08 ஏப்ரல் 2014

அபிதா - லா. ச. ரா

பின்னட்டையில் இருக்கும் அந்த தாத்தாவின் முறைப்பை பார்த்துவிட்டு யோசித்தேன் வாங்கலாமா வேண்டாமா என்று. ஆனால் அடிக்கடி இவர் பெயரை சுஜாதா கதைகளில் படித்ததால் சரி வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கி வைத்தேன். படிக்கவில்லை. போன வாரம்தான் வீட்டிலிருந்த புத்தகங்களை ஆராய்ச்சி செய்தேன், வாங்கி படிக்காமல் வைத்திருப்பது, கொஞ்சம் படித்து விட்டு வைத்தது, அவசரத்தில் படித்தது எல்லாம் எடுத்து வைத்திருக்கின்றேன். 

முதலில் இதுதான் கண்ணில் பட்டது. ஒரு முறை படித்துவிட்டு முடியாமல் வைத்து விட்டேன். அதோடு வாசகர்கூடத்தில் வேறு இதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

பலரால் பாராட்டப்படும் இவரது புத்தகம் என்னை கவரவில்லை. கவித்துவமான நடை என்கின்றார்கள். எனக்கு கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை சேர்ந்த நடை என்றால் அவ்வளவுதான். 


கதை என்ன கதை, ஊரை விட்டு ஓடிப் போன ஒருவருக்கு, அதிர்ஷ்டம். நல்ல மனைவி, சொத்து எல்லாம் கிடைக்கின்றது. பல வருடம் ஆன பிறகு திடீரென அவரது பழைய காதலியை நினைத்து கொண்டு, சொந்த ஊருக்கு வருகின்றார். காதலி இல்லை. மரணம். காதலியை போல அச்சு அசலாக அவளது மகள். அபிதா. அவளை பார்த்து கொண்டே இருக்கும் அவரின் கண் முன் அவளும் போய் சேர்கின்றாள். ஹாவ். என்னத்துக்கு இந்த கதை என்றுதான் தோன்றியது. இக்கதையை நீட்டி முழக்கி ஒரு 100 பக்கத்திற்கு எழுதியிருக்கின்றார். குதிக்கின்றது, தாவுகின்றது, எங்கு இருக்கின்றோம் என்றே புரியவில்லை. பட்டினத்திலிருக்கும் கதை சொல்லாமல் கொள்ளாமல் கிராமத்திற்கு போகின்றது. நம்மிடம் சொல்லிவிட்டு போனால் என்ன?

வெட்டி வெட்டி ஓடும் நடை, ஆனால் எங்கெங்கோ செல்கின்றது. சில சமயம் என்ன சொல்ல வருகின்றார் என்பதும் புரியவில்லை. சொற்களின் கோர்வையும் படிக்க படிக்க ஆயசத்தை தருகின்றது.

இவ்வளவு கஷ்டப்பட்டு எந்த கதையும் படித்ததில்லை. மிகவும் படுத்தி எடுத்துவிட்டது என்னை. 

உரையாடல் மூலம் கதை சொல்லும் சுஜாதா, அளவெடுத்த சொற்களில், சொல்லாமல் சொல்லும் அசோகமித்திரன், பக்கம் பக்கமாக இருந்தாலும் போரடிக்காமல் கதை சொல்லும் ஜெயமோகன், நீரோடை போன்ற தி.ஜா என்று படித்த எனக்கு இது என்ன வகை என்றே தெரியவில்லை. அங்கங்கு வரும் சின்ன உரையாடல்கள் மட்டுமே சுவாரஸ்யம். கண் முன் சில மாய தோற்றங்களை காட்டும் எண்ணத்தில் எழுதப்பட்டதோ என்று தோன்ற வைக்கின்றது.

பலரை கட்டி போட்டது இவரது எழுத்து என்று கேள்விப்பட்டுள்ளேன். என்னை கட்டவில்லை.  யாராவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது நமக்கு பிடிக்கவில்லை என்றால், இதை தந்தால் போதும். பழிவாங்கிய திருப்தி கிடைக்கும்.

7 கருத்துகள்:

  1. அபிதாவை வார்த்தையாக, வாக்கியமாக மட்டுமே ரசிக்க முடியும். மொத்தமாக ரசிக்க முடியாது. மொழிதான் அப்படி எனில் கதையும் சொல்லும்படியாக இல்லை. லா.ச.ரா. இன்று அவுட் ஆஃப் டேட் எழுத்தாளர் என்பதுதான் என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரி வரியாகவே படிக்க என்னால் முடியவில்லை. காளமேகப் புலவர் பரவாயில்லை.

      நீக்கு
  2. லா.ச.ரா வைப் பாராட்டா விட்டால் இலக்கியவாதி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்களே! எனக்கும் இவரது எழுத்துகள் அப்படித்தான் தோன்றும். ஆனாலும் இவரது சிறுகதைத் தொகுப்புகள் முதல் இரண்டு பாகங்கள் வாங்கியுள்ளேன். இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. முன்பு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகும்போது தாண்டியே சென்றிருக்கிறேன். இப்போதாவது புரிகிறதா என்று பார்க்க வாங்கியுள்ளேன்.

    //யாராவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது நமக்கு பிடிக்கவில்லை என்றால், இதை தந்தால் போதும். பழிவாங்கிய திருப்தி கிடைக்கும்.//

    :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நான் இலக்கியவாதியில்லை. நாட்டில் சிலர் மட்டுமே தைரியமாக ரிஸ்க் எடுக்கின்றனர். அந்த வரிசையில் நீங்கள் இடம் பெற்று விட்டீர்கள். :)

      நீக்கு
    2. உண்மையாகவே மகிழ்ச்சி. என்னிமும் அபிதாவும்,இன்னும் ஒரு ஆசிரியரின் என் பெயர் ராமசேஷனும் இருக்கின்றன... படிக்கவே முடியவில்லை.புரியவும் இல்லை. .மிக நன்றி.

      நீக்கு
  3. //கவிதை என்றாலே உடல் உதறிக்கொள்ளும். இதில் கவிதை சேர்ந்த நடை என்றால் அவ்வளவுதான்// ஹா ஹா ஹா சேம் பிளட் சார்...

    //இவ்வளவு கஷ்டப்பட்டு எந்த கதையும் படித்ததில்லை. மிகவும் படுத்தி எடுத்துவிட்டது என்னை. // OMG எனக்கு ஜேஜே குறிப்புகள் இப்படிதான் தோன்றியது.. எனக்கு பக்குவம் வரவில்லை என்று பாதியிலேயே நிறுத்திவிட்டேன் :-)

    கடைசி வரி அட்டகாசம்..

    பதிலளிநீக்கு
  4. என் ராமசேஷன் நான் படித்திருக்கிறேன். கொஞ்சம் ஒரு மாதிரியிருந்தாலும் படிக்க முடியும். :)))

    பதிலளிநீக்கு