சுஜாதாவைப் பற்றி அறிமுகம் செய்ய முனைந்தால் அது என் அறியாமையைக் காட்டும். அனைவருக்கும் தெரிந்த பிடித்த எழுத்தாளர். அவரைக் குறை சொல்பவர்கள் கூட அவரை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர் கணையாழியில் 33 வருடங்களாக எழுதி வந்த பத்திகளின் தொகுப்பு கணையாழின் கடைசிப் பக்கங்கள் என்று ஒரே தொகுப்பாக உயிர்மை வெளியுட்டுள்ளது.
சுஜாதா கணையாழியில் தொடர்ச்சியாக எழுதவில்லை, விட்டு விட்டு வேறு வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். தேசிகன் இதை பெரும் சிரந்தை எடுத்து தொகுத்துள்ளார். அனைத்து கட்டுரைகளும் மாதவாரியாக தொகுத்துள்ளனர். படிக்கும் போது அந்த காலத்தைப் பற்றிய ஒரு சித்திரமும் கிடைக்கின்றது.உண்மையில் இதைச் செய்து முடிக்க அசாத்ய பொறுமை வேண்டும். தேசிகனிடம் வேண்டியளவு இருக்கின்றது.
கிடைத்த சின்ன இடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடியுள்ளார். வெறும் பொழுது போக்கு வம்பு என்று இல்லாமல், வாசகர்களை சற்று மேலே நகர்த்தும் படி எழுதியுள்ளார்.
ஏகப்பட்ட கவிதைகள், கவிஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அறிவியல் விஷயங்களை எளிமையாக பேச முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். அவர் டெல்லி, பெங்களூரில் இருந்த போது கிடைத்த அனுபவங்கள், சினிமா அனுபவங்கள் என் அனைத்தும் கிடைக்கின்றது. 1965ன் சினிமாவை சரியாக கிண்டலடித்துள்ளார். சினிமா விமர்சகர்களையும் விடவில்லை. ஸ்ரீரங்கம் எஸ் ஆர் என்ற பெயரில் அனைத்தையும் விமர்சனம் செய்துள்ளார், சுஜாதாவின் எழுத்துக்களையும் சேர்த்து.
எம்.எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன், வாலி முதலியவர்களின் புரொக்ராமர்கள் வேலை, எஸ்.பி.பி பாடல்களின் நடுவில் செய்யும் சேட்டைகள், புதுக்கவிதை எழுதிப் படுத்தும் கவிஞர்கள் (இவர்கள் இன்னும் தினசரிகளின் இணைப்பு புத்தகங்களில் சாஸ்வதமாக வாழ்ந்து வருகின்றனர்), கிரிக்கெட், வானொலி என அனைத்து துறையினரையும் விமர்சித்துள்ளார். வாசகர்கள் கூட தப்பவில்லை.லைட் ரீடிங் என்று கூறிய ஒரு அம்மாவை பாவம் இரண்டு பக்கங்களுக்கு வறுத்தெடுத்துள்ளார்.
எல்லாத்துறைகளைப் பற்றி ஏதாவது ஒரு பத்தி உள்ளது. ஏகப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றி எழுதியுள்ளார். அவர் படித்த புத்தகங்கள், சிறுகதைகள், வெளிநாட்டு எழுத்தாளர்கள், நாடகங்கள், மாற்று மொழித்திரைப்படங்கள் எனப் பல துறைகளில் விரிம்ந்து செல்கின்றது. முக்கியமாக கவிதைகள் மரபுக்கவிதையிலிருந்து ஹைக்கூ வரை. அவர் கவதை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
அனைத்தையும் விட அவரது நகைச்சுவை உணர்வு, புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றது. சில இடங்களில் புன்னகை, சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கின்றார்.மிகவும் ரசித்தது துணுக்கு எழுத்தாளரின் பேட்டி.
சில பகுதிகள்
"தீபாவளி என்றால் தீபாவளி மலர்கள் வரும் தினம்....
அட்டையில் ஒயிலாக ஒரு படம்
முகப்பு படமாக சங்கராச்சாரியார் அல்லது சங்கராச்சாரியார்
எடை போட்டு பார்த்ததில் கல்கி தீபாவளி மலர் விகடனை விட எட்டு அவுன்ஸ் அதிகம்"
இது எழுதப்பட்டது 65, இன்றும் தீபாவளி மலர்கள் அப்படித்தான் வருகின்றன
"ஆண்டாளு அம்மாள், சுஜாதா, பரகால ஜீயர். அடுத்த முறை நான் இல்லாத போது யார் எழுதப்போகின்றார்கள்? ரிக் ஷாக்கார முனுசாமியா?"
"இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் 6961 என்கின்ற கதை ஆரம்பிக்கின்றதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்"
"சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையை பற்றிய விமர்சனங்களும் இரைச்சல்களும் குடல் ஆபரேஷன்களும் அடங்கிய பிற்பாடு இந்த நாவலைப் படித்தேன். இந்த நாவலில் விரவி இருக்கும் மிக உயர்தரமான நகைச்சுவையை எவரும் குறிப்பிடவில்லையே"
1988லேயே கம்யூட்டரில் கதை எழுத ஆரம்பித்துவிட்டார். அப்போதே தமிழில் தட்ட வசதி இருந்திருக்கின்றது. மெதுவாக வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது. நான் பிறப்பதற்கு 17 ஆண்டுகள் முன்பு எழுதிய எழுத்துக்கள் இன்னும் இளமையாக இருக்கின்றது. அதுதான் சுஜாதா. இப்புத்தகம் ஒரு முப்பதாண்டுகால வரலாற்றின் ஒரு சிறிய பார்வை. வேண்டுபவர்கள் இதிலிருந்து மேலேறி செல்லலாம். ஏன் சுஜாதாவை தமிழின் ஒரு தவிர்க்க முடியாத, ஒதுக்க முடியாத ஒருவர் என்று கூற இந்த நூல் போதும்.
பா.ராகவனின் நிரந்தர விருப்பத்துக்குரிய நூல்களின் பட்டியலில்’கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ இடம் பெற்றிருக்கிறது.
பதிலளிநீக்குhttp://www.writerpara.com/paper/?p=385
கணையாழியின் கடைசிப்பக்கங்கள் வாசித்திருக்கிறேன். நல்லாருக்கும்.
பதிலளிநீக்கு