02 பிப்ரவரி 2017

டர்மரின் - 384

சுதாகர் கஸ்தூரியின் புதிய நாவல். இதற்கு முன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கின்றார். படித்ததில்லை. இதுதான் முதல். விஞ்ஞானத்தை பின்புலமாக வைத்து பலர் பல கதைகள் எழுதியிருக்கின்றார்கள். சுஜாதா, ஜெயமோகன், மாலன் என்று. அவை வேறு வகை. இக்கதைக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது.  இதை அந்த வகையில் சேர்க்கமுடியாது.  இது விஞ்ஞான ஏரியாவில் நடக்கும் குற்றங்களை பற்றிய கதை. இந்த வகையில் ராஜேஷ்குமார் ஏகப்பட்ட கதைகளை எழுதிதள்ளியிருக்கின்றார். 

இது உயிரியல் ஆராய்ச்சியின் பிண்ணனியில் எழுதப்பட்ட கதை. தாஸ் எண்ணும் விஞ்ஞானி, தன் ஆராய்ச்சி தகவல்களை அபிஜித் என்பவனிடம் தருகின்றார். தாஸ் காணாம்ல போகின்றார், தகவல் அடங்கிய 'எழுதுகோல் ஓட்டியும்' (பென்ட்ரைவ் :-) ) காணாமல் போகின்றது. போலிஸ் வேட்டையில் இதன் பின்னால் இருப்பது டர்மரின் என்னும் மூலக்கூறு அதனுடன் ஒரு எண் என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. காப்புரிமை, அந்நிய நாட்டு சதி என்று கதை நடக்கின்றது

களம் பெரிய களம், நன்றாக அடித்து ஆடியிருக்க வேண்டும். சறுக்கி விழுந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் ஒரு சிறிய பரபரப்புடன் ஆரம்பிக்கும் கதை பின்னால் டொய்ங்ங் என்று போகின்றது. படிக்கும் வாசகனை கொஞ்சம் கூட உள்ளிழுக்காத நடை . உயிரியல் ஆராய்ச்சி என்பதை எளிதாக புரியவைக்க வேண்டும் என்று நினைப்பது சரிதான், ஆனால் அதை எளிமையாக சொல்லியிருக்க வேண்டும். சில தொழில்நுட்ப ரீதியான வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அது சுத்தமாக புரியாமல் போகத்தான் வாய்ப்பிருக்கின்றது. மின்கடத்தி, அயனி என்பதெல்லாம் தமிழ், சரிதான், ஆனால் அது முழுக்க அறிவியல் விஷயங்களை தமிழிலேயே படிக்கும் தலைமுறைக்குத்தான் சரியாகும். அனைவரும் +2விற்கு பிறகு அனைத்தையும் ஆங்கிலத்திலேயே படிக்கும் போது இவையெல்லாம் புரியாது. அதை அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லியிருந்தால் கூட போதுமானது. கொஞ்சம் ஆழமாக விளக்க போகி அது விலக்கத்தைதான் தருகின்றது.


உரையாடல்கள் என்பது யதார்த்தமாக இருக்க வேண்டும். உரையாடல்களில் இந்த தனித்தமிழை புகுத்தினால் இன்னும் அந்நியமாகின்றது. "ஐயா இந்த மென்பொருள்ள் இதை உள்ளீடமுடியாது" என்றால் கொஞ்சம் வியர்க்கின்றது. "சார், இந்த சாப்ட்வேர்ல இத ஃபீட் பண்ண முடியாது சார்" என்றால்தான் கதை தரைக்கு வரும்.

மொத்தத்தில் கதைக்கு மிக அடிப்படையான அந்த டர்மரின் ஆராய்ச்சி விஷயம் வாசகனை உள்ளிழுக்கவில்லை. பிறகுதான் அவனுக்கு அதை பற்றி கவலை வரவேண்டும். டர்மரின் ஆராய்ச்சி என்பது என்ன, அந்த பென்டிரைவில் இருப்பது என்ன என்பதுதான் அடிப்படை. அது எங்கும் சரியாக விளக்கப்படவில்லை. வாசகனே ஒரு குத்துமதிப்பாக புரிந்து கொள்ள வேண்டியதுதான். இல்லை வாசகனின் பங்கும் புத்தகத்திற்கு வேண்டும், அவனே அதை தேடிப்படிக்க வேண்டும் என்று கூறினாலும், அதற்கும் இங்கு வழியில்லை. புத்தகம் வாசகனை உள்ளே தள்ளிவிடவேண்டும். இதுமாதிரியான நாவலுக்கு அத்தனை பெரிய விஷய்ங்களை தேடிப்பிடித்து படிப்பது வீண் வேலை.

இதை ஒரு விறுவிறுப்பான புத்தகம் என்றாவது சொல்லலாம் என்றால் அதுவுமில்லை. பழகிய மாடு  அதன் வழியில் செல்வதைப் போல செல்கின்றது. பாத்திரங்கள் எல்லாம் திடீரென்று கதைக்குள் வந்து குதிக்கின்றனர். கோர்வையற்ற காட்சிகள். எதையும் நம் மனத்திற்குள் விரித்து கொள்ள முடியவில்லை. சுவாரஸ்யமற்ற காட்சிகள். இது போன்ற களத்தில் அடுத்து என்ன அடுத்து என்ன என்று போகவேண்டும், அது சுத்தமாக இல்லை. 

அந்த ஒரு நம்பரை பெரிய திருப்புமுனையாக வைத்திருக்கின்றார். அதைவைத்து பின்னப்பட்டிருக்க வேண்டிய கதை சுற்றியலைந்து டயர்டாகிக் நம்பருக்கு வந்து ஒய்ந்து போகின்றது. ராஜேஷ்குமார் அரைமணி நேரத்தில் இதைவிட விறுவிறுப்பான கதையை, இதே களத்தில் எழுதிவிட முடியும்.

//அறிவியல் ஆய்வுக்கூடங்கள், நிறுவனங்களாகச் செயல்படும் வேளையில், எவ்வாறு பாரம்பரிய மருந்து மூலக்கூறுகளை ,பாதுகாப்புரிமை கொண்டாட முயல்கின்றன, அவற்றிற்கிடையேயான போட்டி, தனிமனித பேராசைகள் எப்படி பரிணமிக்கின்றன என்பதைக் காட்ட முயன்றிருக்கிறேன். அதிகம் எழுதமுடியாத தொழில் சார்ந்த கட்டுப்பாடுகளை நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் “உணர்வுடையார் பெருவருணர்”// என்று ஆசிரியர் கூற்றாக கிடைக்கின்றது. காட்ட முயன்றதில் தோல்விதான். 

வழக்கமாக புத்தகம் வாங்குமுன்பு யாராவது அதைப்பற்றி எழுதியிருக்கின்றார்களா என்று பார்த்துவிட்டு வாங்குவேன். இந்த முறை அதை செய்யவில்லை. விளைவு .....

டர்மரின் - அனாசின் 

1 கருத்து:

  1. ஓ...

    அவருடைய முதல் நாவல் 6474 நன்றாயிருந்தது. அதைப் படித்திருக்கிறேன். ஃபேஸ்புக்கில் என் நண்பர்.

    //"ஐயா இந்த மென்பொருள்ள் இதை உள்ளீடமுடியாது" என்றால் கொஞ்சம் வியர்க்கின்றது. "சார், இந்த சாப்ட்வேர்ல இத ஃபீட் பண்ண முடியாது சார்" என்றால்தான் கதை தரைக்கு வரும்//

    :))

    பதிலளிநீக்கு