23 ஜூலை 2025

படுகளம் - ஜெயமோகன்

 ஜெயமோகனின் தளத்தில் வெளிவரும் போது படிக்க முடியவில்லை. சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி எழுதிய பின் தேடினால் கிடைத்தது. ஆனால் பழைய நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்கும் அனுபத்தை தந்தது. நூலகத்தில் பழைய புத்தகத்தை படிக்கும் போது சில பக்கங்கள் இருக்காது, யூகித்து படிக்க வேண்டியது இருக்கும். முடிவு பகுதி இருக்காது. அது போல அவர் தளத்தில் ஒன்று விட்டு ஒன்றாக பகுதிகளை மறைத்து வைத்திருந்தார். உடனே படிப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர்கள் கூட மறுபடியும் படிக்கலாம் என்றால் கிடைக்காது. ஆனாலும் விடவில்லை, சுஜாதா கூறியது போல இணையத்தில் இருந்தது, இருப்பது எங்கும் போகாது என்று தேடி cache பதிவுகளை கண்டுபிடித்து படித்துவிட்டேன். இப்போது அது முழுவது நீக்கப்பட்டுள்ளது,ஆனாலும் எங்காவது கிடக்கும். புத்தகமாக வரும் போது இங்கும் இருந்தால் கஷ்டம்தான். 

ஒரு வெப்சீரிஸூக்கு எழுதப்பட்ட கதை என்று தோன்றுகின்றது. வேகப்புனைவு அதாவது திரில்லர் வகை. 

07 ஜூலை 2025

வெளவால் தேசம் - சோ.தர்மன்

வெளவால் சோ. தர்மனின் சமீபத்திய நாவல். தூர்வை, சூல் போன்ற நேரடியான கதை சொல்லலும், கூகை நாவலின் நடையும் கலந்த நாவல். சோ. தர்மன் இன்னமும் கரிசல்காட்டை  எழுதி முடிக்கவில்லை, கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவலில் வரும் ஒரு பாத்திரத்தின் கூற்று "இந்த தாமிரபரணி கரையெல்லாம் கதைதான்". உண்மைதான். இன்னமும் ஒரு பத்திருபது நாவலாவது எழுதுவார் போல.

அவரது அனைத்து முந்தைய நாவல்களின் கரு ஒன்றுதான். நன்றாக வளர்ந்த ஒரு சமூகம் அதன் வீழ்ச்சியை நோக்கி செல்வது. ஒவ்வொரு நாவலிலும் வேறுபட்ட காரணிகள், சில பொதுவான காரணிகளும் உண்டு அல்லது ஒரே காரணத்தின் பல கோணங்கள். இந்த நாவலில் அது போன்ற ஒரு சாத்தியக்கூறை காட்டியுள்ளார். 

சோ. தர்மனின் நாவல்களை படிக்கும் போது அது சொல்லப்படுவதாகவே தோன்றும். சொல்லப்படும் கதைகளுக்கும், எழுதப்பட்ட கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கும். வைரமுத்து விகடனில் எழுதிய தொடர்கள் அனைத்தும் அவரால் சொல்லப்பட்டு யோரோ ஒருவரால் எழுதப்பட்டது என்பதை படிக்கும் போதே விளங்கும், சில விஷயங்கள் நெருடும், ஆசிரியரின் இருப்பு இருக்கும். பாலகுமாரனின் பிற்கால நாவல்களுக்கும் அதுதான் நடந்தது. ஆனால் இந்த சொல்லுதல் என்பது வேறுபட்டது. ஆசிரியரின் இருப்பு என்பதே கிடையாது. உருளைக் குடி கிராமத்தை நாம் காண முடியும்.