24 ஜூலை 2014

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா

சுஜாதாவின் மற்றுமொரு பெயர் பெற்ற நாவல்.

சிறு வயதில் பக்கத்து வீட்டு மாடியில் குப்பைக்கு நடுவில் கண்டெடுத்து படித்தது. மீண்டும் படிக்கலாம் என்று வாங்கினேன். சின்ன நாவல். ஒன்றிரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். 

கதை. மர்மக்கதை. துப்பறியும் கதை விதிப்படி ஒவ்வொரு அந்தியாயத்தின் முடிவில் ஒரு சின்ன சஸ்பென்ஸ். கொஞ்சம் அமானுஷ்யம். இரவில் சத்தம். பழைய வீடு. ஒரு கொலை, கொலை செய்தவனை விட்டு விட்டு யாரையோ பிடிக்கும் போலிஸ், கடைசியில் கொலைகாரன் தானே மாட்டி கொண்டு சுபம்.

நாட்டு பாடல் சேகரிக்கவரும் கல்யாணராமன் தங்குவது ஒரு பழைய ஜமீன் மாளிகையில். அடுத்தநாளே ஜமீன் பேத்தியும் ஆஜர். ஜமீன்ந்தார் மனைவி மரணமடைந்து ஆவியாக அலைவதாக பேச்சு. கிராமத்து பெண் வெள்ளி, அவளது முறைமாமன் மருதமுத்து. வெள்ளி மீது கல்யாணராமனுக்கு ஒரு ஈர்ப்பு, வெள்ளிக்கு மருதமுத்து என்றால் உயிர், மருதமுத்திற்கு சினேகலதா மீது ஒரு ஆசை. சினேகலதா, கல்யாணராமனை சீண்டி விளையாடுகின்றாள், கடைசியில் தலையில் அடிபட்டு செத்து போகின்றாள். வெள்ளி காணமல் போகின்றாள். கல்யாண ராமன் அடி வாங்குகின்றான், மருதமுத்து அடி கொடுக்கின்றான். போலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. கொலைகாரன் மாட்டிக் கொள்கின்றான். போலிஸ் பிடித்து செல்கின்றது. முடிந்தது.


சுஜாதாவின் கதைகளில் பெரும்பாலான் கதைகளில் எனக்கு தோன்றும் ஒரு விஷயம் ஆரம்பத்தில் இருக்கும் வேகம், கடைசியில் அதிவேகமாக போய் சட்டென்று முடிந்துவிடும். இறுதிப் பகுதிகள் குதித்து கொண்டு செல்லும். இதுவும் அதே போன்ற கதைதான். நன்றாக வளர்த்து இன்னும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

கிராமத்து கதை. சுஜாதாவிற்கு கிராமத்து பாஷை அந்தளவிற்கு வரவில்லை. எனவே உஷாராக எந்தப் பக்கத்து கிராமம் என்பதை கமிட் செய்யவில்லை, செய்தால் இந்தப்பக்கம் எல்லாம் அப்படி பேசமாட்டார்களே என்று கடிதம் வரும். ழ கரத்தை ள கரமாக்கி பேசினால் ஒருவிதமான கிராமத்து பாஷை வந்துவிடும், அது போதும்.

கிராமம் என்பதால், பல நாட்டு பாடல்களை பயன்படுத்தியுள்ளார். சுஜாதாவின் சிறப்பு இதுதான். புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது. சுருக்கமாகத்தான் அறிமுகம் இருக்கும். நாம் அதிலிருந்து முன்னே செல்ல வேண்டும். பழையனூர் நீலிக் கதை. விகடன் அனுமதித்த அளவிற்கு உணர்ச்சிகரமாக இருக்கின்றது.

முடிவை கொஞ்சம் யூகிக்க முடிகின்றது. அங்கங்கு பல க்ளூக்கள் உள்ளது. இதை கூட யூகிக்க முடியாவிட்டால் துப்பறியும் கதை பல படித்து என்ன பலன். கொலையாளி யார் என்பது தெரிந்து அதிர்ச்சி எல்லாம் வரவில்லை, இது போன்ற கதைகளில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதே எதிர்பார்ப்பு. கிளவியாக இருந்தால் கூட எதிர்பாரதது என்று கூற முடியாது.

சாதாரண கதையை அடித்து விரட்டி கொண்டு செல்வது சுஜாதாவின் துள்ளல் எழுத்து நடையும், சுவாரஸ்யமான உரையாடல்களும். மருதமுத்து சினேக்கை கண்டவுடன் பேசும் பேச்சுக்கள், தொனி மாறுதல்கள் எல்லாம் சுஜாதா  மட்டுமே எழுத முடியும்

ஒரு ஐம்பது வாரம் வரவேண்டிய கதையை பாதியில் முடித்தது போன்றுதான் இருக்கின்றது. 

சினிமாவாக வந்துள்ளது. பிரதாப் போத்தன் கல்யாணராமனாக. பாவம் சுஜாதா.

சுஜாதா பிரியர்களுக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக