பெரிது பெரிதாக இரண்டு புத்தகங்களை படித்த களைப்பில் குட்டியாக படிக்கலாம் என்று தேடிய போது கிடைத்தது அப்புசாமியும் 1001 இரவுகளும். படு பயங்கர தீவிர வீர இலக்கியவாதிகள் கொஞ்சம் எட்ட நின்று பார்த்துவிட்டு விலகுங்கள், இல்லாவிடில் கெட்ட கனவுகள் வரலாம்.
அப்புசாமி சீதாப்பாட்டியை, குமுதத்தில் நடுப்பக்கத்தை தவிர உள்ளடக்கத்தையும் (முன்பு அது போன்ற ஒரு வஸ்து குமுதம், விகடனில் இருந்தது, இதை படித்துவிட்டு இப்போது போய் தேடி ஏமாந்து என்னை திட்ட வேண்டாம்) படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். நான் குமுதத்தில் படித்ததில்லை, எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. அப்போது மிகவும் பிடித்து ரசித்து படித்த வரிசை. அந்த பழைய நினைவில் வாங்கியிருந்தேன். இப்போது பிடிக்குமோ பிடிக்காதோ என்று நினைத்து படித்து பார்க்கலாமே என்று வாங்கியது. மோசமில்லை. படிக்க முடிந்தது.
பாக்கியம் ராமசாமி, ஜ.ரா.சுந்தரேசன். குமுதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். நகைச்சுவை இலாகா. பல நகைச்சுவை கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அடிக்கடி நான் ரா.கி.ரவுடன் குழப்பிக் கொள்வேன். இவருடைய நகைச்சுவையல்லாத கதைகளில் கொஞ்சம் புஷ்பா தங்கதுரை எட்டி பார்ப்பார். விகடனில் கொஞ்ச நாள் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார், ஓரளவிற்கு சுமாராக இருந்தது.
அப்பாவி கிழவர் அப்புசாமி அவரது தோழர்கள் பீமாராவ், ரசகுண்டு. பாட்டிகள் முன்னேற்ற தலைவி சீதாப்பாட்டி, பொறாமைக்கார பொன்னம்மா டேவிட்.. இவர்கள்தான் இக்கதைகளின் பாத்திரங்கள். டாம் அன்ட் ஜெர்ரி வைகயறா. பாட்டியால் விதவிதமாக மூக்குடைபடும் தாத்தா. எம் எஸ் பாஸ்கர் தெலுங்கு தமிழ் பேசுவது போல, கன்னடத்தமிழ் பேசும் பீமாராவ். இவர்களின் கோமாளித்தனங்கள் தான் விதவிதமான களத்தில். இதில் வரும் சென்னை பாஷையை யார் பேசுகின்றார் என்றுதான் தெரியவில்லை. ஒரு வயதான கிழவருக்கு, ஒரு ஐந்து வயது சிறுவனின் மனதை தந்து விட்டால் அப்புசாமி தயார். சீதாப்பாட்டி, ஒரு கார்ப்பரேட் ஹெச் ஆர் மேனேஜரை, பள்ளி ஆசிரியருடனும், அரைக்கால் ட்ரவுசருடன் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகும் என் ஆர் ஐயுடனும் மிக்ஸியில் போட்டு அடித்து கலக்கினால் சீதாப்பாட்டி. என்ன இருந்தாலும் நம்ம ஜாதி ஆச்சே என்று அப்புசாமி ஜெயிக்க ஆசைப்பட்டாலும் ஆவதில்லை, பாவம்.
இது மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் வகை. மூளையை எடுத்து பத்திரமாக ப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு படிக்க வேண்டும். டைம்பாஸ்.
ஜெயராஜ்தான் இவர்களின் சிருஷ்டி கர்த்தா. ஒரே ஆளை ஆணாகவும் பெண்ணாகவும் வரைந்ததாக அவர் பேட்டியில் படித்த நினைவு.
நுணுக்கமான நகைச்சுவை இல்லை, துணுக்கான நகைச்சுவை. சில இடங்களில் கொஞ்சம் அச்சு பிச்சாக இருந்தும் எனக்கு என்னவோ நன்றாகவே இருந்தது. பானிபூரி வாங்கித்தராத பாட்டியை, ஷேக்கிற்கு அடிமையாக அனுப்பி வைக்கும் அப்புசாமி, அடிமையாய் போன இடத்தில் மந்திரியாகும் சீதாப்பாட்டி. ஒரு சாகசக்கதையை இவர்களை வைத்து எழுதியுள்ளார் பாக்கியம் ராமசாமி. ஷேக்கின் மந்திரி பேசும் முறையை எங்கு பிடித்தாரோ தெரியவில்லை, சிரிக்க வைக்கின்றது. ஷேக்கின் எதிரியின் தளபதியாகும் அப்புசாமியின் அட்டகாசம் கிச்சு கிச்சு. லாஜிக் தேவையில்லாததால், இஷ்டத்திற்கு எழுதியிருக்கின்றார். எங்காவது விக்ரம் பட நினைவு வந்தால், சுஜாதாவை நினைத்து வருத்தப்படாதீர்கள்.
துப்பறியும் சாம்பு மாதிரிதான் இதுவும்.இக்கதைகளில் ஒன்றும் கிடையாது, ஒரு அரைமணி ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். ஆனால் மூளையை படுத்தாமலிருக்கும், எரிச்சல் வராமலிருக்கும். இம்மாதிரி கதைகளை இன்றைய குழந்தைகள் படிக்குமா என்பது சந்தேகம், குழந்தைத்தனமிருக்கும் குழந்தைகளுக்கு பிடிக்கும். இன்னும் பல கதைகள் கிழக்கில் கிடைக்கின்றது. பழைய புத்தகக்கடையில் தேடி, கிடைக்காவிடில் கிழக்கில் வாங்கலாம்.
அப்புசாமி இப்போது அத்தனை நகைச்சுவையாக இல்லையெனில் நீங்கள் வளர்ந்து விட்டதாகப் பொருள் :-).
பதிலளிநீக்கு