16 அக்டோபர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள்

வழக்கமாக புத்தகங்களைப் படித்தால், நமக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும். அவர்களும் அதை வாங்கிப் படிக்கட்டும் என்ற நல்ல எண்ணம். சில புத்தகங்களைப் படித்தால், மற்றவர்களுக்கு எச்சரிக்கத் தோன்றும்.
 
அந்த வரிசையில் என்னிடம் இரண்டு உள்ளது. ஒன்று "பாகிஸ்தான் போகும் ரயில்", "கே.பி.டி சிரிப்புராஜ சோழன்".

பாகிஸ்தான் போகும் ரயில் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் இதை வாங்கினேன். அப்போதே மூளையை கொஞ்சம் பயன்படுத்தியிருக்க வேண்டும். குஷ்வந்த் சிங் எழுதியது ஆங்கிலத்தில் என்று கேள்விப்-பட்டுள்ளேன், அதையே வாங்கலாமே என்று. ஆனாலும் மூளை சிலசமயம் மட்டுமே வேலை செய்கின்றது என்ன செய்ய?

படுதிராபையான மொழிபெயர்ப்பு.
 
கதை  பஞ்சாப்பில் ஏதோ ஒரு கிராமத்தில் நடப்பதால்,  மொழிபெயர்ப்பாளர் வட்டார வழக்கை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் போல. பல வட்டார வழக்குகள் வந்து பாய்கின்றது. ஒரு தாடி வைத்த சர்தார்ஜி, மதுரை பாஷை பேசுவதை கற்பனை செய்தாலே ஒரு மாதிரி உள்ளது.
 
புத்தகத்தை படிக்கும் போது "ஷாங்காய் நைட்ஸ்" படத்தை தமிழில் பார்த்த ஞாபகம் வருகின்றது. ஓவன் வில்சன் மெட்ராஸ் பாஷை பேசிக்-கொண்டிருந்தது எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக தெரிந்ததோ அதற்கு சற்று குறையாமல் இருக்கின்றது இது. குருந்வாராவின் தலைமை குரு பூசாரி ஆகிவிட்டார். பூசாரி என்றால் பட்டையடித்த ஒருவர்தான் நினைவில் வருகின்றார்.

மொழிபெயர்ப்பின் முத்துக்கள்

"வேணாங்க அய்யா. சாமி மேல ஆணையா வேணாங்க, வேணாங்க!"
"முத்துக்கட்டி ராசாவே! பெரிய மனசு பண்ணுங்க!"
"ஏபிசிடி உங்கொப்பன் தாடி
இளுத்துப் பார்த்தா வலிக்கும் தாடி!
இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரியுங்களா?"

இதில் சுஜாதாவிடம் இருந்து வேறு சுட்டுள்ளனர். "சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்று சொல்வதற்குள் எல்லாம் முடிந்து போகும்".

யாராவது இதை வாங்க வேண்டும் நினைத்தால் இரண்டு முறை யோசித்து விட்டு, ஆங்கில புத்தகத்தையே வாங்குங்கள். கிழக்கிலிருந்து இப்படி ஒரு புத்தகம். திருஷ்டி பரிகாரத்திற்கு சில வேண்டுமல்லவா?

அடுத்தது சிரிப்பு ராஜ சோழன்.
 
கிரேஸி மோகன், மதன் கார்ட்டூன் என நிறைய எதிர்பார்த்து வாங்கினேன். கடைசியில் ஏமாந்ததுதான் மிச்சம். சிரிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. மோகனின் அமெரிக்காவில் கிச்சாவை விகடனில் படித்து, அந்த நினைப்பில் வாங்கி பணத்தை வீணடித்து விட்டேன். யாரையாவது பக்கத்தில் அமர்த்தி கிச்சு கிச்சு மூட்டினால்தான் சிரிப்பு வரும். படு மொக்கை. 
 
ரசிக்கக் கூடியது மதனின் ஓவியங்கள்தான். அதில் வரும் எக்ஸ்ப்ரெஷன்களும் அட்டகாசம்.
 
யாராவது வாங்கியிருந்தால் அதை ஓசியில் வாங்கிப் படிப்பது நலம்
 
சிலருக்கு இரண்டும் பிடித்திருக்கலாம், அவர்களுக்கு சாரி

1 கருத்து:

  1. பஞ்சாப் போகும் ரயில் வெகு காலமாய் வாங்க வேண்டும் என நினைத்த புத்தகம்.. வாங்குவதாய் உத்தேசம் இல்லை

    பதிலளிநீக்கு