11 டிசம்பர் 2013

கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்

கடலுக்கு அப்பால். ஒரு வகையில் புயலிலே ஒரு தோணியின் தொடர்ச்சி எனலாம், அதே சமயம் இரண்டும் வேறு வேறு கதைகள். ஒன்றை விட்டு இன்னொன்றை படிக்கலாம். கதையின் கால வரிசைப்படி புயலிலே ஒரு தோணி முதலில், எழுதப்பட்ட கால வரிசைப்படி முதலில் எழுதப்பட்டது கடலுக்கு அப்பால்,சில கதாபாத்திரங்கள் இரண்டிலும் வருகின்றன. அவ்வளவுதான். இரண்டு கதைகளையும் அவர் யோசித்து வைத்திருக்கலாம். புயலிலே ஒரு தோணியின் ஒரு லீட், கடலுக்கு அப்பாலில் இருக்கின்றது. இதில் வரும் செல்லையா, அதில் ஒரு காட்சியில் தோன்றி மறைகின்றான். 

கடலுக்கு அப்பால் வாழும் தமிழர்களின் கதை. செல்லையா வானா யீனால் மார்க்காவின் அடுத்தாள். ஐ.என்.ஏவில் லெப்டினெட்டாக இருக்கும் செல்லையாவிற்கு, வயிரமுத்துப் பிள்ளையின் மகள் மீது காதல். வான யீனா, சண்டைக்கு போய்ட்டு வந்த பயலால், வட்டித் தொழில் செய்ய முடியாது என்று மகளை வட்டி தொழிலுக்கென்று பிறந்த ஒருவனுக்கு கட்டி தருகின்றார். செல்லையா தன் வழியில் போகின்றான்.

செல்லையா ஒரு சாதரண அடுத்தாள், ஐ.என்.ஏவில் சேர்ந்ததும் அவன் ஒரு போர் வீரனாக மாறுகின்றான். நேதாஜி இறந்ததும், வேறு வழியின்றி முகாமில் இருந்து வெளியேறி வீரர்களை சட்டை மாற்றி விடுகின்றனர். பின் மீண்டும் நெற்றியில் பட்டையுடன் பழைய செல்லையாவாக மாறுகின்றான். பாண்டியனின் ஒரு எதிர் துருவம் செல்லையா எனலாம். பாண்டியன் தேடிக் கொண்டே இருக்கின்றான், எதிலும் அவன் தன்னை முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதில்லை. செல்லையா அனைத்தாலும் பாதிக்கப்படுவன், உணர்ச்சிகளால் தூண்டப்படுவன். பாண்டியன் தேடி தேடி அடுத்தடுத்து போகின்றான், செல்லையா வாழ்வின் யதார்த்தை எதிர்கொண்டு அமைதியாகின்றான். ஐ. என். ஏவில் இருந்தவரைதான் போர் வீரன், அதற்கு பின் அவன் ஒரு சாதரணன் என்பதை உணர்ந்து கொள்கின்றான். மரகதத்தின் மீதான காதல் தோற்றபின் செல்லையா உணர்வது அவனை, அவனின் காதல் தோல்வியல்ல அவனது ஆணவத்தின், அகங்காரத்தின் தோல்வி. அதை அறிவதுடன் கதை முடிகின்றது.

மக்களின் குணாதிசயங்கள் கொஞ்சம் குழப்பமானவைதான். பொருள் தேடும் வேட்கையில் புறப்பட்ட வயிரமுத்து, கஷ்டப்பட்டு தன் மார்க்காவை நிறுவுகின்றார். மனைவி, மகள் மீது அதிகம் பாசம் கொண்டவர். செல்லையாவை தன் மருமகனாக்கவும் முடிவு செய்தவர், செல்லையா பட்டாளத்தானபின்  வட்டி தொழிலுக்கு சரிப்படமாட்டான் என்று முடிவு செய்கின்றார். மகளை விட தான் காப்பாற்றிய தொழில் அவருக்கு பெரிதாக போகின்றது. கொஞ்சம் முட்டாள்த்தனமாக தெரிந்தாலும், மகளை வளர்க்க பாடுபட்டதை விட தொழிலை வளர்க்க பாடுபட்ட ஒருவனுக்கு தொழில் மகளை விட மேலாகத்தான் தெரிந்து தொலைக்கும். செல்லையாவிற்கு கடை வைத்துக் கொடுக்கவும் முன் வரும் வானா யீனா அக்கால முதலாளிகளில் ஒருவர். இன்று இவர்களை போன்றவர்களை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

செல்லையா மரகதத்தின் காதல், அவர்கள் சந்திக்கும் காட்சிகளும் குறைவு. ஆனால் அதுவே போதுமானதாக இருக்கின்றது. கடைசியில் மரகதம் பேசும் பேச்சுக்களும், செல்லையாவிடம் வரும் ஒருவித ஆவேசமும் இயல்பானவை.

புயலிலே ஒரு தோணியில் வரும் அதே மாதிரியான மொழி நடைதான் இதிலும். ஆனால் அதில் வருவது போல சாகசங்கள் இதில் இல்லை. கதையின் முதலில் வரும் ஒரு சண்டைக் காட்சி, காட்டிற்குள் அலைவது என்று கொஞ்சம் இருக்கின்றது, அவ்வளவுதான்.

இது முழுக்க முழுக்க வேறுபட்டது. அதைவிட இதில் கொஞ்சம் கிண்டல் தொனி அதிகம்.  மாணிக்கமும் அவர்கள் நண்பர்கள் பேசிக் கொள்ளும் வரிகள் எல்லாம், வரிக்கு வரி அனைத்தையும் கேலிக்குள்ளாக்குகின்றார். சிங்காரம் பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவர் என்பது இதில் தெரிகின்றது.

இரண்டு கதைகளும் சேர்ந்து ஒரே புத்தகமாக நற்றிணை வெளியிட்டுள்ளது. முதலில் கடலுக்கு அப்பால், பிறகு புயலிலே ஒரு தோணி. குழப்பம் என்ன என்றால் புரியாத புதிய சொற்களுக்கான விளக்கங்கள் எதுவும் முதல் கதையில் இல்லை. தபே துவான் என்றால் என்னவென்று தெரியும்? இரண்டாம் கதையில்தான் விளக்கங்கள் உள்ளன. முதலில் படிக்கும் போது ஒன்றும் புரியாமலே படித்தேன். 

மேலோட்டமாக அக்கதையுடன் ஒப்பிட்டால் இக்கதை ஒரு மாற்று கம்மியாகத்தான் தெரிகின்றது. அக்கதையில் வருவது போன்ற மனவோட்ட காட்சிகள், சுருக்கமான வர்ணனைகள் கொஞ்சம் குறைவு. ஆனால் இது வேறு களம் அது வேறு களம். இக்கதையும் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத, அலுக்காத ஒரு கதைதான். புயலிலே ஒரு தோணியின் மறுபக்கம் கடலுக்கு அப்பால்.

கடலுக்கு அப்பால் : "புயலுக்கு பின்"

2 கருத்துகள்:

  1. ஆக, அது ஒரு புத்தகம் வாங்கினால் இரண்டுமே கிடைக்கும் அவ்வளவுதான். இல்லையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிதனி புத்தகங்களும் கிடைக்கின்றது.ஆனால் இது ஒரே புத்தகம் - நற்றிணை வெளியீடு.

      நீக்கு