சாவி புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர் போன்ற இதழ்களில் பணிபுரிந்துள்ளார். சாவி என்னும் இதழையும் நடத்திவந்தார். குங்குமம் இதழை இவருக்காகவே கருணாநிதி தொடங்கினார் என்றும் எங்கோ படித்த நினைவு. சாவியுடன் நெருக்கமாக பணி புரிந்த ரவி பிரகாஷ் தளத்தில் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
சாவியின் இளவயது அனுபவங்களை முன் பின் தொடர்ச்சியில்லாது எழுதி கட்டி வைத்த ஒரு புத்தகம் பழைய கணக்கு. மிகப்பழைய கணக்கு, அனேகமாக எனக்கு ஒன்றிரண்டு வயதிருக்கும் போது வந்திருக்கும் போல. சாவியின் சிறுவயது அனுபவங்கள், பத்திரிக்கை துறையில் அடைந்த சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. சாவி சிறு வயதில் அதிக கஷ்டப்பட்ட ஒருவர், அதே சமயம் மிகுந்த சேட்டைக்கார ஆசாமி போல. அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவது, கோவில்களில் உண்டக்கட்டி வாங்கி தின்றுவிட்டு சுற்றுவது, காசில்லாமல் போகும் போது மீண்டும் வீடு திரும்புவது என்று ஜாலியாக இருந்திருக்கின்றார். ஏகப்பட்ட வேலைகளும் செய்திருக்கின்றார். கிங்காங் - தாராசிங் மல்யுத்தத்தை நடத்துவது, விளம்பர பலகைகள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்றும் இருந்திருக்கின்றார்.
பல சம்பவங்கள் ஒரு நல்ல சிறுகதைக்கான கருக்களை கொண்டிருக்கின்றது. அவரது நவகாளி யாத்திரை கட்டுரையை பற்றி பலர் எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர் காந்தியுடன் இருந்தது இரண்டு நாட்கள் என்பதுதான் உண்மை. விகடனில் வேலை வாங்க விகடன் பெயரில் பத்திரிக்கை ஆரம்பிப்பதாக கூறி,அதை வைத்தே வேலை வாங்கி, நடத்ததாத பத்திரிக்கையை மூட விகடனிடமே பணத்தையும் பெற்றது எல்லாம் பெரிய நரிகுளிப்பாட்டித்தனம்தான்.
காமராஜர், கருணாநிதி, ராஜாஜி, கல்கி, வாசன், துமிலன், ஈ.வே.ரா, ஜி.டி.நாயுடு, எம்.ஜி.ஆர் போன்ற பல பிரபலங்களை பற்றி சின்ன சின்ன செய்திகளை தெரிந்து கொள்ளலாம். ஒரு கால மனிதர்களை பற்றியும், அக்கால பத்திரிக்கை உலகை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பைத் தரும் புத்தகம்.
ஒரே குறை,கட்டுரைகள் கால வரிசைப்படி இருந்திருந்தால் ஒருவித வாழ்க்கை வரலாறு போல ஆகியிருக்கும். அது இல்லை, காலவரிசையின்றி தோன்றியதை எல்லாம் எழுதிதள்ளியிருக்கின்றார்.
ஓசியில் கிடைத்தாலோ, பழைய புத்தகக்கடையில் கிடைத்தாலோ தவற விட வேண்டாம். புதிதாக வாங்கித்தான் படிப்பேன் என்று உறுதி பூண்டவர்களுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக