வெறும் ராமோஜியாக ஆனந்த ரங்கம் பிள்ளைக்கு உதவியாக வந்து, அருணாச்சல கவிராயரை சந்திக்கின்றார். விட்டால் அக்பரை சந்தித்த ராமோஜி, ராமனுஜரை சந்தித்த ராமோஜி எல்லாம் வருவார்கள் போல.

நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் உணவு. ராமோஜி தினமும் என்னென்ன உண்டான் என்று தெளிவாக இருக்கின்றது. உணவில் முக்கியம் எதை எதோடு சாப்பிடுவது என்று ஒன்று உள்ளது. அரிசி உப்புமா என்றால் அதற்கு கத்திரிக்கா கொத்ஸு சுகம், இட்டிலிக்கு சட்னி சாம்பார், ஆலு பரோட்டாவிற்கு தயிர் ஊறுகாய் என்று விதவிதமான உணவுகள். நல்ல உணவு ரசிகர் போல.

கூடவே, சங்கீதம். அதைப்பற்றியும் ஏகப்பட்ட விஷயங்கள்.

நாவல் முழுவதையும் ஒரு மெல்லிய புன்னகையுடன் மட்டுமே படிக்க முடியும். வெகு இயல்பான நகைச்சுவை, வலிந்து புகுத்தியது ஏதுமில்லை, அங்கங்கு மெல்லிய நுண்ணுர்வை தொடும் சம்பவங்கள் என்று ஒர் ஃபீல் குட் நாவல். 

அவரது மற்றொரு நாவல் அரசூர் வம்சம், அதை படித்து விட்டு, இதையும் படித்தால் இரண்டையும் ஒருவரா எழுதினார் என்று தோன்றுகின்றது. நாவலில் எப்படி காலத்தை ஒரு பாத்திரமாக்கலாம் என்று காட்டியுள்ளார் முருகன். பாத்திரங்கள், சம்பவங்கள் அந்த காலத்தை விட்டு நகர்ந்தால் ஒன்றுமில்லாமல் போகும். 

கண்டிப்பாக படியுங்கள். கிண்டிலில் கிடைக்கின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக