19 அக்டோபர் 2012

ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்


நடுத்தரவர்க்கம் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. தன்னை விட மேலாக உள்ளவர்களைப் பார்த்து ஏங்குவதும், தன்னைவிட கீழே உள்ளவர்களைப் பார்த்து தன்னை திருப்திப் படுத்திக் கொள்வதுமாக அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது. தவறு செய்யப் பயப்படுவதும், அதே சமயம் தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு நடுவில் இருப்பதும், செய்த தவறை நினைத்து தவிப்பதும், ஆசைக்கும் நேர்மைக்கும் நடுவில் வாழும் ஒரு வாழ்க்கை.

அவ்வாழ்க்கையை எழுத்தில் கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. அவரின் பல சிறுகதைகள் இதைச் சரியாக காட்டியிருக்கும். அது கூட பெரும்பாலும் மனதை தொந்தரவு செய்யும் முடிவுடனே இருக்கும். அதே நடுத்தர வர்க்கதின் கதையை வேறு விதமாக, சற்று நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் குறைவு. ஸ்ரீமான் சுதர்சனம் கதை இரண்டாவது வகை.

பழைய காலகட்டத்தை சேர்ந்த கதை. அக்காலத்துடன் கொஞ்சம் நம்மை இணைத்துக் கொண்டால்தான் கதையை முழுவதும் அனுபவிக்க முடியும். சாதாரணக்கதைதான். கஷ்டத்தில் இருக்கும் ஒருவன் தன் போதாமையால் அலுவலகத்தில் தவறு செய்கின்றான்,  அதை நினைத்து வருந்தினாலும் வேறு வழியின்றி அதை தொடர்கின்றான். அதே சமயம் அதிர்ஷ்டவசமாக சிக்காமல் தப்பித்தும் வருகின்றான். கடைசியில் தர்மப்படி செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கின்றது. சுதர்சனம் ஸ்ரீமான் சுதர்சனம் ஆகின்றான்.

ஒரு சாரசரி சம்பளக்காரான் மனைவியின் மீது கொண்ட காதலால் அகலக்கால் வைக்கின்றான். அதை சரி செய்ய ஒரு தவறு. மனைவியின் அப்பா அம்மாவிற்கு ஒரு முறை, தன் அப்பா அம்மாவிற்கு ஒரு முறை என தவறு வளர்கின்றது.அவனும் பிடிபடாமல் மேலே மேலே செல்கின்றான். கடைசியில் தவறுக்கு தண்டனை கிடைத்து, நல்ல நிலைக்கு வருகின்றான். நல்லவன் வாழ்வான், சில சமயம் கெட்டது செய்தாலும் என்கின்றார் தேவன்.

முதலாளி தன்னுடன் பேசியதை நினைத்து உருகுவதைப் படிக்கும் போது, இன்று அது போல் எல்லாம் இருக்கின்றார்களா என்று தோன்றுகின்றது. இருக்கக் கூடும்.

இந்த சாதாரணக்கதையை போரடிக்காமல் சுவைபட கூறிச் செல்வதில்தான் தேவனின் கைவண்ணம் தெரிகின்றது. மெலிதான நகைச்சுவை, தினசரி பார்க்கும் மனிதர்கள், அனைவர் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்று நம்மை கதையுடன் ஒன்ற வைத்து விடுகின்றார். நகைச்சுவை என்றால் உருண்டு புரண்டு சிரிக்க வைக்கும் வகையில்லை, குழந்தையின் சேட்டைகளைக் கண்டு ஒரு புன்சிரிப்புடன் செல்வது போல ரசிக்கவைக்கும் எழுத்து.

அன்றைய காலக்கட்ட கதை என்றாலும் மனிதர்கள் எக்காலத்திலும் அதேதான். தன் பதவியின் மீதான ஈகோவில் விடாப்பிடியாக வரும் கங்காதரம் பிள்ளையை இன்று பல அரசியல்வாதிகளிடம் காணலாம். சுதர்சனத்தை இன்றும் அனைத்து இடங்களிலும் காணலாம், என்ன அவர்களின் வடிவம் மாறியிருக்கும். தவறை வேறு வகையில் செய்கின்றார்கள். அவர்களுக்கான தேவை என்றுமுள்ளது. அட்டகாசம் செய்யும் மாப்பிள்ளைகள், அலுவகத்தில் புத்தகம் / ப்ளாக் படிக்கும் எழுதும் உழைப்பாளிகள் என இன்றும் அக்கதையின் பாத்திரங்கள் வேறு வண்ணத்தில் உள்ளனர்.

தேவனின் உரையாடல்களும், காட்சி சித்தரிப்புகளும் கதையை நம்முள் ஒரு திரைப்படம் போல ஓட்டிப்பார்க்கச் செய்கின்றது. பலரின் இலக்கிய வரையறைக்குள் இது வராமல் போகலாம். (இணையத்தில் இலக்கிய விவாதங்களைப் படித்து படித்து வர வர தினமலர் படித்தால் கூட இலக்கிய விசாரம் ஏற்படுகின்றது.) ஆனால் ஒரு சுவாரஸ்யமான கதைக்கு உத்திரவாதம். எந்தப் புத்தகமும் தேவையில்லை என ஒதுக்க கூடாது என்பது என் எண்ணம். (எச்சரிக்கைப் புத்தகங்களும்தான் ஓசியில் தாரளமாக படிக்கலாம்). எல்லவற்றையும் படிக்க வேண்டும், அனைத்தும் நம்முள்ளே உறைந்து கிடக்கும், தேவையான போது தேவையானது தலைகாட்டும்.

தேவனின் எழுத்து அனைவரும் படிக்கத்தக்கது. குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை கொண்டுவர விரும்பும் பெற்றோர்கள், தேவனையும், கல்கியையும் தைரியமாக வாங்கித்தரலாம். தேவனின் எழுத்துக்கள் தமிழ் வாசிப்பாளிகள் தவற விடக்கூடாத ஒன்று. அவரின் மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் துப்பறியும் சாம்புவிற்கு அடுத்த படியாக சிறந்த ஒன்று இது என்று என் கருத்து. 

தேவனின் அனைத்து புத்தகங்களும் கிழக்கில் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக